2 - வியாழன் காலைப் புகழ்
பாடல்
(எழுந்து நிற்கவும்)
எழுந்தது ஞாயிறு, விடிந்தது காலை,
விழுந்து பணிவோம் இறைவனின் தாளில்;
பழுதுளப் பாவப் படுகுழி இன்று
விழுந்திடா தெம்மைக் காத்திடவும்.
பிணக்கும் பகையும் விளையா வண்ணம்
இணக்கம் கொணர நாவை அடக்குவோம்,
மனக்கண் முன்னே தீய காட்சியை
எழுப்பும் கண்களை அடக்கிடு வோமே.
உடலை ஒறுத்து உணவைக் குறைத்து,
திடமாய்ச் செருக்கை அகற்றிடு வோமே,
மடைமை யின்றி மனத்தைக் காத்து
உடைமையாய் அருளைக் கொண்டிடு வோமே.
பகலும் மறைகிறது இரவு வருகிறது
அகமும் உடலும் அவருக்கென நினைத்து
உகந்த நிலையில் இருக்க இறைஞ்சிப்
புகழ்ந்து அவரைப் போற்றிடு வோமே.
விண்ணகத் தந்தையும் அவர்திரு மகனும்
எண்ணறு அருள் தரும் ஆவி யாருடன்
பண்ணிலும் பாவிலும் எக்காலத்திலும்
மண்ணகம் எங்கணும் மாண்பினைப் பெறுக. ஆமென்.
(அமரவும்)
___________________________
மு.மொழி.1: கடவுளே, உமது ஆற்றலைக் கிளர்ந்தெழச் செய்து எம்மை மீட்க வாரும்.
ஆண்டவரே, உம் திராட்சைத் தோட்டத்தை வந்து பாரும் - திபா 80
ஆண்டவராகிய இயேசுவே, வாரும் (திவெ 22:20)
இஸ்ரயேலின் ஆயரே செவிசாயும்
யோசேப்பை மந்தையென நடத்திச் செல்கின்றவரே!
கெருபுகளின்மீது வீற்றிருப்பவரே, ஒளிர்ந்திடும்!
எப்ராயிம், பென்யமின், மனாசேயின் முன்னிலையில்
உமது ஆற்றலைக் கிளர்ந்தெழச் செய்து
எம்மை மீட்க வாரும்.
இறைவா, எங்களை முன்னைய நன்னிலைக்குக்
கொணர்ந்தருளும்
எம்மை மீட்குமாறு
உமது இன்முக ஒளியைக் காட்டியருளும்
படைகளின் கடவுளாம் ஆண்டவரே!
உம் மக்களின் வேண்டுதலுக்கு எதிராக
எத்தனை நாள் நீர் சினங்கொண்டிருப்பீர்
கண்ணீராம் உணவை அவர்கள் உண்ணச் செய்தீர்
கண்ணீரையே அவர்கள் பெருமளவு பருகச் செய்தீர்
அண்டை நாட்டாருக்கு எங்களைச்
சண்டைப் பொருள் ஆக்கினீர்
எங்கள் எதிரிகள் எங்களை ஏளனம் செய்கின்றார்கள்.
படைகளின் கடவுளே முன்னைய நன்னிலைக்கு
எங்களைக் கொணர்ந்தருளும்
எங்களை மீட்குமாறு உமது இன்முக ஒளியைக் காட்டியருளும்.
எகிப்தினின்று திராட்சைச் செடி ஒன்றைக் கொண்டு வந்தீர்
வேற்றினத்தாரை விரட்டி விட்டு அதனை நட்டுவைத்தீர்.
அதற்கென நிலத்தை ஒழுங்குபடுத்திக் கொடுத்தீர்
அது ஆழ வேரூன்றி நாட்டை நிரப்பியது.
அதன் நிழல் மலைகளையும் அதன் கிளைகள்
வலிமைமிகு கேதுரு மரங்களையும் மூடின
கடல்வரை அதன் கொடிகள் பரந்தன;
பேராறு வரை அதன் தளிர்கள் பரவின.
பின்னர் நீர் ஏன் அதன் மதில்களைத் தகர்த்துவிட்டீர்?
அவ்வழிச் செல்வோர் அனைவரும்
அதன் பழத்தைப் பறிக்கின்றனரே!
