1 - வெள்ளி மாலைப் புகழ்
1 - வெள்ளி மாலை செபம்
முதல்: இறைவா எமக்குத் துணைபுரிய வாரும்
எல்: ஆண்டவரே எனக்குத் துணைபுரிய விரைைந்து வாரும்
முதல்: தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக
எல்: தொடக்கத்தில் இருந்ததுபோல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக ஆமென்.
__________________________
பாடல்
(எழுந்து நிற்கவும்)
அனைத்தையும் அழகுடன் அமைத்தவரே
மனிதனைப் படைத்த இறையவனே
விலங்குகள் ஊர்வன போன்றவற்றை
நிலம்நின்று உருப்பெறப் பணித்தீரே.
படைத்தவை அனைத்தையும் மனிதனுக்கு
உடைமை யாகக் கொடுத்தீரே
அலையும் தத்தம் இயல்பின்படி
அவனுக்கு அடங்கிடச் செய்தீரே.
தீயவை சிந்தையில் எம்செயலில்
தோய விடாதுஎம் உள்ளத்தில்
மாசுகள் எதுவும் அணுகாது
ஆசையை அடக்க அருள்தருவீர்.
விண்ணில் எம்பரிசாய் மகிழ்ச்சியையும்
மண்ணில் உம்மருளையும் எமக்களிப்பீர்
உறுதியாய் மொழிந்த அமைதியையும்
தருவீர் பிணக்கின் தளைமுறிப்பீர்.
இச்செபம் ஏற்பீர் எம்தந்தாய்
உச்ச நிலையுள உம்மகனும்
அச்சம் அகற்றும் ஆவியரும்
இச்செகம் உம்முடன் ஆளுகவே. ஆமென்.
__________________________
(அமரவும்)
மு.மொழி.1: ஆண்டவரே உமக்கு எதிராகப் பாவம் செய்தேன்;
ஏழையானார். அவருடைய ஏழ்மையினால் நீங்கள் செல்வராகுமாறு
என்னைக் குணப்படுத்தும்.
நோயுற்றோரின் மன்றாட்டு - திபா 41
எளியோரின் நலனில் அக்கறை கொள்பவர் பேறுபெற்றவர்
துன்ப நாளில் ஆண்டவர் அவரை விடுவிப்பார்
ஆண்டவர் அவரைப் பாதுகாப்பார்
நெடுங்காலம் வாழவைப்பார்
நாட்டில் பேறுபெற்றவராய் விளங்கச் செய்வார்.
எதிரிகளின் விருப்பத்திற்கு அவரைக் கையளிக்கமாட்டார்.
படுக்கையில் அவர் நோயுற்றுக் கிடக்கையில்
ஆண்டவர் அவருக்குத் துணை செய்வார்
நோய் நீங்கிப் படுக்கையினின்று
அவர் எழும்பும்படி செய்வார்.
ஆண்டவரே எனக்கு இரங்கும்
என்னைக் குணப்படுத்தும்
உமக்கு எதிராகப் பாவம் செய்தேன் என்று மன்றாடினேன்
என் எதிரிகள் என்னைப்பற்றி தீயது பேசி
அவன் எப்போது சாவான்
அவன் பெயர் எப்போது ஒழியும் என்கின்றனர்
ஒருவன் என்னைப் பார்க்க வந்தால்
நயவஞ்சகமாகப் பேசுகின்றான்
என்னைப்பற்றிய தவறான செய்திகளை சேகரித்துக்கொண்டு
வெளியே போய் அவற்றைப் பரப்புகின்றான்.
என்னை வெறுப்போர் அனைவரும் ஒன்றுகூடி
எனக்கு எதிராய்க் காதோடு காதாய்ப் பேசுகின்றனர்
எனக்கு தீங்கிழைக்கத் திட்டமிடுகின்றனர்
தீயது ஒன்று அவனை உறுதியாய்ப் பற்றிக்கொண்டது
படுக்கையில் கிடக்கின்ற அவன்
இனி எழவே மாட்டான் என்று சொல்கின்றனர்
என் உற்ற நண்பன் நான் பெரிதும் நம்பினவன்
என் உணவை உண்டவன் எனக்கு இரண்டகமாகத்
தன் குதிகாலைத் தூக்குகின்றான்.
ஆண்டவரே என்மீது இரங்கி
நான் அவர்களுக்குப் பதிலடி கொடுக்கும்படி தூக்கிவிடும்
என் எதிரி என்னை வென்று
ஆர்ப்பரிக்கப் போவதில்லை
இதனால் நீர் என்னில் மகிழ்வுறுகின்றீர்
என்பதை அறிந்து கொள்கின்றேன்
நானோ நேர்மையில் உறுதியாய் இருக்கின்றேன்
நீர் எனக்கு ஆதரவளிக்கின்றீர்
உமது முன்னிலையில் என்னை என்றும் நிலைநிற்கச் செய்கின்றீர்
இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் புகழப் பெறுவாராக
ஊழி ஊழியாய்ப் புகழப்பெறுவாராக.
