1 - ஞாயிறு காலைப் புகழ்
வாரம் 1: ஞாயிறு காலைப் புகழ்
பாடல்
(எழுந்து நிற்கவும்)
இறைவா, பாரினைப் படைத்தோய்,
இரவையும் பகலையும் ஆள்வோய்,
களைப்பை அகற்றக் காலங்களைக்
கரிசனையோடு அமைத்தவரே
இரவு அகன்று பகல் விடிந்ததன்
வரவை சேவல்கூவி உணர்த்தும்
காவல் வேளையும் கடந்தது, எம்
நாவால் உம்நாமம் போற்ற விரைந்தோம்.
ஒளிர்ந்தது கதிரவன் உலகெங்கும்
ஒளிந்தது வானில் இருள் எல்லாம்;
இருளை விரும்பும் தீயோரும்
திருந்தப் பேரொளி பிறந்ததுவே.
கடலில் எழும்புயலும் அடங்கிவிடும்;
கடல்வழி பயணிகள் திடம்பெறுவர்
சேவல் கூவும் குரலினைக் கேட்டு
பாறையாம் திருஅவை கண்ணீர் உகுத்ததே.
தத்தளித்தோம் எம்மை நோக்கும்,
அப்பனே, உம் பார்வையால் எமைத்திருத்தும்;
கூரியப் பார்வையால் எம் குற்றம் அகலும்
நீர்நிறை கண்கள் கருணை பெறும்.
உணர்வின் உட்பொருளாய் நீர் இருப்பீர்,
மனத்தில் சோர்வைப் போக்கிடுவீர்;
எம் இதழ் உம் பெயரை உச்சரிக்கும்
எம் நாவு உமைப் புகழ்ந்து பாடும்.
நிறையன்புடைய எம் அரசராம்
கிறிஸ்துவுடனே தந்தைக்கும்
ஆறுதல் அளிக்கும் ஆவியாருக்கும்
பேரும் புகழும் என்றென்றும். ஆமென்.
(அமரவும்)
___________________________
மு.மொழி. 1: என் கடவுளே! உமது வல்லமையைக் காண, நான் அதிகாலையிலேயே விழித்துக் காத்திருக்கிறேன். அல்லேலூயா.
இறைவேட்கை - திபா 63:1-9
இருளின் செயல்களை விட்டுவிட்டவன் இறைவனுக்காகக் காத்திருப்பானாக
கடவுளே! நீரே என் இறைவன்
உம்மையே நான் நாடுகின்றேன்;
நீரின்றி வறண்ட தரிசு நிலம் போல
என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது;
என் உடல் உமக்காக ஏங்குகின்றது.
உம் ஆற்றலையும் மாட்சியையும் காண விழைந்து
உம் தூயகம் வந்து உம்மை நோக்குகின்றேன்.
ஏனெனில், உமது பேரன்பு உயிரினும் மேலானது;
என் இதழ்கள் உம்மைப் புகழ்கின்றன.
என் வாழ்க்கை முழுவதும்
இவ்வாறே உம்மைப் போற்றுவேன்;
கைகூப்பி உமது பெயரை ஏத்துவேன்.
அறுசுவை விருந்தில் நிறைவடைவது போல
என் உயிர் நிறைவடையும்;
மகிழ்ச்சிமிகு இதழ்களால் என் வாய் உம்மைப் போற்றும்.
நான் படுத்திருக்கையில் உம்மை நினைப்பேன்;
இரா விழிப்புகளில் உம்மைப் பற்றியே
ஆழ்ந்து சிந்திப்பேன்.
ஏனெனில், எனக்கு நீர் துணையாய் இருக்கின்றீர்;
உம் இறக்கைகளின் நிழலில்
நான் மகிழ்ந்து பாடுகின்றேன்.
உம்மை நான் உறுதியாகப் பற்றிக் கொண்டேன்;
உமது வலக்கை என்னை இறுகப் பிடித்துள்ளது.
தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும்...
மு.மொழி.: என் கடவுளே! உமது வல்லமையைக் காண, நான் அதிகாலையிலேயே விழித்துக் காத்திருக்கிறேன். அல்லேலூயா.
__________________________
மு.மொழி. 2: மூவரும் தீச்சூளையில், 'கடவுள் வாழ்த்தப்பெறுவாராக,' என்று போற்றிப் புகழ்ந்தனர். அல்லேலூயா!
படைப்பனைத்தின் பாடல் - தானி(இ) 1:34-65
ஆண்டவரின் அனைத்துச் செயல்களே,
நீங்களெல்லாம் ஆண்டவரை வாழ்த்துங்கள்;
என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி, ஏத்திப் போற்றுங்கள்.
வானங்களே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி, ஏத்திப் போற்றுங்கள்.
ஆண்டவரின் தூதர்களே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி, ஏத்திப் போற்றுங்கள்.
வானத்திற்குமேல் உள்ள நீர்த்திரளே, ஆண்டவரை வாழ்த்து;
என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி, ஏத்திப் போற்றுங்கள்.
ஆண்டவரின் ஆற்றல்களே,
நீங்களெல்லாம் ஆண்டவரை வாழ்த்துங்கள்;
கதிரவனே, நிலவே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
விண்மீன்களே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி, ஏத்திப் போற்றுங்கள்.
மழையே, பனியே, நீங்களெல்லாம் ஆண்டவரை வாழ்த்துங்கள்;
காற்றுவகைகளே, நீங்களெல்லாம் ஆண்டவரை வாழ்த்துங்கள்;
நெருப்பே, வெப்பமே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
நடுங்கும் குளிரே, கடும் வெயிலே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி, ஏத்திப் போற்றுங்கள்.
பனித்திவலைகளே, பனிமழையே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
பனிக்கட்டியே, குளிர்மையே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
உறைபனியே, மூடுபனியே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி, ஏத்திப் போற்றுங்கள்.
இரவே, பகலே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
ஒளியே, இருளே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
மின்னல்களே, முகில்களே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி, ஏத்திப் போற்றுங்கள்.
மண்ணுலகு ஆண்டவரை வாழ்த்துவதாக;
மலைகளே, குன்றுகளே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
நிலத்தில் தளிர்ப்பவையே,
நீங்களெல்லாம் ஆண்டவரை வாழ்த்துங்கள்;
என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி, ஏத்திப் போற்றுங்கள்.
கடல்களே, ஆறுகளே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
நீரூற்றுகளே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
திமிங்கிலங்களே, நீர்வாழ் உயிரினங்களே,
நீங்களெல்லாம் ஆண்டவரை வாழ்த்துங்கள்;
வானத்துப் பறவைகளே, நீங்களெல்லாம் ஆண்டவரை வாழ்த்துங்கள்;
என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி, ஏத்திப் போற்றுங்கள்.
காட்டு விலங்குகளே, கால் நடைகளே,
நீங்களெல்லாம் ஆண்டவரை வாழ்த்துங்கள்
மண்ணுலக மாந்தர்களே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
என்றென்றும் அவரைப் பகழ்ந்து பாடி, ஏத்திப் போற்றுங்கள்.
இஸ்ரயேல் மக்களே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
ஆண்டவரின் குருக்களே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
ஆண்டவரின் ஊழியரே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி, ஏத்திப் போற்றுங்கள்.
நீதிமான்களே, நீங்கள் அனைவரும் ஆண்டவரை வாழ்த்துங்கள்;
தூய்மையும் மனத்தாழ்ச்சியும் உள்ளோரே,
ஆண்டவரை வாழ்த்துங்கள்;
அனனியா, அசரியா, மிசாவேல், ஆண்டவரை வாழ்த்துங்கள்;
என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி, ஏற்றிப் போற்றுங்கள்.
