2 - சனி காலைப் புகழ்

 பாடல்


(எழுந்து நிற்கவும்)

மீண்டும் மற்றொரு நாளிதோ விடிந்தது,
ஆண்டவர் புகழை ஆவலாய்ப் பாடி
நிறைந்த உளத்துடன் உயர்ந்த குரலில்
கிறிஸ்துவைப் போற்றி நன்றி கூறிடுவோம்.

அவர்வழி யாகவே அனைத்தும் உண்டாயின
அவரே இரவையும் பகலையும் அமைத்தார்
அவரே உண்மை ஒளிநமக் கின்று
அவரே நித்திய ஒளிநமக் காவார்.

இச்செபம் இரங்கி ஏற்பீர் தந்தாய்
உச்ச நிலையமர் உம்திரு மகனும்
அச்சம் அகற்றும் தூய ஆவியும்
இச்செகம் உம்முடன் ஆளுக என்றும். ஆமென்.

__________________________

(அமரவும்)

மு.மொழி.1: ஆண்டவரே காலையில் உமது பேரன்பையும் இரவில்  உமது வாக்குப் பிறழாமையையும் எடுத்துரைக்கின்றோம். 

புகழ்ச்சிப்பாடல்                       திபா 92

ஆண்டவருக்கு நன்றியுரைப்பது நன்று
உன்னதரே உமது பெயரைப் புகழ்ந்து பாடுவது நன்று
காலையில் உமது பேரன்பையும்
இரவில் உமது வாக்குப் பிறழாமையையும்
பத்து நரம்பு வீணையோடும் தம்புரு
சுரமண்டல இசையோடும் எடுத்துரைப்பது நன்று.

ஏனெனில் ஆண்டவரே
உம் வியத்தகு செயல்களால் என்னை மகிழ்வித்தீர்
உம் வலிமைமிகு செயல்களைக் குறித்து
 நான் மகிழ்ந்து பாடுவேன்.

ஆண்டவரே உம் செயல்கள் எத்துணை மேன்மையானவை
உம் எண்ணங்கள் எத்துணை ஆழமானவை
அறிவிலிகள் அறியாததும் மூடர் உணராததும் இதுவே.

பொல்லார் புல்லைப்போன்று செழித்து வளரலாம்
தீமை செய்வோர் அனைவரும் பூத்துக் குலுங்கலாம்
ஆனால் அவர்கள் என்றும் அழிவுக்கு உரியவரே
நீரோ ஆண்டவரே என்றுமே உயர்ந்தவர்.

ஏனெனில் ஆண்டவரே உம் எதிரிகள்
ஆம், உம் எதிரிகள் அழிவது திண்ணம்
தீமை செய்வோர் அனைவரும் சிதறுண்டு போவர்
காட்டெருமைக்கு நிகரான வலிமையை எனக்கு அளித்தீர்
புது எண்ணெயை என்மேல் பொழிந்தீர்.

என் எதிரிகளின் வீழ்ச்சியை நான் கண்ணாரக் கண்டேன்
எனக்கு எதிரான பொல்லார்க்கு நேரிட்டதை
நான் காதாரக் கேட்டேன்
நேர்மையாளர் பேரீச்ச மரமெனச் செழித்தோங்குவர்
லெபனோனின் கேதுரு மரமெனத் தழைத்து வளர்வர்.

ஆண்டவரின் இல்லத்தில் நடப்பட்டோர்
நம் கடவுளின் கோவில் முற்றங்களில் செழித்தோங்குவர்
அவர்கள் முதிர் வயதிலும் கனி தருவர்
என்றும் செழுமையும் பசுமையுமாய் இருப்பர்
ஆண்டவர் நேர்மையுள்ளவர், அவரே என் பாறை
அவரிடம் அநீதி ஏதுமில்லை என்று அறிவிப்பர்.

மு.மொழி.1: ஆண்டவரே காலையில் உமது பேரன்பையும் இரவில் உமது வாக்குப் பிறழாமையையும் எடுத்துரைக்கின்றோம்.

