2 - வியாழன் மாலைப் புகழ்
பாடல்
ஒருநாள் முடியும் தருணமிதில்
இருளும் படர்ந்து வருகையிலே
ஒருமனத் தோராய் உம்திருமுன்
வருமெமை ஆட்கொள் ஆண்டவரே.
பகலின் உழைப்பால் சோர்ந்தாலும்
அகத்தில் இருளை ஏற்காமல்
இகத்தின் வழிகளை விட்டகன்று
மகிமையின் ஒளியைப் பின்செல்வோம்.
இச்செபம் ஏற்பீர் எம்தந்தாய்
உச்ச நிலையமர் உம்மகனும்
அச்சம் அகற்றும் ஆவியுடன்
இச்செகம் என்றும் ஆளுகவே. ஆமென்.
(எழுந்து நிற்கவும்)
_____________________________
(அமரவும்)
மு.மொழி.1:உலகம் முழுவதும் என் மீட்பை அடைவதற்கு நான்
உன்னைப் பிற இனத்தாருக்கு ஒளியாக ஏற்படுத்துவேன்.
அரசருக்காக மன்றாடல்
திபா 72
கடவுளே அரசருக்கு உமது நீதித் தீர்ப்பை
வழங்கும் ஆற்றலை அளியும்
அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும்
அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக
உம்முடையோரான எளியோர்க்கு
நீதித் தீர்ப்பு வழங்குவாராக.
மலைகள் மக்களுக்குச் சமாதானத்தைக் கொடுக்கட்டும்
குன்றுகள் நீதியை விளைவிக்கட்டும்
எளியோரின் மக்களுக்கு அவர் நீதி வழங்குவாராக
ஏழைகளின் பிள்ளைகளைக் காப்பாராக
பிறரை ஒடுக்குவோரை நொறுக்கி விடுவாராக
கதிரவனும் நிலாவும் உள்ளவரையில்
உம்மக்கள் தலைமுறை தலைமுறையாக
உமக்கு அஞ்சி நடப்பார்களாக.
அவர் புல்வெளியில் பெய்யும் தூறலைப் போல் இருப்பாராக
நிலத்தில் பொழியும் மழையைப் போல் விளங்குவாராக
அவர் காலத்தில் நீதி தழைத்தோங்குவதாக
நிலா உள்ளவரையில் மிகுந்த சமாதானம் நிலவுவதாக
ஒரு கடலிலிருந்து அடுத்த கடல் வரைக்கும்
அவர் ஆட்சி செலுத்துவார்
பேராற்றிலிருந்து உலகின் எல்லை வரைக்கும் அவர் அரசாள்வார்.
பாலைவெளி வாழ்வோர் அவர்முன் குனிந்து வணங்குவர்
அவர் எதிரிகள் மண்ணை நக்குவார்கள்
தர்சீசு அரசர்களும் தீவுகளின் அரசர்களும்
காணிக்கைகளைக் கொண்டு வருவார்கள்
சேபாவிலும் செபாவிலும் உள்ள அரசர்கள்
நன்கொடைகளைக் கொண்டு வருவார்கள்
எல்லா அரசர்களும் அவர்முன்
தரைமட்டும் தாழ்ந்து வணங்குவார்கள்
எல்லா இனத்தவரும் அவருக்கு ஊழியம் செய்வார்கள்.
மு.மொழி.: உலகம் முழுவதும் என் மீட்பை அடைவதற்கு நான்
உன்னைப் பிற இனத்தாருக்கு ஒளியாக ஏற்படுத்துவேன்.
_____________________________
மு.மொழி. 2: ஆண்டவர் ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுவார். அவர்கள் உயிரைக் கொடுமையினின்றும் வன்முறையினின்றும் விடுவிப்பார்.
II
தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகளையும்
திக்கற்ற எளியோரையும் அவர் விடுவிப்பார்
வறியோர்க்கும் ஏழைகட்கும் அவர் இரக்கம் காட்டுவார்
ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுவார்
அவர்கள் உயிரைக் கொடுமையினின்றும்
வன்முறையினின்றும் விடுவிப்பார்
அவர்கள் இரத்தம் அவர் பார்வையில் விலைமதிப்பற்றது.
அவர் நீடூழி வாழ்க
சேபாவின் பொன் அவருக்குக் கொடுக்கப்படும்
அவருக்காக இடையறாது வேண்டுதல் செய்யப்படுவதாக
அவர்மீது ஆசிகள் வழங்கப்பெறுமாறு
நாள் முழுவதும் மன்றாடப்படுவதாக.
