1 - வியாழன் மாலைப் புகழ்

  1 - வியாழன் மாலை செபம்

முதல்: இறைவா எமக்குத் துணைபுரிய வாரும்

எல்: ஆண்டவரே எனக்குத் துணைபுரிய விரைைந்து வாரும்

முதல்: தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக

எல்: தொடக்கத்தில் இருந்ததுபோல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக ஆமென்.

__________________________

பாடல்

(எழுந்து நிற்கவும்)

நீரே வல்லமை மிகுந்த இறைவன்
நீரில் பிறந்த பல்வகை இனங்களைப்
பிரித்தீர் நீரில் வாழ்வன வாகவும்
பரந்த வானில் பறப்பன வாகவும்.

ஒருபொருள் நின்று உயிர்த்த இவைகள்
இருநிலை பெற்று இயங்குதல் வியப்பே
குருதியும் நீரும் நின்றுயிர் பெற்றோம்
குறைபவம் போக்கி அருள்வாழ்வு அளிப்பீர்.

புரியும் பவத்தால் தளர்வதும் நான் எனும்
பெருமை மிகத்தலை நிமிர்வதும் சோர்ந்து
தோல்வி அடைவதும் ஆணவச் செருக்கால்
வாழ்வை இழப்பதும் விலக்கிட அருள்வீர்.

இச்செபம் இரங்கி ஏற்பீர் தந்தையே
உச்ச நிலையமர் உம்திரு மகனும்
அச்சம் அகற்றும் தூய ஆவியும்
இச்செகம் உம்முடன் ஆளுக என்றும். ஆமென்.

__________________________

(அமரவும்)

மு.மொழி.1: ஆண்டவரே உம்மிடம் உதவி வேண்டினேன். என் இறைவனாகிய நீர் குணம் அளித்தீர். என்றென்றும் நான் உமக்கு
நன்றி கூறுவேன்.

நன்றி செலுத்தல் - திபா 30

ஆண்டவரே உம்மை ஏத்திப் புகழ்வேன்
ஏனெனில் நீர் என்னைக் கைதூக்கி விட்டீர்
என்னைக் கண்டு என் பகைவர் மகிழ நீர் விடவில்லை.
என் கடவுளாகிய ஆண்டவரே
உம்மிடம் உதவி வேண்டினேன் என்னை நீர் குணப்படுத்துவீர்
ஆண்டவரே நீர் என்னைப் பாதாளத்திலிருந்து ஏறி வரச் செய்தீர்
சாவுக்குழியில் இறங்கிய எனது உயிரைக் காத்தீர்.

இறையன்பரே ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்
தூயவராம் அவரை நினைந்து நன்றி கூறுங்கள்
அவரது சினம் ஒரு நொடிப்பொழுதுதான் இருக்கும்
அவரது கருணையோ வாழ்நாள் முழுதும் நீடிக்கும்
மாலையில் அழுகை காலையிலோ ஆர்ப்பரிப்பு.

நான் வளமுடன் வாழ்ந்தபோது
என்னை ஒருபோதும் அசைக்க முடியாது என்றேன்
ஆனால் ஆண்டவரே உமது கருணையினால்
மலையென உறுதியாக என்னை நிலைநிற்கச் செய்தீர்
உம்முகத்தை மறைத்துக்கொண்டீர்
நான் நிலை கலங்கிப் போனேன்
ஆண்டவரே உம்மை நோக்கி மன்றாடினேன்
என் தலைவரிடம் எனக்கு இரங்குமாறு வேண்டினேன்.

நான் சாவதால் படுகுழிக்குப் போவதால் உமக்கு என்ன பயன்
புழுதியால் உம்மைப் புகழ முடியுமா
உமது வாக்குப் பிறழாமையை அறிவிக்க இயலுமா
ஆண்டவரே எனக்குச் செவி சாயும் என்மீது இரங்கும்
ஆண்டவரே எனக்குத் துணையாய் இரும்.

