2 - வெள்ள மாலைப் புகழ்

பாடல் 


(எழுந்து நிற்கவும்)

நிழல்கள் நீண்டன பொழுதும் சாய்ந்தது

அழலெரிக் கதிரவன் மறையுமுன்

தொழுதுனைப் பணிந்து புகழ்ந்துனைப் பாடும்

விழுமிய கடமையைச் செலுத்துவோம்.


கிறிஸ்துவே பணித்த அலுவலை எல்லாம்

இறுதியிவ் வேளையில் முடித்தோம்

பரிசோ உழைத்தோர்க் குளதெனப் பகர்ந்த

உறுதி மொழிப்படி தருவீர்


உழைத்திடு வோர்க்கு உதவி அளித்தீர்

களைப்பை ஆற்றிடு விரே

அழைத்தீர் அன்புடன் அயரா துழைக்க

விளைவை விண்ணில் பெறுவோம்.


தமக்கென வாழாக் கிறிஸ்து அரசே

உமக்கும் தந்தை இறைக்கும்

எமக்குள் வாழும் தூய ஆவிக்கும்

சமபுகழ் என்றும் ஆகுக. ஆமென்.

_____________________________

(அமரவும்)

மு.மொழி.1: ஆண்டவரே என் ஆன்மாவை சாவினின்று விடுவித்தீர்;  இடறி விழாதபடியும் காப்பாற்றும். 

நன்றிப்பாடல்                  திபா 116:1-9

ஆண்டவர்மீது அன்பு கூர்கின்றேன்
ஏனெனில் எனக்கு இரங்குமாறு
நான் எழுப்பிய குரலை அவர் கேட்டருளினார்
அவரை நான் மன்றாடிய நாளில் எனக்கு அவர் செவிசாய்த்தார்.

சாவின் கயிறுகள் என்னைப் பிணித்துக் கொண்டன
பாதாளத்தின் துன்பங்கள் என்னைப் பற்றிக்கொண்டன
துன்பமும் துயரமும் என்னை ஆட்கொண்டன
நான் ஆண்டவரது பெயரைத் தொழுதேன்

ஆண்டவரே என் உயிரைக் காத்தருளும் என்று கெஞ்சினேன்.
ஆண்டவர் அருளும் நீதியும் கொண்டவர்
நம் கடவுள் இரக்கம் உள்ளவர்
எளிய மன்ததோரை ஆண்டவர் பாதுகாக்கின்றார்
நான் தாழ்த்தப்பட்டபோது எனக்கு மீட்பளித்தார்.

என் நெஞ்சே நீ மீண்டும் அமைதி கொள்
ஏனெனில் ஆண்டவர் உனக்கு நன்மை செய்தார்
என் உயிரைச் சாவினின்று விடுவித்தார்
என் கண் கலங்காதபடியும் என் கால் இடறாதபடியும் செய்தார்
உயிர் வாழ்வோர் நாட்டில்
நான் ஆண்டவர் திருமுன் வாழ்ந்திடுவேன்

மு.மொழி.: ஆண்டவரே என் ஆன்மாவை சாவினின்று விடுவித்தீர்; இடறி விழாதபடியும் காப்பாற்றும்.

_____________________________

மு.மொழி. 2: விண்ணையும் மண்ணையும் உண்டாக்கிய ஆண்டவரிடமிருந்தே எனக்கு உதவி வரும்.
                              
நம்மைப் பாதுகாக்கும் ஆண்டவர் திபா 121

மலைகளை நோக்கி என் கண்களை உயர்த்துகின்றேன்
எங்கிருந்து எனக்கு உதவி வரும்
விண்ணையும் மண்ணையும் உண்டாக்கிய
ஆண்டவரிடமிருந்தே எனக்கு உதவி வரும்.

அவர் உம் கால் இடறாதபடி பார்த்துக் கொள்வார்
உம்மைக் காக்கும் அவர் உறங்கி விடமாட்டார்
இதோ இஸ்ரயேலைக் காக்கின்றவர்
கண்ணயர்வதுமில்லை உறங்குவதும் இல்லை.

