1 - ஞாயிறு மாலைப் புகழ் 2
வாரம் 1: ஞாயிறு
மாலைப் புகழ் 2
முதல்: இறைவா எமக்குத் துணைபுரிய வாரும்
எல்: ஆண்டவரே எனக்குத் துணைபுரிய விரைந்து வாரும்
முதல்: தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக
எல்: தொடக்கத்தில் இருந்ததுபோல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக ஆமென்.
பாடல்
(எழுந்து நிற்கவும்)
ஒளியைச் சிறப்பாய் படைத்தவரே
ஒளியைப் பகலென அழைத்தீரே;
படைப்புத் தோன்றிய முதல் நாளில்
கொடுத்தீர் ஒளியை முதற்கொடையாய்
மாலையும் காலையும் இணைத்ததை
நாளென அழைக்கக் கற்பித்தீர்
அச்சமூட்டும் இரவு வருமுன்னே
அழுதோம் எம் வேண்டல் ஏற்பீரே
பாவச் சுமை எம்மை அழுத்தாமல்
சாவு நிலைக்கு எம்மை இழுக்காமல்
நிலையானவற்றையே நினைத்திடுவோம்
வினைகளின் தளைகளை அகற்றிடுவோம்
வானின் உணர்வுகள் எமை நிரப்பும்
வாழ்வின் பரிசை யாம் பெறவும்
தீங்குகளெல்லாம் விலகிடவும்
தீமைகள் அனைத்தையும் கழுவிடவும்
அருள்வீர் அன்பு நிறை தந்தையே நீர்;
திருமகனோடும் துணை நிற்கும்
ஆவி யாரோடும் ஆள்கின்றீர்
பூவுலகில் நிறைபுகழ் பெறுவீர். ஆமென்.
(அமரவும்)
__________________________
மு.மொழி.1: வலிமைமிகு தம் செங்கோலை ஆண்டவர் சீயோனிலிருந்து ஓங்கச் செய்வார். அல்லேலூயா!
அரசரும் குருவுமாகிய மெசியா - திபா 110: 1-5,7
எல்லாப் பகைவரையும் அடிபணிய வைக்கும் வரை அவர் ஆட்சி செய்தாக வேண்டும். (1 கொரி 15:25)
ஆண்டவர் என் தலைவரிடம்
'நான் உம் பகைவரை உமக்குப் கால்மணையாக்கும்வரை
நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்' என்று உரைத்தார்.
வலிமைமிகு உமது செங்கோலை
ஆண்டவர் சீயோனிலிருந்து ஒங்கச்செய்வார்;
உம் எதிரிகளிடையே ஆட்சி செலுத்தும்!
நீர் உமது படைக்குத் தலைமை தாங்கும் நாளில்
தூய கோலத்துடன் உம் மக்கள் தம்மை உவந்தளிப்பர்;
வைகறை கருவுயிர்த்த பனியைப்போல
உம் இளம் வீரர் உம்மை வந்தடைவர்.
'மெல்கிசெதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே'
என்று ஆண்டவர் ஆணையிட்டுச் சொன்னார்
அவர் தம் மனத்தை மாற்றிக் கொள்ளார்.
என் தலைவர் உம் வலப்பக்கத்தில் உள்ளார்;
தம் சினத்தின் நாளில் மன்னர்களை நொறுக்குவார்.
வழியில் உள்ள நீரோடையிலிருந்து அவர் பருகுவார்;
ஆகவே அவர் தலைநிமிர்ந்து நிற்பார்.
மு.மொழி.: வலிமைமிகு தம் செங்கோலை ஆண்டவர் சீயோனிலிருந்து ஓங்கச் செய்வார். அல்லேலூயா!
__________________________
மு.மொழி. 2: பூவுலகு ஆண்டவர் முன்னிலையில் நடுநடுங்கியது. அல்லேலூயா!
எகிப்திலிருந்து இஸ்ரயேலர் விடுதலை அடைந்தனர். - திபா 114:1-8
உலகப் பற்றினைத் துறந்த நீங்களும் எகிப்திலிருந்து விடுதலை அடைந்தவர்களே. (புனித அகுஸ்தின்)
எகிப்து நாட்டைவிட்டு இஸ்ரயேலர் வெளியேறியபொழுது,
வேற்று மொழி பேசிய மக்களை விட்டு
யாக்கோபின் குடும்பம் புறப்பட்டபொழுது,
யூதா அவருக்குத் தூயகம் ஆயிற்று;
இஸ்ரயேல் அவரது ஆட்சித்தளம் ஆனது.
செங்கடல் கண்டது; ஓட்டம் பிடித்தது;
யோர்தான் பின்னோக்கிச் சென்றது.
