1 - புதன் காலைப் புகழ்
பாடல்
(எழுந்து நிற்கவும்)
தரையில் குழப்பமும் தவறும் கேடும்
இரவும் இருளும் கருமுகில் கூட்டமும்
அகல்க வானம் ஒளிரும் நேரம்
மகிழ்வை அளிக்க வருகிறார் இயேசு
உலகை மூடிய காரிருள் கலைந்தது
பல வகை நிறங்களை பகலவன் அளித்தது
மனத்துள் மண்டிய இருளும் அகன்றது
அனைத்தும் வெளுத்து இறைவனுக்காகுமே
உண்மை மட்டும் அறிவோம் கிறிஸ்துவே
உம்மைப் பணிந்து கண்ணீர் உகுத்து
நன் மனத்துடனே வேண்டுகிறோமே
எம்உள உணர்வை ஆட்கொள்வீரே
எமது குறைகள் கவலைகள் எல்லாம்
உமது ஒளியால் ஒழிந்து விடுக
உமக்கும் தந்தையுடன் ஆவிக்கும்
சமமாய் மகிமை என்றும் ஆகுக. ஆமென்
___________________________
(அமரவும்)
மு.மொழி.1: இறைவா உமது ஒளியால் யாமும் ஒளி பெறுகின்றோம்.
மானிடரின் தீய குணம் - திபா 36
பொல்லாரின் உள்ளத்தில்
தீமையின் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது;
அவர்களின் மனக்கண்களில் இறையச்சம் இல்லை.
ஏனெனில் அவர்கள், குற்றம் வெளிப்பட்டு
வெறுப்புக்கு உள்ளாகப் போவதில்லை என, இறுமாந்து
தமக்குத்தாமே பெருமை பாராட்டிக்கொள்கின்றனர்.
அவர்கள் வாயின் சொற்கள்
தீமையும் வஞ்சகமும் நிறைந்தவை;
நல்லுணர்வோடு நற்செயல் ஆற்றுவதை
அவர்கள் அடியோடு விட்டுவிட்டனர்.
படுக்கையில் கிடக்கையில்
அவர்கள் சதித்திட்டங்களைத் தீட்டுகின்றனர்,
தகாத வழியை உறுதியாகப் பற்றிக் கொள்கின்றனர்;
தீமையைப் புறம்பே தள்ளுவதில்லை.
ஆண்டவரே! வானளவு உயர்ந்துள்ளது உமது பேரன்பு;
முகில்களைத் தொடுகின்றது உமது வாக்குப் பிறழாமை.
ஆண்டவரே, உமது நீதி இறைவனின் மலைகள்போல் உயர்ந்தது;
உம் தீர்ப்புகள் கடல்போல் ஆழமானவை;
மனிதரையும் விலங்கையும் காப்பவர் நீரே;
கடவுளே, உமது பேரன்பு எத்துணை அருமையானது!
மானிடர் உம் இறக்கைகளின் நிழலில் புகலிடம் பெறுகின்றனர்.
உமது இல்லத்தின் செழுமையால் அவர்கள் நிறைவு பெறுகின்றனர்;
உமது பேரின்ப நீரோடையில் அவர்கள் தாகத்தைத் தணிக்கின்றீர்.
ஏனெனில், வாழ்வு தரும் ஊற்று உம்மிடமே உள்ளது;
உமது ஒளியால் யாமும் ஒளி பெறுகின்றோம்.
உம்மை அறிந்தோர்க்கு உமது பேரன்பையும், நேரிய உள்ளத்தோர்க்கு
உமது நீதியையும் தொடர்ந்து வழங்கியருளும்!
செருக்குற்றோரின் கால் என்னை நசுக்க விடாதேயும்!
பொல்லாரின் கை என்னைப் பிடிக்க விடாதேயும்!
தீங்கிழைப்போர் அதோ அங்கே குப்புற வீழ்ந்து கிடக்கின்றனர்,
அவர்கள் நசுக்கப்பட்டனர்; அவர்களால் எழவே இயலாது.
மு.மொழி.: இறைவா உமது ஒளியால் யாமும் ஒளி பெறுகின்றோம்.
__________________________
மு.மொழி. 2: ஆண்டவரே நிலைைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன. அல்லேலூயா!
தம் மக்களை பாதுகாக்கும் இறைவன் - யூதி 16: 1, 2, 13-15
என் கடவுளுக்கு முரசு கொட்டுங்கள்;
ஆண்டவருக்கு மேள தாளங்களோடு பண் இசையுங்கள்.
அவருக்குத் திருப்பாடலும் புகழ்ப் பாவும் இசையுங்கள்;
அவரது பெயரைப் புகழ்ந்தேத்துங்கள்.
