1 - செவ்வாய் காலைப் புகழ்
வாரம் 1 - செவ்வாய்
காலைப் புகழ்
பாடல்
(எழுந்து நிற்கவும்)
எழுந்தது ஞாயிறு, விடிந்தது காலை,
மிளிர்ந்தன பொருட்கள் பலநிறம் பெற்று
ஒளிபெற்றது, உலகம் முழுதும்
விளம்பிட விழைகிறது உம்திருப் புகழை.
வல்ல தந்தையின் ஞானம் நீரே,
எல்லாம் தோன்ற வழியான வார்த்தையே
ஒளியும் எழிலும் ஒழுங்கும் பெற்றெம்
உளத்தை உம்பால் உயர்த்திடு வீரே.
ஒளியின் மக்களாம் எமக்கருள் புரிவீர்,
தெளிவுடன் நடப்போம் மிக ஆர்வ முடனே;
சொல்லும் செயலும் தந்தையின் அன்பைக்
காட்டிடும் வகையில் வாழ்ந்திடுவோமே.
நாவினால் என்றும் நலமே நவில்வோம்
ஆவியில் உண்மையின் இனிமையை உணர்வோம்;
மூவொரு இறைவா மூவுல கெங்கும்,
ஓயாது ஓங்குக உம்புகழ் என்றும். ஆமென்.
(அமரவும்)
___________________________
மு.மொழி.1: கறைபடாத கைகளும் மாசற்ற மனமும் உடைய மனிதர் ஆண்டவரது மலையில் ஏறிச்செல்வார்.
ஆண்டவர் தம் ஆலயத்திற்கு வருகிறார் - திபா 24
உடலோடு விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட கிறிஸ்துவுக்கு வான்வீடு திறந்து விடப்பட்டது. (புனித இரேனேயுஸ்)
மண்ணுலகும் அதில் நிறைந்த அனைத்தும் ஆண்டவருடையவை;
நிலவுலகும் அதில் வாழ்வனவும் அவருக்கே சொந்தம்.
ஏனெனில், அவரே கடல்கள் மீது அதற்கு அடித்தளமிட்டார்;
ஆறுகள்மீது அதை நிலைநாட்டினார்.
ஆண்டவரது மலையில் ஏறக்கூடியவர் யார்?
அவரது திருத்தலத்தில் நிற்கக்கூடியவர் யார்?
கறைபடாக் கைகளும் மாசற்ற மனமும் உடையவர்;
பொய்த் தெய்வங்களை நோக்கித்
தம் உள்ளத்தை உயர்த்தாதவர்;
வஞ்சக நெஞ்சோடு ஆணையிட்டுக் கூறாதவர்,
இன்னோரே ஆண்டவரிடம் ஆசி பெறுவர்;
தம் மீட்பராம் கடவுளிடமிருந்து
நேர்மையாளர் எனத் தீர்ப்புப் பெறுவர்.
ஆண்டவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே;
யாக்கோபின் கடவுளது முகத்தைத் தேடுவோர் இவர்களே.
வாயில்களே, உங்கள் நிலைகளை உயர்த்துங்கள்;
தொன்மைமிகு கதவுகளே, உயர்ந்து நில்லுங்கள்;
மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும்.
மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ?
வலிமையும் ஆற்றலும் கொண்ட ஆண்டவர் இவர்;
இவரே போரில் வல்லவரான ஆண்டவர்.
வாயில்களே, உங்கள் நிலைகளை உயர்த்துங்கள்;
தொன்மைமிகு கதவுகளே, உயர்ந்து நில்லுங்கள்;
மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும்.
மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ?
படைகளின் ஆண்டவர் இவர்;
இவரே மாட்சிமிகு மன்னர்.
மு.மொழி.: கறைபடாத கைகளும் மாசற்ற மனமும் உடைய மனிதர் ஆண்டவரது மலையில் ஏறிச்செல்வார்.
__________________________
மு.மொழி. 2: என்றுமுள்ள மன்னரை உங்கள் அனைத்துச் செயல்களிலும் ஏத்திப் போற்றுங்கள்.
