1 - செவ்வாய் மாலைப் புகழ்
வாரம் 1: செவ்வாய்
மாலைப் புகழ்
முதல்: இறைவா எமக்குத் துணைபுரிய வாரும்
எல்: ஆண்டவரே எனக்குத் துணைபுரிய விரைந்து வாரும்
முதல்: தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக
எல்: தொடக்கத்தில் இருந்ததுபோல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக ஆமென்.
பாடல்
(எழுந்து நிற்கவும்)
உலகை அழகுடன் அமைத்தவரே
உலர்ந்த தரையில் விதைபல முளைத்து
இலை பூ காய் கனிஈந் திடவே
நிலத்தையும் நீரையும் பிரித்தீரே.
காயப் பட்ட எமதான்மா
கருகி விடாது அருள்பொழிவீர்;
தீயதையென் கண்ணீரால் கழுவிடுவீர்
தீய ஈர்ப்பும் தேய்ந்திடுக.
எம்மனம் தீமையை விலக்கிடுமே,
உம்திரு கட்டளைக்குப் பணிந்திடுமே;
அருள்கொ டையால் மகிழ்ந்திடுமே.
அழியா வாழ்வையும் பெற்றிடுமே..
நேயரெம் வேண்டல் ஏற்பீர், தந்தாய்,
உயர்நிலை வீற்றிருக்கும் உம்மகனும்
அச்சம் அகற்றும் ஆவியருடன்
இச்செகம் என்றும் ஆளுகவே. ஆமென்.
(அமரவும்)
__________________________
மு.மொழி.1: ஆண்டவர் தாம் திருப்பொழிவு செய்தவருக்கு வெற்றி தருகின்றார்.
போருக்குச் செல்லும் அரசனுக்காக இறைவேண்டல் - திபா 20
ஆண்டவரின் திருப்பெயரைச் சொல்லி வேண்டுவோர் யாவரும் தப்பிப் பிழைப்பர். (திப 2:21)
நெருக்கடி வேளையில் உமக்கு ஆண்டவர் பதிலளிப்பாராக!
யாக்கோபின் கடவுளது பெயர் உம்மைப் பாதுகாப்பதாக!
தூயகத்திலிருந்து அவர் உமக்கு உதவி அனுப்புவாராக!
சீயோனிலிருந்து அவர் உமக்குத் துணை செய்வாராக!
உம் உணவுப் படையலை எல்லாம் அவர் நினைவில் கொள்வராக!
உமது எரி பலியை ஏற்றுக்கொள்வாராக!
உமது மனம் விரும்புவதை உமக்கு அவர் தந்தருள்வாராக!
உம் திட்டங்களையெல்லாம் நிறைவேற்றுவாராக!
உமது வெற்றியைக் குறித்து மகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்போமாக!
நம் கடவுளின் பெயரால் வெற்றிக்கொடி நாட்டுவோமாக!
உம் விண்ணப்பங்களையெல்லாம் ஆண்டவர் நிறைவேற்றுவாராக!
தாம் திருப்பொழிவு செய்தவருக்கு ஆண்டவர் வெற்றி தருகின்றார்.
தமது தூய வானத்திலிருந்து அவருக்குப் பதிலளிக்கின்றார்.
வெற்றியளிக்கும் தமது வலக்கையின் ஆற்றலைக் காட்டுகின்றார்.
என்று இப்பொழுது நான் அறிந்து கொள்கிறேன்.
சிலர் தேர்ப்படையிலும், சிலர் குதிரைப் படையிலும்
பெருமை கொள்கின்றனர்;
நாமோ நம் கடவுளாகிய ஆண்டவரின் பெயரில்
பெருமை கொள்கின்றோம்.
அவர்கள் தடுமாறி வீழ்ந்தார்கள்;
நாமோ நிமிர்ந்து உறுதியாய் நிற்கின்றோம்.
ஆண்டவரே, அரசருக்கு வெற்றியருளும்;
நாங்கள் கூப்பிடும் வேளையில் எங்களுக்குப் பதிலளியும்.
மு.மொழி.: ஆண்டவர் தாம் திருப்பொழிவு செய்தவருக்கு வெற்றிி தருகின்றார்.
__________________________
மு.மொழி. 2: நாங்கள் உமது வல்லமையைப் புகழ்ந்து பாடுவோம்.