நாட்டில் தானியம் மிகுந்திடுக
மலைகளின் உச்சிகளில் பயிர்கள் அசைந்தாடுக
லெபனோனைப் போல் அவை பயன்தருக
வயல் வெளிப் புல்லென நகரின் மக்கள் பூத்துக் குலுங்குக.
அவர் பெயர் என்றென்றும் நிலைத்திருப்பதாக
கதிரவன் உள்ள வரையில் அவர் பெயர் நிலைப்பதாக
அவர்மூலம் மனிதர் ஆசி பெற விழைவாராக
எல்லா நாட்டினரும் அவரை
நற்பேறு பெற்றவரென வாழ்த்துவாராக!
ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேலின் கடவுள் போற்றி போற்றி
அவர் ஒருவரே வியத்தகு செயல்களைப் புரிகின்றார்
மாட்சி பொருந்திய அவரது பெயர் என்றென்றும் புகழப்பெறுவதாக
அவரது மாட்சி உலகெல்லாம் நிறைந்திருப்பதாக! ஆமென், ஆமென்.
மு.மொழி.: ஆண்டவர் ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுவார்.
அவர்கள் உயிரைக் கொடுமையினின்றும் வன்முறையினின்றும்
விடுவிப்பார்.
______________________________
மு.மொழி. 3: வெற்றியையும் அரசையும் நம் கடவுள்
தமதாக்கிக்கொண்டார்.
திவெ 11: 17, 18; 12: 10–12
கடவுளாகிய ஆண்டவரே எல்லாம் வல்லவரே
இருக்கின்றவரும் இருந்தவருமான
உமக்கு நன்றி செலுத்துகின்றோம்.
ஏனெனில் நீர் உமது பெரும் வல்லமையை வெளிப்படுத்தி
ஆட்சி செலுத்தலானீர்.
வேற்றினத்தார் சினந்தெழுந்தனர்
உமது சினமும் வெளிப்பட்டது
இறந்தோருக்குத் தீர்ப்பளிக்கவும்
உம் பணியாளர்களாகிய இறைவாக்கினர்கள்
இறைமக்கள் உமக்கு அஞ்சும் சிறியோர் பெரியோர்
ஆகிய அனைவருக்கும் கைம்மாறு அளிக்கவும்
உலகை அழிப்பவர்களை அழிக்கவும் காலம் வந்துவிட்டது.
இதோ மீட்பு வல்லமை நம் கடவுளின் ஆட்சி
அவருடைய மெசியாவின் அதிகாரம்
ஆகிய அனைத்தும் வந்துவிட்டன
நம் சகோதரர் சகோதரிகள்
மீது குற்றம் சுமத்தியவன்
நம் கடவுள் திருமுன் அல்லும் பகலும் அவர்கள் மீது
குற்றம் சாட்டியவன் வெளியே தள்ளப்பட்டான்,
ஆட்டுக்குட்டி சிந்திய இரத்தத்தாலும்
தாங்கள் பகர்ந்த சான்றாலும்
அவர்கள் அவனை வென்றார்கள்
அவர்கள் தங்கள் உயிர்மீது ஆசை வைக்கவில்லை
இறக்கவும் தயங்கவில்லை.
இதன்பொருட்டு விண்ணுலகே
அதில் குடியிருப்போரே மகிழ்ந்து கொண்டாடுங்கள்.
மு.மொழி.: வெற்றியையும் அரசையும் நம் கடவுள்
தமதாக்கிக்கொண்டார்.
______________________________
(எழுந்து நின்று வாசிக்கவும்)
அருள்வாக்கு 1 பேது 1:22-23
உண்மைக்குக் கீழ்ப்படிந்து உங்கள் ஆன்மா தூய்மை அடைந்துள்ளதால் நீங்கள் வெளிவேடமற்ற முறையில் சகோதரஅன்பு காட்ட முடியும். எனவே நீங்கள் தூய உள்ளத்தோடு ஒருவருக்கொருவர் ஆழ்ந்த அன்பு காட்டுங்கள். நீங்கள் அழியக்கூடிய வித்தினால் அல்ல; மாறாக, உயிருள்ளதும் நிலைத்திருப்பதுமான அழியா வித்தாகிய கடவுளின் வார்த்தையால் புதுப் பிறப்பு அடைந்துள்ளீர்கள்.
