2 - வெள்ளி காலைப் புகழ்
பாடல்
(எழுந்து நிற்கவும்)
விண்ணின் விளக்கே, ஒளியின் ஊற்றே,
மண்ணைக் காக்கும் மாண்புறு இறைவா,
பனிபொழிந்(து) உலகின் தரையை நனைக்க,
இன்னொருநாள் பிறந்தது இறைவனைத் துதிக்க.
இருள் அகல் கின்றது, பகல்ஒளிர் கின்றது.
அருள்பொழி கிறிஸ்துவும் ஒளிதரு கின்றார்.
அவரே நமக்கு ஒளி யாவார்
அவரில் அகமகிழ் வோம்அக் களிப்போம்.
அனைத்து வல்லமையும் கொண்டவர் ஒருவரே,
நினைக்க இயலா மூவொரு இறைவா,
ஒளிதரும் உமக்கு ஓங்குக மாட்சிமை
அளவிலாக் காலத்தும் ஆகிட வேண்டுகிறோம். ஆமென்.
(அமரவும்)
_____________________________
மு.மொழி.1: கடவுளே! நொறுங்கிய குற்றமுணர்ந்த உள்ளத்தை நீர்
அவமதிப்பதில்லை.
இறைவா என்மீது இரங்கும் - திபா 51
உங்கள் மனப்பாங்கு புதுப்பிக்கப்படவேண்டும். கடவுளது சாயலாகப் படைக்கப்பட்ட புதிய மனிதருக்குரிய இயல்பை அணிந்து கொள்ளுங்கள். (எபே 4:23-24)
கடவுளே! உமது பேரன்புகேற்ப எனக்கு இரங்கும்;
உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப
என் குற்றங்களைத் துடைத்தருளும்.
என் தீவினை முற்றிலும் நீங்கும் படி
என்னைக் கழுவியருளும்;
என் பாவம் அற்றுப்போகும்படி
என்னைத் தூய்மைப்படுத்தியருளும்;
ஏனெனில், என் குற்றங்களை நான் உணர்கின்றேன்;
என் பாவம் எப்போதும் என் மனக்கண்முன் நிற்கின்றது.
உமக்கு எதிராக நான் பாவம் செய்தேன்;
உம் பார்வையில் தீயது செய்தேன்;
எனவே, உம் தீர்ப்பில் உம் நீதி வெளிப்படுகின்றது;
உம் தண்டனைத் தீர்ப்பில் உம் நேர்மை விளங்குகின்றது.
இதோ! குற்ற நிலையில்
என் வாழ்வைத் தொடங்கினேன்;
பாவத்தோடே என் அன்னை
என்னைக் கருத்தாங்கினார்.
இதோ! நீர் விரும்புவது உள்ளத்து உண்மையையே;
மெய்ஞானத்தால் என் மனத்தை நிரப்பும்.
ஈசோப்பினால் என்னைக் கழுவும்;
நான் தூய்மையாவேன்.
என்னைக் கழுவியருளும்;
உறைபனியிலும் வெண்மையாவேன்.
மகிழ்வொலியும் களிப்போசையும் நான் கேட்கும்படி செய்யும்;
நீர் நொறுக்கிய என் எலும்புகள் களிகூர்வனவாக!
என் பாவங்களைப் பாராதபடி
உம்முகத்தை மறைத்துக்கொள்ளும்;
என் பாவக்கறைகளை எல்லாம் துடைத்தருளும்.
கடவுளே! தூயதோர் உள்ளத்தை
என்னுள்ளே படைத்தருளும்;
உறுதிதரும் ஆவியை என்னுள்ளே புதுப்பித்தருளும்.
உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்;
உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும்.
உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும்;
ஆர்வமிக்க மனம் தந்து என்னைத் தாங்கியருளும்.
வரம்பு கடப்போருக்கு உம் வழிகளைக் கற்பிப்பேன்;
பாவிகள் உம்மை நோக்கித் திரும்புவர்.
இறைவா! எனது மீட்பின் இறைவா!
இரத்தப் பழியினின்று என்னை விடுவித்தருளும்;
என் நா உமது நீதியை ஏத்திப்பாடும்.
என் தலைவரே! என் இதழ்களைத் திறந்தருளும்;
என் வாய் உமது புகழை எடுத்துரைக்கும்.
ஏனெனில், பலியினால் உம்மை மகிழ்விக்க முடியாது;
நான் எரிபலி செலுத்தினாலும்
நீர் அதில் நாட்டங்கொள்வதில்லை.
இறைவா! உமக்கேற்ற பலி நொறுங்கிய உள்ளமே;
கடவுளே! நொறுங்கிய, குற்றமுணர்ந்த உளத்தை
நீர் அவமதிப்பதில்லை.
