2 - ஞாயிறு மாலைப் புகழ் 2

 2- ஞாயிறு மாலைப் புகழ்

 பாடல் (பக்கம் 22)

(எழுந்து நிற்கவும்)

_____________________________

(அமரவும்)

மு.மொழி.1: மெல்கிசெதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே என்று ஆண்டவர் ஆணையிட்டுச் சொன்னார். அல்லேலூயா.

ஆண்டவரும் அவர் தேர்ந்து கொண்ட அரசரும்
திபா 110 : 1-5, 7 

ஆண்டவர் என் தலைவரிடம்
நான் உம் பகைவரை உமக்குக் கால்மணையாக்கும் வரை
நீர் என் வலப்பக்கத்தில் வீற்றிரும் என்று உரைத்தார்.

வலிமைமிகு உமது செங்கோலை
ஆண்டவர் சீயோனிலிருந்து ஒங்கச் செய்வார்
உம் எதிரிகளிடையே ஆட்சி செலுத்தும்

நமது படைக்குத் தலைமை தாங்கும் நாளில்
தாம் கோலத்துடன் உம் மக்கள் தம்மை உவந்தளிப்பர்
வைகறை கருவுயிர்த்த பனியைப் போல
உம் இளம் வீரர் உம்மை வந்தடைவர்.

மெல்கிசெதேக்கின் முறைப்படி
நீர் என்றென்றும் குருவே என்று
ஆண்டவர் ஆணையிட்டுச் சொன்னார்
அவர் தம் மனத்தை மாற்றிக் கொள்ளார்.

என் தலைவர் உம் வலப்பக்கத்தில் உள்ளார்.
தம் சினத்தின் நாளில் மன்னர்களை நொறுக்குவார்
வழியில் உள்ள நீரோடைகளிலிருந்து அவர் பருகுவார்
ஆகவே அவர் தலைநிமிர்ந்து நிற்பார்.

மு.மொழி.: மெல்கிசெதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே என்று ஆண்டவர் ஆணையிட்டுச் சொன்னார். அல்லேலூயா.
_____________________________

மு.மொழி. 2:  நம் கடவுளோ விண்ணுலகில் உள்ளார். தம் திருவுளப்படி அனைத்தையும் செய்கின்றார்.

ஆண்டவரே உண்மையான கடவுள்
திபா 115

எங்களுக்கன்று ஆண்டவரே எங்களுக்கன்று
மாட்சியை உம் பெயருக்கே உரித்தாக்கும்
உம் பேரன்பையும் உண்மையையும் முன்னிட்டு
அதை உமக்கே உரியதாக்கும்
அவர்களுடைய கடவுள் எங்கே எனப்
பிற இனத்தார் வினவுவது ஏன்
நம் கடவுளோ விண்ணுலகில் உள்ளார்
தம் திருவுளப்படி அனைத்தையும் செய்கின்றார்.

அவர்களுடைய தெய்வச் சிலைகள்
வெறும் வெள்ளியும் பொன்னுமே
வெறும் மனிதக் கைவேலையே
அவற்றுக்கு வாய்கள் உண்டு
ஆனால் அவை பேசுவதில்லை
கண்கள் உண்டு ஆனால் அவை பார்ப்பதில்லை
செவிகள் உண்டு ஆனால் அவை கேட்பதில்லை
மூக்குகள் உண்டு ஆனால் அவை முகர்வதில்லை.

கைகள் உண்டு ஆனால் அவை தொட்டுணர்வதில்லை
கால்கள் உண்டு ஆனால் அவை நடப்பதில்லை
தொண்டைகள் உண்டு
ஆனால் அவை குரல் எஅவற்றைச் செய்கின்றோரும்
அவற்றில் நம்பிக்கை கொள்ளும் அனைவரும்
அவற்றைப் போல் ஆவர்.

இஸ்ரயேலரே ஆண்டவர்மீது நம்பிக்கை கொள்ளுங்கள்
அவரே உங்களுக்குத் துணையும் கேடயமும் ஆவார்
ஆரோனின் குலத்தாரே
ஆண்டவர்மீது நம்பிக்கை கொள்ளுங்கள்
அவரே உங்களுக்குத் துணையும் கேடயமுமாவார்
ஆண்டவருக்கு அஞ்சி நடப்போரே
அவர்மீது நம்பிக்கை கொள்ளுங்கள்
அவரே உங்களுக்குத் துணையும் கேடயமும் ஆவார்.

