1 - புதன் மாலைப் புகழ்
1 - புதன் மாலை செபம்
முதல்: இறைவா எமக்குத் துணைபுரிய வாரும்
எல்: ஆண்டவரே எனக்குத் துணைபுரிய விரைைந்து வாரும்
முதல்: தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக
எல்: தொடக்கத்தில் இருந்ததுபோல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக ஆமென்.
__________________________
பாடல்
(எழுந்து நிற்கவும்)
விண்ணின் இறைவா தூய்மை மிகுந்தோய்
விண்மீன் ஆதவன் அனைத்தும் படைத்தீர்
நான்காம் நாளில் நாளும் திங்களும்
ஆண்டும் முறையாய் சுழன்றிடச் செய்தீர்
படைத்த பலவித ஒளியால் உலகம்
அடைந்த அழகும் சிறப்பும் என்னே
கோல முடனே குவலயம் அமைத்தீர்
காலங் களையும் கருத்துடன் வகுத்தீர்.
மனிதரின் இதயத்தை ஒளியால் நிரப்பும்
மனத்தின் அழுக்கை அருளால் போக்கும்
பாவத் தளையைப் பரிவுடன் அவிழ்ப்பீர்
பாவப் பளுவை அகற்றிடு வீரே.
இச்செபம் இரங்கி ஏற்பீர் தந்தையே
உச்ச நிலையமர் உம்திரு மகனும்
அச்சம் அகற்றும் துய ஆவியும்
இச்செகம் உம்முடன் ஆளுக என்றும். ஆமென்.
__________________________
(அமரவும்)
மு.மொழி.1: ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு; யாருக்கு
நான் அஞ்ச வேண்டும்?
புகழ்ச்சிப் பாடல் - திபா 27
I
ஆண்டவரே என் ஒளி அவரே என் மீட்பு
யாருக்கு நான் அஞ்ச வேண்டும்
ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம்
யாருக்கு நான் அஞ்சி நடுங்கவேண்டும்?
தீயவர் என் உடலை விழுங்க என்னை நெருங்குகையில்
என் பகைவரும் எதிரிகளுமான அவர்களே இடறி விழுந்தார்கள்
எனக்கெதிராக ஒரு படையே பாளையமிறங்கினும்
என் உள்ளம் அஞ்சாது
எனக்கெதிராகப் போர் எழுந்தாலும் நான் நம்பிக்கையோடிருப்பேன்.
நான் ஆண்டவரிடம் ஒரு விண்ணப்பம் செய்தேன்
அதையே நான் நாடித் தேடுவேன்
ஆண்டவரின் இல்லத்தில்
என் வாழ்நாள் எல்லாம் நான் குடியிருக்க வேண்டும்
ஆண்டவரின் அழகை நான் காண வேண்டும்
அவரது கோவிலில் அவரது திருவுளத்தைக் கண்டறிய வேண்டும்,
ஏனெனில் கேடு வரும் நாளில்
அவர் என்னைத் தம் கூடாரத்தில் மறைத்து வைப்பார்
தம் கூடாரத்தினுள்ளே என்னை ஒளித்து வைப்பார்
குன்றின்மேல் என்னைப் பாதுகாப்பாய் வைப்பார்
அப்பொழுது என்னைச் சுற்றிலு முள்ள என் எதிரிகளுக்கு
எதிரில் நான் தலைநிமிரச் செய்வார்
அவரது கூடாரத்தில் ஆர்ப்பரிப்புடன் பலிகளைச் செலுத்துவேன்
ஆண்டவரைப் புகழ்ந்து பாடல் பாடுவேன்.
மு.மொழி.: ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு; யாருக்கு
நான் அஞ்ச வேண்டும்?
__________________________
மு.மொழி. 2: ஆண்டவரே உமது முகத்தையே நாடுவேன். உமது
முகத்தை எனக்கு மறைக்காதிரும்.
II
ஆண்டவரே நான் மன்றாடும்போது என் குரலைக் கேட்டருளும்
என்மீது இரக்கங்கொண்டு எனக்குப் பதிலளித்தருளும்
புறப்படு அவரது முகத்தை நாடு என்றது என் உள்ளம்
ஆண்டவரே உமது முகத்தையே நாடுவேன்
உமது முகத்தை எனக்கு மறைக்காதிரும்
நீர் சினங்கொண்டு அடியேனை விலக்கி விடாதிரும்
நீரே எனக்குத் துணை
என் மீட்பராகிய கடவுளே என்னைத் தள்ளி விடாதிரும்
என்னைக் கைவிடாதிரும்
என் தந்தையும் தாயும் என்னைக் கைவிட்டாலும்
ஆண்டவர் என்னை ஏற்றுக் கொள்வார்.