சீயோனுக்கு இன்முகம் காட்டி நன்மை செய்யும்;
எருசலேமின் மதில்களை மீண்டும் கட்டுவீராக!
அப்பொழுது, எரிபலி, முழு எரிபலியெனும்
முறையான பலிகளை விரும்புவீர்;
மேலும், இளங்காளைகள் உமது பீடத்தில் பலியாகச் செலுத்தப்படும்.
மு.மொழி.: கடவுளே! நொறுங்கிய குற்றமுணர்ந்த உள்ளத்தை நீர் அவமதிப்பதில்லை.
_____________________________
மு.மொழி. 2: சினமுற்ற போதும் உமது இரக்கத்தை நினைவுகூரும்.
கடவுள் நடுவராக வருவார் - சிறுபாடல் - அப 3:2-4, 13அ, 15-19
நீங்கள் தலைநிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது. (லூக் 21:28)
ஆண்டவரே, உம்மைப் பற்றிக் கேள்வியுற்றேன்;
ஆண்டவரே, உம் செயலைக் கண்டு அச்சமடைகிறேன்;
எங்கள் வாழ்நாள் காலத்திலேயே
அதை மீண்டும் செய்யும்;
காலப் போக்கில் அதை அனைவரும் அறியும்படி செய்யும்;
சினமுற்றபோதும் உமது இரக்கத்தை நினைவுகூரும்.
தேமானிலிருந்து இறைவன் வருகிறார்;
பாரான் மலையிலிருந்து புனிதர் வருகிறார்.
அவரது மாட்சி விண்ணுலகை மூடியிருக்கின்றது;
அவரது புகழால் மண்ணுலகம் நிறைந்திருக்கின்றது.
அவரது பேரொளி கதிரவன் ஒளிபோல் இருக்கின்றது;
அவர் கையினின்று ஒளிக்கதிர்கள் புறப்படுகின்றன;
அங்கே தான் அவரது வல்லமை மறைந்திருக்கின்றது.
உம் மக்களை மீட்கவும்,
நீர் திருப்பொழிவு செய்தவரை விடுவிக்கவுமே
நீர் புறப்படுகின்றீர்.
ஆனால், நீர் உம்முடைய குதிரைகளால் ஆழ்கடலை மிதித்து,
பெருவெள்ளக் குவியலைச் சிதறடிக்கின்றீர்.
இதை நான் கேட்கும் போது
என் உடல் நடுநடுங்குகின்றது;
அப்பேரொலியைக் கேட்பதனால்
என் உதடுகள் துடி துடிக்கின்றன;
என் எலும்புகள் உளுத்துப் போகின்றன;
என் காலடிகள் நிற்கும் இடத்திலேயே தடுமாறுகின்றன;
எங்களைத் தாக்கும் மக்கள் மீது
இடுக்கண் வரும் நாள்வரை
அமைதியாய்க் காத்திருப்பேன்.
அத்திமரம் துளிர்த்து அரும்பாமல் போயினும்,
திராட்சைக் கொடிகள் கனி தராவிடினும்,
ஒலிவ மரங்கள் பயன் அற்றுப் போயினும்,
வயல்களில் தானியம் விளையாவிடினும்,
கிடையில் ஆடுகள் யாவும் அழிந்து போயினும்,
தொழுவங்களில் மாடுகள் இல்லாது போயினும்,
நான் ஆண்டவரில் களி கூர்வேன்.
என் மீட்பராம் கடவுளில் மகிழ்ச்சியுறுவேன்.
ஆண்டவராகிய என் தலைவரே என் வலிமை
அவர் என் கால்களைப்
பெண்மானின் கால்களைப் போலாக்குவார்;
உயர்ந்த இடங்களுக்கு என்னை நடத்திச் செல்வார்.
மு.மொழி. : சினமுற்ற போதும் உமது இரக்கத்தை நினைவுகூரும்.
______________________________
மு.மொழி. 3: எருசலேமே! ஆண்டரைப் போற்றுவாயாக!
எருசலேமைப் புதுப்பித்தல் - திபா 147:12-20
எருசலேமே ஆண்டவரைப் போற்றுவாயாக!
சீயோனே! உன் கடவுளைப் புகழ்வாயாக!
அவர் உன் வாயில்களின் தாழ்களை வலுப்படுத்துகின்றார்;
உன்னிடமுள்ள உன் பிள்ளைக்கு ஆசி வழங்குகின்றார்;
அவர் உன் எல்லைப் புறங்களில்
அமைதி நிலவச் செய்கின்றார்;
உயர்தரக் கோதுமை வழங்கி
உன்னை நிறைவடையச் செய்கின்றார்.