மலைகள் செம்மறிக் கிடாய்கள் போலும்
குன்றுகள் ஆட்டுக்குட்டிகள் போலும் துள்ளிக் குதித்தன.
கடலே! நீ விலகி ஓடும்படி உனக்கு நேர்ந்தது என்ன?
யோர்தானே! நீ பின்னோக்கிச் சென்றது ஏன்?
மலைகளே! நீங்கள் செம்மறிக் கிடாய்கள்போல் குதித்தது ஏன்?
குன்றுகளே! நீங்கள் ஆட்டுக் குட்டிகள் போல் துள்ளியது ஏன்?
பூவுலகே! தலைவர் முன்னிலையில் நடுநடுங்கு!
யாக்கோபின் கடவுள் முன்னிலையில் நடுக்கமுறு!
அவர் பாறையைத் தண்ணீர்த் தடாகம் ஆக்குகின்றார்;
கற்பாறையை வற்றாத நீர்ச்சுனை ஆக்குகின்றார்.
மு.மொழி.: பூவுலகு ஆண்டவர் முன்னிலையில் நடுநடுங்கியது. அல்லேலூயா!
__________________________
மு.மொழி. 3: ஆண்டவரே எல்லாம் வல்ல நம் கடவுளாகிய அரசர், அல்லேலூயா.
ஆட்டுக்குட்டியின் திருமணம் பாடல் - திவெ 19:1ஆ - 2, 5-7
அல்லேலூயா!
மீட்பும் மாட்சியும் வல்லமையும் நம் கடவுளுக்கே உரியன.
எல்: அல்லேலூயா!
ஏனெனில் அவருடைய தீர்ப்புகள்
உண்மை உள்ளவை, நீதியானவை.
எல்: அல்லேலூயா! (அல்லேலூயா!)
கடவுளின் பணியாளர்களே, நம் கடவுளைப் புகழுங்கள்
எல்: அல்லேலூயா!
அவருக்கு அஞ்சி நடப்பவர்களே,
சிறியோர்களே, பெரியோர்களே, நீங்கள் அனைவரும்
நம் கடவுளைப் புகழுங்கள்
எல்: அல்லேலூயா! (அல்லேலூயா!)
உன் கடவுளாகிய ஆண்டவர், எல்லாம் வல்லவர்;
அவர் ஆட்சி செலுத்துகின்றார்.
எல்: அல்லேலூயா!
எனவே மகிழ்வோம்,
பேருவகையுடன் அவரைப் போற்றிப் புகழ்வோம்.
எல்: அல்லேலூயா! (அல்லேலூயா!)
ஏனெனில் ஆட்டுக்குட்டியின் திருமண விழா வந்துவிட்டது.
எல்: அல்லேலூயா!
மணமகளும் விழாவுக்கு ஆயத்தமாய் இருக்கிறார்.
எல்: அல்லேலூயா! (அல்லேலூயா!)
மு.மொழி.: ஆண்டவரே எல்லாம் வல்ல நம் கடவுளாகிய அரசர், அல்லேலூயா.
__________________________
(எழுந்து நின்று வாசிக்கவும்)
அருள்வாக்கு 2 கொரி: 1: 3-4
நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் தந்தை இரக்கம் நிறைந்த கடவுள். அவரே ஆறுதல் அனைத்துக்கும் ஊற்று; அவரைப் போற்றுவோம். கடவுள் எங்களுடைய இன்னல்கள் அனைத்திலும் எங்களுக்கு ஆறுதல் அளிக்கிறார். நாங்களே கடவுளிடமிருந்து ஆறுதல் பெற்றுள்ளதால் பல்வேறு இன்னல்களில் உழலும் மற்ற மக்களுக்கும் ஆறுதல் அளிக்க எங்களால் முடிகிறது.
சிறு மறுமொழி
℣ - ஆண்டவரே விண்ணக வளாகத்தில் நீர் போற்ற பெறுவீராக.
℟ - ஆண்டவரே விண்ணக வளாகத்தில் நீர் போற்றப் பெறுவீராக.
℣ - நீர் எல்லாவற்றிற்கும் மேலாக என்றென்றும் உயர்த்தப்பட்டு, புகழப்படுகிறீர்.
℟ - நீர் போற்றப் பெறுவீராக.
℣ - தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக
℟ - ஆண்டவரே விண்ணக வளாகத்தில் நீர் போற்றப் பெறுவீராக.
