1 - சனி காலைப் புகழ்
பாடல்
(எழுந்து நிற்கவும்)
விடிவெள்ளி எழவே விண்டலம் வெளுத்தது
விடிந்தது புதிய பகலே
கொடிய இருளுடன் இடர்கள் மறைந்தன
கதிரவன் ஒளிக்கதிர் புகவே.
இரவினில் எழும் விண்மாய்கை மறைக
குறை பாவம் உளம் நின்றகல்க
இருளும் அருவருப்பான யாவும்
இதயம் இருந்து ஒழிக
இதனால் நாம் எதிர்பார்க்கும் அந்த
இறுதி நாள் வரும்போது
இது நாள் நாம் புகழ் இசைப்பது போன்று
அதுவும் மகிழ்வுடன் வருக
தந்தை இறைவன் தனி புகழ் பெறுக
மைந்தனும் தூய ஆவியாரும்
சிந்தை கடந்த மூவொரு இறையாய்
எந்தக் காலமும் ஆள்க. ஆமென்.
__________________________
(அமரவும்)
மு.மொழி.1: என் கடவுளே! பொழுது புலரும் முன்பே என் கண்கள் உமக்காக விழித்துக் காத்திருக்கின்றன.
விடுதலைக்காக மன்றாடல் - திபா 119: 145-152
முழு இதயத்தோடு உம்மை நோக்கி மன்றாடுகின்றேன்;
ஆண்டவரே! என் மன்றாட்டைக் கேட்டருளும்;
உம் விதிமுறைகளை நான் பின்பற்றுவேன்.
உம்மை நோக்கி மன்றாடுகின்றேன்; என்னைக் காத்தருளும்;
உம் ஒழுங்குமுறைகளை நான் கடைப்பிடித்தேன்.
வைகறையில் நான் உம்மிடம் வந்து
உதவிக்காக மன்றாடுகின்றேன்;
உம் சொற்களில் நம்பிக்கை வைக்கின்றேன்.
உம் வாக்குறுதிகளைச் சிந்திப்பதற்காக,
இரவுச் சாம நேரங்களில் நான் கண்விழித்துள்ளேன்.
ஆண்டவரே! உமது பேரன்பிற்கேற்ப என் குரலைக் கேட்டருளும்;
உமது நீதியின்பபடி என்னுயிரைக் காத்தருளும்.
சதிசெய்து ஒடுக்குவோர் என்னை நெருங்கி வருகின்றனர்;
உம் திருச்சட்டத்துக்கும் அவர்களுக்கும் வெகு தொலைவு.
ஆண்டவரே! நீர் என் அருகில் இருக்கின்றீர்;
உம் கட்டளைகள் எல்லாம் நிலையானவை.
அவற்றை நீர் எக்காலத்திற்குமாக ஏற்படுத்தினீர் என்று
நீர் தந்த ஒழுங்குமுறைகளினின்று
முன்பே நான் அறிந்திருக்கின்றேன்.
மு.மொழி.: என் கடவுளே! பொழுது புலரும் முன்பே என் கண்கள் உமக்காக விழித்துக் காத்திருக்கின்றன.
__________________________
மு.மொழி. 2: ஆண்டவரே என் ஆற்றல்; அவருக்கு நான் புகழ் பாடுவேன். அவரே என் மீட்பு.
செங்கடலை கடந்தபின் வெற்றி பாடல் - விப 15: 1ஆ-4, 8-13, 17, 18
ஆண்டவருக்கு நான் புகழ் பாடுவேன்;
ஏனெனில், அவர் மாட்சியுடன் வெற்றிபெற்றார்;
குதிரையையும், குதிரை வீரனையும்
கடலுக்குள் அமிழ்த்திவிட்டார்.
ஆண்டவரே என் ஆற்றல்; என் பாடல்.
அவரே என் விடுதலை; என் கடவுள்.
அவரை நான் புகழ்ந்தேத்துவேன்.
அவரே என் மூதாதையரின் கடவுள்;
அவரை நான் ஏத்திப்போற்றுவேன்.
போரில் வல்லவர் ஆண்டவர்;
"ஆண்டவர்" என்பது அவர் பெயராம்.
பார்வோனின் தேர்களையும் படையையும்
அவர் கடலில் தள்ளிவிட்டார்;
பேரலைகள் சுவரென நின்றன;
கடல் நடுவில் ஆழங்கள் உறைந்து போயின.