தண்டிப்பவரும் மீட்பவரும் இறைவன் - சிறுபாடல் - தோபி 13: 1-5ஆ; 7-10அ
நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் கடவுளும் தந்தையுமானவர் போற்றி! அவர் தம் பேரிரக்கத்தின்படிஇ இறந்த இயேசு கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்து நமக்குப் புதுப்பிறப்பு அளித்துள்ளார். (1 பேது 1:3)
என்றும் வாழும் கடவுள் போற்றி!
ஏனெனில் அவருடைய ஆட்சி
எக்காலத்துக்கும் நிலைக்கும்.
அவர் தண்டிக்கிறார்; இரக்கமும் காட்டுகிறார்.
பாதாளத்தின் ஆழத்திற்கே தள்ளுகிறார்;
பேரழிவிலிருந்து மேலே தூக்குகிறார்.
அவரது ஆற்றலுக்கு அப்பாற்பட்டது எதுவுமில்லை.
இஸ்ரயேல் மக்களே, வேற்றினத்தார்முன்
அவரது புகழை அறிக்கையிடுங்கள்.
ஏனெனில் அவர் அவர்களிடையே
உங்களைச் சிதறடித்துள்ளார்.
அவர் தமது பெருமையை உங்களுக்குக் காட்டியுள்ளார்.
எல்லா உயிர்கள் முன்னும் அவரை ஏத்துங்கள்.
ஏனெனில் அவர் நம் ஆண்டவர்;
நம் கடவுள்; நம் தந்தை; எக்காலத்துக்கும் அவர் கடவுள்.
உங்களுடைய நெறிகெட்ட செயல்களுக்காக
அவர் உங்களைத் தண்டிப்பார்;
நீங்கள் சிதறடிக்கப்பட்டுள்ள எல்லா நாடுகளிலிருந்தும்
உங்களை ஒன்று கூட்டி
உங்கள் அனைவர் மீதும் இரக்கத்தைப் பொழிவார்.
உங்களுக்கு அவர் செய்துள்ளவற்றை
இப்பொழுது எண்ணிப்பாருங்கள்;
நீதியின் ஆண்டவரைப் போற்றுங்கள்;
வாயார அவரை அறிக்கையிடுங்கள்.
என்றுமுள மன்னரை ஏத்திப் போற்றுங்கள்.
நான் அடிமையாய் வாழும் நாட்டில் அவரைப் போற்றுவேன்;
அவருடைய ஆற்றலையும் மேன்மையையும்
பாவ நாட்டமுள்ள இனத்தார்முன் அறிக்கையிடுவேன்.
பாவிகளே, மனந்திரும்புங்கள்;
அவர் திருமுன் நேர்மையுடன் ஒழுகுங்கள்.
ஒருவேளை அவர் உங்கள் மீது அருள்கூர்வார்;
உங்களுக்கு இரக்கங்காட்டுவார்.
நான் என் கடவுளைப் புகழ்ந்தேத்துவேன்;
என் உள்ளம் விண்ணக வேந்தரைப் போற்றுகின்றது;
அவரது மேன்மையை நினைத்து பேருவகை கொள்கிறது.
அனைவரும் புகழ் பாடுங்கள்;
எருசலேமில் அவரைப் போற்றுங்கள்.
மு.மொழி.: என்றுமுள்ள மன்னரை உங்கள் அனைத்துச் செயல்களிலும் ஏத்திப் போற்றுங்கள்.
___________________________
மு.மொழி. 3: நீதி உள்ளோர் அவரைப் புகழ்வது பொருத்தமானதே.
இறைவனின் பராமரிப்பும் வல்லமையும் - திபா 33
அனைத்தும் அவரால் உண்டாயின. (யோவா 1:3)
நீதிமான்களே, ஆண்டவரில் களிகூருங்கள்;
நீதியுள்ளோர் அவரைப் புகழ்வது பொருத்தமானதே.
யாழிசைத்து ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்;
பதின் நரம்பு வீணையினால் அவரைப் புகழ்ந்து பாடுங்கள்;
புத்தம்புதிய பாடல் ஒன்றை அவருக்குப் பாடுங்கள்;
திறம்பட இசைத்து மகிழ்ச்சிக் குரல் எழுப்புங்கள்.
