2 - புதன் மாலைப் புகழ்
பாடல்
காலை மாலை மெல்ல மறைகிறது
விடிவது திண்ணமதாம்
நாளும் வேளையும் சுழன்றுவரல்
ஆளுமை உடையஉம் செயலன்றோ
இருளுறு விண்வெளி என்றாலும்
இறைமகள் வாக்கில் நம்பிக்கை
இருளா தேளம் விசுவாசம்
குறையற அன்பும் ஒளிர்ந்திடுமே.
எழுதலும் மறைதலும் அறியாத
எழிலுறு ஆதவன் அவர்தாமே
அவரே உலகை அன்பு செய்தார்
அவரே மகிழ்வாம் மறுவாழ்வில்,
இவ்வொளி யால்யாம் என்றென்றும்
செவ்விய வாழ்வைப் பெற்றிடுவோம்
திருமகன் தூய ஆவியுடன்
திருப்பா உமக்கு இசைத்திடுவோம். ஆமென்.
(எழுந்து நிற்கவும்)
_____________________________
(அமரவும்)
மு.மொழி.1: மகிழ்ச்சியோடு எதிர்நோக்கியிருப்பது நிறைவேறும் எனக் காத்திருக்கிறோம். நம் பெருமைமிக்க கடவுளும் மீட்பருமாகிய இயேசுகிறிஸ்துவின் மாட்சி வெளிப்படப் போகிறது.
கடவுளின் பாதுகாப்பில் நம்பிக்கை
திபா 62
கடவுளின் செயலுக்காக நான் மௌனமாய்க் காத்திருக்கின்றேன்
எனக்கு மீட்பு கிடைப்பது அவரிடமிருந்தே
உண்மையாகவே என் கற்பாறையும் மீட்பும் அவரே
என் கோட்டையும் அவரே
எனவே நான் சிறிதும் அசைவுறேன்.
ஒருவரைக் கொல்ல வேண்டுமென்று நீங்கள் அனைவரும்
எவ்வளவு காலம் வெறியுடன் தாக்குவீர்
நீங்கள் எல்லாரும் இடிந்த மதிலுக்கும்
சிதைந்த வேலிக்கும் ஒப்பாவீர்.
அவர் இருக்கும் உயர் நிலையிலிருந்து
அவரைத் தள்ளி விடத் திட்டமிடுகின்றனர்.
பொய் சொல்வதில் இன்பம் காண்கின்றனர்.
அவர்களது வாயில் ஆசி மொழி
அவர்களது உள்ளத்திலோ சாபமொழி,
நெஞ்சே கடவுளுக்காக மௌனமாய்க் காத்திரு
ஏனெனில் நான் எதிர்பார்க்கும் நலன் வருவது அவரிடமிருந்தே
உண்மையாகவே என் கற்பாறையும் மீட்பும் அவரே
எனவே நான் சிறிதும் அசைவுறேன்.
என் மீட்பும் மேன்மையும் கடவுளிடமே இருக்கின்றன
என் வலிமைமிகு கற்பாறையும் புகலிடமும் கடவுளே
மக்களே எக்காலத்திலும் அவரையே நம்புங்கள்
அவர் முன்னிலையில் உங்கள்
உள்ளத்தில் உள்ளதைத் திறந்து கொட்டுங்கள்
கடவுளே நமக்கு அடைக்கலம்.
மெய்யாகவே மானிடர் நீர்க்குமிழி போன்றவர்
மனிதர் வெறும் மாயை
துலாவில் வைத்து நிறுத்தால்
அவர்கள் மேலே போகின்றார்கள்
எல்லாரையும் சேர்த்தாலும் நீர்க்குமிழியைவிட
எடை குறைகின்றார்கள்.
பிறரைக் கசக்கிப் பிழிவதில் நம்பிக்கை வைக்காதீர்
கொள்ளையடிப்பதில் குறியாய் இராதீர்
செல்வம் பெருகும்போது
உள்ளத்தை அதற்குப் பறி கொடுக்காதீர்.
ஆற்றல் கடவுளுக்கே உரியது என்று
அவர் ஒருமுறை மொழிய நான் இருமுறை கேட்டேன்
என் தலைவரே உண்மைப் பேரன்பு உமக்கே உரியது
ஏனெனில் ஒவ்வொரு மனிதருக்கும்
அவர்தம் செயல்களுக்குத் தக்க கைம்மாறு நீரே அளிக்கின்றீர்.