தந்தை மகன் தூய ஆவியாரைப் புகழுங்கள்
என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி, ஏற்றிப் போற்றுங்கள்.
உயர் விண்ணகத்தில் நீர் வாழ்த்தப் பெறுவீராக
என்றென்றும் நீர் பாடல் பெறவும்,
மாட்சி அடையவும் தகுதியுள்ளவர்.
மு.மொழி.: மூவரும் தீச்சூளையில், 'கடவுள் வாழ்த்தப்பெறுவாராக,' என்று போற்றிப் புகழ்ந்தனர். அல்லேலூயா!
__________________________
மு.மொழி. 3: சீயோனின் மக்கள் தம் அரசரை முன்னிட்டுக் களிகூர்வார்களாக. அல்லேலூயா!
புனிதரின் புகழ்ச்சிப்பா - திபா 149
இறைவனின் புதிய மக்களாம் திருஅவையின் உறுப்பினர் தம் அரசராம் கிறிஸ்துவில் அகமகிழ்வர். (ஹெசிகியூஸ்)
புதியதொரு பாடலை ஆண்டவருக்குப் பாடுங்கள்;
அவருடைய அன்பர் சபையில்
அவரது புகழைப் பாடுங்கள்.
தம்மைப் படைத்தவரைக் குறித்து
இஸ்ரயேலர் மகிழ்வாராக!
சீயோனின் மக்கள் களிகூர்வார்களாக!
நடனம் செய்து அவரது பெயரைப் போற்றுவார்களாக;
மத்தளம் கொட்டி, யாழிசைத்து
அவரைப் புகழ்ந்து பாடுவார்களாக!
ஆண்டவர் தம் மக்கள் மீது விருப்பம் கொள்கின்றார்;
தாழ்நிலையிலுள்ள அவர்களுக்கு
மீட்பளித்து மேன்மைப் படுத்துவார்.
அவருடைய அன்பர் மேன்மையடைந்து களிகூர்வராக!
மெத்தைகளில் சாய்ந்து மகிழ்ந்து கொண்டாடுவராக!
அவர்களின் வாயில் இறைப்புகழ் இருக்கட்டும்;
அவர்களின் கையில் இருபுறமும் கூர்மையான வாள் இருக்கட்டும்.
அவர்கள் வேற்றினத்தாரிடம் பழிதீர்த்துக் கொள்வார்கள்;
மக்களினங்களுக்கு தண்டனைத் தீர்ப்பிடுவார்கள்;
வேற்றின மன்னர்களை விலங்கிட்டுச் சிறைசெய்வார்கள்;
உயர்குடி மக்களை இரும்பு விலங்குகளால் கட்டுவார்கள்.
முன்குறித்து வைத்த தீர்ப்பை
அவர்களிடம் நிறைவேற்றுவார்கள்;
இத்தகைய மேன்மை ஆண்டவர் தம் அன்பர்
அனைவருக்கும் உரித்தானது. அல்லேலூயா!
மு.மொழி.: சீயோனின் மக்கள் தம் அரசரை முன்னிட்டுக் களிகூர்வார்களாக. அல்லேலூயா!
__________________________
(எழுந்து நின்று வாசிக்கவும்)
அருள்வாக்கு திவெ: 7:10,12
அவர்கள் "அரியணையில் வீற்றிருக்கும் எங்கள் கடவுளிடமிருந்தும் ஆட்டுக் குட்டியிடமிருந்துமே மீட்பு வருகிறது," என்று உரத்த குரலில் பாடினார்கள். "புகழ்ச்சியும் பெருமையும் ஞானமும் நன்றியும் மாண்பும் வல்லமையும் வலிமையும் எங்கள் கடவுளுக்கே என்றென்றும் உரியன. ஆமென்." என்று பாடினார்கள்.