காட்டுப் பன்றிகள் அதனை அழிக்கின்றனவே!
வயல் வெளி உயிரினங்கள் அதனை மேய்கின்றனவே!
படைகளின் கடவுளே! மீண்டும் வாரும்!
விண்ணுலகினின்று கண்ணோக்கிப் பாரும்;
இந்த திராட்சைக் கொடிமீது பரிவு காட்டும்!
உமது வலக்கை நட்டுவைத்த கிளையைக் காத்தருளும்.
உமக்கென நீர் உறுதிப்படுத்திய மகவைக் காத்தருளும்.
அவர்கள் அதற்குத் தீ மூட்டினார்கள்;
அதை வெட்டித் தள்ளிவிட்டார்கள்;
உமது முகத்தின் சினமிகு நோக்கினால்,
அவர்கள் அழிந்துபோவார்களாக!
உமது வலப்பக்கம் இருக்கும் மனிதரை
உமது கை காப்பதாக!
உமக்கென்றே நீர் உறுதிப்படுத்திய
மானிட மைந்தரைக் காப்பதாக!
இனி நாங்கள் உம்மைவிட்டு அகலோம்;
எமக்கு வாழ்வு அளித்தருளும்;
உமது பெயரை நாங்கள் தொழுவோம்.
படைகளின் கடவுளான ஆண்டவரே!
எங்களை முன்னைய நன்னிலைக்குக் கொணர்ந்தருளும்!
நாங்கள் விடுதலை பெறுமாறு
உமது இன்முக ஒளியைக் காட்டியருளும்!
மு.மொழி.: கடவுளே, உமது ஆற்றலைக் கிளர்ந்தெழச் செய்து எம்மை மீட்க வாரும்.
_____________________________
மு.மொழி. 2: ஆண்டவருக்குப் புகழ்ப்பா அமைத்துப் பாடுங்கள். ஏனெனில், அவர் மாட்சியுறும் செயல்கள் செய்துள்ளார். அனைத்துலகும் அதை அறிந்து கொள்வதாக.
மீட்படைந்தோரின் பாடல் - சிறுபாடல் - எசா 12:1-6
யாரேனும் தாகமாய் இருந்தால் என்னிடம் வரட்டும். (யோவா 7:37)
ஆண்டவரே, நான் உமக்கு நன்றி சொல்வேன்
நீர் என்மேல் சினமடைந்திருந்தீர்;
இப்பொழுதோ உம் சினம் தணிந்து விட்டது;
நீர் எனக்கு ஆறுதலும் அளித்துள்ளீர்.
இறைவன் என் மீட்பர்
அவர்மேல் நம்பிக்கை வைக்கிறேன்.
நான் அஞ்சமாட்டேன்; ஆண்டவரே என் ஆற்றல்
அவரையே பாடுவேன், என் மீட்பும் அவரே.
மீட்பருளும் ஊற்றுகளிலிருந்து நீங்கள்
அகமகிழ்வோடு தண்ணீர் முகந்து கொள்வீர்கள்.
அந்நாளில் நீங்கள் சொல்வதாவது;
ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்;
அவர் திருப் பெயரைப் போற்றுங்கள்;
மக்களினங்களிடையே அவர் செயல்களை அறிவியுங்கள்;
அவர் திருப்பெயர் உயர்க எனப் பறைசாற்றுங்கள்.
ஆண்டவருக்குப் புகழ்ப்பா அமைத்துப் பாடுங்கள்;
ஏனெனில் அவர் மாட்சியுறும் செயல்களைப் புரிந்துள்ளார்
அனைத்துலகும் இதை அறிந்து கொள்வதாக
சியோனில் குடியிருப்போரே! ஆர்ப்பரித்து அக்களியுங்கள்;
இஸ்ரயேலின் தூயவர் உங்களிடையே சிறந்து விளங்குகின்றார்.
மு.மொழி.: ஆண்டவருக்குப் புகழ்ப்பா அமைத்துப் பாடுங்கள். ஏனெனில், அவர் மாட்சியுறும் செயல்கள் செய்துள்ளார். அனைத்துலகும் அதை அறிந்து கொள்வதாக.