அரசர் அடைந்த வெற்றிக்காக நன்றி - திபா 21: 1-7, 13
சாவினின்று உயிர்த்தெழுந்து என்றென்றும் வாழ்வதற்கே அவர் மனித இயல்பை தமதாக்கிக் கொண்டார். (புனித இரனேயுஸ்)
ஆண்டவரே, உமது வல்லமையில் அரசர் பூரிப்படைகின்றார்;
நீர் அளித்த வெற்றியில் எத்துணையோ அவர் அக்களிக்கின்றார்!
அவர் உள்ளம் விரும்பியதை
நீர் அவருக்குத் தந்தருளினீர்;
அவர் வாய்விட்டுக் கேட்டதை நீர் மறுக்கவில்லை.
நலமான ஆசீர்களோடு நீர் அவரை எதிர்கொண்டீர்;
அவர் தலையில் பசும்பொன்முடி சூட்டினீர்.
அவர் உம்மிடம் வாழ்வு வேண்டி நின்றார்;
நீரும் முடிவில்லா நீண்ட ஆயுளை அவருக்கு அளித்தீர்.
நீர் அவருக்கு வெற்றியளித்ததால்
அவரது மாட்சிமை பெரிதாயிற்று;
மேன்மையையும் மாண்பையும் அவருக்கு அருளினீர்,
எந்நாளும் நிலைத்திருக்கும் ஆசிகளை அவர் பெற்றுள்ளார்;
உமது முகத்தை அவர் மகிழ்ச்சியுடன் கண்டு களிக்கச் செய்தீர்.
ஏனெனில், அரசர் ஆண்டவரில் நம்பிக்கை வைக்கின்றார்;
உன்னதரின் பேரன்பினால் அவர் அசைவுறாதிருப்பார்.
ஆண்டவரே, உமது வலிமையோடு எழுந்து வாரும்;
நாங்கள் உமது வல்லமையைப் புகழ்ந்து பாடுவோம்.
மு.மொழி.: நாங்கள் உமது வல்லமையைப் புகழ்ந்து பாடுவோம்.
___________________________
மு.மொழி. 3: ஆண்டவரே, நீர் எங்களை ஆட்சியுரிமை பெற்றவர்களாகவும் எங்கள் கடவுளுக்குப் பணிபுரியும் குருக்களாகவும் ஏற்படுத்தினீர்.
மீட்படைந்தோரின் பாடல் - திவெ 4:11; 5:9, 10, 12
எங்கள் ஆண்டவரே, எங்கள் கடவுளே,
மாட்சியும் மாண்பும் வல்லமையும் பெற
நீர் தகுதி பெற்றவர்;
ஏனெனில் அனைத்தையும் படைத்தவர் நீரே.
உமது திருவுளப்படியே அவை உண்டாயின, படைக்கப்பட்டன.
ஏட்டை எடுக்கவும் அதன் முத்திரைகளை
உடைத்துப் பிரிக்கவும் தகுதி பெற்றவர் நீரே.
நீர் கொல்லப்பட்டீர்;
உமது இரத்தத்தால் குலம், மொழி, நாடு, மக்களினம்
ஆகிய அனைத்தினின்றும் மக்களைக்
கடவுளுக்கென்று விலை கொடுத்து மீட்டுக்கொண்டீர்.
ஆட்சியுரிமை பெற்றவர்களாகவும் குருக்களாகவும்
அவர்களை எங்கள் கடவுளுக்காக ஏற்படுத்தினீர்.
அவர்கள் மண்ணுலகின்மீது ஆட்சி செலுத்துவார்கள்.
கொல்லப்பட்ட ஆட்டுக்குட்டி
வல்லமையும் செல்வமும் ஞானமும் ஆற்றலும்
மாண்பும் பெருமையும் புகழ்ச்சியும் பெறத் தகுதி பெற்றது.
மு.மொழி.: ஆண்டவரே, நீர் எங்களை ஆட்சியுரிமை பெற்றவர்களாகவும் எங்கள் கடவுளுக்குப் பணிபுரியும் குருக்களாகவும் ஏற்படுத்தினீர்.
