1 - திங்கள் மாலைப் புகழ்

 வாரம் 1 -  திங்கள் 

மாலைப் புகழ்

முதல்: இறைவா எமக்குத் துணைபுரிய வாரும்

எல்: ஆண்டவரே எனக்குத் துணைபுரிய விரைந்து வாரும்

முதல்: தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக

எல்: தொடக்கத்தில் இருந்ததுபோல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக ஆமென்.


பாடல்

(எழுந்து நிற்கவும்)

மாண்புடன் விண்ணகம் படைத்தவரேஇ 
மாறுபாடின்றி இரு கூறுகளாய் 
தண்ணீர் ஓட பிரித்தமைத்தீர் 
விண்ணுக்கு எல்லை தந்தீர்.

வெப்ப மிகுதியால் வாழ்வெல்லாம் 
வெதும்பி அழிந்து போகாமல் 
தண்மைதரும் தண்ணீர் எங்கும் 
தரையில் தங்கச் செய்தீரே.

அன்பும் தூய்மையும் உடையவரே 
என்றென்றும் அருளைப் பொழிவீரே; 
என்னில் பாவம் தொடராமல் 
கன்னல் பணிபுரிய காப்பீரே..

எங்கள் நம்பிக்கை நாடும் ஒளியே 
மங்காஒளியாய் இலங்குபவரே 
தீங்கெமைத் தீண்டா தொழிக 
தங்கும் பொய்ம்மை எங்குமொழிக.

அன்புத் தந்தாய் எம்மைத் தாங்கும் 
உந்தன் மகனோடும் ஆவியாரோடும் 
என்றும் இணைந்திருக்கும் மூவொரு இறைவா 
குன்றாப் புகழ் உமக்கே என்றும். ஆமென்.

(அமரவும்)
__________________________

மு.மொழி.1: வறியோரையும் ஒடுக்கப்பட்டோரையும் ஆண்டவர் பராமரிக்கிறார்.

நேரிய மனத்தோர்க்கு ஆண்டவரே பாதுகாப்பு - திபா 11

நீதிநிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நிறைவுபெறுவர். (மத் 5:6)

ஆண்டவரிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்; 
பறவையைப் போல 
மலைக்குப் பறந்தோடிப் போ;
ஏனெனில், இதோ! பொல்லார் வில்லை வளைக்கின்றனர்; 
நாணில் அம்பு தொடுக்கின்றனர்; 
நேரிய உள்ளத்தார்மீது 
இருளில் அம்பு எய்யப் பார்க்கின்றனர்;
அடித்தளங்களே தகர்க்கப்படுகையில், 
நேர்மையாளரால் என் செய்ர்?' 
என்று என்னிடம் நீவிர் சொல்வானேன்?

ஆண்டவர் தம் தூய கோயிலில் இருக்கின்றார்; 
ஆண்டவரது அரியணை விண்ணுலகில் இருக்கின்றது; 
அவர் கண்கள் உற்று நோக்குகின்றன; 
அவர் விழிகள் மானிடரைச் சோதித்து றிகின்றன.
ஆண்டவர் நேர்மையாளரையும் பொல்லாரையும் 
சோதித்தறிகின்றார்; 

வன்முறையில் "நாட்டங்கொள்வோரை 
அவர் உள்ளம் வெறுக்கின்றது.
பொல்லார்மீது அவர் 
கரிநெருப்பும் கந்தகமும் பொழிவார்
பொசுக்கும் தீக்காற்றே அவர்கள் குடிக்கும் பானமாகும்.

நீதியுள்ள ஆண்டவர் நேரிய செயல்களை விரும்புகின்றார்; 
நேர்மையாளர் அவர்தம் திருமுகத்தை காண்பர்.

மு.மொழி.: வறியோரையும் ஒடுக்கப்பட்டோரையும் ஆண்டவர் பராமரிக்கிறார்.
__________________________

மு.மொழி. 2: தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர்.