மு.மொழி.: மகிழ்ச்சியோடு எதிர்நோக்கியிருப்பது நிறைவேறும் எனக் காத்திருக்கிறோம். நம் பெருமைமிக்க கடவுளும் மீட்பருமாகிய இயேசுகிறிஸ்துவின் மாட்சி வெளிப்படப் போகிறது.
_____________________________
மு.மொழி. 2: கடவுளே! எம்மீது இரங்கி எமக்கு ஆசி வழங்குவீராக!
நன்றி புகழ்பா திபா 67
கடவுளே எம்மீது இரங்கி எமக்கு ஆசி வழங்குவீராக
உம்திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக
அப்பொழுது உலகம் உமது வழியை அறிந்து கொள்ளும்
பிற இனத்தார் அனைவரும் நீர் அருளும்
மீட்பை உணர்ந்து கொள்வர்.
கடவுளே மக்களினத்தார் உம்மைப் புகழ்வார்களாக
மக்கள் எல்லாரும் உம்மைப் போற்றுவார்களாக
வேற்று நாட்டினர் அக்களித்து மகிழ்ச்சியுடன் பாடிடுவாராக
ஏனெனில் நீர் மக்களினங்களை நேர்மையுடன் ஆளுகின்றீர்
உலகின் நாடுகளை வழிநடத்துகின்றீர்.
கடவுளே மக்களினத்தார் உம்மை புகழ்வார்களாக
மக்கள் எல்லாரும் உம்மை போற்றுவார்களாக
நானிலம் தன் பலனை ஈந்தது
கடவுள் நம் கடவுள் நமக்கு ஆசி வழங்கினார்
கடவுள் நமக்கு ஆசி வழங்குவாராக
உலகின் கடையெல்லை வரை வாழ்வோர் அவருக்கு அஞ்சுவாராக.
மு.மொழி.: கடவுளே! எம்மீது இரங்கி எமக்கு ஆசி வழங்குவீராக!
______________________________
மு.மொழி. 3: அனைத்தும் அவர் வழியாய் அவருக்காகப் படைக்கப்பட்டன. அனைத்தும் அவரோடிணைந்து நிலைபெறுகின்றன.
கொலோ 1:12 – 20 (பக்கம் 60)
மு. மொழி. 3:அனைத்தும் அவர் வழியாய் அவருக்காகப் படைக்கப்பட்டன. அனைத்தும் அவரோடிணைந்து நிலைபெறுகின்றன.
______________________________
(எழுந்து நின்று வாசிக்கவும்)
அருள்வாக்கு 1 பேது 5.5-7
ஒருவர் மற்றவரோடு பழகும்போது எல்லாரும் மனத்தாழ்மையை ஆடையாய அணிந்து கொள்ளுங்கள். ஏனெனில் செருக்குற்றோரைக் கடவுள் இகழ்ச்சியுடன் நோக்குவார்; தாழ்நிலையில் உள்ளவர்களுக்கோ கருணை காட்டுவார். ஆகையால் கடவுளுடைய வலிமைமிக்க கரத்தின்கீழ் உங்களைத் தாழ்த்துங்கள். அப்பொழுது அவர் ஏற்ற காலத்தில் உங்களை உயர்த்துவார். உங்கள் கவலைகளையெல்லாம் அவரிடம் விட்டுவிடுங்கள், ஏனென்றால் அவர் உங்கள்மேல் கவலை கொண்டுள்ளார்.
_____________________________
சிறு மறுமொழி
℣ - ஆண்டவரே உமது கண்ணின் மணியைப்போல எங்களை காத்தருளும்.
℟ - ஆண்டவரே உமது கண்ணின் மணியைப்போல எங்களை காத்தருளும்.
℣ - உமது இறக்கைகளில் நிழலில் எங்களைப் பாதுக்கத்தருளும்
℟ - ஆண்டவரே உமது கண்ணின் மணியைப்போல எங்களை காத்தருளும்.
℣ - தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக
℟ - ஆண்டவரே உமது கண்ணின் மணியைப்போல எங்களை காத்தருளும்.