______________________________
மு.மொழி. 3: நமது வலிமையாகிய கடவுளை மகிழ்ந்து பாடுங்கள்.
உடன்படிக்கையைப் புதுப்பித்தல் - திபா 81
அன்பர்களே, நம்பிக்கை கொள்ளாத தீய உள்ளம், வாழும் கடவுளை விட்டு விலகும். இத்தகைய தீய உள்ளம் உங்களுள் எவருக்கும் இராதபடி பார்த்துக்கொள்ளுங்கள். (எபி 3:12)
நமது வலிமையாகிய கடவுளை மகிழ்ந்து பாடுங்கள்;
யாக்கோபின் கடவுளைப் புகழ்ந்து ஏத்துங்கள்
இன்னிசை எழுப்புங்கள்; மத்தளம் கொட்டுங்கள்;
யாழும் சுரமண்டலமும் இசைத்து
இனிமையாய்ப் பாடுங்கள்.
அமாவாசையில் பௌர்ணமியில்
நமது திருவிழா நாளில் எக்காளம் ஊதுங்கள்.
இது இஸ்ரயேல் மக்களுக்குரிய விதிமுறை
யாக்கோபின் கடவுள் தந்த நீதிநெறி.
அவர் எகிப்துக்கு எதிராகச் சென்றபொழுது
யோசேப்புக்கு அளித்த சான்று இதுவே.
அப்பொழுது நான் அறியாத மொழியைக் கேட்டேன்.
தோளினின்று உன் சுமையை அகற்றினேன்
கூடையினின்று உன் கைகளை விடுதலை பெற்றன
துன்ப வேளையில் என்னை நோக்கி மன்றாடினீர்கள்.
நான் உங்களை விடுவித்தேன்;
இடி முழங்கும் மேகத்தினின்று
உங்களுக்கு நான் மறுமொழி கூறினேன்;
மெரிபாலின் நீரூற்று அருகில் உங்களைச் சோதித்தேன்.
என் மக்களே, எனக்குச் செவிகொடுங்கள்;
நான் உங்களுக்கு எச்சரிக்கை விடுக்கின்றேன்;
இஸ்ரயேலரே, நீங்கள் எனக்குச் செவிசாய்த்தால்,
எவ்வளவு நலமாயிருக்கும்!
உங்களிடையே வேற்றுத் தெய்வம் இருத்தலாகாது;
நீங்கள் அன்னிய தெய்வத்தைத் தொழலாகாது.
உங்களை எகிப்து நாட்டினின்று அழைத்து வந்த
கடவுளாகிய ஆண்டவர் நானே
உங்கள் வாயைத் திறங்கள்; நான் அதை நிரப்புவேன்.
ஆனால் என் மக்கள் என் குரலுக்குச் செவிசாய்க்கவில்லை;
இஸ்ரயேலர் எனக்குப் பணியவில்லை.
எனவே அவர்கள் தங்கள் எண்ணங்களின்படியே நடக்குமாறு
அவர்களின் இதயக்கடினத்திற்கே அவர்களை விட்டு விட்டேன்.
என் மக்கள் எனக்குச் செவிசாய்த்திருந்தால்,
இஸ்ரயேலர் நான் காட்டிய வழியில் நடந்திருந்தால்
எவ்வளவோ நலமாயிருந்திருக்கும்!
நான் விரைவில் அவர்கள் எதிரிகளை அடக்குவேன்;
என் கை அவர்களின் பகைவருக்கு எதிராகத் திரும்பும்.
ஆண்டவரை வெறுப்போர் அவர்முன் கூனிக் குறுகுவர்
அவர்களது தண்டனைக் காலம் என்றென்றும் நீடித்திருக்கும்.
நயமான கோதுமையை உங்களுக்கு நான்
உணவாகக் கொடுப்பேன்;
மலைத் தேனால் உங்களுக்கு நிறைவளிப்பேன்.
மு.மொழி.: நமது வலிமையாகிய கடவுளை மகிழ்ந்து பாடுங்கள்.