நீர் என் புலம்பலைக் களிநடனமாக மாற்றிவிட்டீர்
என் சாக்குத் துணியைக் களைந்து விட்டு
என்னை மகிழ்ச்சியால் உடுத்தினீர்
ஆகவே என் உள்ளம் உம்மைப் புகழ்ந்து பாடும்
மௌனமாய் இராது
என் கடவுளாகிய ஆண்டவரே
உமக்கு என்றென்றும் நன்றி செலுத்துவேன்.

மு.மொழி.: ஆண்டவரே உம்மிடம் உதவி வேண்டினேன். என் இறைவனாகிய நீர் குணம் அளித்தீர். என்றென்றும் நான் உமக்கு
நன்றி கூறுவேன்.
__________________________

மு.மொழி. 2: ஆண்டவர் எந்த மனிதரின் தீச்செயலை எண்ணவில்லையோ அவர் பேறுபெற்றோர்.

பாவ அறிக்கையும் மன்னிப்பும் - திபா 32

எவரது குற்றம் மன்னிக்கப்பட்டதோ
எவரது பாவம் மறைக்கப்பட்டதோ அவர் பேறுபெற்றவர்
ஆண்டவர் எந்த மனிதரின் தீச்செயலை எண்ணவில்லையோ
எவரது மனத்தில் வஞ்சம் இல்லையோ அவர் பேறுபெற்றவர்.

என் பாவத்தை அறிக்கையிடாதவரை
நாள் முழுவதும் நான் கதறி அழுததால்
என் எலும்புகள் கழன்று போயின
ஏனெனில் இரவும் பகலும் உம் கை
எனக்கு எதிராக ஒங்கி நின்றது
கோடையின் வறட்சிபோல என் வலிமை வறண்டு போயிற்று.

என் பாவத்தை உம்மிடம் அறிக்கையிட்டேன்
என் தீச்செயலை நான் மறைத்ததில்லை
ஆண்டவரிடம் என் குற்றங்களை ஒப்புக் கொள்வேன்
என்று சொன்னேன்
நீரும் என் நெறி கேட்டையும் பாவத்தையும் போக்கினீர்.

ஆகவே துன்ப வேளையில் உம் அன்பர் அனைவரும்
உம்மை நோக்கி மன்றாடுவர்
பெருவெள்ளம் பாய்ந்து வந்தாலும் 

அவர்களை அது அணுகாது.
நீரே எனக்குப் புகலிடம்
இன்னலினின்று என்னை நீர் பாதுகாக்கின்றீர்
உம் மீட்பினால் எழும் ஆரவாரம்
என்னை சூழ்ந்தொலிக்கச் செய்கின்றீர்.

நான் உனக்கு அறிவு புகட்டுவேன்
நீ நடக்க வேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்
உன்னைக் கண்ணோக்கி உனக்கு அறிவுரை கூறுவேன்.
கடிவாளம் பூட்டி வாரினால் இழுத்தாலன்றி
உன்னைப் பின்தொடர்ந்து வராத குதிரை போன்றோ
கோவேறு கழுதை போன்றோ அறிவிலியாய் இராதே !

பொல்லாருக்கு வரும் துன்பங்கள் பல
ஆண்டவரில் நம்பிக்கை கொள்வோரை
அவரது பேரன்பு சூழ்ந்து நிற்கும்.
நீதிமான்களே ஆண்டவரை முன்னிட்டு அகமகிழுங்கள்
நேரிய உள்ளத்தோரே நீங்கள் அனைவரும் மகிழ்ந்து பாடுங்கள்.

மு.மொழி.: ஆண்டவர் எந்த மனிதரின் தீச்செயலை எண்ணவில்லையோ அவர் பேறுபெற்றோர்.
___________________________

மு.மொழி. 3: ஆண்டவர் அவருக்கு வல்லமையையும் பெருமையையும்
ஆட்சியையும் அளித்தார். எல்லா மக்களும் அவருக்கே ஊழியம்
புரிவார்கள்.

