2 - ஞாயிறு காலைப் புகழ்

2 - ஞாயிறு காலைப் புகழ்

 பாடல்  

இரவின் இருள்நிறை நிழல் மறைந் ததுவே

கரையில் வைகறை ஒளிர்ந்தெழுந்த ததுவே        

பரமளே எல்லாம் வல்லவா உமது 

திருமுன் பணிந்து வேண்டுகிறோம். 

இறைவன் நம்மேல் இரங்கி அனைத்துக் 

குறைகளைப் போக்கி மீட்பை அருளி 

பரிவன் புடனே பரம பதமாம்

இறையாட் சியைதமக் கீந்திடவே.

வேண்டுதல் இதனை இறைவா கேட்பீர்

விண்டலம் விளங்கும் தந்தையும் மகனும்

தூண்டுதல் தரும்திருத் தூய ஆவியும்

பொன்றாப் புகழுடன் ஆண்டருள்க. ஆமென், 


(எழுந்து நிற்கவும்)

_____________________________

(அமரவும்)

மு.மொழி.1:  ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர். அல்லேலூயா.

நன்றிப் புகழ்மாலை
 தி.பா 110

ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்
ஏனெனில் அவர் நல்லவர்
என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு
என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு என
இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக
என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு என
ஆரோனின் குடும்பத்தார் சாற்றுவார்களாக
என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு என
ஆண்டவருக்கு அஞ்சுவோர் அனைவரும் சாற்றுவார்களாக!

நெருக்கடியான வேளையில்
நான் ஆண்டவரை நோக்கி மன்றாடினேன்
ஆண்டவரும் எனக்குச் செவி கொடுத்து என்னை விடுவித்தார்.
ஆண்டவர் என் பக்கம் இருக்க
நான் ஏன் அஞ்ச வேண்டும்
மனிதர் எனக்கு எதிராக என்ன செய்ய முடியும்
எனக்குத் துணை செய்யும் ஆண்டவர் என் பக்கம் உள்ளார்
என்னை வெறுப்போர்க்கு நேர்வதைக் கண்ணாரக் காண்பேன்
மனிதர்மீது நம்பிக்கை வைப்பதை விட
ஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே நலம்
உயர்குடியினர்மீது நம்பிக்கை வைப்பதை விட
ஆண்டவரிடம் அடைக்கலம் புகுவதே நலம்.

வேற்றினத்தார் அனைவரும் என்னைச் சூழ்ந்து கொண்டனர்
ஆண்டவர் பெயரால் அவர்களை அழித்து விட்டேன்
எப்பக்கமும் அவர்கள் என்னைச் சுற்றி வளைத்துக் கொண்டனர்
ஆண்டவர் பெயரால் அவர்களை அழித்து விட்டேன்
தேனீக்களைப்போல் அவர்கள் என்னைச் சூழ்ந்து கொண்டனர்
நெருப்பிலிட்ட முட்களைப்போல் அவர்கள் சாம்பலாயினர்
ஆண்டவரின் பெயரால் அவர்களை அழித்து விட்டேன்.

அவர்கள் என்னை வலுவுடன் தள்ளி வீழ்த்த முயன்றனர்
ஆனால் ஆண்டவர் எனக்குத் துணை நின்றார்
அவர் நம்மீது ஒளிர்ந்துள்ளார்
கிளைகளைக் கையிலேந்தி விழாவினைத் தொடங்குங்கள்
பீடத்தின் கொம்புகள்வரை பவனியாகச் செல்லுங்கள்.

என் இறைவன் நீரே
உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன்
என் கடவுளே உம்மைப் புகழ்ந்தேத்துகின்றேன்
ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்
ஏனெனில் அவர் நல்லவர்
என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.

மு.மொழி.:  ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர். அல்லேலூயா.
_____________________________

மு.மொழி. 2: ஆண்டவருக்குப் புதிய பாடல் ஒன்று பாடுங்கள்.

மூவர் பாடல்           தானி(இ) 1:29-34 

எங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவரே
நீர் வாழ்த்தப் பெறுவீராக
என்றென்றும் நீர் புகழப்பெறவும்
ஏத்திப் போற்றப்பெறவும் தகுதியுள்ளவர்.

மாட்சியும் தூய்மையும் நிறைந்த உம் பெயர்
வாழ்த்துக்குரியது
எக்காலத்துக்கும் அது புகழ்ந்தேத்தற்குரியது
ஏத்திப் போற்றற்குரியது.

உமது தூய மாட்சி விளங்கும் கோவிலில்
நீர் வாழ்த்தப் பெறுவீராக
உயர் புகழ்ச்சிக்கும் மிகு மாட்சிக்கும் நீர் உரியவர்.

