1 - திங்கள் காலைப் புகழ்

வாரம் 1: திங்கள்

காலைப் புகழ்

பாடல் 

(எழுந்து நிற்கவும்)

ஒளிநின்(று) ஒளியாய் உதித்து மிளிரும்
ஒளிமிகும் தந்தையின் மாட்சிமையே,
ஒளியின் ஒளியே ஒளியின் ஊற்றே,
உளத்துள் ஒளியைப் பொழிவாயே.

உண்மை ஞாயிறு நீரன்றோ
எண்ணிலா விண்மீன்களைப் படைத்தவரே
உண்மையின் தூய ஆவியாரைத்
திண்ணமாய் எமக்குப் பொழிந்திடுக.

முடிவில்லா மாட்சி உள்ளவராம் 
திடமிகு அருளின் தந்தையையாம் 
அடிபணிந் தின்று வேண்டிடுவோமே, 
அடியார்ப் பாவநிலை அகற்றிடவே.

கொடியவன் சூழ்ச்சியை எதிர்த்திடவும் 
கொடுமை தீமை நலமாய் மாற்றிடவும் 
கடினமாய் உழைக்க எமைத் தூண்டிடவும் 
கேடிலா நேர்வழி நடந்திடவும்,

உளத்தை அவரே ஆண்டு நடத்திடவும் 
உடலைத் தூயதாய் காத்திடவும், 
ஒளிரும் நம்பிக்கையில் நிலைத்து 
உலகில் துலங்கிடவும் வேண்டிடுவோம்.

கிறிஸ்துவே நமது ஆன்ம உணவாகட்டும் 
நம்பிக்கை நமது ஆன்ம பானமாகட்டும்; 
மாண்புயர் ஆவியின் பொழிவில் மூழ்கி 
மகிழ்வுடன் நிறைவு கொண்டிடுவோம்.

மகிழ்ச்சியில் எமக்கு இந்நாள் கழிக, 
வைகறை ஒளிபோல் இன்று மிளிர்க, 
பகலவன் போன்று நம்பிக்கை ஒளிர்க, 
அகமும் உள்ளிருளை அகற்றிடுக.

பொழுது புலர்ந்தது; ஒளியாம் கிறிஸ்து 
முழுமையாய் நம்மிடம் எழுகின்றார்
முழுதும் மகன் தந்தையுள் இருக்க, 
முழுதும் தந்தை மகனுள் இருக்கிறார். ஆமென்.

(அமரவும்)
------------------------------
மு.மொழி. 1: ஆண்டவரே நான் உம்மை நோக்கியே மன்றாடுகிறேன். விடியற்காலையில் என் குரலைக் கேட்டருளும்.

இறைவனின் துணை வேண்டி மன்றாட்டு - திபா 5: 1-9, 11-12

இறைவனின் வார்த்தையை ஏற்று அதை உள்ளத்தில் இருத்தி தியானிப்பவர் என்றென்றும் மகிழ்வர்.

ஆண்டவரே, என் விண்ணப்பத்திற்குச் செவி சாய்த்தருளும்; 
என் பெருமூச்சைக் கவனித்தருளும்.
என் அரசரே, என் கடவுளே, 
என் கெஞ்சும் குரலைக் கேட்டருளும்

நான் உம்மை நோக்கியே மன்றாடுகின்றேன்.
ஆண்டவரே, விடியற்காலையில் என் குரலைக் கேட்டருளும்; 
வைகறையில் உமக்காக வழிமேல் விழிவைத்துக் காத்திருப்பேன்.

தீமையைக் கண்டு மகிழும் இறைவன் நீர் இல்லை; 
தீயோர்க்கு உம் திருமுன் இடமில்லை.
ஆணவமிக்கோர் உமது கண்முன் நிற்க மாட்டார்; 

தீங்கிழைக்கும் அனைவரையும் நீர் வெறுக்கின்றீர்.
பொய் பேசுவோரை நீர் அழித்திடுவீர்; 
கொலை வெறியரையும் வஞ்சகரையும் ஆண்டவர் அருவருக்கின்றார்.

நானோ உமது மிகுதியான பேரன்பால் 
உமது இல்லம் சென்றிடுவேன்; 
உம் திருத்தூயகத்தை நோக்கி இறையச்சத்துடன் 
ஆண்டவரே உம்மைப் பணிந்திடுவேன்;

ஆண்டவரே, எனக்குப் பகைவர் பலர் இருப்பதால், 
உமது நீதியின் பாதையில் என்னை நடத்தியருளும்.
உமது செம்மையான வழியை எனக்குக் காட்டியருளும்.