__________________________
சிறு மறுமொழி
℣ - கிறிஸ்துவே உயிருள்ள கடவுளின் மகனே! எங்கள் மேல் இரக்கமாயிரும்
℟ - கிறிஸ்துவே உயிருள்ள கடவுளின் மகனே! எங்கள் மேல் இரக்கமாயிரும்
℣ - நீர் தந்தையின் வலப்பக்கம் வீற்றிருக்கின்றார்
℟ - எங்கள் மேல் இரக்கமாயிரும்
℣ - தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக
℟ - கிறிஸ்துவே உயிருள்ள கடவுளின் மகனே! எங்கள் மேல் இரக்கமாயிரும்
__________________________
(அனைவரும் எழுந்து நிற்கவும்)
செக்கரியாவின் பாடல்
மு.மொழி.: (அந்தந்த காலத்திற்கு ஏற்றாற்போல்)
|
ஞாயிறு 01 (ஆண்டவரின் திருமுழுக்கு)
|
ஞாயிறு 05 நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள். உங்கள் ஒளி மனிதர் முன் ஒளிர்க! அப்பொழுது உங்கள் நற்செயல்களைக் கண்டு, விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள். |
ஞாயிறு 09 என்னை நோக்கி 'ஆண்டவரே, ஆண்டவரே' எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர். |
ஞாயிறு 13 'நான் அனுப்புகிறவரை ஏற்றுக் கொள்பவர் என்னையே ஏற்றுக் கொள்கிறார். என்னை ஏற்றுக் கொள்பவர் என்னை அனுப்பியவரையே ஏற்றுக்கொள்கிறார்' என்கிறார் ஆண்டவர். |
ஞாயிறு 17 வணிகள் ஒருவர் நல்முத்துக்களைத் தேடிச் செல்கிறார். விலை உயர்ந்த ஒரு முத்தைக் கண்டவுடன், அவர் போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று, அதை வாங்கிக் கொள்கிறார். விண்ணரசு இந்நிகழ்ச்சிக்கு ஒப்பாகும். |
ஞாயிறு 21 'நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்.' யோனாவின் மகனான சீமோனே, நீ பேறுபெற்றவர். |
ஞாயிறு 25 நீங்களும், என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள்; நேர்மையான கூலியை உங்களுக்குக் கொடுப்பேன். |
ஞாயிறு 29 சீசருக்கு உரியவற்றைச் சீசருக்கும், கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள். அல்லேலூயா. |
ஞாயிறு 33 நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில், நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும். |
ஞாயிறு 34 (கிறிஸ்து அரசர் பெருவிழா) |
இஸ்ரயேலின் கடவுளாகிய
ஆண்டவரைப் போற்றுவோம்.
ஏனெனில் அவர் தம் மக்களைத்
தேடிவந்து விடுவித்தருளினார்.
தம் தூய இறைவாக்கினர் வாயினால்
தொடக்க முதல் அவர் மொழிந்தபடியே
அவர் தம் ஊழியராகிய தாவீதின் குடும்பத்தில்
வல்லமை உடைய மீட்பர் ஒருவர்
நமக்காகத் தோன்றச் செய்தார்;
நம் பகைவரிடமிருந்தும்
நம்மை வெறுப்போர் அனைவரின் பிடியிலிருந்தும்
நம்மை மீட்பார்.
அவர் நம் மூதாதையருக்கு இரக்கம் காட்டி,
தமது தூய உடன்படிக்கையையும்,
நம் தந்தையாகிய ஆபிரகாமுக்கு
அவர் இட்ட ஆணையையும்
நிறைவேற்ற நினைவு கூர்ந்தார்.
இவ்வாறு நாம் பகைவரின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டுத்
தூய்மையோடும் நேர்மையோடும்
வாழ்நாளெல்லாம் அச்சமின்றி
அவர் திருமுன் பணிசெய்யுமாறு வழிவகுத்தார்.