ஆண்டவரின் வாக்கு நேர்மையானது;
அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை.
அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்;
அவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது.
ஆண்டவரது வாக்கினால் வானங்கள் உண்டாயின;
அவரது சொல்லின் ஆற்றலால்
வான் கோள்கள் உருவாயின.
அவர் கடல்நீரைக் குவியலாய்ச் சேர்த்து வைத்தார்;
அந்நீரை ஆழ் நிலவறைகளில் சேமித்து வைத்தார்.
அனைத்துலகும் ஆண்டவருக்கு அஞ்சுவதாக!
அதில் வாழ்வோர் அனைவரும் அவருக்கு அஞ்சி நடுங்குவாராக!
அவர் சொன்னார், உலகம் உண்டானது;
அவர் கட்டளையிட்டார், அது நிலைபெற்றது.
வேற்றினத்தாரின் திட்டங்களை ஆண்டவர் முறியடிக்கின்றார்;
மக்களினத்தாரின் எண்ணங்களை அவர் சீர்குலைக்கின்றார்.
ஆண்டவரின் திட்டங்கள் என்றென்றும் நிலைத்திருக்கும்;
அவரது உள்ளத்தின் எண்ணங்களோ
தலைமுறை தலைமுறையாய் நீடித்திருக்கும்.
ஆண்டவரைத் தன் கடவுளாகக் கொண்ட இனம் பேறுபெற்றது;
அவர் தமது உரிமைச் சொத்தாகத்
தேர்ந்தெடுத்த மக்கள் பேறுபெற்றோர்.
வானினின்று ஆண்டவர் பார்க்கின்றார்;
மானிடர் அனைவரையும் காண்கின்றார்.
தாம் வீற்றிருக்கும் இடத்திலிருந்து
உலகெங்கும் வாழ்வோரை
அவர் கூர்ந்து நோக்குகின்றார்.
அவர்களின் உள்ளங்களை உருவாக்குகின்றவர் அவரே!
அவர்களின் செயலனைத்தையும்
உற்று நோக்குபவரும் அவரே!
தன் படைப் பெருக்கத்தால் வெற்றிபெரும் அரசருமில்லை;
தன் வலிமை மிகுதியால் உயிர் தப்பிய வீரருமில்லை.
வெற்றி பெறப் போர்க்குதிரையை நம்புவது வீண்;
வலிமைமிக்கதாயினும் அது விடுவிக்காது.
தமக்கு அஞ்சி நடப்போரையும்
தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும்
ஆண்டவர் கண்ணோக்குகின்றார்.
அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்;
அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார்.
நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்;
அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார்.
அவரை நினைத்து நம் உள்ளம் களிகூரும்;
ஏனெனில், அவரது திருப்பெயரில்
நாம் நம்பிக்கை வைத்துள்ளோம்.
உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால்,
உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக!
மு.மொழி.: நீதி உள்ளோர் அவரைப் புகழ்வது பொருத்தமானதே.
___________________________
(எழுந்து நின்று வாசிக்கவும்)
அருள்வாக்கு உரோ: 13: 11ஆ-13ஆ
உறக்கத்தினின்று விழித்தெழும் நேரம் ஏற்கெனவே வந்துவிட்டது. நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கை கொண்டபோது இருந்ததை விட மீட்பு இப்பொழுது மிக அண்மையில் உள்ளது. இரவு முடியப்போகிறது; பகல் நெருங்கி உள்ளது. ஆகவே இருளின் ஆட்சிக்குரிய செயல்களைக் களைந்து விட்டு, ஒளியின் ஆட்சிக்குரிய படைக்கலங்களை அணிந்து கொள்வோமாக! பகலில் நடப்பதுபோல மதிப்போடு நடந்து கொள்வோமாக!
__________________________
சிறு மறுமொழி
℣ - ஆண்டவரே எனக்குத் துணை; என் நம்பிக்கையை அவரில் நிலைநிறுத்துவேன்.