எதிரி சொன்னான்;
"துரத்திச் செல்வேன்; முன் சென்று மடக்குவேன்;
கொள்ளைப் பொருளைப் பங்கிடுவேன்;
என் மனம் இதனால் நிறைவு கொள்ளும்;
என் வாளை உருவுவேன்;
என் கை அவர்களை அழிக்கும். "
நீரோ உமது காற்றை வீசச் செய்தீர்;
கடல் அவர்களை மூடிக்கொண்டது;
ஆற்றல் மிகு நீர்த்திரளில்
அவர்கள் ஈயம் போல் அமிழ்ந்தனர்.
ஆண்டவரே, தெய்வங்களுள்
உமக்கு நிகரானவர் எவர்?
தூய்மையில் மேலோங்கியவர், அஞ்சத்தக்கவர்,
புகழ்ச்சிக்குரியவர், அருஞ்செயல் ஆற்றுபவர்
ஆகிய உமக்கு நிகர் யார்?
நீர் உமது வலக்கையை நீட்டினீர்.
நிலம் அவர்களை விழுங்கி விட்டது.
நீர் மீட்டுக்கொண்ட மக்களை
உம் பேரருளால் வழிநடத்திச் சென்றீர்;
உம் ஆற்றலால் அவர்களை
உம் புனித உறைவிடம் நோக்கி வழி நடத்திச் சென்றீர்.
ஆண்டவரே, எம் தலைவரே!
நீர் ஏற்படுத்திய உமது உறைவிடமும்,
உம் கைகள் உருவாக்கிய திருத்தலமும் அமைந்துள்ள
உம் உரிமைச் சொத்தான மலைக்கு
அவர்களைக் கொண்டு சென்று நிலைநாட்டினீர்.
ஆண்டவர் என்றென்றும் அரசாள்வார்.
மு.மொழி.: ஆண்டவரே என் ஆற்றல்; அவருக்கு நான் புகழ் பாடுவேன். அவரே என் மீட்பு.
___________________________
மு.மொழி. 3: மக்களினத்தாரே நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றுங்கள்.
ஆண்டவர் போற்றி - திபா 117
பிற இனத்தாரே! நீங்கள் அனைவரும்
ஆண்டவரைப் போற்றுங்கள்!
மக்களினத்தாரே! நீங்கள் அனைவரும் அவரைப் புகழுங்கள்!
ஏனெனில், ஆண்டவர் நமக்குக் காட்டும்
மாறாத அன்பு மிகப்பெரியது;
அவரது உண்மை என்றென்றும் நிலைத்துள்ளது.
மு.மொழி.: மக்களினத்தாரே நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றுங்கள்.
___________________________
(எழுந்து நின்று வாசிக்கவும்)
அருள்வாக்கு எசா: 66: 1, 2
ஆண்டவர் கூறுவது இதுவே; விண்ணகம் என் அரியணை; மண்ணகம் என் கால்மணை; அவ்வாறிருக்க, எத்தகைய கோவிலை நீங்கள் எனக்காகக் கட்டவிருக்கிறீர்கள்? எத்தகைய இடத்தில் நான் ஓய்வெடுப்பேன்? இவை அனைத்தையும் என் கைகளே உண்டாக்கின; இவை யாவும் என்னால் உருவாகின, என்கிறார் ஆண்டவர். எளியவரையும், உள்ளம் வருந்துபவரையும், என் சொல்லுக்கு அஞ்சுபவரையும் நான் கண்ணோக்குவேன்.
_________________________
சிறு மறுமொழி
℣ - ஆண்டவரே நீரே என் புகலிடம்; உம்மை நான் கூவி அழைத்தேன்.
℟ - ஆண்டவரே நீரே என் புகலிடம்; உம்மை நான் கூவி அழைத்தேன்.
℣ - வாழ்வோர் நாட்டில் நீரே என் உரிமைச் சொத்து.
℟ - உம்மை நான் கூவி அழைத்தேன்.
℣ - தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக
℟ - ஆண்டவரே நீரே என் புகலிடம்; உம்மை நான் கூவி அழைத்தேன்.
__________________________
(அனைவரும் எழுந்து நிற்கவும்)
செக்கரியாவின் பாடல்
மு.மொழி.: ஆண்டவரே இருளிலும் இறப்பின் பிடியிலும் இருப்போருக்கு ஒளி தந்தருளும்.
இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றுவோம்.
ஏனெனில் அவர் தம் மக்களைத் தேடிவந்து விடுவித்தருளினார்.
