காலைப் புகழ் அழைப்புப் பகுதி

காலைப் புகழ்

நாளின் முதல் திருப்பாடல்மாலைத் தொடங்கும் முறை

முதல்: ஆண்டவரே எங்கள் இதழ்களைத் திறந்தருளும்
எல்: நாங்களும் உம்மைப் புகழ்ந்திடுவோம்

முதல்: தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக

எல்: தொடக்கத்தில் இருந்தது போல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்
 

அழைப்பு முன்மொழிகள்

பொதுக்காலம் வாரம் 1, 3
ஞாயிறு: வாருங்கள் ஆண்டவர்க்குப் புகழ் பாடுங்கள்; நமது மீட்பின் பாறையைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்.

திங்கள்: நன்றியுடன் நாம் ஆண்டவர் திருமுன் செல்வோம்.

செவ்வாய்: ஆண்டவர் மேலான பேரரசர்; வாருங்கள், அவரை நாம் போற்றுவோம்.

புதன்: ஆண்டவரை நாம் போற்றுவோம்; ஏனெனில் அவரே நம்மை உருவாக்கியவர்.

வியாழன்: வாருங்கள் ஆண்டவரை நாம் போற்றுவோம்; அவரே நம் கடவுள்.

வெள்ளி: ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள் ஏனெனில் என்றும் உள்ளது அவர் தம் பேரன்பு.

சனி: மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை. வாருங்கள் அவரை நாம் போற்றுவோம். 

பொதுக்காலம் வாரம் 2, 4

ஞாயிறு : நாம் ஆண்டவரின் மக்கள் நாம் அவர் பேணிக்காக்கும் ஆடுகள். வாருங்கள் அவரை நாம் போற்றுவோம்.

திங்கள்: ஆண்டவரில் அகமகிழ்ந்து அக்களிப்போம்; மகிழ்ச்சி பண்ணிசைத்து அவரைப்  புகழ்வோம்.

செவ்வாய்: ஆண்டவர் மாண்புமிகு இறைவன். வாருங்கள் அவரை நாம் போற்றுவோம்.

புதன்: அனைத்துலகோரே! ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள். ஆண்டவரை மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள். 

வியாழன்: மகிழ்ச்சி நிறை பாடலுடன் ஆண்டவர் திருமுன் வாருங்கள்.

வெள்ளி: ஆண்டவர் நல்லவர் அவர் பெயரைப் போற்றுங்கள்.

சனி: ஆண்டவரின் குரலுக்குச் செவிகொடுத்து; அவரது அமைதியில் நுழைவோம்.

திருவருகைக்காலம்

டிசம்பர் 16 வரை:
வரவிருக்கும் அரசராம் ஆண்டவரை நாம் போற்றுவோம் .
 
டிசம்பர் 17 முதல் 23 வரை:
ஆண்டவர் அண்மையில் உள்ளார்; வாருங்கள் நாம் அவரைத் போற்றுவோம் .

கிறிஸ்து பிறப்புக் காலம்

திருக்காட்சி பெருவிழாவிற்கு முன்:
கிறிஸ்து நமக்காக பிறந்துள்ளார்; வாருங்கள் அவரை நாம் போற்றுவோம் .
 
திருக்காட்சி பெருவிழாவிற்குப் பின்:
கிறிஸ்து நமக்காக தோன்றியுள்ளார்; வாருங்கள் அவரை நாம் போற்றுவோம் .

தவக்காலம்

தவக்காலத்திலும் புனித வாரத்திலும்:
கிறிஸ்து நமக்காகச் சோதனைக்கும் வேதனைக்கும் உட்பட்டார்; வாருங்கள், அவரை நாம் போற்றுவோம்.
 
புனித வாரம் தவிர:
இன்று நீங்கள் அவரது குரலைக் கேளுங்கள், உங்கள் இதயங்களை கடினப்படுத்தி கொள்ளாதீர்கள்.

பாஸ்கா காலம்

விண்ணேற்பு வரை:
ஆண்டவர் உண்மையாகவே உயிருடன் எழுப்ப்பட்டார், அல்லேலூயா!
 