ஆமென்! ஆமென்!
மு.மொழி.: ஆண்டவரே உமக்கு எதிராகப் பாவம் செய்தேன்;
ஏழையானார். அவருடைய ஏழ்மையினால் நீங்கள் செல்வராகுமாறு
என்னைக் குணப்படுத்தும்.
__________________________
மு.மொழி. 2: படைகளின் ஆண்டவர் நம்மோடு இருக்கின்றார்;
யாக்கோபின் கடவுளே நமக்கு அரண்
நம்மோடு வாழும் கடவுள் - திபா 46
கடவுள் நமக்கு அடைக்கலமும் ஆற்றலுமாய் உள்ளார்
இடுக்கண்ணுற்ற வேளைகளில்
நமக்கு உற்ற துணையும் அவரே
ஆகையால் நிலவுலகம் நிலைகுலைந்தாலும்
மலைகள் ஆழ்கடலில் அதிர்ந்து நடுங்கினாலும்
கடலின் அலைகள் கொந்தளித்துப் பொங்கினாலும்
அவற்றின் பெருக்கால் குன்றுகள் அதிர்ந்து நடுங்கினாலும்
எங்களுக்கு அச்சமென்பதே இல்லை.
ஆறு ஒன்று உண்டு, அதன் கால்வாய்கள்
உன்னதரான கடவுளின் திரு உறைவிடமான
நகருக்குப் பேரின்பம் அளிக்கின்றன
அந்நகரின் நடுவில் கடவுள் இருக்கின்றார்
அது ஒருபோதும் நிலைகுலையாது
வைகறைதோறும் கடவுள் துணை அதற்கு உண்டு
வேற்றினத்தார் கலக்கமுற்றனர்
அரசுகள் ஆட்டம் கண்டன.
கடவுளின் குரல் முழங்கிற்று
பூவுலகம் கரைந்தது
படைகளின் ஆண்டவர் நம்மோடு இருக்கின்றார்
யாக்கோபின் கடவுளே நமக்கு அரண்.
வாரீர் ஆண்டவரின் செயல்களைக் காணீர்
அவர் உலகில் ஆற்றியுள்ள
திகைப்பூட்டும் நிகழ்ச்சிகளைப் பாரீர்
உலகின் கடையெல்லை வரை
போர்களைத் தடுத்து நிறுத்துகின்றார்
வில்லை ஒடிக்கின்றார் ஈட்டியை முறிக்கின்றார்
தேர்களை தீக்கு இரையாக்குகின்றார்.
அமைதி கொண்டு
நானே கடவுள் என உணர்ந்து கொள்ளுங்கள்
வேற்றினத்தாரிடையே நான் உயர்ந்திருப்பேன்
பூவுலகில் நானே மாட்சியுடன் விளங்குவேன்
படைகளின் ஆண்டவர் நம்மோடு இருக்கின்றார்
யாக்கோபின் கடவுளே நமக்கு அரண்.
மு.மொழி.: படைகளின் ஆண்டவர் நம்மோடு இருக்கின்றார்;
யாக்கோபின் கடவுளே நமக்கு அரண்.
___________________________
மு.மொழி. 3: ஆண்டவரே எல்லா மக்களினங்களும் உம் திருமுன்
வந்து வணங்கும்.
தொழுகைப்பாடல் - திவெ 15:3-4
கடவுளாகிய ஆண்டவரே எல்லாம் வல்லவரே
உம் செயல்கள் பெரியன வியப்புக்குரியன
மக்களினங்களின் மன்னரே
உம் வழிகள் நேரியவை, உண்மையுள்ளவை.
ஆண்டவரே உமக்கு அஞ்சாதவர் யார்
உமது பெயரைப் போற்றிப் புகழாதார் யார்
நீர் ஒருவரே தூயவர்
எல்லா மக்களினங்களும் உம் திருமுன் வந்து வணங்கும்
ஏனெனில் உம் நீதிச் செயல்கள் வெளிப்படையாயின.
மு.மொழி.: ஆண்டவரே எல்லா மக்களினங்களும் உம் திருமுன்
வந்து வணங்கும்.
___________________________
(எழுந்து நின்று வாசிக்கவும்)
அருள்வாக்கு உரோ 15:1-3
மனவலிமை கொண்டவர்களாகிய நாம் வலுவற்றவர்களின்
குறைபாடுகளைத் தாங்கிக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம்.
நமக்கு உகந்ததையே தேடலாகாது. அடுத்தவருடைய
நன்மைக்காகவும் வளர்ச்சிக்காகவும் செயல்பட்டு அவர்களுக்கு
உகந்தவர்களாக வாழுங்கள். கிறிஸ்துவும் தமக்கு உகந்ததைத்
தேடவில்லை. உம்மைப் பழித்துப் பேசினவர்களின் பழிச் சொற்கள்
என்மீது விழுந்தன என்று மறைநூலில் எழுதியுள்ளது அல்லவா?