கெருபுகள்மேல் வீற்றிருந்து
படுகுழியை நோக்குபவரே
நீர் வாழ்த்தப் பெறுவீராக
நீர் என்றென்றும் புகழப்படவும்
ஏத்திப் போற்றப்படவும் தகுதியுள்ளவர்.

உமது ஆட்சிக்குரிய அரியணைமீது
நீர் வாழ்த்தப் பெறுவீராக
என்றென்றும் நீர் புகழ்ந்தேத்தப் பெறுவீராக
ஏத்திப் போற்றப் பெறுவீராக
உயர் வானகத்தில் நீர் வாழ்த்தப் பெறுவீராக
என்றென்றும் நீர் பாடல் பெறவும்
மாட்சி அடையவும் தகுதியுள்ளவர்.

ஆண்டவரின் அனைத்துச் செயல்களே
நீங்களெல்லாம் ஆண்டவரை வாழ்த்துங்கள்
என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி
ஏத்திப் போற்றுங்கள்

மு.மொழி.: ஆண்டவருக்குப் புதிய பாடல் ஒன்று பாடுங்கள்.
______________________________

மு.மொழி. 3: அவர்தம் எல்லையிலா மாண்பினைக் குறித்து அவரைப் போற்றுங்கள்.

தாயகத்தில் இறைவன் போற்றி!
திபா 150

அல்லேலூயா!
தூயகத்தில் இறைவனைப் போற்றுங்கள்
அவர்தம் எல்லையிலா மாண்பினைக் குறித்து
அவரைப் போற்றுங்கள்.

எக்காளம் முழங்கியே அவரைப் போற்றுங்கள்
வீணையுடன் யாழிசைத்து அவரைப் போற்றுங்கள்
மத்தளம் கொட்டி நர்த்தனம் செய்து அவரைப் போற்றுங்கள்
யாழினை மீட்டி குழலினை ஊதி அவரைப் போற்றுங்கள்.

சிலம்பிடும் சதங்கையுடன் அவரைப் போற்றுங்கள்
கலீர் எனும் தாளத்துடன் அவரைப் போற்றுங்கள்
அனைத்து உயிர்களே ஆண்டவரைப் புகழ்ந்திடுக
அல்லேலூயா!


மு.மொழி.: அவர்தம் எல்லையிலா மாண்பினைக் குறித்து அவரைப் போற்றுங்கள்.
______________________________

(எழுந்து நின்று வாசிக்கவும்)

அருள்வாக்கு            எசே 36:25-27

நான் தூய நீரை உங்கள்மேல் தெளிப்பேன். நீங்கள் உங்கள் எல்லா அழுக்கிலிருந்தும் தூய்மையாவீர்கள். உங்கள் எல்லாச் சிலை வழிபாட்டுத் தீட்டையும் அகற்றுவேன். நான் உங்களுக்கு புதிய இதயத்தை அருள்வேன். புதிய ஆவியை உங்களுக்குள் புகுத்துவேன். உங்கள் உடலிலிருந்து கல்லாலான இதயத்தை எடுத்துவிட்டு சதையாலான இதயத்தைப் பொருத்துவேன். என் ஆவியை உங்களுக்குள் புகுத்துவேன். என் நியமங்களைக் கடைப்பிடிக்கவும் என் நீதி நெறிகளைக் கவனமாய்ச் செயல்படுத்தவும் செய்வேன்
_____________________________

சிறு மறுமொழி

℣ - கடவுளே நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். உமது திருப்பெயரைக் கூவி அழைக்கிறோம்.
℟ - கடவுளே நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். உமது திருப்பெயரைக் கூவி அழைக்கிறோம்.


℣ - உமது வியப்புமிக்க செயல்களை எடுத்துரைக்கிறோம்.
℟ - கடவுளே நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். உமது திருப்பெயரைக் கூவி அழைக்கிறோம்.

℣ - தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக
℟ - கடவுளே நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். உமது திருப்பெயரைக் கூவி அழைக்கிறோம்.
_____________________________

(அனைவரும் எழுந்து நிற்கவும்)

செக்கரியாவின் பாடல்

மு.மொழி.: நம் பகைவரிடமிருந்து நம்மை மீட்ட ஆண்டவரைப் போற்றுவோம். 

இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றுவோம். 
ஏனெனில் அவர் தம் மக்களைத் தேடிவந்து விடுவித்தருளினார்.

