1 - வியாழன் காலைப் புகழ்
பாடல்
(எழுந்து நிற்கவும்)
விண் எழுகின்றது ஆதவன் நெருப்பாய்
கண் விழி இறந்து காலகலமாய்
நீர் வழிவிட்டுத் தவறியதாலே
நேர்ந்தவை ஒழியத் தீப்பிழம்பு எழுந்தது
நம்ஒளி கிறிஸ்துவே அமைதியை அருள்வார்
நம் உள்ளம் தூயதாய் அவருக்கே உரிமை
நம் இதழ் கபடற்ற சொற்களை மொழிக
நம் உணர்வெல்லாம் இருளினைப் பகைக்க
தேவா எம் உடல் கறை படாது
நாவும் புரணி பேசாது
கண்ணையும் கையையும் அடக்கி ஆள்வோம்
இந்நாள் முழுவதும் இதமாய் வாழ்வோம்
வைகறை தொடங்கி மாலை வரை நம்
செய்கை அனைத்தும் ஒளியுறக் காண்கிற
தந்தையை மகனைத் தூய ஆவியைச்
சிந்தையில் இருத்தி சேவை புரிவோம்.
__________________________
(அமரவும்)
மு.மொழி.1: வீணையே யாழே விழித்தெழுங்கள்; வைகரையை நான் விழித்தெழச் செய்வேன்.
உதவிக்காக வேண்டல் - திபா 57
கடவுளே! எனக்கு இரங்கும், எனக்கு இரங்கும்;
நான் உம்மிடம் தஞ்சம் புகுகின்றேன்;
இடர் நீங்கும்வரை உம் இறக்கைகளின் நிழலையே
எனக்குப் புகலிடமாகக் கொண்டுள்ளேன்.
உன்னதரான கடவுளை நோக்கி,
எனக்காக யாவையும் செய்து முடிக்கும்
இறைவனை நோக்கியே நான் மன்றாடுகின்றேன்.
வானகத்தினின்று அவர் எனக்கு உதவி அனுப்பி
என்னைக் காத்தருள்வார்;
என்னை நசுக்குவோரை இழிவுப்படுத்துவார்.
கடவுள் தம் பேரன்பையும்
வாக்குப் பிறழாமையையும் வெளிப்படுத்துவார்.
மனிதரை வெறியோடு விழுங்கும்
சிங்கங்கள் போன்றவரிடையே நான் கிடக்கின்றேன்;
அவர்களின் பற்கள் ஈட்டியும் அம்பும் போன்றவை;
அவர்களின் நா கூர்மையான வாள் போன்றவை.
கடவுளே! வானங்களுக்கு மேலாக நீர் உயர்த்தப்பெறுவீராக!
பாரெங்கும் உமது மாட்சி விளங்குவதாக!
நான் நடக்கும் வழியில் எனக்குக் கண்ணி வைக்கின்றனர்;
நான் மனம் ஒடிந்து போனேன்;
என் பாதையில் குழி வெட்டினர்;
அவர்களே அதில் விழுந்தனர்.
என் உள்ளம் உறுதியாயிருக்கின்றது;
கடவுளே! என் உள்ளம் உறுதியாயிருக்கின்றது;
நான் பாடுவேன்; உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.
என் நெஞ்சே, விழித்தெழு!
வீணையே, யாழே, விழித்தெழுங்கள்;
வைகறையை நான் விழித்தெழச் செய்வேன்.
என் தலைவரே! மக்களினங்களிடையே
உமக்கு நன்றி செலுத்துவேன்;
எல்லா இனத்தாரிடையேயும் உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.
ஆண்டவரே! உமது பேரன்பு வானளவு உயர்ந்துள்ளது!
உமது வாக்குப்பிறழாமை முகில்களைத் தொடுகின்றது!
கடவுளே! வானங்களுக்கு மேலாக நீர் உயர்வு பெறுவீராக;
பாரெங்கும் உமது மாட்சி விளங்குவதாக.