__________________________

மு.மொழி. 2: ஆண்டவரின் மாட்சியை எடுத்துரையுங்கள்

கடவுளின் அருஞ்செயல்கள்
இச 32 1-12 

வானங்களே நான் பேசுவேன் செவிகொடுப்பீர்
பூவுலகே என் சொல்லை உற்றுக் கேள்
பெருமழை பைந்தளிர்மீது பொழிவதுபோல்
மென்சாரல் பசும்புல்மீது விழுவது போல்
என் அறிவுரை மழையெனப் பெய்திடுக
என் சொற்கள் பனியென இறங்கிடுக.

நான் ஆண்டவரின் பெயரைப் பறைசாற்றுவேன்
நம் கடவுளின் மாட்சியைப் பாராட்டுவேன்
 அவரே பாறை அவர் செயல் நிறைவானது
அவர்தம் வழிகள் அனைத்தும் நீதியானவை
வஞ்சகம் அற்ற உண்மை மிகு இறைவன்
அவரே நீதியும் நேர்மையும் உள்ளவர்.

அவர்தம் கேடுகெட்ட பிள்ளைகள்
அவரிடம் பொய்ம்மையாய் நடந்து கொண்டனர்
அவர்கள் நெறி பிறழ்ந்த வஞ்சகம் மிக்க தலைமுறையினர்
ஞானமற்ற மதிகெட்ட மக்களே
ஆண்டவருக்கு நீங்கள் அளிக்கும் கைம்மாறு இதுதானா
உங்களைப் படைத்து உருவாக்கி நிலைநிறுத்திய
உங்கள் தந்தை அவரல்லவா.

பண்டைய நாள்களை நினைத்துப்பார்
பல தலைமுறையின் ஆண்டுகளைக் கவனித்துப் பார்
உன் தந்தையிடம் கேள் அவர் உனக்கு அறிவிப்பார்
பெரியோரிடம் கேள் அவர்கள் உனக்குச் சொல்வர்.

உன்னதமானவர் வெவ்வேறு இனங்களுக்கு
உரிமைச் சொத்துக்களைப் பங்கிட்ட போது
ஆதாமின் பிள்ளைகளை அவர் பிரித்தபோது
இஸ்ரயேல் மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப
மக்கள் இனங்களின் எல்லைகளையும் திட்டமிட்டார்
ஆண்டவரின் பங்கு அவர்தம் மக்களே
அவரது உரிமைச் சொத்து யாக்கோபே.

பாழ்வெளியில் அவர் அவனைக் கண்டார்
வெறுமையான ஓலமிடும் பாலையில் அவனைக் கண்டார்
அவர் அவனைப் பாதுகாத்துப் பேணினார்
கண்ணின் மணியென அவனைக் காத்தருளினார்.

கழுகு தன் கூட்டின்மேல் அசைந்தாடித்
தன் குஞ்சுகளின்மேல் படர்ந்து அணைப்பது போலும்
தன் சிறகுகளை விரித்து அவற்றைச் சுமந்து செல்வது போலும்
அவற்றைத் தன் சிறகுகளில் சுமப்பது போல்
ஆண்டவர் ஒருவரே அவனை வழிநடத்தினார்
வேற்றுத் தெய்வங்கள் அவனோடு இருந்ததில்லை.

மு.மொழி.: ஆண்டவரின் மாட்சியை எடுத்துரையுங்கள்
___________________________

மு.மொழி. 3: ஆண்டவரே! எங்கள் தலைவரே! உமது பெயர்
உலகெங்கும் எவ்வளவு மேன்மையாய் விளங்குகின்றது!

இறைவனின் மாட்சியும் மானிடரின் மேன்மையும்      திபா 8 

ஆண்டவரே எங்கள் தலைவரே உமது பெயர்
உலகெங்கும் எவ்வளவு மேன்மையாய் விளங்குகின்றது
உமது மாட்சி வானங்களுக்கு மேலாகவும் உயர்ந்துள்ளது
பாலகரின் மழலையிலும் குழந்தைகளின் மொழியிலும்
வலிமையை உறுதிப்படுத்தி உம் பகைவரை ஒடுக்கினீர்
எதிரியையும் பழி வாங்குவோரையும் அடக்கினீர்.