ஆண்டவரே உமது வழியை எனக்குக் கற்பித்தருளும்
என் எதிரிகளை முன்னிட்டு
என்னைச் செம்மையான பாதையில் நடத்தும்
என் பகைவரின் விருப்பத்திற்கு என்னைக் கையளித்து விடாதிரும்
ஏனெனில் பொய்ச் சாட்சிகளும்
வன்முறையை மூச்சாகக் கொண்டவர்களும்
எனக்கெதிராய்க் கிளம்பியுள்ளனர்.
வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக்
காண்பேன் என்று நான் இன்னும் நம்புகின்றேன்
நெஞ்சே ஆண்டவருக்காகக் காத்திரு மன உறுதி கொள்
உன் உள்ளம் வலிமை பெறட்டும்
ஆண்டவருக்காகக் காத்திரு.
மு.மொழி.: ஆண்டவரே உமது முகத்தையே நாடுவேன். உமது
முகத்தை எனக்கு மறைக்காதிரும்.
___________________________
மு.மொழி. 3: படைப்பனைத்திலும் தலைப்பேறு அவரே. அனைத்துப்
படைப்புகளுக்கும் முதன்மையானவரும் அவரே.
கிறிஸ்து படைப்பின் தலைப்பேறு - கொலோ 1:12-20
தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள்
அவர் இறைமக்களுக்கான ஒளிமயமான உரிமைப்பேற்றில் பங்குபெற
உங்களைத் தகுதியுள்ளவர்களாக்கியுள்ளார்
அவரே இருளின் அதிகாரத்திலிருந்து நம்மை விடுவித்து
தம் அன்பார்ந்த மகனின் ஆட்சிக்குட்படுத்தினார்
அம்மகனால்தான் நாம் பாவ மன்னிப்பாகிய மீட்பைப் பெறுகிறோம்.
அவர் கட்புலனாகாத கடவுளது சாயல்
படைப்பனைத்திலும் தலைப்பேறு
ஏனெனில் விண்ணிலுள்ளவை மண்ணிலுள்ளவை
கட்புலனாகுபவை கட்புலனாகாதவை
அரியணையில் அமர்வோர் தலைமை தாங்குவோர்
ஆட்சியாளர் அதிகாரம் கொண்டோர் ஆகிய அனைவரும்
அவரால் படைக்கப்பட்டனர்.
அனைத்தும் அவர் வழியாய் அவருக்காகப் படைக்கப்பட்டன
அனைத்துக்கும் முந்தியவர் அவரே
அனைத்தும் அவரோடிணைந்து நிலைபெறுகின்றன
திருச்சபையாகிய உடலுக்குத் தலையும் தொடக்கமும் அவரே
எல்லாவற்றுள்ளும் முதன்மை பெறுமாறு
இறந்து உயிர்த்தெழுவோருள் அவர் தலைப்பேறு ஆனார்
தம் முழு நிறைவும் அவருள் குடிகொள்ளக்
கடவுள் திருவுளங் கொண்டார்.
சிலுவையில் இயேசு சிந்திய இரத்தத்தால்
அமைதியை நிலைநாட்டவும்
விண்ணிலுள்ளவை மண்ணிலுள்ளவை அனைத்தையும்
அவர் வழி தம்மோடு ஒப்புரவாக்கவும்
கடவுள் திருவுளங் கொண்டார்.
மு.மொழி.: படைப்பனைத்திலும் தலைப்பேறு அவரே. அனைத்துப்
படைப்புகளுக்கும் முதன்மையானவரும் அவரே.
___________________________
(எழுந்து நின்று வாசிக்கவும்)
அருள்வாக்கு யாக் 1:22, 25
இறைவார்த்தையைக் கேட்கிறவர்களாக மட்டும் இருந்து
உங்களை ஏமாற்றிக்கொள்ள வேண்டாம். அதன்படி
நடக்கிறவர்களாயும் இருங்கள். ஆனால் நிறைவான
விடுதலையளிக்கக் கூடிய சட்டத்தைக் கூர்ந்து கவனித்து
அதைத் தொடர்ந்து கற்போர் தாம் கேட்பதை மறந்து விடுவதில்லை.
அவர்கள் அதற்கேற்ற செயல்களைச் செய்வார்கள்; தம்
செயல்களால் பேறுபெற்றவர் ஆவார்கள்.
__________________________
சிறு மறுமொழி
℣ - ஆண்டவரே என்னை மீட்டருளும். உமது இரக்கத்தையும்
காட்டியருளும்.
℟ - ஆண்டவரே என்னை மீட்டருளும். உமது இரக்கத்தையும்
காட்டியருளும்.