______________________________
(எழுந்து நின்று வாசிக்கவும்)
அருள்வாக்கு உரோ 14:17-19
இறையாட்சி என்பது நாம் உண்பதையும் குடிப்பதையும் அடிப்படையாகக் கொண்டதல்ல; மாறாகத் தூய ஆவி அருளும் நீதி, அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றையே அடிப்படையாகக் கொண்டது. இத்தகைய இறையாட்சி மனப்பான்மையோடு கிறிஸ்துவுக்குப் பணிபுரிவோர் கடவுளுக்கு உகந்தோராயும் மக்களின் மதிப்புக்கு உரியோராயும் இருப்பர். ஆகையால் அமைதிக்கு வழிவகுப்பவற்றை நாடுவோமாக! ஒருவர் மற்றவருக்கு வளர்ச்சி தருபவற்றைச் செய்ய முயலுவோமாக!
_____________________________
சிறு மறுமொழி
℣ - ஆண்டவரே அதிகாலையில் நான் உம்மை நினைவு கூர்வேன்.
℟ - ஆண்டவரே அதிகாலையில் நான் உம்மை நினைவு கூர்வேன்.
℣ - நீரே எனக்குத் துணை.
℟ - நான் உம்மை நினைவு கூர்வேன்.
℣ - தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக
℟ - ஆண்டவரே அதிகாலையில் நான் உம்மை நினைவு கூர்வேன்.
_____________________________
(அனைவரும் எழுந்து நிற்கவும்)
செக்கரியாவின் பாடல்
மு.மொழி.: ஆண்டவரே, மீட்பின் அறிவை உம் மக்களுக்கு வழங்கியருளும். எங்கள் பாவங்களை மன்னித்தருளும்.
இஸ்ரயேலின் கடவுளாகிய
ஆண்டவரைப் போற்றுவோம்.
ஏனெனில் அவர் தம் மக்களைத்
தேடிவந்து விடுவித்தருளினார்.
தம் தூய இறைவாக்கினர் வாயினால்
தொடக்க முதல் அவர் மொழிந்தபடியே
அவர் தம் ஊழியராகிய தாவீதின் குடும்பத்தில்
வல்லமை உடைய மீட்பர் ஒருவர்
நமக்காகத் தோன்றச் செய்தார்;
நம் பகைவரிடமிருந்தும்
நம்மை வெறுப்போர் அனைவரின் பிடியிலிருந்தும்
நம்மை மீட்பார்.
அவர் நம் மூதாதையருக்கு இரக்கம் காட்டி,
தமது தூய உடன்படிக்கையையும்,
நம் தந்தையாகிய ஆபிரகாமுக்கு
அவர் இட்ட ஆணையையும்
நிறைவேற்ற நினைவு கூர்ந்தார்.
இவ்வாறு நாம் பகைவரின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டுத்
தூய்மையோடும் நேர்மையோடும்
வாழ்நாளெல்லாம் அச்சமின்றி
அவர் திருமுன் பணிசெய்யுமாறு வழிவகுத்தார்.
குழந்தாய்,
நீ உன்னத கடவுளின் இறைவாக்கினர் எனப்படுவாய்;
ஏனெனில் பாவ மன்னிப்பால் வரும் மீட்பை
அவர்தம் மக்களுக்கு அறிவித்து
ஆண்டவருக்கான வழியைச் செம்மைப்படுத்த
அவர் முன்னே செல்வாய்.
இருளிலும் இறப்பின் பிடியிலும் இருப்போர்க்கு ஒளிதரவும்,
நம்முடைய கால்களை அமைதி வழியில் நடக்கச் செய்யவும்
நம் கடவுளின் பரிவுள்ளத்தாலும் இரக்கத்தாலும்
விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடிவருகிறது.
தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும்...
மு.மொழி.: ஆண்டவரே பாவ மன்னிப்பால் வரும் மீட்பை உம்
மக்களுக்கு அறிவியும்.
_____________________________
மன்றாட்டுக்கள்
நம் கடவுளும் தந்தையுமானவர் போற்றப் பெறுவாராக. அவர் தம் பிள்ளைகளின் இறைவேண்டல்களுக்குச் செவிசாய்க்கின்றார்.
℟ - ஆண்டவரே எங்களுக்குச் செவிசாய்த்தருளும்.
உம் மகனை எம்மிடம் அனுப்பியதற்காகத் தந்தையே உமக்கு நன்றி செலுத்துகின்றோம். இந்த நாள் முழுவதும் அவரை எம் கண்முண் கொண்டிருப்போம்.