℟ - ஆண்டவரே எனக்குத் துணை; என் நம்பிக்கையை அவரில் நிலைநிறுத்துவேன்.
℣ - ஆண்டவரே எனக்குப் புகலிடம்; என்னை விடுவிப்பவர் அவரே
℟ - என் நம்பிக்கையை அவரில் நிலைநிறுத்துவேன்.
℣ - தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக
℟ - ஆண்டவரே எனக்குத் துணை; என் நம்பிக்கையை அவரில் நிலைநிறுத்துவேன்.
__________________________
(அனைவரும் எழுந்து நிற்கவும்))
செக்கரியாவின் பாடல்
மு.மொழி.: தம் தூய இறைவாக்கினர் வாயினால் தொடக்க முதல் அவர் மொழிந்தபடியே, அவர் தம் ஊழியராகிய தாவீதின் குடும்பத்தில், வல்லமை உடைய மீட்பர் ஒருவர் நமக்காகத் தோன்றச் செய்தார்.
+ இஸ்ரயேலின் கடவுளாகிய
ஆண்டவரைப் போற்றுவோம்.
ஏனெனில் அவர் தம் மக்களைத்
தேடிவந்து விடுவித்தருளினார்.
தம் தூய இறைவாக்கினர் வாயினால்
தொடக்க முதல் அவர் மொழிந்தபடியே
அவர் தம் ஊழியராகிய தாவீதின் குடும்பத்தில்
வல்லமை உடைய மீட்பர் ஒருவர்
நமக்காகத் தோன்றச் செய்தார்;
நம் பகைவரிடமிருந்தும்
நம்மை வெறுப்போர் அனைவரின் பிடியிலிருந்தும்
நம்மை மீட்பார்.
அவர் நம் மூதாதையருக்கு இரக்கம் காட்டி,
தமது தூய உடன்படிக்கையையும்,
நம் தந்தையாகிய ஆபிரகாமுக்கு
அவர் இட்ட ஆணையையும்
நிறைவேற்ற நினைவு கூர்ந்தார்.
இவ்வாறு நாம் பகைவரின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டுத்
தூய்மையோடும் நேர்மையோடும்
வாழ்நாளெல்லாம் அச்சமின்றி
அவர் திருமுன் பணிசெய்யுமாறு வழிவகுத்தார்.
குழந்தாய்,
நீ உன்னத கடவுளின் இறைவாக்கினர் எனப்படுவாய்;
ஏனெனில் பாவ மன்னிப்பால் வரும் மீட்பை
அவர்தம் மக்களுக்கு அறிவித்து
ஆண்டவருக்கான வழியைச் செம்மைப்படுத்த
அவர் முன்னே செல்வாய்.
இருளிலும் இறப்பின் பிடியிலும் இருப்போர்க்கு ஒளிதரவும்,
நம்முடைய கால்களை அமைதி வழியில் நடக்கச் செய்யவும்
நம் கடவுளின் பரிவுள்ளத்தாலும் இரக்கத்தாலும்
விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடிவருகிறது.
தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும்...
மு.மொழி.: தம் தூய இறைவாக்கினர் வாயினால் தொடக்க முதல் அவர் மொழிந்தபடியே, அவர் தம் ஊழியராகிய தாவீதின் குடும்பத்தில், வல்லமை உடைய மீட்பர் ஒருவர் நமக்காகத் தோன்றச் செய்தார்.
__________________________
மன்றாட்டுக்கள்
கடவுளின் வாழ்வில் பங்குபற அழைக்கப்பட்டுள்ள கிறிஸ்தவர்களாகிய நாம் நமது நம்பிக்கையின் தலைமைக் குருவாகிய இயேசு ஆண்டவரைப் போற்றுவோம்
℟ - நீரே எம் மீட்பர், எம் இறைவன்
எல்லாம் வல்ல அரசரேஈ திருமுழுக்கின் வழியாகஈ நீர் எங்களை அரச குருக்களின் கூட்டத்தினராக்கினீர் - நாங்கள் உமக்கு இடையறாது புகழ்ச்சிப் பலி செலுத்துவோமாக.