___________________________
(எழுந்து நின்று வாசிக்கவும்)
அருள்வாக்கு 1 யோவா: 3: 1-2
நம் தந்தை நம்மிடம் எத்துணை அன்பு கொண்டுள்ளார் என்று பாருங்கள். நாம் கடவுளின் மக்களென அழைக்கப்படுகிறோம்; கடவுளின் மக்களாகவே இருக்கிறோம். உலகம் அவரை அறிந்துகொள்ளாததால்தான் நம்மையும் அறிந்து கொள்ளவில்லை. என் அன்பார்ந்தவர்களே, இப்போது நாம் கடவுளின் பிள்ளைகளாய் இருக்கிறோம். இனி எத்தன்மையராய் இருப்போம் என்பது இன்னும் வெளிப்படவில்லை. ஆனால் அவர் தோன்றும்போது நாமும் அவரைப் போல் இருப்போம்; ஏனெனில் அவர் இருப்பதுபோல் அவரைக் காண்போம்.
__________________________
சிறு மறுமொழி
℣ - ஆண்டவரே உமது வார்த்தை என்றென்றும் நிலைத்திருக்கும்
℟ - ஆண்டவரே உமது வார்த்தை என்றென்றும் நிலைத்திருக்கும்.
℣ - உமது உண்மை என்றென்றும் நீடித்திருக்கும்.
℟ - உமது வார்த்தை என்றென்றும் நிலைத்திருக்கும்.
℣ - தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக
℟ - ஆண்டவரே உமது வார்த்தை என்றென்றும் நிலைத்திருக்கும்.
__________________________
(அனைவரும் எழுந்து நிற்கவும்)
மரியாவின் பாடல்
மு.மொழி.: என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது.
ஆண்டவரை எனது உள்ளம்
போற்றிப் பெருமைப்படுத்துகின்றது.
என் மீட்பராம் கடவுளை நினைத்து
எனது மனம் பேருவகை கொள்கின்றது.
ஏனெனில் அவர் தம் அடிமையின்
தாழ்நிலையைக் கண்ணோக்கினார்.
இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும்
என்னைப் பேறுபெற்றவர் என்பர்.
ஏனெனில் வல்லவராம் கடவுள்
எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார்.
தூயவர் என்பதே அவரது பெயர்.
அவருக்கு அஞ்சி நடப்போருக்குத்
தலைமுறை தலைமுறையாய்
அவர் இரக்கம் காட்டி வருகிறார்.
அவர் தம் தோள் வலிமையைக் காட்டியுள்ளார்;
உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச்
சிதறடித்து வருகிறார்.
வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்;
தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்.
பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்;
செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார்.
மூதாதையருக்கு உரைத்தபடியே அவர்
ஆபிரகாமையும் அவர்தம் வழி மரபினரையும்
என்றென்றும் இரக்கத்தோடு
நினைவில் கொண்டுள்ளார்;
தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத்
துணையாக இருந்து வருகிறார் '.
தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும்...
மு.மொழி.: என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது.
_________________________
மன்றாட்டுக்கள்
கிறிஸ்துவின் வழியாக நாம் கடவுளின் மக்களாயிருக்கிறோம். நாம் தந்தையிடம் செல்லும் பொழுது எப்படி இருப்போம் என்பதை அவரில் காண்கிறோம். எனவே நம்பிக்கையோடு கிறிஸ்துவிடம் மன்றாடுவோம்.
℟ - ஆண்டவரே உமது இரக்கத்தில் எங்கள் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்.
தலைவர்களையும் ஆட்சியாளர்களையும் வழிநடத்தியருளும் - அவர்களுக்கு ஞானத்தையும் நேர்மையையும் அளித்தருளும்.
℟ - ஆண்டவரே உமது இரக்கத்தில் எங்கள் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்.
நீரே ஆண்டவரும் எமது விடுதலையின் ஊற்றுமாயிருக்கிறீர் உள்ளத்திலோ உடலிலே அடிமைப்பட்டுக் கிடக்கும் கடவுளின் பிள்ளைகளுக்குரி உரிமைப் பேற்றிற்கு அழைத்துச் செல்லும்.
℟ - ஆண்டவரே உமது இரக்கத்தில் எங்கள் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்.
இளைஞர்களுக்கும் இளம்பெண்களுக்கும் மன உறுதியையும் ஆற்றலையும் அளித்தருளும் - அவர்கள் தங்களுடைய வேலைகளைத் தேர்ந்து கொள்ளவும் வருங்கால வாழ்வு பற்றிய சரியான முடிவு எடுக்கவும் துணைபுரியும்.