குழந்தாய்,
நீ உன்னத கடவுளின் இறைவாக்கினர் எனப்படுவாய்;
ஏனெனில் பாவ மன்னிப்பால் வரும் மீட்பை
அவர்தம் மக்களுக்கு அறிவித்து
ஆண்டவருக்கான வழியைச் செம்மைப்படுத்த
அவர் முன்னே செல்வாய்.
இருளிலும் இறப்பின் பிடியிலும் இருப்போர்க்கு ஒளிதரவும்,
நம்முடைய கால்களை அமைதி வழியில் நடக்கச் செய்யவும்
நம் கடவுளின் பரிவுள்ளத்தாலும் இரக்கத்தாலும்
விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடிவருகிறது.
தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும்...
மு.மொழி.: (அந்தந்த காலத்திற்கு ஏற்றாற்போல்)
|
ஞாயிறு
01 (ஆண்டவரின் திருமுழுக்கு)
|
ஞாயிறு 05 நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள். உங்கள் ஒளி மனிதர் முன் ஒளிர்க! அப்பொழுது உங்கள் நற்செயல்களைக் கண்டு, விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள். |
ஞாயிறு 09 என்னை நோக்கி 'ஆண்டவரே, ஆண்டவரே' எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர். |
ஞாயிறு 13 'நான் அனுப்புகிறவரை ஏற்றுக் கொள்பவர் என்னையே ஏற்றுக் கொள்கிறார். என்னை ஏற்றுக் கொள்பவர் என்னை அனுப்பியவரையே ஏற்றுக்கொள்கிறார்' என்கிறார் ஆண்டவர். |
ஞாயிறு 17 வணிகள் ஒருவர் நல்முத்துக்களைத் தேடிச் செல்கிறார். விலை உயர்ந்த ஒரு முத்தைக் கண்டவுடன், அவர் போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று, அதை வாங்கிக் கொள்கிறார். விண்ணரசு இந்நிகழ்ச்சிக்கு ஒப்பாகும். |
ஞாயிறு 21 'நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்.' யோனாவின் மகனான சீமோனே, நீ பேறுபெற்றவர். |
ஞாயிறு 25 நீங்களும், என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள்; நேர்மையான கூலியை உங்களுக்குக் கொடுப்பேன். |
ஞாயிறு 29 சீசருக்கு உரியவற்றைச் சீசருக்கும், கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள். அல்லேலூயா. |
ஞாயிறு 33 நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில், நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும். |
ஞாயிறு 34 (கிறிஸ்து அரசர் பெருவிழா) |
__________________________
மன்றாட்டுக்கள்
நம் ஆண்டவராகிய கிறிஸ்து ஒருபோதும் மறையாத உண்மை ஒளி. அனைத்து மாந்தரையும் ஒளிர்விக்கும் கதிரவன்; அவரை நோக்கி மன்றாடுவோம்.
℟ - என் மீட்பராம் ஆண்டவரே எமக்கு வாழ்வளித்தருளும்.
கதிரவனுக்கும் விண்மீன்களுக்கும் ஆண்டவரே, இந்த புதிய நாளுக்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம் - நாங்கள் இன்று உயிர்ப்பின் நாளையும் கொண்டாடுகிறோம்.
℟ - என் மீட்பராம் ஆண்டவரே எமக்கு வாழ்வளித்தருளும்.
உமது திருவுளத்தை நிறைவேற்ற உமது ஆவியாரால் எங்களை வழிநடத்தியருளும்.
- உமது ஞானத்தால் எங்களை பாதுகாத்து வழிநடத்தியருளும்.
- உமது ஞானத்தால் எங்களை பாதுகாத்து வழிநடத்தியருளும்.
℟ - என் மீட்பராம் ஆண்டவரே எமக்கு வாழ்வளித்தருளும்.