அவர் தமது கட்டளையை உலகினுள் அனுப்புகின்றார்;
அவரது வாக்கு மிகவும் விரைவாய்ச் செல்கின்றது.
அவர் வெண்கம்பளிபோல் பனியைப் பொழியச் செய்கின்றார்;
சாம்பலைப் போல் உறைபனியைத் தூவுகின்றார்;
பனிக்கட்டியைத் துகள்துகளாக விழச் செய்கின்றார்;
அவர் வரவிடும் குளிரைத் தாங்கக் கூடியவர் யார்?
அவர்தம் கட்டளையால் அவற்றை உருகச் செய்கின்றார்;
தம் காற்றை வீசச் செய்ய
நீர் ஓடத் தொடங்குகின்றது.
யாக்கோபுக்கு தமது வாக்கை வெளிப்படுத்தினார்.
இஸ்ரயேலுக்குத் தம் நியமங்களையும்
நீதிநெறிகளையும் அறிவித்தார்.
அவர் வேறெந்த இனத்துக்கும் இப்படிச் செய்யவில்லை;
அவருடைய நீதிநெறிகள் அவர்களுக்குத் தெரியாது.
மு.மொழி.: எருசலேமே! ஆண்டரைப் போற்றுவாயாக!
______________________________
(எழுந்து நின்று வாசிக்கவும்)
அருள்வாக்கு எபே 2:13-16
ஒரு காலத்தில் தொலையில் இருந்த நீங்கள் இப்பொழுது இயேசு கிறிஸ்துவோடு இணைந்து அவரது இரத்தத்தின்மூலம் அருகில் கொண்டு வரப்பட்டிருக்கிறீர்கள். ஏனெனில் அவரே நமக்கு அமைதி அருள்பவர். அவரே இரண்டு இனத்தவரையும் பிரித்து நின்ற பகைமை என்னும் சுவரை தமது உடலில் ஏற்றத் துன்பத்தின் வழியாய்த் தகர்த்தெறிந்து அவர்களை ஒன்றுபடுத்தினார். பல கட்டளைகளையும் விதிகளையும் கொண்ட யூதச் சட்டத்தை அழித்தார். இரு இனத்தவரையும் தம்மோடு இணைந்திருக்கும் புதியதொரு மனித இனமாகப் படைத்து அமைதி ஏற்படுத்தவே இவ்வாறு செய்தார். தாமே துன்புற்றுப் பகைமையை அழித்தார். சிலுவையின் வழியாக இரு இனத்தவரையும் ஓருடலாக்கிக் கடவுளோடு ஒப்புரவாக்க இப்படிச் செய்தார்.
_____________________________
சிறு மறுமொழி
℣ - எல்லாம் வல்லவராகிய ஆண்டவரை நான் கூவி அழைக்கிறேன். ஏனெனில், அவரே என் துணைவர்.
℟ - எல்லாம் வல்லவராகிய ஆண்டவரை நான் கூவி அழைக்கிறேன். ஏனெனில், அவரே என் துணைவர்.
℣ - அவர் விண்ணிலிருந்து எனக்குத் துணைபுரிந்து என்னைக்
காத்தருள்வாராக!
℟ - ஏனெனில், அவரே என் துணைவர்.
℣ - தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக
℟ - எல்லாம் வல்லவராகிய ஆண்டவரை நான் கூவி அழைக்கிறேன். ஏனெனில், அவரே என் துணைவர்.
(அனைவரும் எழுந்து நிற்கவும்)
_____________________________
செக்கரியாவின் பாடல்
மு.மொழி.: நம் கடவுளின் பரிவுள்ளத்தாலும் இரக்கத்தாலும் விடியல் நம்மைத் தேடி வருகிறது.
இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றுவோம்.
ஏனெனில் அவர் தம் மக்களைத் தேடிவந்து விடுவித்தருளினார்.
தம் தூய இறைவாக்கினர் வாயினால்
தொடக்க முதல் அவர் மொழிந்தபடியே
அவர் தம் ஊழியராகிய தாவீதின் குடும்பத்தில்
வல்லமை உடைய மீட்பர் ஒருவர் நமக்காகத் தோன்றச் செய்தார்;
நம் பகைவரிடமிருந்தும்
நம்மை வெறுப்போர் அனைவரின் பிடியிலிருந்தும்
நம்மை மீட்பார்.
அவர் நம் மூதாதையருக்கு இரக்கம் காட்டி,
தமது தூய உடன்படிக்கையையும்,
நம் தந்தையாகிய ஆபிரகாமுக்கு அவர் இட்ட ஆணையையும்
நிறைவேற்ற நினைவு கூர்ந்தார்.
