1 - வெள்ளி காலைப் புகழ்
பாடல்
(எழுந்து நிற்கவும்)
விண்ணின் நித்திய மாட்சிமையே
மண்ணின் திருவார் நம்பிக்கையே
உன்னத தந்தையின் ஒரே மகனே
கன்னியின் அருமைத் திருமகனே
உம் கரம் உதவிடும் யாம் எழவே
எம் உளம் நிறைந்த ஆர்வத்துடன்
உம் புகழ் பாடி நன்றியுடன்
உம்பதம் நாடிட அருள் கூறுவீர்
கதிரவன் எழவே இருள் அகலும்
அதுபோல் எமக்கொளி உம் வருகை
எம்மேல் ஒளிர்ந்து உளம் நிறைந்து
உம்மை யாம் உணர்ந்து உவப்பறச்செய்
உம் கொடையே எம் விசுவாசம்
எம்முள் ஆழ்ந்தது ஊன்றிடுக
நம்பிக்கை அதனுடன் வளம் பெறுக
அன்பே அனைத்தினும் ஓங்கிடுக
இச்செபம் ஏற்பாய் எம் தந்தாய்
உச்ச நிலையுள உம்மகனும்
அச்சம் அகற்றும் ஆவியாரும்
இச்செகம் உம்முடன் ஆளுகவே. ஆமென்.
__________________________
(அமரவும்)
மு.மொழி.1: ஆண்டவரே உமது பீடத்தில் செலுத்தப்படும் முறையான பலிகளை ஏற்றுக் கொள்வீர்.
பாவமன்னிப்புக்காக மன்றாடல்- திபா 51
கடவுளே! உமது பேரன்புகேற்ப எனக்கு இரங்கும்;
உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும்.
என் தீவினை முற்றிலும் நீங்கும் படி என்னைக் கழுவியருளும்;
என் பாவம் அற்றுப்போகும்படி
என்னைத் தூய்மைப்படுத்தியருளும்;
ஏனெனில், என் குற்றங்களை நான் உணர்கின்றேன்;
என் பாவம் எப்போதும் என் மனக் கண்முன் நிற்கின்றது.
உமக்கு எதிராக நான் பாவம் செய்தேன்;
உம் பார்வையில் தீயது செய்தேன்;
எனவே, உம் தீர்ப்பினால் உம் நீதியை வெளிப்படுத்தியுள்ளீர்;
உம் தண்டனைத் தீர்ப்பில் நீர் மாசற்றவராய் விளங்குகின்றீர்.
இதோ! தீவினையோடு என் வாழ்வைத் தொடங்கினேன்;
பாவத்தோடே என் அன்னை என்னைக் கருத்தாங்கினாள்.
இதோ! நீர் விரும்புவது உள்ளத்து உண்மையையே;
மெய்ஞானத்தால் என் மனத்தை நிரப்பும்.
ஈசோப்பினால் என்னைக் கழுவியருளும்;
நான் தூய்மையாவேன்.
என்னைக் கழுவியருளும்;
உறைபனியிலும் வெண்மையாவேன்.
மகிழ்வொலியும் களிப்போசையும்
நான் கேட்கும்படி செய்யும்;
நீர் நொறுக்கிய என் எலும்புகள் களிகூர்வனவாக!
என் பாவங்களைப் பாராதபடி
உம்முகத்தை மறைத்துக்கொள்ளும்;
என் பாவக்கறைகளை எல்லாம் துடைத்தருளும்.
கடவுளே! தூயதோர் உள்ளத்தை
என்னுள்ளே படைத்தருளும்;
உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை
என்னுள்ளே உருவாக்கியருளும்.
உமது முன்னிலையிலிருந்து
என்னைத் தள்ளிவிடாதேயும்;
உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும்.
உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும்;
தன்னார்வ மனம் தந்து என்னைத் தாங்கியருளும்.
அப்பொழுது, குற்றம் செய்தோர்க்கு
உம் வழிகளைக் கற்பிப்பேன்;
பாவிகள் உம்மை நோக்கித் திரும்புவர்.
கடவுளே! எனது மீட்பின் கடவுளே!
இரத்தப் பழியினின்று என்னை விடுவித்தருளும்;
அப்பொழுது, என் நா உமது நீதியை முன்னிட்டுப் பாடும்.
என் தலைவரே! என் இதழ்களைத் திறந்தருளும்;
அப்பொழுது, என் வாய் உமக்குப் புகழ் சாற்றிடும்.