தம் தூய இறைவாக்கினர் வாயினால்
தொடக்க முதல் அவர் மொழிந்தபடியே
அவர் தம் ஊழியராகிய தாவீதின் குடும்பத்தில்
வல்லமை உடைய மீட்பர் ஒருவர் நமக்காகத் தோன்றச் செய்தார்;
நம் பகைவரிடமிருந்தும்
நம்மை வெறுப்போர் அனைவரின் பிடியிலிருந்தும்
நம்மை மீட்பார்.
அவர் நம் மூதாதையருக்கு இரக்கம் காட்டி,
தமது தூய உடன்படிக்கையையும்,
நம் தந்தையாகிய ஆபிரகாமுக்கு அவர் இட்ட ஆணையையும்
நிறைவேற்ற நினைவு கூர்ந்தார்.
இவ்வாறு நாம் பகைவரின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டுத்
தூய்மையோடும் நேர்மையோடும்
வாழ்நாளெல்லாம் அச்சமின்றி
அவர் திருமுன் பணிசெய்யுமாறு வழிவகுத்தார்.
குழந்தாய்,
நீ உன்னத கடவுளின் இறைவாக்கினர் எனப்படுவாய்;
ஏனெனில் பாவ மன்னிப்பால் வரும் மீட்பை
அவர்தம் மக்களுக்கு அறிவித்து
ஆண்டவருக்கான வழியைச் செம்மைப்படுத்த
அவர் முன்னே செல்வாய்.
இருளிலும் இறப்பின் பிடியிலும் இருப்போர்க்கு ஒளிதரவும்,
நம்முடைய கால்களை அமைதி வழியில் நடக்கச் செய்யவும்
நம் கடவுளின் பரிவுள்ளத்தாலும் இரக்கத்தாலும்
விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடிவருகிறது.
மு.மொழி.: ஆண்டவரே இருளிலும் இறப்பின் பிடியிலும் இருப்போருக்கு ஒளி தந்தருளும்.
__________________________
மன்றாட்டுக்கள்
நம்மைக் கடவுளின் மக்களாக ஆக்கும் படியாக கிறிஸ்து மனிதனானார். அவரே நமக்காகத் தந்தையாகிய கடவுளிடம் பரிந்து பேசுகின்றார். ஆகவே அவரது அன்பிரக்கத்திற்காக நன்றி செலுத்தி அவரிடம் வேண்டும்.
℟ - ஆண்டவரே உமது அன்புத் களஞ்சியத்தை எமக்குத் தந்தருளும்.
ஆண்டவரே நீர் திருமுழுக்கில் எங்களை ஒளியின் மக்களாக்கினீர் - நாங்கள் இந்த நாளை உமக்கு அர்ச்சனையாக்குகின்றோம்.
℟ - ஆண்டவரே உமது அன்புத் களஞ்சியத்தை எமக்குத் தந்தருளும்.
எங்கள் அன்னையாம் மரியாவைப் போன்று நாங்கள் உமது வார்த்தைக்குப் பதில் அளிக்கக் கற்பித்தருளும். - உமது வாக்கு எங்களில் நிறை பலன் தருவதாக.
℟ - ஆண்டவரே உமது அன்புத் களஞ்சியத்தை எமக்குத் தந்தருளும்.
(தனிப்பட்ட தேவைகளுக்காக மன்றாடல்)
__________________________
ஆண்டவரின் செபம்
__________________________
இறுதி செபம்
ஆண்டவராகிய இயேசுவே உமது உயிர்ப்பின் பேரொளி எங்கள் இதயங்களையும் உள்ளங்களையும் ஒளிர்விப்பதாக. இதனால் நாங்கள் இறப்பின் இருளினின்று தப்பி, முடிவில்லா வாழ்வின் பேரொளியை அடைவோம். உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சிபுரியும் எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.
_______________________
ஆசி வழங்குதல்
குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக
எல்: உம் ஆன்மாவோடும் இருப்பாராக
குரு: எல்லாம் வல்ல இறைவன் தந்தை மகன் தூய ஆவியார் உங்களை ஆசீர்வதிப்பாராக.
எல்: ஆமென்
குரு: கிறிஸ்துவின் அமைதியில் சென்று வாருங்கள்
எல்: இறைவா உமக்கு நன்றி
(அல்லது)
முதல்: ஆண்டவர் நம்மை ஆசீர்வதித்து தீமைகள் அனைத்தினின்றும் பாதுகாத்து முடிவில்லா வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக
எல்: ஆமென்
முதல்: ஆண்டவரை வாழ்த்துவோமாக
எல்: இறைவா உமக்கு நன்றி.