உமது கைவேலைப்பாடாகிய வானத்தையும்
அதில் நீர் பொருத்தியுள்ள நிலாவையும்
விண்மீன்களையும் நான் நோக்கும் போது
மனிதரை நீர் நினைவில் கொள்வதற்கு அவர்கள் யார்
மனிதப் பிறவிகளை நீர் ஒரு பொருட்டாக
எண்ணுவதற்கு அவர்கள் எம்மாத்திரம்.

ஆயினும் அவர்களைக் கடவுளாகிய உமக்குச்
சற்றே சிறியவர் ஆக்கியுள்ளீர்
மாட்சியையும் மேன்மையையும்
அவர்களுக்கு முடியாகச் சூட்டியுள்ளீர்
உமது கை படைத்தவற்றை
அவர்கள் ஆளும்படி செய்துள்ளீர்
எல்லாவற்றையும் அவர்கள்
பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தியுள்ளீர்.

ஆடுமாடுகள் எல்லா வகையான காட்டு விலங்குகள்
வானத்துப் பறவைகள் கடல் மீன்கள்
ஆழ்கடலில் நீந்திச்செல்லும் உயிரினங்கள்
அனைத்தையும் அவர்களுக்குக் கீழ்ப்படித்தியுள்ளீர்
ஆண்டவரே எங்கள் தலைவரே உமது பெயர்
உலகெங்கும் எவ்வளவு மேன்மையாய் விளங்குகின்றது!

மு.மொழி.: ஆண்டவரே! எங்கள் தலைவரே! உமது பெயர்
உலகெங்கும் எவ்வளவு மேன்மையாய் விளங்குகின்றது!
___________________________

(எழுந்து நின்று வாசிக்கவும்)

அருள்வாக்கு          உரோ 12:14-16a

உங்களைத் துன்புறுத்துவோருக்கு ஆசி கூறுங்கள்; ஆம் ஆசி கூறுங்கள்; சபிக்கவேண்டாம். மகிழ்வாரோடு மகிழுங்கள்; அழுவாரோடு அழுங்கள். நீங்கள் ஒரு மனத்தவராய் இருங்கள். உயர்வு மனப்பான்மை கொள்ளாமல் தாழ்நிலையில் உள்ளவர்களோடு நன்கு பழகுங்கள்.
_________________________

சிறு மறுமொழி

℣ - உம்மைப் புகழும்போது என் உதடுகள் மகிழும்.
℟ - உம்மைப் புகழும்போது என் உதடுகள் மகிழும்.

℣ - என் நாவு உம் நீதியை எடுத்துரைக்கும்.
℟ - உம்மைப் புகழும்போது என் உதடுகள் மகிழும்.

℣ - தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக
℟ - உம்மைப் புகழும்போது என் உதடுகள் மகிழும்.
__________________________

(அனைவரும் எழுந்து நிற்கவும்)

செக்கரியாவின் பாடல்

மு.மொழி.: ஆண்டவரே எம்மை அமைதி வழியில் வழி நடத்தும்

இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றுவோம். 
ஏனெனில் அவர் தம் மக்களைத் தேடிவந்து விடுவித்தருளினார்.

தம் தூய இறைவாக்கினர் வாயினால் 
தொடக்க முதல் அவர் மொழிந்தபடியே
அவர் தம் ஊழியராகிய தாவீதின் குடும்பத்தில் 
வல்லமை உடைய மீட்பர் ஒருவர் நமக்காகத் தோன்றச் செய்தார்;

நம் பகைவரிடமிருந்தும் 
நம்மை வெறுப்போர் அனைவரின் பிடியிலிருந்தும் 
நம்மை மீட்பார்.

அவர் நம் மூதாதையருக்கு இரக்கம் காட்டி, 
தமது தூய உடன்படிக்கையையும்,
நம் தந்தையாகிய ஆபிரகாமுக்கு அவர் இட்ட ஆணையையும் 
நிறைவேற்ற நினைவு கூர்ந்தார்.