ஏனெனில், பலியினால் உம்மை மகிழ்விக்க முடியாது;
நான் எரிபலி செலுத்தினாலும் நீர் அதில் நாட்டங்கொள்வதில்லை.
கடவுளுக்கேற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே;
கடவுளே! நொறுங்கிய, குற்றமுணர்ந்த உளத்தை
நீர் அவமதிப்பதில்லை.
சீயோனுக்கு இன்முகம் காட்டி நன்மை செய்யும்;
எருசலேமின் மதில்களை மீண்டும் கட்டுவீராக!
அப்பொழுது, எரிபலி, முழு எரிபலியெனும்
முறையான பலிகளை விரும்புவீர்;
மேலும், இளங்காளைகள்
உமது பீடத்தில் பலியாகச் செலுத்தப்படும்.
மு.மொழி.: ஆண்டவரே உமது பீடத்தில் செலுத்தப்படும் முறையான பலிகளை ஏற்றுக் கொள்வீர்.
__________________________
மு.மொழி. 2: இஸ்ரயேலின் வழிமரபினர் அனைவரும் ஆண்டவரால் ஏற்புடையோராகப் பெற்று அவரைப் போற்றுவர்.
அனைத்து மக்களும் இறைவன்பால் திரும்புவர் - எசா 45: 15-25
மீட்பரான இஸ்ரயேலின் கடவுளே,
உண்மையிலேயே நீர் "தம்மை மறைத்துக்கொள்ளும் இறைவன் ".
சிலைகளைச் செய்வோர் அனைவரும்
ஒருங்கே வெட்கி நாணினர்;
அவர்கள் குழம்பித் தவித்தனர்.
ஆண்டவர் என்றுமுள மீட்பை அளித்து
இஸ்ரயேலை விடுவித்தருளினார்;
என்றென்றும் நீங்கள் வெட்கக்கேடு அடையமாட்டீர்கள்;
அவமதிப்புக்கும் உள்ளாக மாட்டீர்கள். "
ஏனெனில் விண்ணுலகைப் படைத்த ஆண்டவர் கூறுவது இதுவே;
அவரே கடவுள்; மண்ணுலகைப் படைத்து உருவாக்கியவர் அவரே;
அதை நிலைநிறுத்துபவரும் அவரே;
வெறுமையாய் இருக்குமாறு படைக்காது,
மக்கள் வாழுமாறு அதை உருவாக்கினார்.
நானே ஆண்டவர், என்னையன்றி வேறு எவரும் இல்லை.
நான் மறைவிலும்
மண்ணுலகின் இருண்ட பகுதியிலும் பேசியதில்லை;
"வெற்றிடத்தில் என்னைத் தேடுங்கள்" என்று
நான் யாக்கோபின் வழிமரபிடம் சொல்லவில்லை;
ஆண்டவராகிய நான் உண்மையே பேசுகிறேன்;
நேர்மையானவற்றை அறிவிக்கிறேன்;
மக்களினங்களுள் தப்பிப் பிழைத்தோரே!
ஒன்று திரண்டு வாருங்கள்; ஒருங்கே கூடுங்கள்;
மரத்தால் செய்த தங்கள் சிலையைச் சுமந்து
செல்வோருக்கும், விடுதலை வழங்காத தெய்வத்திடம்
தொடர்ந்து மன்றாடுவோருக்கும் அறிவே இல்லை.
அறிவியுங்கள்; உங்கள் வழக்கை எடுத்துரையுங்கள்;
ஒன்றாகச் சிந்தித்து முடிவெடுங்கள்;
தொடக்கத்திலிருந்து இதை வெளிப்படுத்தியவர் யார்?
முதன் முதலில் இதை அறிவித்தவர் யார்?
ஆண்டவராகிய நான் அல்லவா?
என்னையன்றிக் கடவுள் வேறு எவரும் இல்லை;
நீதியுள்ளவரும் மீட்பு அளிப்பவருமான இறைவன்
என்னையன்றி வேறு எவரும் இல்லை.
மண்ணுலகின் அனைத்து எல்லை நாட்டோரே!
என்னிடம் திரும்பி வாருங்கள்; விடுதலை பெறுங்கள்;
ஏனெனில் நானே இறைவன்;
என்னையன்றி வேறு எவருமில்லை.