ஆண்டவர் நம்மை நினைவு கூர்ந்துள்ளார்
நமக்குத் தம் ஆசியை அளிப்பார்
இஸ்ரயேல் குடும்பத்தாருக்கு ஆசி வழங்குவார்
ஆரோனின் குடும்பத்தாருக்கு ஆசி வழங்குவார்
தமக்கு அஞ்சி நடப்போர்க்கு
ஆண்டவர் ஆசி வழங்குவார்
சிறியோர்க்கும் பெரியோர்க்கும் ஆசி வழங்குவார்.
ஆண்டவர் உங்கள் இனத்தைப் பெருகச் செய்வார்
உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் வளரச் செய்வார்
நீங்கள் ஆண்டவரிடமிருந்து ஆசி பெறுவீர்களாக
விண்ணையும் மண்ணையும் உருவாக்கியவர் அவரே
விண்ணகமோ ஆண்டவருக்கு உரியது;
மண்ணகத்தையோ அவர் மானிடர்க்கு வழங்கியுள்ளார்.

இறந்தோர் ஆண்டவரைப் புகழ்வதில்லை
மௌன உலகிற்குள் இறங்குவோர் எவருமே
அவரைப் புகழ்வதில்லை
நாமோ ஆண்டவரை வாழ்த்துகின்றோம்
இப்பொழுதும் எப்பொழுதும் வாழ்த்துகின்றோம்.


மு.மொழி. 2: நம் கடவுளோ விண்ணுலகில் உள்ளார். தம் திருவுளப்படி அனைத்தையும் செய்கின்றார்.
______________________________

மு.மொழி. 3: கடவுளின் பணியாளர்களே அவருக்கு அஞ்சி நடப்பவர்களே சிறியோர்களே பெரியோர்களே நீங்கள் அனைவரும் நம் கடவுளைப் புகழுங்கள். அல்லேலூயா.

ஆட்டுக்குட்டியின் திருமணப்பாடல்
திவெ 19:1ஆ-2, 5-7

அல்லேலூயா!
மீட்பும் மாட்சியும் வல்லமையும் நம் கடவுளுக்கே உரியன.
அல்லேலூயா.
ஏனெனில் அவருடைய தீர்ப்புகள்

உண்மை உள்ளவை, நீதியானவை.
அல்லேலூயா
கடவுளின் பணியாளர்களே, நம் கடவுளைப் புகழுங்கள்.
அல்லேலூயா.

அவருக்கு அஞ்சி நடப்பவர்களே,
சிறியோர்களே, பெரியோர்களே,
நீங்கள் அனைவரும் நம் கடவுளைப் புகழுங்கள்.
அல்லேலூயா

உன் கடவுளாகிய ஆண்டவர், எல்லாம் வல்லவர்;
அவர் ஆட்சி செலுத்துகின்றார்.
அல்லேலூயா.

அவர் ஆட்சி செலுத்துகின்றார்.
எனவே மகிழ்வோம்
பேருவகையுடன் அவரைப் போற்றிப் புகழ்வோம்.
அல்லேலூயா!

அல்லேலூயா!
ஏனெனில் ஆட்டுக் குட்டியின் திருமணவிழா வந்துவிட்டது
மணமகளும் விழாவுக்கு ஆயத்தமாய் இருக்கிறார்.
அல்லேலுயா!

மு.மொழி.: கடவுளின் பணியாளர்களே அவருக்கு அஞ்சி நடப்பவர்களே சிறியோர்களே பெரியோர்களே நீங்கள் அனைவரும் நம் கடவுளைப் புகழுங்கள். அல்லேலூயா.

______________________________

(எழுந்து நின்று வாசிக்கவும்)

அருள்வாக்கு             2 தெச 2: 13-14

ஆண்டவரால் அன்புகூரப்பட்ட சகோதர சகோதரிகளே! நாங்கள் கடவுளுக்கு உங்கள் பொருட்டு என்றும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம். ஏனெனில் தூய ஆவியால் தூய்மையாக்கப்பட்டு நீங்கள் உண்மையை நம்பி மீட்பு அடையும்படி, கடவுள் உங்களை முதன்முதலாகத் தேர்ந்து கொண்டார். நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மாட்சியை நீங்கள் அடையும்பொருட்டே நாங்கள் அறிவித்த நற்செய்தியின் வழியாக அவர் உங்களை அழைத்தார்.

_____________________________

சிறு மறுமொழி

℣ - ஆண்டவர் மிகப்பெரியவர்; அவர் ஆற்றல் மேன்மை மிக்கது.
℟ - ஆண்டவர் மிகப்பெரியவர்; அவர் ஆற்றல் மேன்மை மிக்கது.

℣ - அவரது ஞானம் அளவிட முடியாதது
℟ - ஆண்டவர் மிகப்பெரியவர்; அவர் ஆற்றல் மேன்மை மிக்கது.

℣ - தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக
℟ - ஆண்டவர் மிகப்பெரியவர்; அவர் ஆற்றல் மேன்மை மிக்கது.
_____________________________

(அனைவரும் எழுந்து நிற்கவும்)

மரியாவின் பாடல்

மு.மொழி.: என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம்
பேருவகை கொள்கின்றது.

