3 - ஞாயிறு மாலைப் புகழ் 1

2 - சனி மாலை செபம்

முதல்: இறைவா எமக்குத் துணைபுரிய வாரும்

எல்: ஆண்டவரே எனக்குத் துணைபுரிய விரைைந்து வாரும்

முதல்: தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக

எல்: தொடக்கத்தில் இருந்ததுபோல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக ஆமென்.

__________________________

பாடல்

(எழுந்து நிற்கவும்)

உலகப் பொருள்களின் ஊற்றாம் இறைவா,
ஒருமுனை முதல்மறு முனைவரை உள்ளவற்றை
நினைத்துச் செய்தஉம் ஆற்றல் விளங்க
புனிதக் கொடையால் நீர் நிரப்புகிறீர்.

இத்துணை மாபெரும் படைப்புச் செயலை
இத்தினம் முடித்து ஓய்வெடுத்தீர்;
நித்தமும் முறையாய்ப் படைத்தபின் முடிவில்
அத்தனை எல்லாம் நலம் என்றீர்.

வலுக்குறை வுள்ள மாந்தரும் இன்று
நெறிதவறிய வழியை விட்ட கன்று பல
நலமிகு நெறியில் நல்லவராய் நடந்து
உரியப் பரிசைப் பெறஅருள்வீர்.

நீதி வழங்கிட நீர்வரும் நாளில் உம்பனம்
ஒளியைக் கண்டு ஒடுங்காமல்
தீதிலா அமைதியை அடைந்தோம் என்று
முழங்கிடு வோம்மிகு மகிழ்வோடு.

நேயரெம் வேண்டல் ஏற்பீர், தந்தாய்,
உயர்நிலை வீற்றிருக்கும் உம்மகனும்
அச்சம் அகற்றும் ஆவியருடன்
இச்செகம் என்றும் ஆளுகவே. ஆமென்.

__________________________

(அமரவும்)

மு.மொழி.1: ஆண்டவரே, என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு, அல்லேலூயா.

திருச்சட்டத்தின் இறைவாக்கைத் தியானித்தல்
திபா 119:105 – 112 

என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு!
என் பாதைக்கு ஒளியும் அதுவே!
நீதியான உம் நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பதாக
நான் ஆணையிட்டு உறுதிமொழி தந்துள்ளேன்.

ஆண்டவரே! நான் மிக மிகத் துன்புறுத்தப்படுகின்றேன்;
உம் வாக்குறுதியின்படி
என்னை உயிரோடு வைத்தருளும்.
நான் மனமுவந்து வாயார
உம்மைப் புகழ்வதை ஆண்டவரே!
தயைகூர்ந்து ஏற்றுக்கொள்ளும்;
உம் நீதிநெறிகளை எனக்குக் கற்பியும்.

நான் என்னுயிரை எப்போதும்
என் கையில் வைத்துள்ளேன்;
ஆயினும் உம் திருச்சட்டத்தை நான் மறவேன்.
தீயோர் எனக்குக் கண்ணி வைத்தனர்;
ஆனால் உம் நியமங்களினின்று நான் பிறழவில்லை.
உம் ஒழுங்குமுறைகளே என்றும் என் உரிமைச் சொத்து;
அவை என் இதயத்தை மகிழ்விக்கின்றன.
உம் விதிமுறைகளைச் செயல்படுத்துவதில் என் உள்ளம்,
இடைவிடாது இறுதிவரை நாட்டம் கொண்டிருக்கும்.

மு.மொழி.: ஆண்டவரே, என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு, அல்லேலூயா.
__________________________

மு.மொழி. 2: ஆண்டவரே உம் திருமுன்னிலையில் நிறைவான மகிழ்ச்சியை நான் அறியச் செய்வீர் அல்லேலூயா.

ஆண்டவரே என் உரிமைச் சொத்து திபா 16

இறைவா, என்னைக் காத்தருள்வீர்;
உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்
நான் ஆண்டவரிடம்
‘நீரே என் தலைவர்
உம்மையன்றி வேறு செல்வம் எனக்கு இல்லை
என்று சொன்னேன்.

பூவுலகில் உள்ள தூயோர் எவ்வளவோ உயர்ந்தோர்!
அவர்களோடு இருப்பதே எனக்குப் பேரின்பம்.
வேற்றுத் தெய்வங்களைத் தொழுவோர்
தங்கள் துன்பங்களைப் பெருக்கிக்கொள்வர்;
அவற்றுக்குச் செலுத்தப்படும் இரத்தப் பலிகளில்
நான் கலந்துகொள்ளேன்;
அவற்றின் பெயரைக்கூட நாவினால் உச்சரியேன்.

ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து;
அவரே என் கிண்ணம்;
எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே;
இனிமையான நிலங்கள் எனக்குப் பாகமாகக் கிடைத்தன;
உண்மையாகவே என் உரிமைச் சொத்து வளமானதே.

எனக்கு அறிவுரை வழங்கும் ஆண்டவரைப் போற்றுகிறேன்;
இரவில்கூட என் மனச்சான்று என்னை எச்சரிக்கின்றது.
ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்;
அவர் என் வலப்பக்கம் உள்ளார்;
எனவே, நான் அசைவுறேன்.

என் இதயம் மகிழ்கிறது; என் உள்ளம் அக்களிக்கிறது;
என் உடலும் பாதுகாப்பில் இளைப்பாறும்.
ஏனெனில் என்னைப் பாதாளத்தில் விட்டுவிடமாட்டீர்;
உம் அன்பன் நான் படுகுழியைக் காணவிடமாட்டீர்.
வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்;
உமது திருமுன் எனக்கு நிறை மகிழ்ச்சி உண்டு;
உமது வலப்பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு.

மு.மொழி.: ஆண்டவரே உம் திருமுன்னிலையில் நிறைவான மகிழ்ச்சியை நான் அறியச் செய்வீர் அல்லேலூயா.
___________________________

மு.மொழி. 3: இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர் கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர், அல்லேலூயா.

கிறிஸ்து இறை ஊழியன் சிறுபாடல்                          பிலி 2:6-11 

கடவுள் வடிவில் விளங்கிய அவர்,
கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வைப்பா
வலிந்து பற்றிக்கொண்டிருக்க
வேண்டியதொன்றாகக் கருதவில்லை.

ஆனால் தம்மையே வெறுமையாக்கி
அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார்.

மனித உருவில் தோன்றி, சாவை ஏற்கும் அளவுக்கு,
அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக்
கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார்.

எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி,
எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார்.

ஆகவே இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர்,
கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்;

தந்தையாம் கடவுளின் மாட்சிக்காக
இயேசு கிறிஸ்து ஆண்டவர் என
எல்லா நாவுமே அறிக்கையிடும்.

மு.மொழி.: இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர் கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர், அல்லேலூயா.
___________________________

(எழுந்து நின்று வாசிக்கவும்)

அருள்வாக்கு    கொலோ1:2ஆ-6அ

நம் தந்தையாம் கடவுளிடமிருந்து உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக! உங்களுக்காக நாங்கள்  வேண்டும் பொழுதெல்லாம், நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் தந்தையாம் கடவுளுக்கு நன்றி  செலுத்துகிறோம். கிறிஸ்து இயேசுவின்மீது நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கை பற்றியும், இறைமக்கள் அனைவரிடமும் செலுத்தும் அன்பு பற்றியும் நாங்கள்  கேள்வியுற்றோம். இவை இவை இரண்டும் விண்ணகத்தில் உங்களுக்கென வைக்கப்பட்டிருக்கும் நன்மைகளை எதிர்நோக்குவதால் விளைந்தவை. நீங்கள் முன்பு கேட்ட உண்மையின் நற்செய்தி வழியாக,  அந்த எதிர்நோக்குப்பற்றி அறிந்து கொண்டீர்கள். உலகம் முழுவதும் பரவிப் பயனளித்து வரும் அந்நற்செய்தி உங்களை வந்தடைந்தது. 
__________________________

சிறு மறுமொழி

℣ - கீழ்த்திசை முதல் மேற்றிசைவரை ஆண்டவரது பெயர் பெரியது.
℟ - கீழ்த்திசை முதல் மேற்றிசைவரை ஆண்டவரது பெயர் பெரியது.

℣ - வானங்களையும் விட உயர்ந்தது அவரது மாட்சி.
℟ - கீழ்த்திசை முதல் மேற்றிசைவரை ஆண்டவரது பெயர் பெரியது.

℣ - தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக
℟ - கீழ்த்திசை முதல் மேற்றிசைவரை ஆண்டவரது பெயர் பெரியது.
__________________________

(அனைவரும் எழுந்து நிற்கவும்)

மரியாவின் பாடல்

மு.மொழி.: என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது.

ஆண்டவரை எனது உள்ளம் 
போற்றிப் பெருமைப் படுத்துகின்றது. 
என் மீட்பராம் கடவுளை நினைத்து 
எனது மனம் பேருவகை கொள்கின்றது.
ஏனெனில் அவர் தம் அடிமையின் 
தாழ்நிலையைக் கண்ணோக்கினார்.

இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் 
என்னைப் பேறுபெற்றவர் என்பர்.
ஏனெனில் வல்லவராம் கடவுள் 
எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். 
தூயவர் என்பதே அவரது பெயர்.

அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் 
தலைமுறை தலைமுறையாய் 
அவர் இரக்கம் காட்டி வருகிறார்.
அவர் தம் தோள் வலிமையைக் காட்டியுள்ளார்; 
உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் 
சிதறடித்து வருகிறார்.
வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்; 
தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்.
பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்; 
செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார்.

மூதாதையருக்கு உரைத்தபடியே அவர் 
ஆபிரகாமையும் அவர்தம் வழி மரபினரையும் 
என்றென்றும் இரக்கத்தோடு 
நினைவில் கொண்டுள்ளார்;
தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத் 
துணையாக இருந்து வருகிறார் ".

மு.மொழி.: என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது.
__________________________

மன்றாட்டுக்கள்

நம் தந்தையாகிய கடவுள் நாம் அவருடைய இளைப்பாற்றியில் பங்குகொள்ளும் மகிழ்ச்சிமிகு நாளை நோக்கி, நம்மைப் பரிவன்புடன் வழிநடத்திச் செல்கிறார்.

℟ - ஆண்டவராகிய கடவுளே, எங்கள் நம்பிக்கை எல்லாம் உம்மிடமே உள்ளது.

தந்தையே, நாங்கள் திருத்தந்தைக்காகவும், ஆயருக்காகவும் வேண்டுகிறோம் அவர்களை வழிநடத்தி அவர்களது பணியை ஆசீர்வதித்தருளும்.

℟ - ஆண்டவராகிய கடவுளே, எங்கள் நம்பிக்கை எல்லாம் உம்மிடமே உள்ளது.

நோயாளிகளுக்குக் கிறிஸ்துவின் பாடுகளில் பங்கு கொள்ளத் துணைபுரியும் வாழ்வு, அன்பு இவற்றின் முழுமையை அவரில் அவர்கள் கண்டுகொள்வார்களாக,

℟ - ஆண்டவராகிய கடவுளே, எங்கள் நம்பிக்கை எல்லாம் உம்மிடமே உள்ளது.

ஆண்டவரே, நீர் தலைசாய்க்க இடமின்றித் தவித்தீர்- இன்று இருக்க இடமின்றித் தவிக்கும் மக்களின் தேவைகளை நாங்கள் உணரச் செய்தருளும்.

℟ - ஆண்டவராகிய கடவுளே, எங்கள் நம்பிக்கை எல்லாம் உம்மிடமே உள்ளது.

வயல்வெளிகளில் உழைப்போரை ஆசீர்வதியும் நாங்கள் நிலத்தின் பலன்களை நன்றியுணர்வுடன் பெற்றுக் கொள்வோமாக.

℟ - ஆண்டவராகிய கடவுளே, எங்கள் நம்பிக்கை எல்லாம் உம்மிடமே உள்ளது.

தந்தையே, கிறிஸ்துவின் அமைதியில் இறந்தவர்கள் மீது இரக்கமாயிரும் அவர்களுக்காக நீர் ஏற்பாடு செய்துள்ள இல்லத்தில் அவர்களை வரவேற்றருளும்.

℟ - ஆண்டவராகிய கடவுளே, எங்கள் நம்பிக்கை எல்லாம் உம்மிடமே உள்ளது.

(தனிப்பட்ட தேவைகளுக்காக மன்றாடல்)
__________________________

ஆண்டவரின் செபம்
__________________________

இறுதி செபம்

அந்தந்தக் காலத்திலிருந்து.

 தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சிபுரியும் எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.
__________________________

ஆசி வழங்குதல்

குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக 
எல்: உம் ஆன்மாவோடும் இருப்பாராக 

குரு: எல்லாம் வல்ல இறைவன் தந்தை மகன் தூய ஆவியார் உங்களை ஆசீர்வதிப்பாராக. 
எல்: ஆமென் 

குரு: கிறிஸ்துவின் அமைதியில் சென்று வாருங்கள் 
எல்: இறைவா உமக்கு நன்றி 

(அல்லது)

முதல்: ஆண்டவர் நம்மை ஆசீர்வதித்து தீமைகள் அனைத்தினின்றும் பாதுகாத்து முடிவில்லா வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக 
எல்: ஆமென் 

முதல்: ஆண்டவரை வாழ்த்துவோமாக 
எல்: இறைவா உமக்கு நன்றி.