ஏனெனில், அவர்கள் வாயில் உண்மை என்பதே இல்லை; 
அவர்கள் உள்ளம் அழிவை உண்டாக்கும்; 
அவர்கள் தொண்டை திறந்த கல்லறையாம்; 
அவர்கள் நாவோ வஞ்சகம் பேசுவனவாம்.

உம்மிடம் அடைக்கலம் புகுவோர் அனைவரும் மகிழ்வர்; 
எந்நாளும் அவர்கள் களித்து ஆர்ப்பரிப்பர்; 
அவர்களைப் நீர் பாதுகாப்பீர்; 
உமது பெயரில் பற்றுடையோர் உம்மில் அக்களிப்பர்.

ஏனெனில், ஆண்டவரே, நேர்மையாளர்க்கு நீர் ஆசிவழங்குவீர்; 
கருணை என்னும் கேடயத்தால் அவரைச் சூழ்ந்து காப்பீர்.

மு.மொழி. 1: ஆண்டவரே நான் உம்மை நோக்கியே மன்றாடுகிறேன். விடியற்காலையில் என் குரலைக் கேட்டருளும்.
____________________________

மு.மொழி.2: எங்கள் கடவுளாகிய ஆண்டவரே உமது பெயரின் பேரொளியை நாங்கள் புகழ்கின்றோம்.

கடவுளுக்கு மட்டுமே மகிமையும் மாட்சிமையும் உரியது சிறுபாடல் - 1 குறி 29: 10-13

நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தந்தையும் கடவுளுமானவர் போற்றி (எபே 1:3)

எங்கள் மூதாதை இஸ்ரயேலின் ஆண்டவரே, 
நீர் என்றென்றும் வாழ்த்தப் பெறுவீராக!

ஆண்டவரே, பெருமையும் வலிமையும் மாட்சியும் 
வெற்றியும் மேன்மையும் உமக்கே உரியன. 
ஏனெனில் விண்ணுலகிலும் மண்ணுலகிலும் 
இருக்கும் அனைத்தும் உம்முடையவை. 

ஆண்டவரே, ஆட்சியும் உம்முடையதே. 
நீர் யாவருக்கும் தலைவராய் உயர்த்தப் பெற்றுள்ளீர்.

செல்வமும் மாட்சியும் உம்மிடமிருந்தே வருகின்றன. 
நீரே அனைத்தையும் ஆள்பவர். 
ஆற்றலும் வலிமையும் உம் கையில் உள்ளன. 
எவரையும் பெருமைப்படுத்துவதும் 
வலியவராக்குவதும் உம் கையில் உள்ளன.

இப்பொழுது எங்கள் கடவுளே, 
நாங்கள் உமக்கு நன்றி செலுத்தி 
உம் மாட்சிமிகு பெயரைப் போற்றுகிறோம்.

மு.மொழி.2: எங்கள் கடவுளாகிய ஆண்டவரே உமது பெயரின் பேரொளியை நாங்கள் புகழ்கின்றோம்.
____________________________

மு.மொழி.3: தூய மாட்சி இலங்கும் ஆண்டவரை வழிபடுங்கள்.

இறைவார்த்தையின் புகழ்ச்சிக்கீதம் - திபா 29:1-11

என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்' என்று வானத்திலிருந்து ஒரு குரல் கேட்டது. (மத் 3:17)

இறைமைந்தரே! மாட்சியையும் வலிமையையும் 
ஆண்டவருக்கு உரித்தாக்குங்கள். 
ஆம்! ஆண்டவருக்கே உரித்தாக்குங்கள்!
ஆண்டவரின் பெயருக்குரிய மாட்சி 
அவருக்கு உரித்தாகட்டும்; 
தூய புகழொளி இலங்கும் ஆண்டவரை வழிபடுங்கள்.

ஆண்டவரின் குரல் ஆழி நீரின்மேல் ஒலிக்கின்றது; 
மாட்சிமிகு இறைவன் முழங்குகின்றார்; 
ஆண்டவர் நீர்த்திரள்களின்மேல் வீற்றிருக்கின்றார்.
ஆண்டவரின் குரல் வலிமைமிக்கது; 
ஆண்டவரின் குரல் சீர்மைவாய்ந்தது.

ஆண்டவரின் குரல் கேதுரு மரங்களை முறிக்கின்றது; 
ஆண்டவர் லெபனோனின் கேதுரு மரங்களை 
முறித்தெறிகின்றார்.
லெபனோனின் மலையைக் கன்றுக் குட்டியெனத் 
துள்ளச் செய்கின்றார்; 
சிரியோன் மலையைக் காட்டெருமைக் கன்றெனக் 
குதிக்கச் செய்கின்றார்.