ஆண்டவரை எனது உள்ளம் 
போற்றிப் பெருமைப் படுத்துகின்றது. 
என் மீட்பராம் கடவுளை நினைத்து 
எனது மனம் பேருவகை கொள்கின்றது.
ஏனெனில் அவர் தம் அடிமையின் 
தாழ்நிலையைக் கண்ணோக்கினார்.

இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் 
என்னைப் பேறுபெற்றவர் என்பர்.
ஏனெனில் வல்லவராம் கடவுள் 
எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். 
தூயவர் என்பதே அவரது பெயர்.

அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் 
தலைமுறை தலைமுறையாய் 
அவர் இரக்கம் காட்டி வருகிறார்.
அவர் தம் தோள் வலிமையைக் காட்டியுள்ளார்; 
உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் 
சிதறடித்து வருகிறார்.
வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்; 
தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்.
பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்; 
செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார்.

மூதாதையருக்கு உரைத்தபடியே அவர் 
ஆபிரகாமையும் அவர்தம் வழி மரபினரையும் 
என்றென்றும் இரக்கத்தோடு 
நினைவில் கொண்டுள்ளார்;
தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத் 
துணையாக இருந்து வருகிறார் ".

மு.மொழி.: என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம்
பேருவகை கொள்கின்றது.

_____________________________

மன்றாட்டுக்கள்

நற்செய்தியின் வழியாக தம் மாட்சியில் பங்குகொள்ள ஆண்டவராகிய இயேசு நம்மை அழைக்கிறார். நாம் அவரோடு இணைந்து நமது மன்றாட்டுக்களை விண்ணகத் தந்தையிடம் எழுப்புவோம்.

℟ - ஆண்டவரே இரக்கமுடன் எங்கள் மன்றாட்டுக்குச் செவி
சாய்த்தருளும்.

நம் குடும்பங்களுக்காகவும் நாம் வாழும் சமூகங்களுக்காகவும் மன்றாடுவோம் – நாங்கள் இவற்றில் உமது பிரசன்னத்தைக் கண்டுணர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

℟ - ஆண்டவரே இரக்கமுடன் எங்கள் மன்றாட்டுக்குச் செவி
சாய்த்தருளும்.

நமக்காக மன்றாடுவோம் – வருகின்ற வாரத்தில் நாங்கள் பிறருக்குப் பணிபுரியவும் ஓய்வில் அமைதி காணவும் வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

℟ - ஆண்டவரே இரக்கமுடன் எங்கள் மன்றாட்டுக்குச் செவி
சாய்த்தருளும்.

எல்லா நாடுகளுக்காகவும் மன்றாடுவோம் அவைகள் சமாதானத்திற்குரியவற்றைத் தேடவும், எங்கும் மனித உரிமைகளும் சுதந்திரமும் மதிக்கப்படவும் வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

℟ - ஆண்டவரே இரக்கமுடன் எங்கள் மன்றாட்டுக்குச் செவி
சாய்த்தருளும்.

இறந்த விசுவாசிகளுக்காக மன்றாடுவோம் – அவர்கள் உமது அமைதியில் இளைப்பாற வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

℟ - ஆண்டவரே இரக்கமுடன் எங்கள் மன்றாட்டுக்குச் செவி
சாய்த்தருளும்.

(தனிப்பட்ட தேவைகளுக்காக மன்றாடல்)
_____________________________

ஆண்டவரின் செபம்
_____________________________

இறுதி செபம்

எல்லாம் வல்ல இரக்கமுள்ள இறைவா, எங்களுக்கு எதிரானவற்றையெல்லாம் தயவாய் அகற்றியருளும். இவ்வாறு எங்கள் உள்ளத்திலும் உடலிலும் எழுகின்ற தடைகளை அகற்றி மனமுவந்து உமக்கு ஊழியம் புரிவோமாக. உம்மோடு....
_____________________________

ஆசி வழங்குதல்

குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக 
எல்: உம் ஆன்மாவோடும் இருப்பாராக 

குரு: எல்லாம் வல்ல இறைவன் தந்தை மகன் தூய ஆவியார் உங்களை ஆசீர்வதிப்பாராக. 
எல்: ஆமென் 

குரு: கிறிஸ்துவின் அமைதியில் சென்று வாருங்கள் 
எல்: இறைவா உமக்கு நன்றி 

(அல்லது)

முதல்: ஆண்டவர் நம்மை ஆசீர்வதித்து தீமைகள் அனைத்தினின்றும் பாதுகாத்து முடிவில்லா வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக 
எல்: ஆமென் 

முதல்: ஆண்டவரை வாழ்த்துவோமாக 
எல்: இறைவா உமக்கு நன்றி.