காட்டியருளும்.
℣ - பாவிகளோடு என்னைத் தள்ளி விடாதேயும்.
℟ - உமது இரக்கத்தையும்
காட்டியருளும்.
℣ - தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக
℟ - ஆண்டவரே என்னை மீட்டருளும். உமது இரக்கத்தையும்
காட்டியருளும்.
__________________________
(அனைவரும் எழுந்து நிற்கவும்)
மரியாவின் பாடல்
மு.மொழி.: வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்களைச்
செய்துள்ளார். தூயவர் என்பதே அவரது பெயர்.
ஆண்டவரை எனது உள்ளம்
போற்றிப் பெருமைப் படுத்துகின்றது.
என் மீட்பராம் கடவுளை நினைத்து
எனது மனம் பேருவகை கொள்கின்றது.
ஏனெனில் அவர் தம் அடிமையின்
தாழ்நிலையைக் கண்ணோக்கினார்.
இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும்
என்னைப் பேறுபெற்றவர் என்பர்.
ஏனெனில் வல்லவராம் கடவுள்
எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார்.
தூயவர் என்பதே அவரது பெயர்.
அவருக்கு அஞ்சி நடப்போருக்குத்
தலைமுறை தலைமுறையாய்
அவர் இரக்கம் காட்டி வருகிறார்.
அவர் தம் தோள் வலிமையைக் காட்டியுள்ளார்;
உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச்
சிதறடித்து வருகிறார்.
வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்;
தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்.
பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்;
செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார்.
மூதாதையருக்கு உரைத்தபடியே அவர்
ஆபிரகாமையும் அவர்தம் வழி மரபினரையும்
என்றென்றும் இரக்கத்தோடு
நினைவில் கொண்டுள்ளார்;
தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத்
துணையாக இருந்து வருகிறார் ".
மு.மொழி.: வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்களைச்
செய்துள்ளார். தூயவர் என்பதே அவரது பெயர்.
செய்துள்ளார். தூயவர் என்பதே அவரது பெயர்.
__________________________
மன்றாட்டுக்கள்
உலகம் கடவுளுடைய மகிமையால் நிறைந்து மிளிர்கிறது.
அவர் தாம் தேர்ந்து கொண்ட மக்களை அளவில்லாத அன்பினால்
ஆதரிக்கிறார். திருச்சபையின் பெயரால் அவரிடம் வேண்டுவோம்.
℟ - ஆண்டவரே உமது பேரன்பை அனைவருக்கும் காட்டியருளும்.
உமது திருச்சபையை நினைவு கூர்ந்தருளும் அதனைத்
தீமையிலிருந்து பாதுகாத்து உமது அன்பில் நிறைவுபடுத்தியருளும்.
℟ - ஆண்டவரே உமது இரக்கத்தில் எங்கள் மன்றாட்டுக்கு செவிசாய்த்தருளும்.
எங்களைச் சூழ்ந்து இருப்பவர்களின் தேவைகள்
அனைத்தையும் நிறைவேற்றும் இதனால் அவர்கள்
நன்றியுணர்வோடு அமைதியில் வாழ்வார்களாக.
℟ - ஆண்டவரே உமது இரக்கத்தில் எங்கள் மன்றாட்டுக்கு செவிசாய்த்தருளும்.
(தனிப்பட்ட தேவைகளுக்காக மன்றாடல்)
__________________________
ஆண்டவரின் செபம்
__________________________
இறுதி செபம்
ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டு எம்மை இராப்பகலாய்ப் பாதுகாத்தருளும். இதனால் உலக மாற்றங்களினால்
தடுமாறும் நாங்கள் மாறாப் பாறையாகிய உம்மில் உறுதியாய்
நிலைநிறுத்தப் பெறுவோம். உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சிபுரியும் எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.
__________________________
ஆசி வழங்குதல்
குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக
எல்: உம் ஆன்மாவோடும் இருப்பாராக
குரு: எல்லாம் வல்ல இறைவன் தந்தை மகன் தூய ஆவியார் உங்களை ஆசீர்வதிப்பாராக.
எல்: ஆமென்
குரு: கிறிஸ்துவின் அமைதியில் சென்று வாருங்கள்
எல்: இறைவா உமக்கு நன்றி
(அல்லது)
முதல்: ஆண்டவர் நம்மை ஆசீர்வதித்து தீமைகள் அனைத்தினின்றும் பாதுகாத்து முடிவில்லா வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக
எல்: ஆமென்
முதல்: ஆண்டவரை வாழ்த்துவோமாக
எல்: இறைவா உமக்கு நன்றி.