2 - செவ்வாய் மாலைப் புகழ்
பாடல்
(எழுந்து நிற்கவும்)
காலத்தை அமைத்து ஆள்பவரே
வேலைக்குப் பகலின் ஒளிதந்தீர்
இரவது இளைப்பாறும் பொழுதாய்
இருகூ றாக்கினீர் நாள் ஒன்றை.
தூயதாய் உளத்தை நடத்திடுவீர்
தீயவை இதயத்தைத் தாக்கி
புண்படுத் தாமல் அன்புடனே
கண்மணி போலெமைக் காத்திடுவீர்.
உணர்ச்சிப் பெருக்கால் உளம்பொங்க
தணித்ததை உறுதிப் படுத்திடுவீர்
தந்தையும் மைந்தனும் ஆவியுடன்
எந்தக் காலமும் புகழ்பெறுக. ஆமென்.
_____________________________
(அமரவும்)
மு.மொழி.1: கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது
செல்வம் பயனற்றது
திபா 49
மக்களினங்களே அனைவரும் இதைக் கேளுங்கள்
மண்ணுலகில் வாழ்வோரே யாவரும் செவி கொடுங்கள்
தாழ்ந்தோரே உயர்ந்தோரே செல்வர்களே ஏழைகளே
அனைவரும் ஒருங்கே செவிகொடுங்கள்.
என் வாய் ஞானமிகு சொற்களை உரைக்கும்
என் மனம் விவேகமானவற்றை ஆழ்ந்து சிந்திக்கும்
நீதிமொழிக்கு செவிசாய்ப்பதில்
நான் கருத்தாய் உள்ளேன்
யாழிசைத்து அதன் புதிரை விடுவிப்பேன்,
துன்பக் காலத்தில் நான் அஞ்சுவானேன்
என்னை வளைத்துக்கொண்டு கொடுமைப்படுத்தும்
வஞ்சகர்க்கு நான் அஞ்சுவானேன்
தம் செல்வத்தில் நம்பிக்கை வைத்திருக்கின்றவரோ
தம் செல்வப் பெருக்கைக் குறித்துப்
பெருமையாகப் பேசுகின்றனர்.
உண்மையில் தம்மைத் தாமே மீட்டுக்கொள்ள
எவராலும் இயலாது
தம் உயிரை மீட்க எதையும்
கடவுளுக்குத் தர இயலாது
மனித உயிரின் ஈட்டுத்தொகை மிகப் பெரிது
எவராலும் அதனைச் செலுத்த இயலாது,
ஒருவரால் என்றென்றும் வாழ்ந்திட முடியுமா
படுகுழியைக் காணாமல் இருந்திட முடியுமா
ஏனெனில் அறிவிலிகளும் மதிகேடரும் மாண்டழிவது போல
ஞானமுள்ளோரும் உயிர் துறப்பதை
நாம் காண்கின்றோம் அன்றோ
அவர்கள் எல்லோருமே தத்தம் செல்வத்தைப்
பிறருக்கு விட்டுச் செல்கின்றனர்.
கல்லறைகளே அவர்களுக்கு நிலையான வீடுகள்
அவையே எல்லாத் தலைமுறைக்கும் அவர்கள் குடியிருப்பு
அவர்களுக்குத் தங்கள் பெயரில்
நிலபுலன்கள் இருந்தும் பயனில்லை
ஒருவர் தம் மேன்மையிலேயே நிலைத்திருக்க முடியாது
அவர் விலங்குகளைப் போலவே மாண்டழிவார்.
மு.மொழி.: கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது
_____________________________
மு.மொழி. 2: விண்ணுலகில் உங்கள் செல்வத்தைச் சேமித்து வையுங்கள் என்கிறார் ஆண்டவர்.
II
தம்மையே மதியினமாக
நம்பியிருப்போரின் முடிவு இதுவே
தம் சொத்திலேயே மகிழ்ச்சி கொள்வோரின் கதி இதுவே
பலியாடுகளைப் போலவே அவர்களும்
சாவுக்கெனக் குறிக்கப்பட்டுள்ளனர்
சாவே அவர்களின் மேய்ப்பன்
அவர்கள் நேரடியாகக் கல்லறைக்குள் செல்வர்
அப்பொழுது அவர்களது உருவம் மாய்ந்து போகும்
பாதாளமே அவர்களது குடியிருப்பு.
ஆனால் கடவுள் என்னுயிரை மீட்பது உறுதி
பாதாளத்தின் பிடியினின்று விடுவித்து
என்னைத் தூக்கி நிறுத்துவார்
சிலர் செல்வர் ஆனாலோ
அவர்களின் குடும்பச் செல்வம் பெருகினாலோ
அவர்களைக் கண்டு நிலைகுலையாதே
ஏனெனில் சாகும்போது அவர்கள்
எதையும் எடுத்துப் போவதில்லை
அவர்களது செல்வமும் அவர்கள் பின் செல்வதில்லை
உயிரோடிருக்கையில் அவர்கள் தம்மை
ஆசி பெற்றோர் என்று கருதினாலும்
நீங்கள் நன்மையையே நாடினீர்கள் என
மக்கள் அவர்களைப் புகழ்ந்தாலும் அவர்கள்
தம் மூதாதையர் கூட்டத்தோடு சேர்ந்து கொள்வர்
ஒருபோதும் பகல் ஒளியைக் காணப்போவதில்லை.
மனிதர் தம் மேன்மையிலேயே
நிலைத்திருக்க முடியாது
அவர்கள் விலங்குகளைப் போலவே மாண்டழிவர்.
மு.மொழி.: விண்ணுலகில் உங்கள் செல்வத்தைச் சேமித்து வையுங்கள் என்கிறார் ஆண்டவர்.