ஆண்டவரின் குரல் மின்னலைத் தெறிக்கச் செய்கின்றது;
ஆண்டவரின் குரல் பாலைவனத்தை அதிரச் செய்கின்றது; 
ஆண்டவர் காதேசு பாலைநிலத்தை நடுங்கச் செய்கின்றார்.
ஆண்டவரின் குரல் கருவாலி மரங்களை முறித்து விடுகின்றது; 
காடுகளை வெறுமை ஆக்குகின்றது; 

அவரது கோயிலில் உள்ள அனைவரும் 
"இறைவனுக்கு மாட்சி" என்று ஆர்ப்பரிக்கின்றனர்.
ஆண்டவர் வெள்ளப் பெருக்கின்மீது வீற்றிருக்கின்றார்; 
ஆண்டவர் என்றென்றும் அரசராக வீற்றிருக்கின்றார்.

ஆண்டவர் தம் மக்களுக்கு ஆற்றல் அளிப்பாராக! 
ஆண்டவர் தம் மக்களுக்கு அமைதி அருள்வாராக! 
ஆண்டவர் தம் மக்களுக்கு ஆசி வழங்குவாராக!

மு.மொழி.: தூய மாட்சி இலங்கும் ஆண்டவரை வழிபடுங்கள்.
____________________________

(எழுந்து நின்று வாசிக்கவும்)

அருள்வாக்கு                    2 தெச 3: 10-13

"உழைக்க மனமில்லாத எவரும் உண்ணலாகாது" என்று நாங்கள் உங்களிடையே இருந்தபோதே உங்களுக்குக் கட்டளை கொடுத்திருந்தோம். உங்களுள் சிலர் எந்த வேலையும் செய்யாமல் சோம்பேறிகளாகச் சுற்றித்திரிந்து, பிறர் வேலையில் தலையிடுவதாகக் கேள்விப்படுகிறோம். இத்தகையோர் ஒழுங்காகத் தங்கள் வேலையைச் செய்து, தாங்கள் உண்ணும் உணவுக்காக உழைக்க வேண்டும் என ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் கட்டளையிட்டு அறிவுறுத்துகிறோம். சகோதர சகோதரிகளே! நன்மை செய்வதில் நீங்கள் மனந்தளர வேண்டாம்.
____________________________
சிறு மறுமொழி


ஆண்டவர் என்றென்றும் வாழ்த்தப்படுவாராக.
- ஆண்டவர் என்றென்றும் வாழ்த்தப்படுவாராக.

- வியப்புக்குரிய செயல்களைச் செய்தவர் அவரே.
- என்றென்றும் வாழ்த்தப்படுவாராக.

- தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் ஆட்சி உண்டாவதாக.
- ஆண்டவர் என்றென்றும் வாழ்த்தப்படுவாராக.
____________________________

(அனைவரும் எழுந்து நிற்கவும்))

செக்கரியாவின் பாடல்

மு.மொழி.: எங்கள் கடவுளாகிய ஆண்டவர் வாழ்த்தப்படுவாராக.

இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றுவோம்.
ஏனெனில் அவர் தம் மக்களைத் தேடிவந்து விடுவித்தருளினார்.

தம் தூய இறைவாக்கினர் வாயினால்
தொடக்க முதல் அவர் மொழிந்தபடியே
அவர் தம் ஊழியராகிய தாவீதின் குடும்பத்தில்
வல்லமை உடைய மீட்பர் ஒருவர் நமக்காகத் தோன்றச் செய்தார்;

நம் பகைவரிடமிருந்தும்
நம்மை வெறுப்போர் அனைவரின் பிடியிலிருந்தும்
நம்மை மீட்பார்.

அவர் நம் மூதாதையருக்கு இரக்கம் காட்டி,
தமது தூய உடன்படிக்கையையும்,
நம் தந்தையாகிய ஆபிரகாமுக்கு அவர் இட்ட ஆணையையும்
நிறைவேற்ற நினைவு கூர்ந்தார்.
இவ்வாறு நாம் பகைவரின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டுத்
தூய்மையோடும் நேர்மையோடும்
வாழ்நாளெல்லாம் அச்சமின்றி
அவர் திருமுன் பணிசெய்யுமாறு வழிவகுத்தார்.

குழந்தாய்,
நீ உன்னத கடவுளின் இறைவாக்கினர் எனப்படுவாய்;
ஏனெனில் பாவ மன்னிப்பால் வரும் மீட்பை
அவர்தம் மக்களுக்கு அறிவித்து
ஆண்டவருக்கான வழியைச் செம்மைப்படுத்த
அவர் முன்னே செல்வாய்.

இருளிலும் இறப்பின் பிடியிலும் இருப்போர்க்கு ஒளிதரவும்,
நம்முடைய கால்களை அமைதி வழியில் நடக்கச் செய்யவும்
நம் கடவுளின் பரிவுள்ளத்தாலும் இரக்கத்தாலும்
விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடிவருகிறது.