இந்த ஞாயிறு நற்கருணை விருந்தை மகிழ்வுடன் பகிர்ந்து கொள்ள, எங்களை ஒன்று சேர்த்தருளும் - உமது அருள்வாக்காலும் திரு உடலாலும் எங்களுக்கு ஊட்டம் அளித்தருளும்.
℟ - என் மீட்பராம் ஆண்டவரே எமக்கு வாழ்வளித்தருளும்.
(தனிப்பட்ட தேவைகளுக்காக மன்றாடல்)
ஆண்டவரே, நாங்கள் தகுதியற்றவர்களாயினும் உமது கொடைகளை எங்களுக்கு அளித்தருளும். - நாங்கள் முழு உள்ளத்துடன் உமக்கு நன்றி செலுத்துகிறோம்.
℟ - என் மீட்பராம் ஆண்டவரே எமக்கு வாழ்வளித்தருளும்.
__________________________
ஆண்டவரின் இறைவேண்டல் - அழைப்பு
1. நம் மீட்பர் நமக்குக் கற்பித்தவாறு, நாம் விண்ணகத் தந்தையை நோக்கி மன்றாடுவோம்.
2 இவ்வுலகில் இறையாட்சி வரவேண்டுமென்று மன்றாடுவோம்.
3. நமது புகழ்ச்சிகளையும் மன்றாட்டுகளையும் கிறிஸ்துவின் வார்த்தைகளில் சுருக்கமாய்ச் சொல்வோம்.
4. நமது புகழ்ச்சியையும் மன்றாட்டுகளையும் ஆண்டவருடைய இறைவேண்டலால் உறுதிப்படுத்துவோம்.
5. இப்போது கிறிஸ்துவே கற்றுக்கொடுத்த வார்த்தைகளால் தந்தையைப் புகழ்ந்து மன்றாடுவோம்.
6. (கிறிஸ்துவை நோக்கி) ஆண்டவரே, நாங்கள் உம் போதனையின்படி இறைவேண்டல் செய்யும் இவ்வேளையில், எங்களை உம் ஆட்சியில் நினைவு கூர்ந்தருளும்.
7. நம் ஆண்டவருடைய போதனையின்படி, நாம் நம்பிக்கையோடு சொல்வோம்.
8. நம் ஆண்டவரின் படிப்பினையைப் பின்பற்றி, நாம் மன்றாடுவோம்.
9. இறைவேண்டல்களுக்கெல்லாம் எடுத்துக்காட்டாக ஆண்டவர் நமக்குக் கொடுத்த வேண்டலை நாம் ஒருமித்து இப்போது சொல்வோம்.
__________________________
இறுதி செபம்
|
ஞாயிறு
01 (ஆண்டவரின் திருமுழுக்கு)
|
ஞாயிறு 05 ஆண்டவரே, உமது குடும்பத்தை இடையறாத பரிவிரக்கத்தால் காத்தருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் விண்ணக அருளை மட்டுமே எதிர்நோக்கியுள்ள இக்குடும்பம் உமது நிலையான பாதுகாவலால் என்றும் உறுதி அடைவதாக. உம்மோடும் தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் மகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். |
ஞாயிறு 09 ஆண்டவராகிய இறைவா, தவறா மனத்தினாலும் அன்பினாலும் எங்கள் வாழ்வை நீர் ஆண்டு நடத்துகின்றீர். அதனால் தீயவை அனைத்தையும் எங்களிடமிருந்து அகற்றி எமக்குப் பயன் அளிக்கும் அனைத்தையும் கனிவுடன் தந்தருள்வீராக. உம்மோடும் தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் மகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். |
ஞாயிறு 13 இறைவா, உமது அருளால் உம் பிள்ளைகளாகத் தேர்ந்தெடுக்கப்பெற்ற நாங்கள் ஒளியின் மக்களாக இருக்க விரும்பினீரே; அதனால் நாங்கள் தவறு
எனும் இருளில் சிக்கிக்கொள்ளாமல் உண்மையின் பேரொளியில் என்றும் சிறந்து விளங்க அருள்புரிவீராக. உம்மோடும் தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் மகனுமாகிய இயேசு
கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். |