விண்ணேற்பு முதல் தூய ஆவியார் பெருவிழா வரை:
ஆண்டவராகிய கிறிஸ்து தூய ஆவியாரை நமக்கு வாக்களித்தார்; அவரை நாம் போற்றுவோம், அல்லேலூயா!

அழைப்புத் திருப்பாடல்

திருப்பாடல் 95

கடவுளைப் புகழ அழைப்பு
ஒவ்வொரு நாளும் 'இன்றேஎன எண்ணிநாள்தோறும் 
ஒருவருக்கொருவர் அறிவுரை கூறுங்கள். (எபி 3:13)

வாருங்கள்;
ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்;
நமது மீட்பின் பாறையைப் 
போற்றி ஆர்ப்பரியுங்கள்.
அவர் திருமுன் நன்றியுடன் செல்வோம்;
புகழ்ப்பாக்களால் அவரைப் 
போற்றி அகமகிழ்வோம்.

ஏனெனில்ஆண்டவர் மாண்புமிகு இறைவன்;
அனைத்துத் தெய்வங்களுக்கும்
அனைத்திற்கும் மேலான பேரரசர்.
பூவுலகின் ஆழ் பகுதிகள் 
அவர்தம் கையில் உள்ளன;
மலைகளின் கொடுமுடிகளும் 
அவருக்கே உரியன.
கடலும் அவருடையதே
அவரே அதைப் படைத்தார்;
உலர்ந்த தரையையும் அவருடைய 
கைகளே உருவாக்கின.

வாருங்கள்;
தாள்பணிந்து அவரைத் தொழுவோம்;
நம்மை உருவாக்கிய ஆண்டவர்முன் 
முழந்தாளிடுவோம்.
அவரே நம் கடவுள்;
நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்;
நாம் அவர் பேணிக்காக்கும் ஆடுகள்.

இன்று நீங்கள் அவரது குரலுக்குச்
செவிகொடுத்தால் எத்துணை நலம்!
அன்று மெரிபாவிலும்,
பாலை நிலத்தில் மாசாவிலும் செய்ததுபோல்,
உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் 
கொள்ளாதீர்கள்.
அங்கே உங்கள் மூதாதையர் 
என்னைச் சோதித்தனர்;
என் செயல்களைக் கண்டிருந்தும்
என்னைச் சோதித்துப் பார்த்தனர்.

நாற்பது ஆண்டளவாய் அந்தத் தலைமுறை
எனக்கு வெறுப்பூட்டியதால்நான் உரைத்தது;
'அவர்கள் உறுதியற்ற 
உள்ளம் கொண்ட மக்கள்;
என் வழிகளை அறியாதவர்கள்'.
எனவேநான் சினமுற்று,
'நான் அளிக்கும் இளைப்பாற்றியின் 
நாட்டிற்குள் நுழையவே மாட்டார்கள்
என்று ஆணையிட்டுக் கூறினேன் 

திருப்பாடல் 100

ஆலயத்தில் நுழைவோரின் மகிழ்ச்சிப்பாடல்

'ஆண்டவர் மீட்கப்பட்ட மக்கள் அனைவரையும் வெற்றிப்பண் பாட அழைக்கின்றார்' (புனித அத்தனாசியார்)

 
அனைத்துலகோரே! ஆண்டவரைப் 
போற்றி ஆர்ப்பரியுங்கள்
ஆண்டவரை மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்! 
மகிழ்ச்சி நிறைப்பாடலுடன் அவர் திருமுன் வாருங்கள்!
 
ஆண்டவரே கடவுள் என்று உணருங்கள்! 
அவரே நம்மைப் படைத்தவர்! 
நாம் அவர் மக்களாவோம், 
அவர் மேய்க்கும் ஆடுகளாவோம்!
 
நன்றியோடு அவர்தம் திருவாயில்களில் நுழையுங்கள்! 
புகழ்ப்பாடலோடு அவர்தம் முற்றத்திற்கு வாருங்கள்! 
அவருக்கு நன்றி செலுத்தி, அவர் பெயரைப் போற்றுங்கள்!
 