ஆண்டவர் திருமுன் நிற்கத் தகுதி உள்ளவர் யார்? - திபா 15

நீங்கள் வந்து சேர்ந்திருக்கும் சீயோன் மலை வாழும் கடவுளின் நகர்; விண்ணக எருசலேம். (எபி 12:22)

ஆண்டவரே, உம் கூடாரத்தில் 
தங்கிடத் தகுதியுள்ளவர் யார்? 
உம் திருமலையில் குடியிருப்பவர் யார்?

மாசற்றவராய் நடப்போரே! 
இன்னோர் நேரியவற்றைச் செய்வர்; 
உளமார உண்மை பேசுவர்;
தம் நாவினால் புறங்கூறார்; 

தம் தோழருக்குத் தீங்கிழையார்; 
தம் அடுத்தவரைப் பழித்துரையார்.
நெறிதவறி நடப்போரை இழிவாகக் கருதுவர்; 
ஆண்டவருக்கு அஞ்சுவோரை உயர்வாக மதிப்பர்; 

தமக்குத் துன்பம் வந்தாலும், 
கொடுத்த வாக்குறுதியை மீறார்;
தம் பணத்தை வட்டிக்குக் கொடார்; 
மாசற்றவருக்கு எதிராகக் கையூட்டுப் பெறார்; 
இவ்வாறு நடப்போர் என்றும் நிலைத்திருப்பர்.

மு.மொழி.: தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர்.
___________________________

மு.மொழி. 3: கடவுள் தம் மகன் வழியாக நம்மைத் தேர்ந்தெடுத்தார். நம்மைத் தம் சொந்த பிள்ளைகளாக்கிக் கொண்டார்.

இறைவனே நம் மீட்பர் - எபே 1:3-10

நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் 
தந்தையும் கடவுளுமானவர் போற்றி! 
அவர் விண்ணகம் சார்ந்த, 
ஆவிக்குரிய ஆசி அனைத்தையும் 
கிறிஸ்து வழியாக நம்மீது பொழிந்துள்ளார்.

நாம் தூயோராகவும், மாசற்றோராகவும் 
தம் திருமுன் விளங்கும்படி, 
உலகம் தோன்றுவதற்கு முன்பே 
கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார்.

அவர் நம்மை இயேசு கிறிஸ்துவின் மூலம் 
தமக்குச் சொந்தமான பிள்ளைகளாக்கிக் கொள்ள 
அன்பினால் முன்குறித்து வைத்தார். 
இதுவே அவரது விருப்பம்; இதுவே அவரது திருவுளம். 

இவ்வாறு தம் அன்பார்ந்த மகன் வழியாக 
நம்மீது ஒப்புயர்வற்ற அருளைப் பொழிந்தருளியதால் 
அவரது புகழைப் பாடுகிறோம்.

கிறிஸ்து இரத்தம் சிந்தி தம் அருள்வளத்திற்கு ஏற்ப 
நமக்கு மீட்பு அளித்துள்ளார்; 
இம்மீட்பால் குற்றங்களிலிருந்து 
நாம் மன்னிப்புப் பெறுகிறோம்.

அந்த அருளை அவர் நம்மில் பெருகச்செய்து, 
அனைத்து ஞானத்தையும் 
அறிவுத்திறனையும் தந்துள்ளார்.
அவர் தமது திருவுளத்தின் மறைபொருளை 
நமக்குத் தெரியப்படுத்தியுள்ளார். 

இது கிறிஸ்து வழியாகக் 
கடவுள் விரும்பிச் செய்த தீர்மானம்.
கால நிறைவில் விண்ணிலுள்ளவை, 
மண்ணிலுள்ளவை அனைத்தையுமே 
கிறிஸ்துவின்; தலைமையில் ஒன்று சேர்க்க வேண்டும் 
என்ற திட்டமே அம்மறைபொருள்.