மு.மொழி.: வீணையே யாழே விழித்தெழுங்கள்; வைகரையை நான் விழித்தெழச் செய்வேன்.
__________________________
மு.மொழி. 2: என் மக்கள் என் வல்லன்மையால் நிறைவு பெறுவர் என்கிறார் ஆண்டவர்.
விடுதலை பெற்ற மக்களின் மகிழ்ச்சி - எரே 31: 10-14
மக்களினத்தாரே, ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்;
தொலையிலுள்ள கடலோரப் பகுதிகளில் அதை அறிவியுங்கள்;
'இஸ்ரயேலைச் சிதறடித்தவரே அதைக் கூட்டிச் சேர்ப்பார்;
ஆயர் தம் மந்தையைக் காப்பதுபோல்
அதைக் காப்பார்' என்று சொல்லுங்கள்.
ஏனெனில், யாக்கோபை ஆண்டவர் மீட்டார்;
அவனிலும் வலியவன் கையினின்று அவனை விடுவித்தார்.
அவர்கள் வந்து சீயோனின் உச்சியில் பாடி மகிழ்வார்கள்;
தானியம், திராட்சை இரசம், எண்ணெய், ஆட்டுக்குட்டிகள்,
கன்று காலிகள், ஆகிய ஆண்டவரின் கொடைகளை
முன்னிட்டுப் பூரிப்படைவார்கள்;
அவர்களது வாழ்க்கை நீர்வளம் மிக்க தோட்டம் போல் இருக்கும்;
அவர்கள் இனிமேல், ஏங்கித் தவிக்க மாட்டார்கள்.
அப்பொழுது கன்னிப்பெண்கள் நடனம் ஆடிக் களித்திருப்பர்;
அவ்வாறே இளைஞரும் முதியோரும் மகிழ்ந்திருப்பர்;
அவர்களுடைய அழுகையை நான் மகிழ்ச்சியாக மாற்றுவேன்;
அவர்களுக்கு ஆறுதல் அளிப்பேன்;
துன்பத்திற்குப் பதிலாக இன்பத்தை அருள்வேன்.
குருக்களைச் செழுமையால் நிரப்புவேன்;
என் மக்கள் எனது வள்ளன்மையால்
நிறைவு பெறுவர், என்கிறார் ஆண்டவர்.
மு.மொழி.: என் மக்கள் என் வல்லன்மையால் நிறைவு பெறுவர் என்கிறார் ஆண்டவர்.
___________________________
மு.மொழி. 3: ஆண்டவர் மாண்பு மிக்கவர்; நம் கடவுளின் நகரில் மிகுந்த புகழுக்கு உரியவர்
கடவுளின் திருநாள் - திபா 48
ஆண்டவர் மாண்பு மிக்கவர்;
நம் கடவுளின் நகரில்,
அவரது திருமலையில் மிகுந்த புகழுக்கு உரியவர்.
தொலை வடக்கில் திகழும் சீயோன் மலை
அனைத்து உலகிற்கும் மகிழ்ச்சியால் இலங்குகின்றது;
மாவேந்தரின் நகரும் அதுவே.
அதன் அரண்மனைகளில் கடவுள் வீற்றிருந்து,
தம்மையே அதன் கோட்டை எனக் காட்டியுள்ளார்.
இதோ! அரசர் அனைவரும் ஒன்று கூடினர்;
அணிவகுத்து ஒன்றாக வந்தனர்;
அந்தோ! பார்த்ததும் திகைத்தனர்;
திகிலடைந்து ஓட்டம் பிடித்தனர்.
அங்கே அச்சம் அவர்களை ஆட்கொண்டது;
பேறுகாலப் பெண்போல் அவர்கள் துடிதுடித்தனர்.
தர்சீசுக் கப்பல்களைக் கீழைக் காற்றினால்
நீர் தகர்த்தெறிகின்றீர்.
கேள்விப்பட்டவாறே நேரில் யாம் கண்டோம்;
படைகளின் ஆண்டவரது நகரில்,
ஆம், கடவுளின் நகரினில் கண்டோம்;
கடவுள் அந்நகரை எந்நாளும் நிலைத்திருக்கச் செய்வார்.