இவ்வாறு நாம் பகைவரின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டுத்
தூய்மையோடும் நேர்மையோடும்
வாழ்நாளெல்லாம் அச்சமின்றி
அவர் திருமுன் பணிசெய்யுமாறு வழிவகுத்தார்.
குழந்தாய்,
நீ உன்னத கடவுளின் இறைவாக்கினர் எனப்படுவாய்;
ஏனெனில் பாவ மன்னிப்பால் வரும் மீட்பை
அவர்தம் மக்களுக்கு அறிவித்து
ஆண்டவருக்கான வழியைச் செம்மைப்படுத்த
அவர் முன்னே செல்வாய்.
இருளிலும் இறப்பின் பிடியிலும் இருப்போர்க்கு ஒளிதரவும்,
நம்முடைய கால்களை அமைதி வழியில் நடக்கச் செய்யவும்
நம் கடவுளின் பரிவுள்ளத்தாலும் இரக்கத்தாலும்
விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடிவருகிறது.
தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும்...
மு.மொழி.: நம் கடவுளின் பரிவுள்ளத்தாலும் இரக்கத்தாலும் விடியல் நம்மைத் தேடி வருகிறது.
_____________________________
மன்றாட்டுக்கள்
தந்தையே, உம் மகனும் எங்கள் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவுக்காக உம்மைப் புகழ்கிறோம்; தூய ஆவியாரின் வழியாக, அவர் தம்மையே பலிப்பொருளாக உமக்கு ஒப்புக்கொடுத்தார்; அதனால் நாங்கள் சாவினின்றும் தன்னலத்திலிருந்தும் விடுதலை பெற்று உமது அமைதியில் சுதந்திரமாக வாழவும் செய்தார். எனவே உம்மை நோக்கி மன்றாடுகிறோம்.
℟ - தந்தையே, உமது திருவுளமே எமக்கு அமைதி.
ஆண்டவரே, இந்தப் புதிய நாளை உமது கொடையாக ஏற்றுக்கொள்கிறோம் - நாங்கள் புதுவாழ்வு வாழ அருள்புரியும்.
℟ - தந்தையே, உமது திருவுளமே எமக்கு அமைதி.
நீர் எல்லாவற்றையும் படைத்து பேணிக்காத்து வருகின்றீர் - அவற்றில் அனைத்திலும் உமது கரத்தின் வல்லமையை நாங்கள் உய்த்துணரச் செய்தருளும்.
℟ - தந்தையே, உமது திருவுளமே எமக்கு அமைதி.
உம் மகன் தம் திருஇரத்தத்தில, புதிய என்றுமுள்ள உடன்படிக்கையை முத்திரையிட்டார் - இந்த உடன்படிக்கையை நாங்கள் மதித்து வாழ்ந்திட எங்களுக்குத் துணை புரியும்.
℟ - தந்தையே, உமது திருவுளமே எமக்கு அமைதி.
இயேசு சிலுவையில் மரிக்கும்போது அவரது விலாவினின்று இரத்தமும் தண்ணீரும் வழிந்தோடின. நாங்கள் திருப்பலியில் பங்குகொள்ளும்போது உமது தூய ஆவியாரை எம்முள் பொழிந்தருளும்.
(தனிப்பட்ட தேவைகளுக்காக மன்றாடல்)
_____________________________
ஆண்டவரின் செபம்
℣: நமது புகழ்ச்சியையும் மன்றாட்டுகளையும் ஆண்டவருடைய இறைவேண்டலால் உறுதிப்படுத்துவோம்.
_____________________________
இறுதி செபம்
எல்லாம் வல்ல கடவுளே! கடவுளே! இன்று இந்தக்காலை இறைவேண்டலில், நாங்கள் எங்கள் புகழ்ச்சியை உமக்கு செலுத்துவதன் வழியாக, உம்முடைய புனிதர்களோடு நாங்கள் பெருமகிழ்வுடன் உம்மைப் புகழ அருள்புரியும். உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சிபுரியும் எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
_____________________________
ஆசி வழங்குதல்
அப: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக
எல்: உம் ஆன்மாவோடும் இருப்பாராக
அப: எல்லாம் வல்ல இறைவன் தந்தை மகன் தூய ஆவியார் உங்களை ஆசீர்வதிப்பாராக.
எல்: ஆமென்
அப: கிறிஸ்துவின் அமைதியில் சென்று வாருங்கள்
எல்: இறைவா உமக்கு நன்றி
(அல்லது)
முதல்: ஆண்டவர் நம்மை ஆசீர்வதித்து தீமைகள் அனைத்தினின்றும் பாதுகாத்து முடிவில்லா வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக
எல்: ஆமென்
முதல்: ஆண்டவரை வாழ்த்துவோமாக
எல்: இறைவா உமக்கு நன்றி.