மு.மொழி.: கடவுள் தம் மகன் வழியாக நம்மைத் தேர்ந்தெடுத்தார். நம்மைத் தம் சொந்த பிள்ளைகளாக்கிக் கொண்டார்.
___________________________

(எழுந்து நின்று வாசிக்கவும்)

அருள்வாக்கு            கொலோ: 1: 9-11

நீங்கள் முழு ஞானத்தையும் ஆவிக்குரிய அறிவுத்திறனையும் பெற்றுக் கடவுளின் திருவுளத்தைப்பற்றிய அறிவை நிறைவாக அடையவேண்டும். நீங்கள் அனைத்திலும் ஆண்டவருக்கு உகந்தவற்றைச் செய்து அவருக்கு ஏற்புடையவர்களாய் நடந்து கொள்ள வேண்டும். நீங்கள் பயன்தரும் நற்செயல்கள் அனைத்தும் செய்து கடவுளைப்பற்றிய அறிவில் வளரவேண்டும். நீங்கள் முழு மனஉறுதியோடும் பொறுமையோடும் இருக்குமாறு தம் மாட்சிமிகு ஆற்றலுக்கேற்பத் தம் வல்லமையால் அவர் உங்களுக்கு வலுவூட்ட வேண்டும்.
__________________________

சிறு மறுமொழி


- ஆண்டவரே நான் உனக்கு எதிராகப் பாவம் செய்தேன் என் உள்ளத்தைக் குணமாக்கியருளும்.
ஆண்டவரே நான் உனக்கு எதிராகப் பாவம் செய்தேன் என் உள்ளத்தைக் குணமாக்கியருளும்.

- ஆண்டவரே என்மீது இரக்கமாயிரும் என்று நான் சொன்னேன்
என் உள்ளத்தைக் குணமாக்கியருளும்.

- தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக
ஆண்டவரே நான் உனக்கு எதிராகப் பாவம் செய்தேன் என் உள்ளத்தைக் குணமாக்கியருளும்.

(அனைவரும் எழுந்து நிற்கவும்))

__________________________

மரியாவின் பாடல்

மு.மொழி.: ஆண்டவரை எனது உள்ளம் ஏத்திப் போற்றிப் பெருமைப்படுத்துகின்றது. ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார்.

ஆண்டவரை எனது உள்ளம் 
போற்றிப் பெருமைப்படுத்துகின்றது. 
என் மீட்பராம் கடவுளை நினைத்து 
எனது மனம் பேருவகை கொள்கின்றது.

ஏனெனில் அவர் தம் அடிமையின் 
தாழ்நிலையைக் கண்ணோக்கினார்.
இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் 
என்னைப் பேறுபெற்றவர் என்பர்.

ஏனெனில் வல்லவராம் கடவுள் 
எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். 
தூயவர் என்பதே அவரது பெயர்.

அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் 
தலைமுறை தலைமுறையாய் 
அவர் இரக்கம் காட்டி வருகிறார்.

அவர் தம் தோள் வலிமையைக் காட்டியுள்ளார்; 
உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் 
சிதறடித்து வருகிறார்.

வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்; 
தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்.

பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்; 
செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார்.

மூதாதையருக்கு உரைத்தபடியே அவர் 
ஆபிரகாமையும் அவர்தம் வழி மரபினரையும் 
என்றென்றும் இரக்கத்தோடு 
நினைவில் கொண்டுள்ளார்;
தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத் 
துணையாக இருந்து வருகிறார் ".

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும்...

மு.மொழி.: ஆண்டவரை எனது உள்ளம் ஏத்திப் போற்றிப் பெருமைப்படுத்துகின்றது. ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார்.
__________________________

மன்றாட்டுக்கள்

என்றுமுள்ள உடன்படிக்கையினால் நம் தந்தையாகிய கடவுள் தம்மை நம்மோடு பிணைத்துக் கொண்டார். நன்றி உணர்வோடும் நம்பிக்கையோடும் நாம் அவரிடம் வேண்டுவோம்.

℟ - ஆண்டவரே உம் மக்களை ஆசீர்வதியும்.

கிறிஸ்துவில், நீர் மனிதருக்கு ஒரு புதிய உடன்படிக்கையைக் கொடுத்தீர் - இதனால் அவர்கள் தாங்கள் அடைந்த மாண்பினை உணர்ந்து கொள்வார்களாக.

℟ - ஆண்டவரே உம் மக்களை ஆசீர்வதியும்.

கிறிஸ்தவர் என்று பெயர் தாங்கிய அனைவரையும் ஒன்று சேர்த்தருளும் - இதனால் நீர் அனுப்பிய கிறிஸ்துவில் உலகம் நம்பிக்கை கொள்வதாக.