இவ்வாறு நாம் பகைவரின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டுத் 
தூய்மையோடும் நேர்மையோடும்
வாழ்நாளெல்லாம் அச்சமின்றி 
அவர் திருமுன் பணிசெய்யுமாறு வழிவகுத்தார்.

குழந்தாய், 
நீ உன்னத கடவுளின் இறைவாக்கினர் எனப்படுவாய்;
ஏனெனில் பாவ மன்னிப்பால் வரும் மீட்பை 
அவர்தம் மக்களுக்கு அறிவித்து 
ஆண்டவருக்கான வழியைச் செம்மைப்படுத்த 
அவர் முன்னே செல்வாய்.

இருளிலும் இறப்பின் பிடியிலும் இருப்போர்க்கு ஒளிதரவும்,
நம்முடைய கால்களை அமைதி வழியில் நடக்கச் செய்யவும் 
நம் கடவுளின் பரிவுள்ளத்தாலும் இரக்கத்தாலும் 
விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடிவருகிறது.

மு.மொழி.: ஆண்டவரே எம்மை அமைதி வழியில் வழி நடத்தும்
__________________________

மன்றாட்டுக்கள்

தந்தையாகிய கடவுள் தம் ஒரே மகனின் சகோதர சகோதரிகளாக நம்மைத் தேர்ந்து கொண்டார். காலமெல்லாம் அவர் நம்மோடிருந்து, தமது அன்பில் நம்மைக் காத்து வருகிறார். உலகின் தேவைகளுக்காக அவரிடம் வேண்டுவோம்.

℟ - ஆண்டவரே, அன்றாடப் பணிகளில் எங்களுக்குத் துணையாயிரும்.

ஆண்டவரே இந்த உலகம் உமது உண்மையைப் பற்றிய அறிவால் நிரப்பப்படுவதாக – நீர் எம்மை எதற்காக அழைத்தீரோ அதை நிறைவேற்றத் துணைபுரியும்.

℟ - ஆண்டவரே, அன்றாடப் பணிகளில் எங்களுக்குத் துணையாயிரும்.

எங்கள் நகரங்களைத் திட்டமிட்டுக் கட்டுவோருக்காக வேண்டுகிறோம்–மனித மதிப்பீடு ஒவ்வொன்றையும் அவர்கள் மதித்திடச் செய்தருளும்.

℟ - ஆண்டவரே, அன்றாடப் பணிகளில் எங்களுக்குத் துணையாயிரும்.

நாங்கள் செய்வதனைத்திற்கும் நீர் தொடக்கமாயிரும் – உம் உதவியின்றி எதையும் நாங்கள் செம்மையாகச் செய்ய இயலாது.

-ஆண்டவரே, அன்றாடப் பணிகளில் எங்களுக்குத் துணையாயிரும்.

(தனிப்பட்ட தேவைகளுக்காக மன்றாடல்)
__________________________

ஆண்டவரின் செபம்
__________________________

இறுதி செபம்

ஆண்டவரே, நாங்கள் எமது குரலாலும் மனத்தாலும் செயலாலும் உம்மைப் புகழ்வோமாக. எமது உயிரே உமது எங்களுக்குரியனவும் உமக்கே கொடையாகையால் நாங்களும் உரியனவாகட்டும். உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சிபுரியும் எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.
_______________________

ஆசி வழங்குதல்

குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக 
எல்: உம் ஆன்மாவோடும் இருப்பாராக 

குரு: எல்லாம் வல்ல இறைவன் தந்தை மகன் தூய ஆவியார் உங்களை ஆசீர்வதிப்பாராக. 
எல்: ஆமென் 

குரு: கிறிஸ்துவின் அமைதியில் சென்று வாருங்கள் 
எல்: இறைவா உமக்கு நன்றி 

(அல்லது)

முதல்: ஆண்டவர் நம்மை ஆசீர்வதித்து தீமைகள் அனைத்தினின்றும் பாதுகாத்து முடிவில்லா வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக 
எல்: ஆமென் 

முதல்: ஆண்டவரை வாழ்த்துவோமாக 
எல்: இறைவா உமக்கு நன்றி.