கடவுளே! உமது கோவிலின் நடுவில்
உம் பேரன்பை நினைந்து உருகினோம்.
கடவுளே! உமது பெயரைப் போலவே உமது புகழும் பூவுலகின் கடை எல்லைவரை எட்டுகின்றது;
உமது வலக்கை நீதியை நிலைநாட்டுகின்றது.
சீயோன் மலை மகிழ்வதாக!
யூதாவின் நகர்கள் உம் நீதித்தீர்ப்புகளை முன்னிட்டு அக்களிப்பனவாக!
சீயோனை வலம் வாருங்கள்;
அதைச்சுற்றி நடைபோடுங்கள்;
அதன் காவல் மாடங்களை எண்ணிக்கையிடுங்கள்.
அதன் மதில்களைக் கவனித்துப் பாருங்கள்;
அதன் கோட்டைகளைச் சுற்றிப் பாருங்கள்;
அப்பொழுது, இனிவரும் தலைமுறைக்கு
இதை உங்களால் விவரிக்க இயலும்.
'இத்தகைய கடவுளே என்றென்றும் நம் கடவுள்;
அவரே நம்மை இறுதிவரை வழி நடத்துவார்.'
மு.மொழி.: ஆண்டவர் மாண்பு மிக்கவர்; நம் கடவுளின் நகரில் மிகுந்த புகழுக்கு உரியவர்
___________________________
(எழுந்து நின்று வாசிக்கவும்)
அருள்வாக்கு எசா: 66: 1, 2
ஆண்டவர் கூறுவது இதுவே; விண்ணகம் என் அரியணை; மண்ணகம் என் கால்மணை; அவ்வாறிருக்க, எத்தகைய கோவிலை நீங்கள் எனக்காகக் கட்டவிருக்கிறீர்கள்? எத்தகைய இடத்தில் நான் ஓய்வெடுப்பேன்? இவை அனைத்தையும் என் கைகளே உண்டாக்கின; இவை யாவும் என்னால் உருவாகின, என்கிறார் ஆண்டவர். எளியவரையும், உள்ளம் வருந்துபவரையும், என் சொல்லுக்கு அஞ்சுபவரையும் நான் கண்ணோக்குவேன்.
__________________________
சிறு மறுமொழி
℣ - ஆண்டவரே எனக்குச் செவிசாய்த்தருளும் என்று என் முழு உள்ளத்தோடு கூவி அழைத்தேன்.
℟ - ஆண்டவரே எனக்குச் செவிசாய்த்தருளும் என்று என் முழு உள்ளத்தோடு கூவி அழைத்தேன்.
℣ - நான் உமது கட்டளைகளைக் கடைப்பிடிப்பேன்.
℟ - என் முழு உள்ளத்தோடு கூவி அழைத்தேன்.
℣ - தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக
℟ - ஆண்டவரே எனக்குச் செவிசாய்த்தருளும் என்று என் முழு உள்ளத்தோடு கூவி அழைத்தேன்.
__________________________
(அனைவரும் எழுந்து நிற்கவும்)
செக்கரியாவின் பாடல்
மு.மொழி.: ஆண்டவருக்கு நாம் தூய்மையோடு பணிபுரிவோம். அவர் நம் பகைவரின் பிடியிலிருந்து நம்மை விடுவிப்பார்.
இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றுவோம்.
ஏனெனில் அவர் தம் மக்களைத் தேடிவந்து விடுவித்தருளினார்.
தம் தூய இறைவாக்கினர் வாயினால்
தொடக்க முதல் அவர் மொழிந்தபடியே
அவர் தம் ஊழியராகிய தாவீதின் குடும்பத்தில்
வல்லமை உடைய மீட்பர் ஒருவர் நமக்காகத் தோன்றச் செய்தார்;
நம் பகைவரிடமிருந்தும்
நம்மை வெறுப்போர் அனைவரின் பிடியிலிருந்தும்
நம்மை மீட்பார்.