_____________________________
சிறு மறுமொழி
℣ - ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை
℟ - ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை
℣ - பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்.
℟ - ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை
℣ - தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக
℟ - ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை
_____________________________
(அனைவரும் எழுந்து நிற்கவும்)
மரியாவின் பாடல்
மு.மொழி.: ஆண்டவர் நீதியின்பால் பசிதாகமுள்ளோரை நலன்களால்
நிரப்பினார்.
ஆண்டவரை எனது உள்ளம்
போற்றிப் பெருமைப் படுத்துகின்றது.
என் மீட்பராம் கடவுளை நினைத்து
எனது மனம் பேருவகை கொள்கின்றது.
ஏனெனில் அவர் தம் அடிமையின்
தாழ்நிலையைக் கண்ணோக்கினார்.
இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும்
என்னைப் பேறுபெற்றவர் என்பர்.
ஏனெனில் வல்லவராம் கடவுள்
எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார்.
தூயவர் என்பதே அவரது பெயர்.
அவருக்கு அஞ்சி நடப்போருக்குத்
தலைமுறை தலைமுறையாய்
அவர் இரக்கம் காட்டி வருகிறார்.
அவர் தம் தோள் வலிமையைக் காட்டியுள்ளார்;
உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச்
சிதறடித்து வருகிறார்.
வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்;
தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்.
பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்;
செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார்.
மூதாதையருக்கு உரைத்தபடியே அவர்
ஆபிரகாமையும் அவர்தம் வழி மரபினரையும்
என்றென்றும் இரக்கத்தோடு
நினைவில் கொண்டுள்ளார்;
தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத்
துணையாக இருந்து வருகிறார் ".
மு.மொழி.: ஆண்டவர் நீதியின்பால் பசிதாகமுள்ளோரை நலன்களால் நிரப்பினார்.
_____________________________
மன்றாட்டுக்கள்
தந்தையாம் இறைவனிடம் நன்றியுணர்வோடு நம் இதயங்களை எழுப்புவோம். அவரே கிறிஸ்துவில் நம்மை எல்லாவித ஞானக் கொடைகளாலும் நிரப்பினார்.
℟ - ஆண்டவரே உம் மக்களை ஆசீர்வதியும்.
எல்லாம் வல்ல இறைவா எம் நாட்டிற்காக வேண்டுகிறோம் – நீதியையும், சகோதரத்துவத்தையும் அதில் வளரச் செய்வீராக.
℟ - ஆண்டவரே உம் மக்களை ஆசீர்வதியும்.
அனைத்துக் கிறிஸ்தவர்களுக்காகவும் . வேண்டுகிறோம் – தந்தையே பரிவன்புடன் அவர்களைக் கண்ணோக்கி உம் திருமகனின் திருமுகத்தை அவர்களில் காண்பீராக.
℟ - ஆண்டவரே உம் மக்களை ஆசீர்வதியும்.
(தனிப்பட்ட தேவைகளுக்காக மன்றாடல்)
_____________________________
ஆண்டவரின் செபம்
_____________________________
இறுதி செபம்
ஆண்டவரே, நாங்கள் உமது கருணையைக் கெஞ்சிக் கேட்கிறோம். இந்த மாலைப்புகழை நாங்கள் உமக்கே அர்ப்பணிக்கிறோம். எமது உள்ளம் எப்பொழுதும் உமது திருச்சட்டத்தைத் தியானிக்குமாறு அருள் புரியும். கைம்மாறாக எங்களுக்கு உமது ஒளியையும் நிலையான வாழ்வையும் அளித்தருளும். உம்மோடு.....
_____________________________
ஆசி வழங்குதல்
குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக
எல்: உம் ஆன்மாவோடும் இருப்பாராக
குரு: எல்லாம் வல்ல இறைவன் தந்தை மகன் தூய ஆவியார் உங்களை ஆசீர்வதிப்பாராக.
எல்: ஆமென்
குரு: கிறிஸ்துவின் அமைதியில் சென்று வாருங்கள்
எல்: இறைவா உமக்கு நன்றி
(அல்லது)
முதல்: ஆண்டவர் நம்மை ஆசீர்வதித்து தீமைகள் அனைத்தினின்றும் பாதுகாத்து முடிவில்லா வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக
எல்: ஆமென்
முதல்: ஆண்டவரை வாழ்த்துவோமாக
எல்: இறைவா உமக்கு நன்றி.