இறைவனின் தீர்ப்பு - திவெ 11: 17, 18; 12: 105-12

கடவுளாகிய ஆண்டவரே எல்லாம் வல்லவரே
இருக்கின்றவரும் இருந்தவருமான
உமக்கு நன்றி செலுத்துகின்றோம்.
ஏனெனில் நீர் உமது பெரும் வல்லமையை வெளிப்படுத்தி
ஆட்சி செலுத்தலானீர்.

வேற்றினத்தார் சினந்தெழுந்தனர்
உமது சினமும் வெளிப்பட்டது
இறந்தோருக்குத் தீர்ப்பளிக்கவும்
உம் பணியாளர்களாகிய இறைவாக்கினர்கள்
இறைமக்கள் உமக்கு அஞ்சும் சிறியோர் பெரியோர்
ஆகிய அனைவருக்கும் கைம்மாறு அளிக்கவும்
உலகை அழிப்பவர்களை அழிக்கவும் காலம் வந்துவிட்டது.

இதோ மீட்பு வல்லமை நம் கடவுளின் ஆட்சி
அவருடைய மெசியாவின் அதிகாரம்
ஆகிய அனைத்தும் வந்துவிட்டன
நம் சகோதரர் சகோதரிகள்
மீது குற்றம் சுமத்தியவன்
நம் கடவுள் திருமுன் அல்லும் பகலும் அவர்கள்
மீது
குற்றம் சாட்டியவன் வெளியே தள்ளப்பட்டான்.

ஆட்டுக்குட்டி சிந்திய இரத்தத்தாலும்
தாங்கள் பகர்ந்த சான்றாலும்
அவர்கள் அவனை வென்றார்கள்
அவர்கள் தங்கள் உயிர்மீது ஆசை வைக்கவில்லை
இறக்கவும் தயங்கவில்லை.
இதன்பொருட்டு விண்ணுலகே
அதில் குடியிருப்போரே மகிழ்ந்து கொண்டாடுங்கள்.

மு.மொழி.: ஆண்டவர் அவருக்கு வல்லமையையும் பெருமையையும்
ஆட்சியையும் அளித்தார். எல்லா மக்களும் அவருக்கே ஊழியம்
புரிவார்கள்.
___________________________

(எழுந்து நின்று வாசிக்கவும்)

அருள்வாக்கு           1பேது 1:6-9

இப்போது சிறிது காலம் நீங்கள் பல்வகை சோதனைகளால்
துயருற வேண்டியிருப்பினும், அந்நாளிலே பேருவகை கொள்வீர்கள்.
அழியக்கூடிய பொன் நெருப்பினால் புடமிடப்படுகிறது. அதைவிட
விலையுயர்ந்த உங்கள் நம்பிக்கையும் மெய்ப்பிக்கப்படவே
துயருறுகிறீர்கள். இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது அந்நம்பிக்கை
உங்களுக்குப் புகழும் மாண்பும் பெருமையும் தருவதாய் விளங்கும்.
நீங்கள் அவரைப் பார்த்ததில்லை. எனினும் அவர்மீது அன்பு
செலுத்துகிறீர்கள். இப்பொழுதும் நீங்கள் அவரைக் கண்டதில்லை.
எனினும் நம்பிக்கை கொண்டு சொல்லொண்ணா ஒப்பற்ற
மகிழ்ச்சியடைந்து பேருவகை கொள்கிறீர்கள். இவ்வாறு உங்கள்
நம்பிக்கையின் குறிக்கோளான ஆன்ம மீட்பையும் பெறுகிறீர்கள்.
__________________________

சிறு மறுமொழி

℣ - ஆண்டவர் கோதுமையால் நம்மை
உண்பித்தார். .
℟ - ஆண்டவர் கோதுமையால் நம்மை
உண்பித்தார்.

℣ - மலைத் தேனால் நமக்கு நிறைவளித்தார்.
℟ - கோதுமையால் நம்மை
உண்பித்தார்.