__________________________
சிறு மறுமொழி
℣ - கிறிஸ்து நம்மை அன்பு செய்தார். தமது தூய இரத்தத்தால்
நம் பாவங்களைக் கழுவினார்.
℟ - கிறிஸ்து நம்மை அன்பு செய்தார். தமது தூய இரத்தத்தால்
நம் பாவங்களைக் கழுவினார்.
℣ - நம்மை அவர் அரசர் குல குருக்களாக்கி கடவுளுக்குப்
பணிபுரியச் செய்தார்.
℟ - தமது தூய இரத்தத்தால்
நம் பாவங்களைக் கழுவினார்.
℣ - தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக
℟ - கிறிஸ்து நம்மை அன்பு செய்தார். தமது தூய இரத்தத்தால்
நம் பாவங்களைக் கழுவினார்.
__________________________
(அனைவரும் எழுந்து நிற்கவும்)
மரியாவின் பாடல்
மு.மொழி.: ஆண்டவர் என்றென்றும் இரக்கத்தோடு நினைவில்
கொண்டு தம் ஊழியருக்குத் துணையாக வந்தார்.
ஆண்டவரை எனது உள்ளம்
போற்றிப் பெருமைப் படுத்துகின்றது.
என் மீட்பராம் கடவுளை நினைத்து
எனது மனம் பேருவகை கொள்கின்றது.
ஏனெனில் அவர் தம் அடிமையின்
தாழ்நிலையைக் கண்ணோக்கினார்.
இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும்
என்னைப் பேறுபெற்றவர் என்பர்.
ஏனெனில் வல்லவராம் கடவுள்
எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார்.
தூயவர் என்பதே அவரது பெயர்.
அவருக்கு அஞ்சி நடப்போருக்குத்
தலைமுறை தலைமுறையாய்
அவர் இரக்கம் காட்டி வருகிறார்.
அவர் தம் தோள் வலிமையைக் காட்டியுள்ளார்;
உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச்
சிதறடித்து வருகிறார்.
வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்;
தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்.
பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்;
செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார்.
மூதாதையருக்கு உரைத்தபடியே அவர்
ஆபிரகாமையும் அவர்தம் வழி மரபினரையும்
என்றென்றும் இரக்கத்தோடு
நினைவில் கொண்டுள்ளார்;
தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத்
துணையாக இருந்து வருகிறார் ".
மு.மொழி.: ஆண்டவர் என்றென்றும் இரக்கத்தோடு நினைவில்
கொண்டு தம் ஊழியருக்குத் துணையாக வந்தார்.
__________________________
மன்றாட்டுக்கள்
நம் அன்புத் தந்தையாகிய இறைவன். நம் எல்லாத் தேவைகளையும் அறிந்து பராமரிக்கிறார். நம்பிக்கையோடு நாம்
அவரிடம் வேண்டுவோம்.
℟ - தந்தாய் நாங்கள் உமது அன்பில் நிறைவு பெறுவோமாக!
உம் திருமகன் கிறிஸ்து திருச்சபைக்காகப் பாடுபட்டு
இறந்தார் - இன்றிரவு துன்புறுகின்ற கிறிஸ்தவர்கள் அனைவரோடும்
நீர் இருப்பீராக.
℟ - தந்தாய் நாங்கள் உமது அன்பில் நிறைவு பெறுவோமாக!
எல்லாம் வல்ல தந்தையே, எங்கள் அருகில் இருப்பீராக - நீர்
ஒருவரே அச்சுறுத்துகின்ற தீமைகளிலிருந்து எங்களைக் காப்பாற்ற முடியும்.
℟ - தந்தாய் நாங்கள் உமது அன்பில் நிறைவு பெறுவோமாக!
(தனிப்பட்ட தேவைகளுக்காக மன்றாடல்)
__________________________
ஆண்டவரின் செபம்
__________________________
இறுதி செபம்
ஆண்டவராகிய இறைவா, உம் திருமகனின் அன்பு எங்கள்
சுமைகளை எளிதாகத் தாங்கச் செய்கிறது. அச்சுமையை நாங்கள்
எப்போதும் சுமந்து செல்லத் தயாராயிருக்குமாறு அவருடைய
பாடுகள் கற்பிப்பனவாக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சிபுரியும் எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.
_____________________________
ஆசி வழங்குதல்
குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக
எல்: உம் ஆன்மாவோடும் இருப்பாராக
குரு: எல்லாம் வல்ல இறைவன் தந்தை மகன் தூய ஆவியார் உங்களை ஆசீர்வதிப்பாராக.
எல்: ஆமென்
குரு: கிறிஸ்துவின் அமைதியில் சென்று வாருங்கள்
எல்: இறைவா உமக்கு நன்றி
(அல்லது)
முதல்: ஆண்டவர் நம்மை ஆசீர்வதித்து தீமைகள் அனைத்தினின்றும் பாதுகாத்து முடிவில்லா வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக
எல்: ஆமென்
முதல்: ஆண்டவரை வாழ்த்துவோமாக
எல்: இறைவா உமக்கு நன்றி.