ஞாயிறு 17 உம்மை எதிர்நோக்கி இருப்போரைப் பாதுகாப்பவரான இறைவா, உம்மால் அன்றி ஆற்றல் வாய்ந்ததும் புனிதமானதும் எதுவும் இல்லை; எங்கள் மீது உமது இரக்கத்தை மேன்மேலும் பொழிவதால் உம்மை எங்கள் தலைவராகவும் வழிகாட்டியாகவும் ஏற்றுக்கொண்டு நிலையானவற்றை நாங்கள் இப்போதே பற்றிக்கொள்ள நிலையற்ற இன்றைய நன்மைகளைப் பயன்படுத்தச் செய்வீராக. உம்மோடும் தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் மகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். |
ஞாயிறு 21 நம்பிக்கையாளரின் உள்ளங்களை ஒன்றிணைப்பவரான இறைவா, நீர் கற்றுத்தருவதை உம் மக்கள் அன்பு செய்யவும் நீர் வாக்களிப்பதை விரும்பவும் செய்தருளும்; அதனால் மாறிவரும் இவ்வுலகச் சூழலில் எங்கள் இதயங்கள் உண்மையான பேரின்ப உலகின் மீது என்றும் நாட்டம் கொள்ளச் செய்வீராக. உம்மோடும் தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் மகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். |
ஞாயிறு 25 இறைவா, உம்மையும் பிறரையும் அன்பு செய்வதில் திருச்சட்டத்தின் எல்லாக் கட்டளைகளும் அடங்கியிருக்கச் செய்தீரே; உம் கட்டளைகளைக் கடைப்பிடிக்கும் நாங்கள் முடி வில்லா வாழ்வுக்கு வந்து சேரும் தகுதி பெற எங்களுக்கு அருள்வீராக. உம்மோடும் தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் மகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். |
ஞாயிறு 29 என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, நாங்கள் எப்போதும் உமது திருவுளத்துக்கு ஏற்ப வாழச் செய்தருளும்; அதனால் மாண்புக்கு உரிய உமக்கு நேர்மையான இதயத்தோடு நாங்கள் ஊழியம் புரியச் செய்வீராக. உம்மோடும் தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் மகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். |
ஞாயிறு 33 ஆண்டவரே எங்கள் இறைவா, உம்மீது நாங்கள் கொண்டுள்ள பற்றன்பில் எப்பொழுதும் மகிழ்ந்திருக்கச் செய்ய உம்மை வேண்டுகின்றோம்: ஏனெனில் அனைத்து நன்மைகளுக்கும் ஊற்றாகிய உமக்கு நாங்கள் என்றும் பணி புரிவதால் முடிவில்லா, முழுமையான மகிழ்வைப் பெற்றுக்கொள்வோமாக. உம்மோடும் தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் மகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். |
ஞாயிறு 34 (கிறிஸ்து அரசர் பெருவிழா) |
__________________________
ஆசி வழங்குதல்
அப: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக
எல்: உம் ஆன்மாவோடும் இருப்பாராக
அப: எல்லாம் வல்ல இறைவன் தந்தை மகன் தூய ஆவியார் உங்களை ஆசீர்வதிப்பாராக.
எல்: ஆமென்
அப: கிறிஸ்துவின் அமைதியில் சென்று வாருங்கள்
எல்: இறைவா உமக்கு நன்றி
(அல்லது)
முதல்: ஆண்டவர் நம்மை ஆசீர்வதித்து தீமைகள் அனைத்தினின்றும் பாதுகாத்து முடிவில்லா வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக
எல்: ஆமென்
முதல்: ஆண்டவரை வாழ்த்துவோமாக
எல்: இறைவா உமக்கு நன்றி.