ஆண்டவர் போர்களை முறியடிக்கும் கடவுள்;
மக்கள் நடுவே தம் கூடாரத்தை அமைத்துள்ளார்;
துரத்துவோரிடமிருந்து என்னை அவர் விடுவித்தார்.
என் கடவுளுக்குப் புதியதொரு பாடல் பாடுவேன்;
ஆண்டவரே, நீர் பெரியவர், மாட்சிமிக்கவர்;
வியத்தகு வலிமை கொண்டவர்;
எவராலும் வெல்ல முடியாதவர்.
உம் படைப்புகள் அனைத்தும் உமக்கே பணிபுரியட்டும்;
நீர் ஆணையிட்டீர்; அவை உண்டாயின.
உம் ஆவியை அனுப்பினீர்; அவை உருவாயின.
உமது குரலை எதிர்த்து நிற்பவர் எவருமில்லை.
மலைகளின் அடித்தளங்களும் நீர்த்திரளும் நடுங்குகின்றன;
பாறைகள் உம் திருமுன் மெழுகுபோல் உருகுகின்றன.
உமக்கு அஞ்சுவோருக்கோ நீர் இரக்கம் காட்டுகின்றீர்.
மு.மொழி.: ஆண்டவரே நிலைைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன. அல்லேலூயா!
___________________________
மு.மொழி. 3: ஆர்ப்பரித்துக் கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள்.
ஆண்டவரை உலகின் அரசர் - திபா 47
மக்களினங்களே, களிப்புடன் கைகொட்டுங்கள்;
ஆர்ப்பரித்துக் கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள்.
ஏனெனில், உன்னதராகிய ஆண்டவர் அஞ்சுதற்கு உரியவர்;
உலகனைத்தையும் ஆளும் மாவேந்தர் அவரே;
வேற்று மக்களை நமக்கு அடிபணியச் செய்தவர்;
அன்னிய நாடுகளை நம் தாள் பணிய வைத்தார்.
நம் உரிமைச் சொத்தை அவர் நமக்குத் தேர்ந்து அளித்தார்;
அது அவர் அன்புகூரும் யாக்கோபின் பெருமை ஆகும். (சேலா)
ஆரவார ஒலியிடையே பவனி செல்கின்றார் கடவுள்;
எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர்.
பாடுங்கள்; கடவுளுக்குப் புகழ் பாடுங்கள்;
பாடுங்கள், நம் அரசருக்குப் புகழ் பாடுங்கள்.
ஏனெனில், கடவுளே அனைத்து உலகின் வேந்தர்;
அருட்பா தொடுத்துப் புகழ் பாடுங்கள்.
கடவுள் பிறஇனத்தார் மீது ஆட்சி செய்கின்றார்;
அவர்தம் திரு அரியணையில் வீற்றிருக்கின்றார்.
மக்களினங்களின் தலைவர்கள்
ஆபிரகாமின் கடவுளுடைய மக்களோடு ஒன்றுகூடுவர்;
ஏனெனில், மண்ணுலகின் மன்னர் அனைவரும்
கடவுளின் கொற்றத்திற்கு உட்பட்டவர்;
கடவுளே அனைத்திற்கும் மேலானவர்.
மு.மொழி.: ஆர்ப்பரித்துக் கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள்.
___________________________
(எழுந்து நின்று வாசிக்கவும்)
அருள்வாக்கு தோபி: 4: 15, 16, 18-19
உனக்குப் பிடிக்காத எதையும் பிறருக்குச் செய்யாதே. உன் உணவில் ஒரு பகுதியைப் பசித்திருப்போருக்குக் கொடு; உன் உடையில் ஒரு பங்கை ஆடையற்றிருப்போருக்கு வழங்கு. ஞானிகளிடம் அறிவுரை கேள்; பயன் தரும் அறிவுரை எதையும் உதறித்தள்ளாதே. எல்லாக் காலத்திலும் உன் கடவுளாகிய ஆண்டவரைப் போற்று; உன் வழிகள் நேரியவையாய் அமையவும் உன் முயற்சிகளும் திட்டங்களும் வெற்றியடையவும் அவரிடம் மன்றாடு.
__________________________
சிறு மறுமொழி
℣ - இறைவா உமது திருவுளத்திற்கு என் இதயம் சரணடைவதாக.
℟ - இறைவா உமது திருவுளத்திற்கு என் இதயம் சரணடைவதாக.
℣ - உமது வார்த்தையினால் எனக்கு வாழ்வளிப்பீர்.
℟ - என் இதயம் சரணடைவதாக.
℣ - தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக
℟ - இறைவா உமது திருவுளத்திற்கு என் இதயம் சரணடைவதாக.
_____________________________
(அனைவரும் எழுந்து நிற்கவும்)
செக்கரியாவின் பாடல்
மு.மொழி.: ஆண்டவரே உமது இரக்கத்தை எமக்கு காட்டியருளும். உமது உடன்படிக்கையை நினைவு கூர்ந்தருளும்.
இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றுவோம்.
ஏனெனில் அவர் தம் மக்களைத் தேடிவந்து விடுவித்தருளினார்.
தம் தூய இறைவாக்கினர் வாயினால்
தொடக்க முதல் அவர் மொழிந்தபடியே
அவர் தம் ஊழியராகிய தாவீதின் குடும்பத்தில்
வல்லமை உடைய மீட்பர் ஒருவர் நமக்காகத் தோன்றச் செய்தார்;
நம் பகைவரிடமிருந்தும்
நம்மை வெறுப்போர் அனைவரின் பிடியிலிருந்தும்
நம்மை மீட்பார்.
அவர் நம் மூதாதையருக்கு இரக்கம் காட்டி,
தமது தூய உடன்படிக்கையையும்,
நம் தந்தையாகிய ஆபிரகாமுக்கு அவர் இட்ட ஆணையையும்
நிறைவேற்ற நினைவு கூர்ந்தார்.
இவ்வாறு நாம் பகைவரின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டுத்
தூய்மையோடும் நேர்மையோடும்
வாழ்நாளெல்லாம் அச்சமின்றி
அவர் திருமுன் பணிசெய்யுமாறு வழிவகுத்தார்.
குழந்தாய்,
நீ உன்னத கடவுளின் இறைவாக்கினர் எனப்படுவாய்;
ஏனெனில் பாவ மன்னிப்பால் வரும் மீட்பை
அவர்தம் மக்களுக்கு அறிவித்து
ஆண்டவருக்கான வழியைச் செம்மைப்படுத்த
அவர் முன்னே செல்வாய்.
இருளிலும் இறப்பின் பிடியிலும் இருப்போர்க்கு ஒளிதரவும்,
நம்முடைய கால்களை அமைதி வழியில் நடக்கச் செய்யவும்
நம் கடவுளின் பரிவுள்ளத்தாலும் இரக்கத்தாலும்
விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடிவருகிறது.
மு.மொழி.: ஆண்டவரே உமது இரக்கத்தை எமக்கு காட்டியருளும். உமது உடன்படிக்கையை நினைவு கூர்ந்தருளும்.
__________________________
மன்றாட்டுக்கள்
நாங்கள் கிறிஸ்துவுக்கு நன்றியும் புகழும் கூறுவோம். ஏனெனில் நம்மை சகோதரர் என அழைப்பதற்கு அவர் வெட்கப்படவில்லை.
℟ - ஆண்டவராகிய இயேசுவே நாங்கள் உம் சகோதரர்கள்.
பாஸ்காப் புது வாழ்வை நாங்கள் வாழ துணைபுரியும் - அதனால் உமது அன்பின் ஆற்றலை மனிதர்கள் எங்கள் வழியாக அறிந்து கொள்வார்களாக.
℟ - ஆண்டவராகிய இயேசுவே நாங்கள் உம் சகோதரர்கள்.
எல்லா மனிதரிடத்தும் நாங்கள் உண்மையை காண கற்றுத்தரும் - துன்புறுவோரிடம் நாங்கள் உம்மைக் காணத் துணைபுரியும்.
℟ - ஆண்டவராகிய இயேசுவே நாங்கள் உம் சகோதரர்கள்.
(தனிப்பட்ட தேவைகளுக்காக மன்றாடல்)
__________________________
ஆண்டவரின் செபம்
__________________________
இறுதி செபம்
எம் மீட்பராகிய இறைவா, திருமுழுக்கின் அருளால் நீர் எம்மை ஒளியின் மக்களாக்கினீர். நாங்கள் அந்த ஒளியிலேயே எப்பொழுதும் நடக்கவும் உண்மைக்காக உழைக்கவும் துணை புரிந்தருளும். இதனால் மக்கள் அனைவருக்கும் முன்பாக சான்றுகளாய் திகழ்வோமாக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சிபுரியும் எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்
__________________________
ஆசி வழங்குதல்
குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக
எல்: உம் ஆன்மாவோடும் இருப்பாராக
குரு: எல்லாம் வல்ல இறைவன் தந்தை மகன் தூய ஆவியார் உங்களை ஆசீர்வதிப்பாராக.
எல்: ஆமென்
குரு: கிறிஸ்துவின் அமைதியில் சென்று வாருங்கள்
எல்: இறைவா உமக்கு நன்றி
(அல்லது)
முதல்: ஆண்டவர் நம்மை ஆசீர்வதித்து தீமைகள் அனைத்தினின்றும் பாதுகாத்து முடிவில்லா வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக
எல்: ஆமென்
முதல்: ஆண்டவரை வாழ்த்துவோமாக
எல்: இறைவா உமக்கு நன்றி.