நான் என்மேல் ஆணையிட்டுள்ளேன்;
என் வாயினின்று நீதிநிறை வாக்கு புறப்பட்டுச் சென்றது;
அது வீணாகத் திரும்பி வராது;
முழங்கால் அனைத்தும் எனக்குமுன் மண்டியிடும்;
நா அனைத்தும் என்மேல் ஆணையிடும்.
"ஆண்டவரில் மட்டும் எனக்கு நீதியும் ஆற்றலும் உண்டு"
என்று ஒவ்வொருவனும் சொல்லி அவரிடம் வருவான்;
அவருக்கு எதிராகச் சீறி எழுந்தவர் அனைவரும்
வெட்கக்கேடு அடைவர்.
இஸ்ரயேலின் வழி மரபினர் அனைவரும்
ஆண்டவரால் ஏற்புடையோராகப் பெற்று அவரைப் போற்றுவர்.
மு.மொழி.: இஸ்ரயேலின் வழிமரபினர் அனைவரும் ஆண்டவரால் ஏற்புடையோராகப் பெற்று அவரைப் போற்றுவர்.
___________________________
மு.மொழி. 3: மகிழ்ச்சி நிறைப் பாடலுடன் ஆண்டவர் திருமுன் வாருங்கள்
புகழ்ச்சிப் பாடல் - திபா 100
அனைத்துலகோரே! ஆண்டவரை
ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்!
ஆண்டவரை மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்!
மகிழ்ச்சிநிறை பாடலுடன் அவர் திருமுன் வாருங்கள்!
ஆண்டவரே கடவுள் என்று உணருங்கள்!
அவரே நம்மைப் படைத்தவர்!
நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்!
நன்றியோடு அவர்தம் திருவாயில்களில் நுழையுங்கள்!
புகழ்ப்பாடலோடு அவர்தம் முற்றத்திற்கு வாருங்கள்!
அவருக்கு நன்றி செலுத்தி, அவர் பெயரைப் போற்றுங்கள்!
ஏனெனில், ஆண்டவர் நல்லவர்;
என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு;
தலைமுறைதோறும் அவர் நம்பத்தக்கவர்.
மு.மொழி.: மகிழ்ச்சி நிறைப் பாடலுடன் ஆண்டவர் திருமுன் வாருங்கள்.
___________________________
(எழுந்து நின்று வாசிக்கவும்)
அருள்வாக்கு எபே: 4: 29-32
கெட்ட வார்த்தை எதுவும் உங்கள் வாயினின்று வரக்கூடாது. கேட்போர் பயனடையும்படி, தேவைக்கு ஏற்றவாறு, அருள் வளர்ச்சிக்கேற்ற நல்ல வார்த்தைகளையே பேசுங்கள். கடவுளின் தூய ஆவியார்க்குத் துயரம் வருவிக்காதீர்கள். மீட்பு நாளை முன்னிட்டு உங்கள்மீது பொறிக்கப்பட்ட முத்திரையாக அவர் இருக்கிறார். மனக்கசப்பு, சீற்றம், சினம், கூச்சல், பழிச்சொல் எல்லாவற்றையும் தீமை அனைத்தையும் உங்களை விட்டு நீக்குங்கள். ஒருவருக்கொருவர் நன்மைசெய்து பரிவு காட்டுங்கள்; கடவுள் உங்களைக் கிறிஸ்து வழியாக மன்னித்ததுபோல நீங்களும் ஒருவரை ஒருவர் மன்னியுங்கள்.
__________________________
சிறு மறுமொழி
℣ - காலையில் உமது அன்பை ஆண்டவரே நான் அறியச் செய்வீராக.
℟ - காலையில் உமது அன்பை ஆண்டவரே நான் அறியச் செய்வீராக.
℣ - நான் செல்ல வேண்டிய பாதையை எனக்குக் காட்டியருளும்.
℟ -உமது அன்பை ஆண்டவரே நான் அறியச் செய்வீராக.
℣ - தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக
℟ - காலையில் உமது அன்பை ஆண்டவரே நான் அறியச் செய்வீராக.
__________________________
(அனைவரும் எழுந்து நிற்கவும்)
செக்கரியாவின் பாடல்
மு.மொழி.: ஆண்டவர் தம் மக்களைத் தேடிவந்து விடுவித்தருளினார்
இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றுவோம்.
ஏனெனில் அவர் தம் மக்களைத் தேடிவந்து விடுவித்தருளினார்.