℟ - ஆண்டவரே உமது இரக்கத்தில் எங்கள் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்.
முதியோர்களுக்கு பொறுமையையும் சகிப்புத்தன்மையையும் கொடுத்தருளும் - அவர் தம் அறிவையும் அன்பையும் பெற்றுக்கொள்ள இளைஞர் இளம்பெண்களுடைய இதயங்களைத் திறந்தருளும்.
℟ - ஆண்டவரே உமது இரக்கத்தில் எங்கள் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்.
(தனிப்பட்ட தேவைகளுக்காக மன்றாடல்)
இறந்தோரை உமது என்றும் நிலைக்கும் ஆட்சிக்குள் வரவேற்றருளும் - உம்மோடு நாங்களும் என்றும் ஆட்சி புரிவோம் என்ற நம்பிக்கையை உறுதிப்படுத்தியருளும்.
℟ - ஆண்டவரே உமது இரக்கத்தில் எங்கள் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்.
_________________________
ஆண்டவரின் இறைவேண்டல் - அழைப்பு
1. நம் மீட்பர் நமக்குக் கற்பித்தவாறு, நாம் விண்ணகத் தந்தையை நோக்கி மன்றாடுவோம்.
2 இவ்வுலகில் இறையாட்சி வரவேண்டுமென்று மன்றாடுவோம்.
3. நமது புகழ்ச்சிகளையும் மன்றாட்டுகளையும் கிறிஸ்துவின் வார்த்தைகளில் சுருக்கமாய்ச் சொல்வோம்.
4. நமது புகழ்ச்சியையும் மன்றாட்டுகளையும் ஆண்டவருடைய இறைவேண்டலால் உறுதிப்படுத்துவோம்.
5. இப்போது கிறிஸ்துவே கற்றுக் வார்த்தைகளால் தந்தையைப் புகழ்ந்து மன்றாடுவோம்.
6. (கிறிஸ்துவை நோக்கி) ஆண்டவரே, நாங்கள் உம் போதனையின்படி இறைவேண்டல் செய்யும் இவ்வேளையில், எங்களை உம் ஆட்சியில் நினைவு கூர்ந்தருளும். கொடுத்த
7. நம் ஆண்டவருடைய போதனையின்படி, நாம் நம்பிக்கையோடு சொல்வோம்.
8. நம் ஆண்டவரின் படிப்பினையைப் பின்பற்றி, நாம் மன்றாடுவோம்.
9. இறைவேண்டல்களுக்கெல்லாம் எடுத்துக்காட்டாக ஆண்டவர் நமக்குக் கொடுத்த வேண்டலை நாம் ஒருமித்து இப்போது சொல்வோம்.
__________________________
இறுதி செபம்
ஆண்டவரே எல்லாம் வல்ல கடவுளே! நீர் எங்களை இன்றைய நாளின் இறுதிப்பொழுது வரையிலும் நலமுடன் பாதுகாத்தமைக்கு உமக்கு நன்றி கூறுகிறோம். வான்நோக்கிக் கரங்கூப்பி நாங்கள் எழுப்பும் எங்கள் வேண்டுதல் உமக்குகந்த காணிக்கையாக வேண்டுமென்று நாங்கள் தாழ்மையுடன் உம்மை மன்றாடுகிறோம். உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சிபுரியும் எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.
_________________________
ஆசி வழங்குதல்
அப: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக
எல்: உம் ஆன்மாவோடும் இருப்பாராக
அப: எல்லாம் வல்ல இறைவன் தந்தை மகன் தூய ஆவியார் உங்களை ஆசீர்வதிப்பாராக.
எல்: ஆமென்
அப: கிறிஸ்துவின் அமைதியில் சென்று வாருங்கள்
எல்: இறைவா உமக்கு நன்றி
(அல்லது)
முதல்: ஆண்டவர் நம்மை ஆசீர்வதித்து தீமைகள் அனைத்தினின்றும் பாதுகாத்து முடிவில்லா வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக
எல்: ஆமென்
முதல்: ஆண்டவரை வாழ்த்துவோமாக
எல்: இறைவா உமக்கு நன்றி.