(அனைவரும் எழுந்து நிற்கவும்)
மரியாவின் பாடல்
மு.மொழி.: (அந்தந்த காலத்திற்கு ஏற்றாற்போல்)
ஞாயிறு 01 (ஆண்டவரின் திருமுழுக்கு) | ஞாயிறு 05 நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள். உங்கள் ஒளி மனிதர் முன் ஒளிர்க! அப்பொழுது உங்கள் நற்செயல்களைக் கண்டு, விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள். |
ஞாயிறு 09 என்னை நோக்கி 'ஆண்டவரே, ஆண்டவரே' எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர். | ஞாயிறு 13 'நான் அனுப்புகிறவரை ஏற்றுக் கொள்பவர் என்னையே ஏற்றுக் கொள்கிறார். என்னை ஏற்றுக் கொள்பவர் என்னை அனுப்பியவரையே ஏற்றுக்கொள்கிறார்' என்கிறார் ஆண்டவர். |
ஞாயிறு 17 வணிகள் ஒருவர் நல்முத்துக்களைத் தேடிச் செல்கிறார். விலை உயர்ந்த ஒரு முத்தைக் கண்டவுடன், அவர் போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று, அதை வாங்கிக் கொள்கிறார். விண்ணரசு இந்நிகழ்ச்சிக்கு ஒப்பாகும். | ஞாயிறு 21 'நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்.' யோனாவின் மகனான சீமோனே, நீ பேறுபெற்றவர். |
ஞாயிறு 25 நீங்களும், என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள்; நேர்மையான கூலியை உங்களுக்குக் கொடுப்பேன். | ஞாயிறு 29 சீசருக்கு உரியவற்றைச் சீசருக்கும், கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள். அல்லேலூயா. |
ஞாயிறு 33 நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில், நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும். | ஞாயிறு 34 (கிறிஸ்து அரசர் பெருவிழா) |
ஆண்டவரை எனது உள்ளம்
போற்றிப் பெருமைப் படுத்துகின்றது.
என் மீட்பராம் கடவுளை நினைத்து
எனது மனம் பேருவகை கொள்கின்றது.
ஏனெனில் அவர் தம் அடிமையின்
தாழ்நிலையைக் கண்ணோக்கினார்.
இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும்
என்னைப் பேறுபெற்றவர் என்பர்.
ஏனெனில் வல்லவராம் கடவுள்
எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார்.
தூயவர் என்பதே அவரது பெயர்.
அவருக்கு அஞ்சி நடப்போருக்குத்
தலைமுறை தலைமுறையாய்
அவர் இரக்கம் காட்டி வருகிறார்.
அவர் தம் தோள் வலிமையைக் காட்டியுள்ளார்;
உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச்
சிதறடித்து வருகிறார்.
வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்;
தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்.
பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்;
செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார்.
மூதாதையருக்கு உரைத்தபடியே அவர்
ஆபிரகாமையும் அவர்தம் வழி மரபினரையும்
என்றென்றும் இரக்கத்தோடு
நினைவில் கொண்டுள்ளார்;
தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத்
துணையாக இருந்து வருகிறார் ".
தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும்...
மு.மொழி.: (அந்தந்த காலத்திற்கு ஏற்றாற்போல்)
ஞாயிறு 01 (ஆண்டவரின் திருமுழுக்கு) | ஞாயிறு 05 நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள். உங்கள் ஒளி மனிதர் முன் ஒளிர்க! அப்பொழுது உங்கள் நற்செயல்களைக் கண்டு, விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள். |
ஞாயிறு 09 என்னை நோக்கி 'ஆண்டவரே, ஆண்டவரே' எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர். | ஞாயிறு 13 'நான் அனுப்புகிறவரை ஏற்றுக் கொள்பவர் என்னையே ஏற்றுக் கொள்கிறார். என்னை ஏற்றுக் கொள்பவர் என்னை அனுப்பியவரையே ஏற்றுக்கொள்கிறார்' என்கிறார் ஆண்டவர். |
ஞாயிறு 17 வணிகள் ஒருவர் நல்முத்துக்களைத் தேடிச் செல்கிறார். விலை உயர்ந்த ஒரு முத்தைக் கண்டவுடன், அவர் போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று, அதை வாங்கிக் கொள்கிறார். விண்ணரசு இந்நிகழ்ச்சிக்கு ஒப்பாகும். | ஞாயிறு 21 'நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்.' யோனாவின் மகனான சீமோனே, நீ பேறுபெற்றவர். |
ஞாயிறு 25 நீங்களும், என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள்; நேர்மையான கூலியை உங்களுக்குக் கொடுப்பேன். | ஞாயிறு 29 சீசருக்கு உரியவற்றைச் சீசருக்கும், கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள். அல்லேலூயா. |
ஞாயிறு 33 நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில், நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும். | ஞாயிறு 34 (கிறிஸ்து அரசர் பெருவிழா) |
__________________________
மன்றாட்டுக்கள்
கிறிஸ்துவே திருஅவையாகிய தம் உடலுக்குத் தலை. நாமோ அவ்வுடலின் உறுப்புக்கள். இம்மாலை வேளையில் அவர் பெயரால் ஒன்றுகூடிய நாம் அவரிடம் வேண்டுவோம்.