தம் தூய இறைவாக்கினர் வாயினால்
தொடக்க முதல் அவர் மொழிந்தபடியே
அவர் தம் ஊழியராகிய தாவீதின் குடும்பத்தில்
வல்லமை உடைய மீட்பர் ஒருவர் நமக்காகத் தோன்றச் செய்தார்;
நம் பகைவரிடமிருந்தும்
நம்மை வெறுப்போர் அனைவரின் பிடியிலிருந்தும்
நம்மை மீட்பார்.
அவர் நம் மூதாதையருக்கு இரக்கம் காட்டி,
தமது தூய உடன்படிக்கையையும்,
நம் தந்தையாகிய ஆபிரகாமுக்கு அவர் இட்ட ஆணையையும்
நிறைவேற்ற நினைவு கூர்ந்தார்.
இவ்வாறு நாம் பகைவரின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டுத்
தூய்மையோடும் நேர்மையோடும்
வாழ்நாளெல்லாம் அச்சமின்றி
அவர் திருமுன் பணிசெய்யுமாறு வழிவகுத்தார்.
குழந்தாய்,
நீ உன்னத கடவுளின் இறைவாக்கினர் எனப்படுவாய்;
ஏனெனில் பாவ மன்னிப்பால் வரும் மீட்பை
அவர்தம் மக்களுக்கு அறிவித்து
ஆண்டவருக்கான வழியைச் செம்மைப்படுத்த
அவர் முன்னே செல்வாய்.
இருளிலும் இறப்பின் பிடியிலும் இருப்போர்க்கு ஒளிதரவும்,
நம்முடைய கால்களை அமைதி வழியில் நடக்கச் செய்யவும்
நம் கடவுளின் பரிவுள்ளத்தாலும் இரக்கத்தாலும்
விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடிவருகிறது.
மு.மொழி.: ஆண்டவர் தம் மக்களைத் தேடிவந்து விடுவித்தருளினார்.
__________________________
மன்றாட்டுக்கள்
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே உமக்கு நன்றி செலுத்துகிறோம்; ஏனெனில் விரும்பி ஏற்றுக் கொள்வோருக்கு உமது சிலுவை மரணத்தாலும் உயிர்ப்பினாலும் நீர் விடுதலையையும் நம்பிக்கையையும் கொடுக்கின்றீர்.
℟ - ஆண்டவரே உமது பரிவு அன்பை எமக்குக் காட்டியருளும்
ஆண்டவரே நாங்கள் ஒளியின் மக்கள் - உமது பிரசன்ன ஒளியில் நாங்கள் வாழ செய்தருளும்.
℟ - ஆண்டவரே உமது பரிவு அன்பை எமக்குக் காட்டியருளும்
நாங்கள் தவறிழைக்காதிருக்க உதவியருளும் உமது அன்பையும் இரக்கத்தையும் எங்களுக்குக் காட்டிருளும்.
℟ - ஆண்டவரே உமது பரிவு அன்பை எமக்குக் காட்டியருளும்
(தனிப்பட்ட தேவைகளுக்காக மன்றாடல்)
__________________________
ஆண்டவரின் செபம்
__________________________
இறுதி செபம்
இறைவனாகிய ஆண்டவரே! உம்மை அறியாத மக்களுக்கு உமது வார்த்தையாம் ஒளியை வெளிப்படுத்துனீர். நீர் கொடுத்த நம்பிக்கை எங்கள் இதயங்களில் உறுதியாக நிலைத்திருக்கவும், உமது ஆவியானவர் எம்முள் மூடியுள்ள நம்பிக்கை என்னும் தீ ஒரு போதும் சோதனைகளால் அணைந்து போகாதிருக்கவும் செய்தருளும். உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சிபுரியும் எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.
__________________________
ஆசி வழங்குதல்
குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக
எல்: உம் ஆன்மாவோடும் இருப்பாராக
குரு: எல்லாம் வல்ல இறைவன் தந்தை மகன் தூய ஆவியார் உங்களை ஆசீர்வதிப்பாராக.
எல்: ஆமென்
குரு: கிறிஸ்துவின் அமைதியில் சென்று வாருங்கள்
எல்: இறைவா உமக்கு நன்றி
(அல்லது)
முதல்: ஆண்டவர் நம்மை ஆசீர்வதித்து தீமைகள் அனைத்தினின்றும் பாதுகாத்து முடிவில்லா வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக
எல்: ஆமென்
முதல்: ஆண்டவரை வாழ்த்துவோமாக
எல்: இறைவா உமக்கு நன்றி.