ஏனெனில், ஆண்டவர் நல்லவர்; 
என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு; 
தலைமுறைதோறும் அவர் நம்பத்தக்கவர்.

திருப்பாடல் 67

அனைத்துலக மக்களும் ஆண்டவரைப் புகழ்வர்

"ஆகையால் கடவுள் இந்த மீட்பைப் பிற இனத்தாருக்கு அளித்துள்ளார். அவர்கள் செவிசாய்ப்பார்கள் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கட்டும்." (திப 28:28)
 
இறைவா! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக! 
உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக!
அப்பொழுது, உலகம் உமது வழியை அறிந்துகொள்ளும்; 
பிற இனத்தார் அனைவரும் நீர் அருளும் மீட்பை உணர்ந்து கொள்வர்.
 
கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்வார்களாக! 
மக்கள் எல்லாரும் உம்மைப் போற்றுவார்களாக!
 
வேற்று நாட்டினர் அக்களித்து மகிழ்ச்சியுடன் பாடிடுவராக! 
ஏனெனில், நீர் மக்களினங்களை நேர்மையுடன் ஆளுகின்றீர்; 
உலகின் நாடுகளை வழிநடத்துகின்றீர்.
 
கடவுளேமக்களினங்கள் உம்மைப் புகழ்வனவாக! 
மக்கள் எல்லாரும் உம்மைப் போற்றுவார்களாக!
 
நானிலம் தன் பலனை ஈந்தது; 
கடவுள், நம் கடவுள் நமக்கு ஆசி வழங்கினார்.
கடவுள் நமக்கு ஆசி வழங்குவாராக! 
உலகின் கடையெல்லைவரை வாழ்வோர் அவருக்கு அஞ்சுவராக!

கடவுளேமக்களினங்கள் உம்மைப் புகழ்வனவாக! 
மக்கள் எல்லாரும் உம்மைப் போற்றுவார்களாக!

திருப்பாடல் 24

ஆண்டவர் தம் ஆலயத்திற்கு வருகிறார்

'உடலோடு விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட கிறிஸ்துவுக்கு வான்வீடு திறந்துவிடப்பட்டது.' (புனித இரேனியுஸ்)

 
மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை; 
நிலவுலகும் அதில் வாழ்வனவும் அவருக்கே சொந்தம்.
ஏனெனில், அவரே கடல்கள் மீது அதற்கு அடித்தளமிட்டார்; 
ஆறுகள்மீது அதை நிலைநாட்டினார்.
 
ஆண்டவரது மலையில் ஏறத் தகுதியுள்ளவர் யார்? 
அவரது திருத்தலத்தில் நிற்கக் கூடியவர் யார்?
கறைபடாக் கைகளும் மாசற்ற மனமும் உடையவர்; 
பொய்த் தெய்வங்களை நோக்கித் தம் உள்ளத்தை உயர்த்தாதவர்; 
வஞ்சக நெஞ்சோடு ஆணையிட்டுக் கூறாதவர்,
 
இன்னோரே ஆண்டவரிடம் ஆசி பெறுவர்; 
தம் மீட்பராம் கடவுளிடமிருந்து நேர்மையாளர் எனத் தீர்ப்புப் பெறுவர்.
அவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே; 
யாக்கோபின் கடவுளது முகத்தைத் தேடுவோர் இவர்களே.
 
வாயில்களே, உங்கள் நிலைகளை உயர்த்துங்கள்; 
தொன்மைமிகு கதவுகளே, உயர்ந்து நில்லுங்கள்; 
மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும்.
 
மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ? 
வலிமையும் ஆற்றலும் கொண்ட ஆண்டவர் இவர்; 
இவரே போரில் வல்லவரான ஆண்டவர்.
 
வாயில்களே, உங்கள் நிலைகளை உயர்த்துங்கள்; 
தொன்மைமிகு கதவுகளே, உயர்ந்து நில்லுங்கள்; 
மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும்.
 
மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ? 
படைகளின் ஆண்டவர் இவர்; 
இவரே மாட்சிமிகு மன்னர்.