℟ - நீரே எம் மீட்பர், எம் இறைவன்
உமது கட்டளைகளில் நாங்கள் கருத்தூன்றி நிற்கச் செய்தருளும் - தூய ஆவியாரால் நீர் எம்மிலும் நாங்கள் உம்மிலும் குடிகொண்டிருக்கச் செய்தருளும்.
℟ - நீரே எம் மீட்பர், எம் இறைவன்
முடிவில்லாத ஞானமே எம்மிடம் எழுந்து வாரும் - இன்று எம்மோடு தங்கி செயலாற்றுவீராக.
℟ - நீரே எம் மீட்பர், எம் இறைவன்
நாங்கள் பிறர் மீது அக்கறையும் அன்பும் உள்ளவர்களாக இருக்க அருள்புரியும் - நாங்கள் சந்திப்பவர்களுக்கு மகிழ்ச்சியை அளித்திட அருள்கூரும்.
℟ - நீரே எம் மீட்பர், எம் இறைவன்
(தனிப்பட்ட தேவைகளுக்காக மன்றாடல்)
__________________________
ஆண்டவரின் இறைவேண்டல் - அழைப்பு
1. நம் மீட்பர் நமக்குக் கற்பித்தவாறு, நாம் விண்ணகத் தந்தையை நோக்கி மன்றாடுவோம்.
2 இவ்வுலகில் இறையாட்சி வரவேண்டுமென்று மன்றாடுவோம்.
3. நமது புகழ்ச்சிகளையும் மன்றாட்டுகளையும் கிறிஸ்துவின் வார்த்தைகளில் சுருக்கமாய்ச் சொல்வோம்.
4. நமது புகழ்ச்சியையும் மன்றாட்டுகளையும் ஆண்டவருடைய இறைவேண்டலால் உறுதிப்படுத்துவோம்.
5. இப்போது கிறிஸ்துவே கற்றுக் வார்த்தைகளால் தந்தையைப் புகழ்ந்து மன்றாடுவோம்.
6. (கிறிஸ்துவை நோக்கி) ஆண்டவரே, நாங்கள் உம் போதனையின்படி இறைவேண்டல் செய்யும் இவ்வேளையில், எங்களை உம் ஆட்சியில் நினைவு கூர்ந்தருளும். கொடுத்த
7. நம் ஆண்டவருடைய போதனையின்படி, நாம் நம்பிக்கையோடு சொல்வோம்.
8. நம் ஆண்டவரின் படிப்பினையைப் பின்பற்றி, நாம் மன்றாடுவோம்.
9. இறைவேண்டல்களுக்கெல்லாம் எடுத்துக்காட்டாக ஆண்டவர் நமக்குக் கொடுத்த வேண்டலை நாம் ஒருமித்து இப்போது சொல்வோம்.
__________________________
__________________________
இறுதி செபம்
ஆண்டவரே எமது காலை வேண்டலைக் கருணையோடு ஏற்றருளும். உமது மீட்கும் அன்பினால், எம் உள்ளத்தின் அடித்தளத்தில் உமது அருள்ஒளி ஊடுருவச் செய்தருளும். இதனால் தகாத ஆசைகளால் எங்கள் உள்ளம் இருளடையாதிருப்பதாக. உமது விண்ணக அருளினால் புத்தொளி பெற்று நாங்கள் புதுப்பிக்கப்படுவோமாக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சிபுரியும் எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.
__________________________
ஆசி வழங்குதல்
அப: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக
எல்: உம் ஆன்மாவோடும் இருப்பாராக
அப: எல்லாம் வல்ல இறைவன் தந்தை மகன் தூய ஆவியார் உங்களை ஆசீர்வதிப்பாராக.
எல்: ஆமென்
அப: கிறிஸ்துவின் அமைதியில் சென்று வாருங்கள்
எல்: இறைவா உமக்கு நன்றி
(அல்லது)
முதல்: ஆண்டவர் நம்மை ஆசீர்வதித்து தீமைகள் அனைத்தினின்றும் பாதுகாத்து முடிவில்லா வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக
எல்: ஆமென்
முதல்: ஆண்டவரை வாழ்த்துவோமாக
எல்: இறைவா உமக்கு நன்றி.