℟ - ஆண்டவரே எங்களுக்குச் செவிசாய்த்தருளும்.
உமது ஞானம் எமக்கு வழிகாட்டட்டும் – புதுவாழ்வில் நாங்கள் வழிநடக்கத் துணை புரியும்.
℟ - ஆண்டவரே எங்களுக்குச் செவிசாய்த்தருளும்.
எங்களது வலுவின்மையில் ஆண்டவரே, உமது ஆற்றலைத் தாரும் - நாங்கள் பிரச்சனைகளைச் சந்திக்கும் பொழுது, அதை எதிர்கொள்ளும் துணிச்சலை எங்களுக்குத் தாரும்.
℟ - ஆண்டவரே எங்களுக்குச் செவிசாய்த்தருளும்.
இன்று எமது சிந்தனை, சொல், செயல் இவை அனைத்தையும் நெறிப்படுத்தும் – உமது திருவுளத்தை நாங்கள் அறிந்து செயல்படுத்தத் துணைபுரியும்.
℟ - ஆண்டவரே எங்களுக்குச் செவிசாய்த்தருளும்.
(தனிப்பட்ட தேவைகளுக்காக மன்றாடல்)
_____________________________
ஆண்டவரின் இறைவேண்டல் - அழைப்பு
1. நம் மீட்பர் நமக்குக் கற்பித்தவாறு, நாம் விண்ணகத் தந்தையை நோக்கி மன்றாடுவோம்.
2 இவ்வுலகில் இறையாட்சி வரவேண்டுமென்று மன்றாடுவோம்.
3. நமது புகழ்ச்சிகளையும் மன்றாட்டுகளையும் கிறிஸ்துவின் வார்த்தைகளில் சுருக்கமாய்ச் சொல்வோம்.
4. நமது புகழ்ச்சியையும் மன்றாட்டுகளையும் ஆண்டவருடைய இறைவேண்டலால் உறுதிப்படுத்துவோம்.
5. இப்போது கிறிஸ்துவே கற்றுக் வார்த்தைகளால் தந்தையைப் புகழ்ந்து மன்றாடுவோம்.
6. (கிறிஸ்துவை நோக்கி) ஆண்டவரே, நாங்கள் உம் போதனையின்படி இறைவேண்டல் செய்யும் இவ்வேளையில், எங்களை உம் ஆட்சியில் நினைவு கூர்ந்தருளும். கொடுத்த
7. நம் ஆண்டவருடைய போதனையின்படி, நாம் நம்பிக்கையோடு சொல்வோம்.
8. நம் ஆண்டவரின் படிப்பினையைப் பின்பற்றி, நாம் மன்றாடுவோம்.
9. இறைவேண்டல்களுக்கெல்லாம் எடுத்துக்காட்டாக ஆண்டவர் நமக்குக் கொடுத்த வேண்டலை நாம் ஒருமித்து இப்போது சொல்வோம்.
__________________________
இறுதி செபம்
உண்மை ஒளியும், ஒளியைப் படைத்தவரும் நிரே. நாங்கள் எப்பொழுதும் தூய்மையானவற்றை உண்மையாக சிந்திப்பதன் வழியாக உமது திருமுன்னிலையின் போராளியில் நாங்கள் என்றும் வாழ அருள்தாரும். உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சிபுரியும் எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.
_____________________________
ஆசி வழங்குதல்
அப: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக
எல்: உம் ஆன்மாவோடும் இருப்பாராக
அப: எல்லாம் வல்ல இறைவன் தந்தை மகன் தூய ஆவியார் உங்களை ஆசீர்வதிப்பாராக.
எல்: ஆமென்
அப: கிறிஸ்துவின் அமைதியில் சென்று வாருங்கள்
எல்: இறைவா உமக்கு நன்றி
(அல்லது)
முதல்: ஆண்டவர் நம்மை ஆசீர்வதித்து தீமைகள் அனைத்தினின்றும் பாதுகாத்து முடிவில்லா வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக
எல்: ஆமென்
முதல்: ஆண்டவரை வாழ்த்துவோமாக
எல்: இறைவா உமக்கு நன்றி.