தம் தூய இறைவாக்கினர் வாயினால் 
தொடக்க முதல் அவர் மொழிந்தபடியே
அவர் தம் ஊழியராகிய தாவீதின் குடும்பத்தில் 
வல்லமை உடைய மீட்பர் ஒருவர் நமக்காகத் தோன்றச் செய்தார்;

நம் பகைவரிடமிருந்தும் 
நம்மை வெறுப்போர் அனைவரின் பிடியிலிருந்தும் 
நம்மை மீட்பார்.

அவர் நம் மூதாதையருக்கு இரக்கம் காட்டி, 
தமது தூய உடன்படிக்கையையும்,
நம் தந்தையாகிய ஆபிரகாமுக்கு அவர் இட்ட ஆணையையும் 
நிறைவேற்ற நினைவு கூர்ந்தார்.

இவ்வாறு நாம் பகைவரின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டுத் 
தூய்மையோடும் நேர்மையோடும்
வாழ்நாளெல்லாம் அச்சமின்றி 
அவர் திருமுன் பணிசெய்யுமாறு வழிவகுத்தார்.

குழந்தாய், 
நீ உன்னத கடவுளின் இறைவாக்கினர் எனப்படுவாய்;
ஏனெனில் பாவ மன்னிப்பால் வரும் மீட்பை 
அவர்தம் மக்களுக்கு அறிவித்து 
ஆண்டவருக்கான வழியைச் செம்மைப்படுத்த 
அவர் முன்னே செல்வாய்.

இருளிலும் இறப்பின் பிடியிலும் இருப்போர்க்கு ஒளிதரவும்,
நம்முடைய கால்களை அமைதி வழியில் நடக்கச் செய்யவும் 
நம் கடவுளின் பரிவுள்ளத்தாலும் இரக்கத்தாலும் 
விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடிவருகிறது.

மு.மொழி.: நம் பகைவரிடமிருந்து நம்மை மீட்ட ஆண்டவரைப் போற்றுவோம். 
_____________________________

மன்றாட்டுக்கள்

கடவுள் நம்மோடு இருக்க உலகிற்கு வந்த நம் மீட்பருக்கு நன்றி கூறுவோம்.

℟ -  ஆண்டவரே நாங்கள் உம்மைப் போற்றுகிறோம்; உமக்கு நன்றி கூறுகிறோம்.

விடிவெள்ளியும் இறந்தோரின் முதற்கனியுமான உம்மைப் புகழ்ந்து வரவேற்கிறோம் – நாங்கள் உமது உயிர்ப்பின் ஒளியில் நடக்க உம்மால் புத்துயிர் பெறுவோமாக.

℟ - ஆண்டவரே நாங்கள் உம்மைப் போற்றுகிறோம்; உமக்கு நன்றி கூறுகிறோம்.

 அனைத்துக் கிறிஸ்தவக் 
குடும்பங்களுக்காகவும் மன்றாடுகிறோம் நம்பிக்கையிலும் அன்பிலும் அவர்களுடைய ஒருமைப்பாட்டை உமது தூய ஆவி பேணி வளர்ப்பாராக.

℟ - ஆண்டவரே நாங்கள் உம்மைப் போற்றுகிறோம்; உமக்கு நன்றி கூறுகிறோம்.

(தனிப்பட்ட தேவைகளுக்காக மன்றாடல்)
_____________________________

ஆண்டவரின் செபம்
_____________________________

இறுதி செபம்

வல்லமை மிக்க இறைவா, சிறந்த கொடைகள் அனைத்தையும் எங்களுக்கு அளிப்பவர் நீரே. உம்மீது நாங்கள் ஆழ்ந்த அன்புறவு கொள்ளச் செய்தருளும், எங்களிடம் இறைபக்தியை வளர்த்து, நன்மைகளைப் பெருகச் செய்து அவற்றைப் பராமரித்துப் பாதுகாத்தருளும். உம்மோடு...
_____________________________

ஆசி வழங்குதல்

குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக 
எல்: உம் ஆன்மாவோடும் இருப்பாராக 

குரு: எல்லாம் வல்ல இறைவன் தந்தை மகன் தூய ஆவியார் உங்களை ஆசீர்வதிப்பாராக. 
எல்: ஆமென் 

குரு: கிறிஸ்துவின் அமைதியில் சென்று வாருங்கள் 
எல்: இறைவா உமக்கு நன்றி 

(அல்லது)

முதல்: ஆண்டவர் நம்மை ஆசீர்வதித்து தீமைகள் அனைத்தினின்றும் பாதுகாத்து முடிவில்லா வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக 
எல்: ஆமென் 

முதல்: ஆண்டவரை வாழ்த்துவோமாக 
எல்: இறைவா உமக்கு நன்றி.