_____________________________
(அனைவரும் எழுந்து நிற்கவும்)
மரியாவின் பாடல்
மு.மொழி.: ஆண்டவரே உம் தோள்வலிமையை காட்டியருளும்; உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரை சிதறடித்து தாழ்நிலையில் இறக்கைகளின் இருப்போரை உயர்த்தியருளும்
ஆண்டவரை எனது உள்ளம்
போற்றிப் பெருமைப் படுத்துகின்றது.
என் மீட்பராம் கடவுளை நினைத்து
எனது மனம் பேருவகை கொள்கின்றது.
ஏனெனில் அவர் தம் அடிமையின்
தாழ்நிலையைக் கண்ணோக்கினார்.
இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும்
என்னைப் பேறுபெற்றவர் என்பர்.
ஏனெனில் வல்லவராம் கடவுள்
எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார்.
தூயவர் என்பதே அவரது பெயர்.
அவருக்கு அஞ்சி நடப்போருக்குத்
தலைமுறை தலைமுறையாய்
அவர் இரக்கம் காட்டி வருகிறார்.
அவர் தம் தோள் வலிமையைக் காட்டியுள்ளார்;
உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச்
சிதறடித்து வருகிறார்.
வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்;
தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்.
பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்;
செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார்.
மூதாதையருக்கு உரைத்தபடியே அவர்
ஆபிரகாமையும் அவர்தம் வழி மரபினரையும்
என்றென்றும் இரக்கத்தோடு
நினைவில் கொண்டுள்ளார்;
தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத்
துணையாக இருந்து வருகிறார் ".
மு.மொழி.: :ஆண்டவரே உம் தோள்வலிமையை காட்டியருளும்; உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரை சிதறடித்து தாழ்நிலையில் இறக்கைகளின் இருப்போரை உயர்த்தியருளும்
_____________________________
மன்றாட்டுக்கள்
இந்நாளின் முடிவில் நாம் தந்தையாகிய கடவுளுக்கு நன்றி கூறுவோம். அவர் கிறிஸ்துவில் படைப்பனைத்தையும் தம்மோடு ஒப்புரவாக்கினார்.
℟ - இறைவா உமக்கே மகிமை,
உமது எழில்மிகு படைப்புக்காக உமக்கு நாங்கள் நன்றி செலுத்துகிறோம் - நாங்கள் நன்றியுணர்வோடு அவற்றை நன்கு பயன்படுத்தக் கற்றுத்தாரும்.
℟ - இறைவா உமக்கே மகிமை,
உமக்கு உகந்தவற்றையே நாங்கள் நாடக் கற்றுத்தாரும் நாங்கள் செய்வதனைத்திலும் உம்மையே காண்போமாக.
℟ - இறைவா உமக்கே மகிமை,
(தனிப்பட்ட தேவைகளுக்காக மன்றாடல்)
_____________________________
ஆண்டவரின் செபம்
_____________________________
இறுதி செபம்
ஆண்டவராகிய கடவுளே, உமது திருப்பெயர் தூய்மையானது; உமது இரக்கமோ தலைமுறை தலைமுறையாய்ப் புகழப்படுகின்றது. உம் மக்களின் செபங்களுக்குச் செவிசாய்த்து உம்மை இடைவிடாது நாங்கள் புகழ்ந்து மேன்மைப்படுத்துமாறு அருள் புரிந்தருளும். உம்மோடு.......
_____________________________
ஆசி வழங்குதல்
குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக
எல்: உம் ஆன்மாவோடும் இருப்பாராக
குரு: எல்லாம் வல்ல இறைவன் தந்தை மகன் தூய ஆவியார் உங்களை ஆசீர்வதிப்பாராக.
எல்: ஆமென்
குரு: கிறிஸ்துவின் அமைதியில் சென்று வாருங்கள்
எல்: இறைவா உமக்கு நன்றி
(அல்லது)
முதல்: ஆண்டவர் நம்மை ஆசீர்வதித்து தீமைகள் அனைத்தினின்றும் பாதுகாத்து முடிவில்லா வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக
எல்: ஆமென்
முதல்: ஆண்டவரை வாழ்த்துவோமாக
எல்: இறைவா உமக்கு நன்றி.