மு.மொழி.: எங்கள் கடவுளாகிய ஆண்டவர் வாழ்த்தப்படுவாராக.
_______________________

மன்றாட்டுக்கள்:

கடவுளின்  அருளும் ஆவியும் நிறைந்த கிறிஸ்துவை இந்நாளின் தொடக்கத்திலேயே புகழ்வோமாக.

℟ - ஆண்டவரே உமது ஆவியாரை எங்களுக்குத் தந்தருளும். 

ஆண்டவரே, நாங்கள் உம்மைப் புகழ்கிறோம். உமது அனைத்து ஆசிகளுக்காகவும் உமக்கு நன்றி செலுத்துகிறோம்.

℟ - ஆண்டவரே உமது ஆவியாரை எங்களுக்குத் தந்தருளும். 

எங்களுக்கு மன அமைதியையும் தாராள உள்ளத்தையும் தந்தருளும் - உமது திருவுளத்தை நாங்கள் நிறைவேற்ற எங்களுக்கு உடல்நலனையும் ஆற்றலையும் அளித்தருளும்.

℟ - ஆண்டவரே உமது ஆவியாரை எங்களுக்குத் தந்தருளும். 

இந்நாள் முழுவதும் உமது அன்பு எம்மோடு இருப்பதாக - எங்கள் பணிகளில் நீர் எங்களை வழிநடத்தியருளும்.

℟ - ஆண்டவரே உமது ஆவியாரை எங்களுக்குத் தந்தருளும். 

எங்கள் வேண்டல்களைக் கேட்டவர் அனைவரோடும் இருந்தருளும் - அவர்களுடைய தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்யும்.

℟ - ஆண்டவரே உமது ஆவியாரை எங்களுக்குத் தந்தருளும். 

(தனிப்பட்ட தேவைகளுக்காக மன்றாடல்)

ஆண்டவரின் இறைவேண்டல் - அழைப்பு
1. நம் மீட்பர் நமக்குக் கற்பித்தவாறு, நாம் விண்ணகத் தந்தையை நோக்கி மன்றாடுவோம்.

2 இவ்வுலகில் இறையாட்சி வரவேண்டுமென்று மன்றாடுவோம்.

3. நமது புகழ்ச்சிகளையும் மன்றாட்டுகளையும் கிறிஸ்துவின் வார்த்தைகளில் சுருக்கமாய்ச் சொல்வோம்.

4. நமது புகழ்ச்சியையும் மன்றாட்டுகளையும் ஆண்டவருடைய இறைவேண்டலால் உறுதிப்படுத்துவோம்.

5. இப்போது கிறிஸ்துவே கற்றுக் வார்த்தைகளால் தந்தையைப் புகழ்ந்து மன்றாடுவோம். 

6. (கிறிஸ்துவை நோக்கி) ஆண்டவரே, நாங்கள் உம் போதனையின்படி இறைவேண்டல் செய்யும் இவ்வேளையில், எங்களை உம் ஆட்சியில் நினைவு கூர்ந்தருளும். கொடுத்த

7. நம் ஆண்டவருடைய போதனையின்படி, நாம் நம்பிக்கையோடு சொல்வோம்.

8. நம் ஆண்டவரின் படிப்பினையைப் பின்பற்றி, நாம் மன்றாடுவோம்.

9. இறைவேண்டல்களுக்கெல்லாம் எடுத்துக்காட்டாக ஆண்டவர் நமக்குக் கொடுத்த வேண்டலை நாம் ஒருமித்து இப்போது சொல்வோம்.
__________________________

இறுதி செபம்
ஆண்டவரே, எங்கள் சொல் செயல் அனைத்திற்கும் நீரே தொடக்கமும் முடிவுமாக இருப்பீராக. உமது அருளால் எமது செயல்களைத் தூண்டி உமது ஆற்றல் மிக்கத் துணையால் அவற்றை முழுமை பெறச் செய்வீராக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சிபுரியும் எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.
______________________

ஆசி வழங்குதல்

அப: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக 
எல்: உம் ஆன்மாவோடும் இருப்பாராக 

அப: எல்லாம் வல்ல இறைவன் தந்தை மகன் தூய ஆவியார் உங்களை ஆசீர்வதிப்பாராக. 
எல்: ஆமென் 

அப: கிறிஸ்துவின் அமைதியில் சென்று வாருங்கள் 
எல்: இறைவா உமக்கு நன்றி 

(அல்லது)

முதல்: ஆண்டவர் நம்மை ஆசீர்வதித்து தீமைகள் அனைத்தினின்றும் பாதுகாத்து முடிவில்லா வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக 
எல்: ஆமென் 

முதல்: ஆண்டவரை வாழ்த்துவோமாக 
எல்: இறைவா உமக்கு நன்றி.