அவர் நம் மூதாதையருக்கு இரக்கம் காட்டி,
தமது தூய உடன்படிக்கையையும்,
நம் தந்தையாகிய ஆபிரகாமுக்கு அவர் இட்ட ஆணையையும்
நிறைவேற்ற நினைவு கூர்ந்தார்.
இவ்வாறு நாம் பகைவரின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டுத்
தூய்மையோடும் நேர்மையோடும்
வாழ்நாளெல்லாம் அச்சமின்றி
அவர் திருமுன் பணிசெய்யுமாறு வழிவகுத்தார்.
குழந்தாய்,
நீ உன்னத கடவுளின் இறைவாக்கினர் எனப்படுவாய்;
ஏனெனில் பாவ மன்னிப்பால் வரும் மீட்பை
அவர்தம் மக்களுக்கு அறிவித்து
ஆண்டவருக்கான வழியைச் செம்மைப்படுத்த
அவர் முன்னே செல்வாய்.
இருளிலும் இறப்பின் பிடியிலும் இருப்போர்க்கு ஒளிதரவும்,
நம்முடைய கால்களை அமைதி வழியில் நடக்கச் செய்யவும்
நம் கடவுளின் பரிவுள்ளத்தாலும் இரக்கத்தாலும்
விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடிவருகிறது.
மு.மொழி.: ஆண்டவருக்கு நாம் தூய்மையோடு பணிபுரிவோம். அவர் நம் பகைவரின் பிடியிலிருந்து நம்மை விடுவிப்பார்.
_________________________
மன்றாட்டுக்கள்
கிறிஸ்துவோடு இந்நாளை தொடங்குவோம். அவர் நமக்கு அளித்த அனைத்திற்கும் நன்றி கூறி அவருடைய ஆசியை வேண்டுவோம்.
℟ - ஆண்டவரே இன்று எங்களுடைய பணியை ஏற்று ஆசீர்வதியும்
நீர் இதயத்தில் தாழ்ச்சியும் அமைதியும் உள்ளவர் - உம்மைப் போன்று நாங்களும் பிறரை ஏற்றுக்கொள்ள கற்றுத் தாரும்
℟ - ஆண்டவரே இன்று எங்களுடைய பணியை ஏற்று ஆசீர்வதியும்
இந்நாளின் தொடக்கத்திலேயே உமது ஒளி எங்கள் உள்ளங்களில் ஒளிர்வதாக - அது உலகில் பிறரன்பாக மிளிர்வதாக.
℟ - ஆண்டவரே இன்று எங்களுடைய பணியை ஏற்று ஆசீர்வதியும்
(தனிப்பட்ட தேவைகளுக்காக மன்றாடல்)
__________________________
ஆண்டவரின் செபம்
__________________________
இறுதி செபம்
என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, எங்கள் உள்ளங்களினின்று பாவ இருளைப் போக்கவும், அவற்றை உம் திருமகன் கிறிஸ்துவின் உண்மை ஒளியினால் நிரப்பவும், காலை நண்பகல் மாலை வேளைகளில் உம்மை வேண்டுகிறோம். என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவர் நீரே. ஆமென்.
_____________________________
ஆசி வழங்குதல்
குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக
எல்: உம் ஆன்மாவோடும் இருப்பாராக
குரு: எல்லாம் வல்ல இறைவன் தந்தை மகன் தூய ஆவியார் உங்களை ஆசீர்வதிப்பாராக.
எல்: ஆமென்
குரு: கிறிஸ்துவின் அமைதியில் சென்று வாருங்கள்
எல்: இறைவா உமக்கு நன்றி
(அல்லது)
முதல்: ஆண்டவர் நம்மை ஆசீர்வதித்து தீமைகள் அனைத்தினின்றும் பாதுகாத்து முடிவில்லா வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக
எல்: ஆமென்
முதல்: ஆண்டவரை வாழ்த்துவோமாக
எல்: இறைவா உமக்கு நன்றி.