______________________________
மு.மொழி. 3: கொல்லப்பட்ட ஆட்டுக்குட்டிக்கு மாண்பும் பெருமையும் ஆற்றலும் உரியனவாகுக.
தி.வெ:- 4:11, 5:9,10,12
மு.மொழி.: கொல்லப்பட்ட ஆட்டுக்குட்டிக்கு மாண்பும் பெருமையும் ஆற்றலும் உரியனவாகுக.
______________________________
(எழுந்து நின்று வாசிக்கவும்)
அருள்வாக்கு உரோ 3:23-25a
எல்லாருமே பாவம் செய்து கடவுள் கொடுத்த மேன்மையை இழந்து போயினர். ஆயினும் அனைவரும் கிறிஸ்து இயேசு நிறைவேற்றிய மீட்புச் செயலின்மூலம் கடவுளுடைய அருளால் இலவசமாய் அவருக்கு ஏற்புடையவர்கள் ஆக்கப்படுகின்றனர். இரத்தம் சிந்தி மனிதருடைய பாவத்துக்குக் கழுவாய் ஆகுமாறு இயேசுவைக் கடவுள் நியமித்தார்.
_____________________________
சிறு மறுமொழி
℣ - ஆண்டவரே உம் திருமுன் எனக்கு நிறைமகிழ்வைத் தந்தருளினீர்.
℟ - ஆண்டவரே உம் திருமுன் எனக்கு நிறைமகிழ்வைத் தந்தருளினீர்.
℣ - நான் உமது வலப்பக்கத்தில் என்றென்றும் மகிழ்ச்சியைக் கண்டடைவேன்.
℟ - ஆண்டவரே உம் திருமுன் எனக்கு நிறைமகிழ்வைத் தந்தருளினீர்.
℣ - தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக
℟ - ஆண்டவரே உம் திருமுன் எனக்கு நிறைமகிழ்வைத் தந்தருளினீர்.
_____________________________
(அனைவரும் எழுந்து நிற்கவும்)
மரியாவின் பாடல்
மு.மொழி.: வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார்.
ஆண்டவரை எனது உள்ளம்
போற்றிப் பெருமைப் படுத்துகின்றது.
என் மீட்பராம் கடவுளை நினைத்து
எனது மனம் பேருவகை கொள்கின்றது.
ஏனெனில் அவர் தம் அடிமையின்
தாழ்நிலையைக் கண்ணோக்கினார்.
இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும்
என்னைப் பேறுபெற்றவர் என்பர்.
ஏனெனில் வல்லவராம் கடவுள்
எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார்.
தூயவர் என்பதே அவரது பெயர்.
அவருக்கு அஞ்சி நடப்போருக்குத்
தலைமுறை தலைமுறையாய்
அவர் இரக்கம் காட்டி வருகிறார்.
அவர் தம் தோள் வலிமையைக் காட்டியுள்ளார்;
உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச்
சிதறடித்து வருகிறார்.
வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்;
தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்.
பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்;
செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார்.
மூதாதையருக்கு உரைத்தபடியே அவர்
ஆபிரகாமையும் அவர்தம் வழி மரபினரையும்
என்றென்றும் இரக்கத்தோடு
நினைவில் கொண்டுள்ளார்;
தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத்
துணையாக இருந்து வருகிறார் ".
மு.மொழி.: வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார்.
_____________________________
மன்றாட்டுக்கள்
கிறிஸ்துவே நம் மந்தைக்கு ஆயர்; அவர் தம் மக்களை அன்புடன் பராமரிக்கின்றார். அவரிடம் நம்பிக்கையோடு மன்றாடுவோம்.
℟ - ஆண்டவரே எங்களைப் பாதுகாத்தருளும்.
நோயுற்றோர்க்குக் குணமளித்தருளும் – பசியுற்றோர்க்கு உணவளித்தருளும்.
℟ - ஆண்டவரே எங்களைப் பாதுகாத்தருளும்.
நீர் உயிர் கொடுத்து மீட்ட உமது மந்தையை ஒன்று சேர்த்தருளும் உமது அமைதியில் இறந்த அனைவரையும் விண்ணகத் தந்தையின் வீட்டில் கொண்டு சேர்த்தருளும்,
℟ - ஆண்டவரே எங்களைப் பாதுகாத்தருளும்.
(தனிப்பட்ட தேவைகளுக்காக மன்றாடல்)
_____________________________
ஆண்டவரின் செபம்
_____________________________
இறுதி செபம்
ஆண்டவராகிய கடவுளே இரவும் பகலும் உமக்கே சொந்தம்; நீதியின் ஒளி எப்பொழுதும் எம் உள்ளங்களில் சுடர்விட அருள்புரியும். இதனால் உமது இல்லிடமாகிய அந்தப் பேரொளியை தாங்கள் . வந்தடைவோமாக. உம்மோடு....
_____________________________
ஆசி வழங்குதல்
குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக
எல்: உம் ஆன்மாவோடும் இருப்பாராக
குரு: எல்லாம் வல்ல இறைவன் தந்தை மகன் தூய ஆவியார் உங்களை ஆசீர்வதிப்பாராக.
எல்: ஆமென்
குரு: கிறிஸ்துவின் அமைதியில் சென்று வாருங்கள்
எல்: இறைவா உமக்கு நன்றி
(அல்லது)
முதல்: ஆண்டவர் நம்மை ஆசீர்வதித்து தீமைகள் அனைத்தினின்றும் பாதுகாத்து முடிவில்லா வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக
எல்: ஆமென்
முதல்: ஆண்டவரை வாழ்த்துவோமாக
எல்: இறைவா உமக்கு நன்றி.