℟ - ஆண்டவரே உம் மக்களை ஆசீர்வதியும்.

எங்களுடைய நண்பர்கள் மீதும் எங்களுக்கு தெரிந்தவர்கள் மீதும் உமது அன்பைப் பொழிந்தருளும் - இதனால் அவர்கள் கிறிஸ்துவின் கனிவை எடுத்துச் செல்வார்களாக.

℟ - ஆண்டவரே உம் மக்களை ஆசீர்வதியும்.

(தனிப்பட்ட தேவைகளுக்காக மன்றாடல்)

இறக்கின்றவர்களுக்கு ஆறுதல் அளித்தருளும் - அவர்கள் உமது மீட்கும் அன்பைக் கண்டுணர்வார்களாக. இறந்தோர்மீது இரக்கமாயிரும் - அவர்கள் கிறிஸ்துவில் இளைப்பாறுதலை கண்டடைவார்களாக.

℟ - ஆண்டவரே உம் மக்களை ஆசீர்வதியும்.
__________________________

ஆண்டவரின் இறைவேண்டல் - அழைப்பு
1. நம் மீட்பர் நமக்குக் கற்பித்தவாறு, நாம் விண்ணகத் தந்தையை நோக்கி மன்றாடுவோம்.

2 இவ்வுலகில் இறையாட்சி வரவேண்டுமென்று மன்றாடுவோம்.

3. நமது புகழ்ச்சிகளையும் மன்றாட்டுகளையும் கிறிஸ்துவின் வார்த்தைகளில் சுருக்கமாய்ச் சொல்வோம்.

4. நமது புகழ்ச்சியையும் மன்றாட்டுகளையும் ஆண்டவருடைய இறைவேண்டலால் உறுதிப்படுத்துவோம்.

5. இப்போது கிறிஸ்துவே கற்றுக் வார்த்தைகளால் தந்தையைப் புகழ்ந்து மன்றாடுவோம். 

6. (கிறிஸ்துவை நோக்கி) ஆண்டவரே, நாங்கள் உம் போதனையின்படி இறைவேண்டல் செய்யும் இவ்வேளையில், எங்களை உம் ஆட்சியில் நினைவு கூர்ந்தருளும். கொடுத்த

7. நம் ஆண்டவருடைய போதனையின்படி, நாம் நம்பிக்கையோடு சொல்வோம்.

8. நம் ஆண்டவரின் படிப்பினையைப் பின்பற்றி, நாம் மன்றாடுவோம்.

9. இறைவேண்டல்களுக்கெல்லாம் எடுத்துக்காட்டாக ஆண்டவர் நமக்குக் கொடுத்த வேண்டலை நாம் ஒருமித்து இப்போது சொல்வோம்.
__________________________

இறுதி செபம்

ஆண்டவரே எமது மீட்பை முன்னிட்டு உம் அடியாராகிய மரியாவின் தாழ்நிலையைக்  கண்ணோக்கினீர். எமது வழிபாடு உமக்கு மகிமை அளிப்பதாக. மீட்பின் நிறைவை மரியாவோடு பகிர்ந்து கொள்ள எங்களை விழித்தெழச் செய்யும்.  உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.
_______________________

ஆசி வழங்குதல்

அப: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக 
எல்: உம் ஆன்மாவோடும் இருப்பாராக 

அப: எல்லாம் வல்ல இறைவன் தந்தை மகன் தூய ஆவியார் உங்களை ஆசீர்வதிப்பாராக. 
எல்: ஆமென் 

அப: கிறிஸ்துவின் அமைதியில் சென்று வாருங்கள் 
எல்: இறைவா உமக்கு நன்றி 

(அல்லது)

முதல்: ஆண்டவர் நம்மை ஆசீர்வதித்து தீமைகள் அனைத்தினின்றும் பாதுகாத்து முடிவில்லா வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக 
எல்: ஆமென் 

முதல்: ஆண்டவரை வாழ்த்துவோமாக 
எல்: இறைவா உமக்கு நன்றி.