℣ - தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக
℟ - ஆண்டவர் கோதுமையால் நம்மை
உண்பித்தார்.
__________________________

(அனைவரும் எழுந்து நிற்கவும்)

மரியாவின் பாடல்

மு.மொழி.: ஆண்டவர் வலியோரை அரியணையினின்று தூக்கி
எறிந்துள்ளார், தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்.

ஆண்டவரை எனது உள்ளம் 
போற்றிப் பெருமைப் படுத்துகின்றது. 
என் மீட்பராம் கடவுளை நினைத்து 
எனது மனம் பேருவகை கொள்கின்றது.
ஏனெனில் அவர் தம் அடிமையின் 
தாழ்நிலையைக் கண்ணோக்கினார்.

இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் 
என்னைப் பேறுபெற்றவர் என்பர்.
ஏனெனில் வல்லவராம் கடவுள் 
எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். 
தூயவர் என்பதே அவரது பெயர்.

அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் 
தலைமுறை தலைமுறையாய் 
அவர் இரக்கம் காட்டி வருகிறார்.
அவர் தம் தோள் வலிமையைக் காட்டியுள்ளார்; 
உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் 
சிதறடித்து வருகிறார்.

வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்; 
தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்.
பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்; 
செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார்.

மூதாதையருக்கு உரைத்தபடியே அவர் 
ஆபிரகாமையும் அவர்தம் வழி மரபினரையும் 
என்றென்றும் இரக்கத்தோடு 
நினைவில் கொண்டுள்ளார்;
தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத் 
துணையாக இருந்து வருகிறார் ".

மு.மொழி.: ஆண்டவர் வலியோரை அரியணையினின்று தூக்கி
எறிந்துள்ளார், தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்.
__________________________

மன்றாட்டுக்கள்

நமது நம்பிக்கைக்கும் மீட்பிற்கும் ஊற்றாகிய இறைவனிடம்
மன்றாடுவோம்.

℟ - தந்தையே நீரே எங்கள் நம்பிக்கை

ஆண்டவரே, அறுவடைக்கு வேலையாட்களை அனுப்பியருளும்
- உலகம் உம்மை அறிந்து அன்பு செய்யவும் செய்தருளும்.

℟ - தந்தையே நீரே எங்கள் நம்பிக்கை

நீதியும் அமைதியும் வளர்ந்தோங்குகின்ற ஒரு சமூகத்தை
உருவாக்க எங்களுக்குத் துணைபுரியும் - எங்கள் உழைப்பு வீண்
போகாமல் எங்களோடு இருந்தருளும்.

℟ - தந்தையே நீரே எங்கள் நம்பிக்கை

(தனிப்பட்ட தேவைகளுக்காக மன்றாடல்)
__________________________

ஆண்டவரின் செபம்
__________________________

இறுதி செபம்

இறைவனாகிய ஆண்டவரே, நிலவின் ஒளியைக் கொண்டு
இருளை விரட்டுகின்றீர், பகலை ஒளிமயமாகச் செய்கின்றீர். இன்று
இரவில் நாங்கள் அலகையின் பிடியினின்று விடுதலை பெறவும்,
அதிகாலையில் உம்மைப் புகழ்ந்தேத்த எழவும் அருள்கூர்வீராக.
உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சிபுரியும் எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.
__________________________

ஆசி வழங்குதல்

குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக 
எல்: உம் ஆன்மாவோடும் இருப்பாராக 

குரு: எல்லாம் வல்ல இறைவன் தந்தை மகன் தூய ஆவியார் உங்களை ஆசீர்வதிப்பாராக. 
எல்: ஆமென் 

குரு: கிறிஸ்துவின் அமைதியில் சென்று வாருங்கள் 
எல்: இறைவா உமக்கு நன்றி 

(அல்லது)

முதல்: ஆண்டவர் நம்மை ஆசீர்வதித்து தீமைகள் அனைத்தினின்றும் பாதுகாத்து முடிவில்லா வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக 
எல்: ஆமென் 

முதல்: ஆண்டவரை வாழ்த்துவோமாக 
எல்: இறைவா உமக்கு நன்றி.