℟ - ஆண்டவரே உமது ஆட்சி வருக.
உமது திருஅவை, நாடுகளுக்கெல்லாம் ஒளியாகவும் அனைத்து மாந்தரையும் ஒன்றுபடுத்தும் உமது ஆற்றலின் அடையாளமாகவும் ஊற்றாகவும் அமைவதாக - அத்திருஅவை மானிட இனத்தை உமது அன்பின் மறைபொருளுக்கு அழைத்துச் செல்வதாக.
℟ - ஆண்டவரே உமது ஆட்சி வருக.
உமது திருஅவையின் திருத்தந்தையையும், எங்கள் ஆயர் (.......) ஏனைய ஆயர்கள் அனைவரையும் வழி நடத்தும் - அவர்களுக்கு ஒற்றுமை அன்பு அமைதி ஆகிய கொடைகளை அளித்தருளும்.
℟ - ஆண்டவரே உமது ஆட்சி வருக.
ஏழைகள், நோயாளிகள், தனிமையில் வாடுவோர் அன்பு செய்யப்படாதவர்கள் இவர்களுக்கு நாங்கள் உமது பரிவையும் பாசத்தையும் காட்டிடச் செய்தருளும் - வருகின்ற வார நாள்களில் நாங்கள் உம்மைக் கண்டடைய எங்களை வழிநடத்தியருளும்.
℟ - ஆண்டவரே உமது ஆட்சி வருக.
(தனிப்பட்ட தேவைகளுக்காக மன்றாடல்)
இறந்தோரை மகிமையுடன் உயிர்த்தெழச் செய்யும் - காலத்தின் இறுதியில் நாங்களும் அவர்களோடு ஒன்றித்திருக்கச் செய்தருளும்.
℟ - ஆண்டவரே உமது ஆட்சி வருக.
__________________________
ஆண்டவரின் இறைவேண்டல் - அழைப்பு
1. நம் மீட்பர் நமக்குக் கற்பித்தவாறு, நாம் விண்ணகத் தந்தையை நோக்கி மன்றாடுவோம்.
2 இவ்வுலகில் இறையாட்சி வரவேண்டுமென்று மன்றாடுவோம்.
3. நமது புகழ்ச்சிகளையும் மன்றாட்டுகளையும் கிறிஸ்துவின் வார்த்தைகளில் சுருக்கமாய்ச் சொல்வோம்.
4. நமது புகழ்ச்சியையும் மன்றாட்டுகளையும் ஆண்டவருடைய இறைவேண்டலால் உறுதிப்படுத்துவோம்.
5. இப்போது கிறிஸ்துவே கற்றுக்கொடுத்த வார்த்தைகளால் தந்தையைப் புகழ்ந்து மன்றாடுவோம்.
6. (கிறிஸ்துவை நோக்கி) ஆண்டவரே, நாங்கள் உம் போதனையின்படி இறைவேண்டல் செய்யும் இவ்வேளையில், எங்களை உம் ஆட்சியில் நினைவு கூர்ந்தருளும்.
7. நம் ஆண்டவருடைய போதனையின்படி, நாம் நம்பிக்கையோடு சொல்வோம்.
8. நம் ஆண்டவரின் படிப்பினையைப் பின்பற்றி, நாம் மன்றாடுவோம்.
9. இறைவேண்டல்களுக்கெல்லாம் எடுத்துக்காட்டாக ஆண்டவர் நமக்குக் கொடுத்த வேண்டலை நாம் ஒருமித்து இப்போது சொல்வோம்.