ஆண்டவரே உம்மைக் காக்கின்றார்
அவர் உம் வலப்பக்கத்தில் உள்ளார்
அவரே உமக்கு நிழல் ஆவார்
பகலில் கதிரவன் உம்மைத் தாக்காது
இரவில் நிலாவும் உம்மைத் தீண்டாது.

ஆண்டவர் உம்மை எல்லாத் தீமையினின்றும் பாதுகாப்பார்
அவர் உம் உயிரைக் காத்திடுவார்
நீர் போகும்போதும் உள்ளே வரும்போதும்
இப்போதும் எப்போதும் ஆண்டவர் உம்மைக் காத்தருள்வார்.

மு.மொழி.: விண்ணையும் மண்ணையும் உண்டாக்கிய ஆண்டவரிடமிருந்தே எனக்கு உதவி வரும்.
______________________________

மு.மொழி. 3: மக்களினங்களின் மன்னரே, உமது வழிகள் நேரியவை,

திவெ 15: 3-4 

மு.மொழி.: மக்களினங்களின் மன்னரே, உமது வழிகள் நேரியவை,
______________________________

(எழுந்து நின்று வாசிக்கவும்)

அருள்வாக்கு           1 கொரி 2:7-10

வெளிப்படுத்தப்படாமல் மறை பொருளாய் இருக்கும் இறைஞானத்தைப் பற்றியே நாங்கள் பேசுகிறோம். அது நாம் மேன்மை பெற வேண்டும் என்னும் நோக்குடன் உலகம் தோன்றும் முன்பே கடவுளின் திட்டத்தில் இருந்தது. இவ்வுலகத் தலைவர்கள் எவரும் அதை அறிந்து கொள்ளவில்லை. அறிந்திருந்தால், அவர்கள் மாட்சிக்குரிய ஆண்டவரைச் சிலுவையில் அறைந்திருக்க மாட்டார்கள். ஆனால் மறைநூலில் எழுதியுள்ளவாறு, தம்மிடம் அன்பு கொள்ளுகிறவர்களுக்கென்று கடவுள் ஏற்பாடு செய்தவை; கண்ணுக்குப் புலப்படவில்லை; செவிக்கு எட்டவில்லை; மனித உள்ளமும் அதை அறியவில்லை. இதைக் கடவுள் தூய ஆவியாரின் வழியாக நமக்கு வெளிப்படுத்தினார்.
_____________________________

சிறு மறுமொழி

℣ - கடவுளிடம் நம்மை ஒப்படைக்கும்படியாக கிறிஸ்து நம் பாவங்களுக்காக இறந்தார்.
℟ - கடவுளிடம் நம்மை ஒப்படைக்கும்படியாக கிறிஸ்து நம் பாவங்களுக்காக இறந்தார்.


℣ - உடலில் இறந்த அவர் ஆவியில் உயிர் பெற்றெழுந்தார்.
℟ - கடவுளிடம் நம்மை ஒப்படைக்கும்படியாக கிறிஸ்து நம் பாவங்களுக்காக இறந்தார்.

℣ - தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக
℟ - கடவுளிடம் நம்மை ஒப்படைக்கும்படியாக கிறிஸ்து நம் பாவங்களுக்காக இறந்தார்.
_____________________________

(அனைவரும் எழுந்து நிற்கவும்)

மரியாவின் பாடல்

மு.மொழி.: எம் மூதாதையருக்கு உரைத்தபடியே ஆண்டவரே, உம்
இரக்கத்தை நினைவு கூர்ந்தருளும்.

ஆண்டவரை எனது உள்ளம் 
போற்றிப் பெருமைப் படுத்துகின்றது. 
என் மீட்பராம் கடவுளை நினைத்து 
எனது மனம் பேருவகை கொள்கின்றது.
ஏனெனில் அவர் தம் அடிமையின் 
தாழ்நிலையைக் கண்ணோக்கினார்.

இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் 
என்னைப் பேறுபெற்றவர் என்பர்.
ஏனெனில் வல்லவராம் கடவுள் 
எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். 
தூயவர் என்பதே அவரது பெயர்.

அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் 
தலைமுறை தலைமுறையாய் 
அவர் இரக்கம் காட்டி வருகிறார்.
அவர் தம் தோள் வலிமையைக் காட்டியுள்ளார்; 
உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் 
சிதறடித்து வருகிறார்.

வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்; 
தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்.
பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்; 
செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார்.

மூதாதையருக்கு உரைத்தபடியே அவர் 
ஆபிரகாமையும் அவர்தம் வழி மரபினரையும் 
என்றென்றும் இரக்கத்தோடு 
நினைவில் கொண்டுள்ளார்;
தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத் 
துணையாக இருந்து வருகிறார் ".

மு.மொழி.: எம் மூதாதையருக்கு உரைத்தபடியே ஆண்டவரே, உம்
இரக்கத்தை நினைவு கூர்ந்தருளும்.
_____________________________

மன்றாட்டுக்கள்

தம் ஒரே இழந்த விதவைக்கு கிறிஸ்து ஆறுதலளித்தார். இறுதி நாட்களில் நம் கண்ணீரையெல்லாம் துடைக்க வரவிருக்கும் அவரிடம் வேண்டுவோம்.

℟ - ஆண்டவராகிய இயேசுவே வாரும்.

ஆண்டவராகிய இயேசுவே, குறிப்பாக நீர் ஏழைகளுக்கும், துன்புறுவோருக்கும் ஆறுதல் அளித்தீர் எத்தகைய தேவை உள்ளோர்மீதும் கருணைக்கண் நோக்கும். 

℟ -  ஆண்டவராகிய இயேசுவே வாரும்.

பாவத்தால் உம்மை விட்டு அகன்று போனவர்களை அன்போடு பார்த்தருளும் – அவர்களை உம்மோடும் திருச்சபையோடும் ஒப்புரவாக்கியருளும். 

℟ - ஆண்டவராகிய இயேசுவே வாரும்.

நாடுகடத்தப்பட்ட அனைவரும் பராமரிப்பை உணர்வார்களாக – அவர்கள் அனைவரும் ஒருநாள் சொந்தநாட்டிற்கு திரும்பி வந்து இறுதியில் விண்ணகத்தையும் அடைவார்களாக.

℟ - ஆண்டவராகிய இயேசுவே வாரும்.

(தனிப்பட்ட தேவைகளுக்காக மன்றாடல்)
_____________________________

ஆண்டவரின் செபம்
_____________________________

இறுதி செபம்

ஆண்டவராகிய இறைவா, நம்பிக்கை இல்லாதவர்க்கு இடறலாக உள்ள அவமானச் சின்னமாகிய சிலுவையினால் உமது சொல்லற்கரிய ஞானத்தை வியத்தகு வகையில் வெளிப்படுத்தினீர். நம்பிக்கை கொள்ளும் நாங்கள் உமது வல்லமையின் சின்னமாக இருக்கும் திருச்சிலுவையின் வழியாக உம் திருமகனுடைய பாடுகளின் மேன்மையை நன்கறிய அருள்புரியும். இதனால் அவருடைய திருச்சிலுவையில் நாங்கள் எப்பொழுதும் நம்பிக்கை கொண்டு பெருமைப்படுவோமாக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சிபுரியும் எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
_____________________________

ஆசி வழங்குதல்

குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக 
எல்: உம் ஆன்மாவோடும் இருப்பாராக 

குரு: எல்லாம் வல்ல இறைவன் தந்தை மகன் தூய ஆவியார் உங்களை ஆசீர்வதிப்பாராக. 
எல்: ஆமென் 

குரு: கிறிஸ்துவின் அமைதியில் சென்று வாருங்கள் 
எல்: இறைவா உமக்கு நன்றி 

(அல்லது)

முதல்: ஆண்டவர் நம்மை ஆசீர்வதித்து தீமைகள் அனைத்தினின்றும் பாதுகாத்து முடிவில்லா வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக 
எல்: ஆமென் 

முதல்: ஆண்டவரை வாழ்த்துவோமாக 
எல்: இறைவா உமக்கு நன்றி.