__________________________
இறுதி செபம்
ஞாயிறு 01 (ஆண்டவரின் திருமுழுக்கு) | ஞாயிறு 05 ஆண்டவரே, உமது குடும்பத்தை இடையறாத பரிவிரக்கத்தால் காத்தருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் விண்ணக அருளை மட்டுமே எதிர்நோக்கியுள்ள இக்குடும்பம் உமது நிலையான பாதுகாவலால் என்றும் உறுதி அடைவதாக. உம்மோடும் தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் மகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். |
ஞாயிறு 09 ஆண்டவராகிய இறைவா, தவறா மனத்தினாலும் அன்பினாலும் எங்கள் வாழ்வை நீர் ஆண்டு நடத்துகின்றீர். அதனால் தீயவை அனைத்தையும் எங்களிடமிருந்து அகற்றி எமக்குப் பயன் அளிக்கும் அனைத்தையும் கனிவுடன் தந்தருள்வீராக. உம்மோடும் தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் மகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். | ஞாயிறு 13 இறைவா, உமது அருளால் உம் பிள்ளைகளாகத் தேர்ந்தெடுக்கப்பெற்ற நாங்கள் ஒளியின் மக்களாக இருக்க விரும்பினீரே; அதனால் நாங்கள் தவறு எனும் இருளில் சிக்கிக்கொள்ளாமல் உண்மையின் பேரொளியில் என்றும் சிறந்து விளங்க அருள்புரிவீராக. உம்மோடும் தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் மகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். |
ஞாயிறு 17 உம்மை எதிர்நோக்கி இருப்போரைப் பாதுகாப்பவரான இறைவா, உம்மால் அன்றி ஆற்றல் வாய்ந்ததும் புனிதமானதும் எதுவும் இல்லை; எங்கள் மீது உமது இரக்கத்தை மேன்மேலும் பொழிவதால் உம்மை எங்கள் தலைவராகவும் வழிகாட்டியாகவும் ஏற்றுக்கொண்டு நிலையானவற்றை நாங்கள் இப்போதே பற்றிக்கொள்ள நிலையற்ற இன்றைய நன்மைகளைப் பயன்படுத்தச் செய்வீராக. உம்மோடும் தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் மகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். | ஞாயிறு 21 நம்பிக்கையாளரின் உள்ளங்களை ஒன்றிணைப்பவரான இறைவா, நீர் கற்றுத்தருவதை உம் மக்கள் அன்பு செய்யவும் நீர் வாக்களிப்பதை விரும்பவும் செய்தருளும்; அதனால் மாறிவரும் இவ்வுலகச் சூழலில் எங்கள் இதயங்கள் உண்மையான பேரின்ப உலகின் மீது என்றும் நாட்டம் கொள்ளச் செய்வீராக. உம்மோடும் தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் மகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். |
ஞாயிறு 25 இறைவா, உம்மையும் பிறரையும் அன்பு செய்வதில் திருச்சட்டத்தின் எல்லாக் கட்டளைகளும் அடங்கியிருக்கச் செய்தீரே; உம் கட்டளைகளைக் கடைப்பிடிக்கும் நாங்கள் முடி வில்லா வாழ்வுக்கு வந்து சேரும் தகுதி பெற எங்களுக்கு அருள்வீராக. உம்மோடும் தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் மகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். | ஞாயிறு 29 என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, நாங்கள் எப்போதும் உமது திருவுளத்துக்கு ஏற்ப வாழச் செய்தருளும்; அதனால் மாண்புக்கு உரிய உமக்கு நேர்மையான இதயத்தோடு நாங்கள் ஊழியம் புரியச் செய்வீராக. உம்மோடும் தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் மகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். |
ஞாயிறு 33 ஆண்டவரே எங்கள் இறைவா, உம்மீது நாங்கள் கொண்டுள்ள பற்றன்பில் எப்பொழுதும் மகிழ்ந்திருக்கச் செய்ய உம்மை வேண்டுகின்றோம்: ஏனெனில் அனைத்து நன்மைகளுக்கும் ஊற்றாகிய உமக்கு நாங்கள் என்றும் பணி புரிவதால் முடிவில்லா, முழுமையான மகிழ்வைப் பெற்றுக்கொள்வோமாக. உம்மோடும் தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் மகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். | ஞாயிறு 34 (கிறிஸ்து அரசர் பெருவிழா) |
__________________________
ஆசி வழங்குதல்
அப: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக
எல்: உம் ஆன்மாவோடும் இருப்பாராக
அப: எல்லாம் வல்ல இறைவன் தந்தை மகன் தூய ஆவியார் உங்களை ஆசீர்வதிப்பாராக.
எல்: ஆமென்
அப: கிறிஸ்துவின் அமைதியில் சென்று வாருங்கள்
எல்: இறைவா உமக்கு நன்றி
(அல்லது)
முதல்: ஆண்டவர் நம்மை ஆசீர்வதித்து தீமைகள் அனைத்தினின்றும் பாதுகாத்து முடிவில்லா வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக
எல்: ஆமென்
முதல்: ஆண்டவரை வாழ்த்துவோமாக
எல்: இறைவா உமக்கு நன்றி.