2 - புதன் காலைப் புகழ்
பாடல்
இலங்கிடும் விண்வெளி எல்லாம் அமைத்து
நிலவினை இரவுக்கு ஒளிதரவும்
புலர்ந்திடும் பகலை ஆதவனாளவும்
நிலையாய் நிறுவிய வல்லவனே.
காரிருள் இரவு கலைந்து போனது
பாரதில் எழிலும் மலர்ந்ததுவே
வீரிய முடனே விழித்தெழும் உள்ளம்
கோரிய வற்றைச் செயல்படுத்த,
இதயம் நிறைந்து உம்புகழ் இசைக்க
புதிய நாளெமை அழைக்கிறது
உதய ஒளியினும் ஒளிருமுளத்துடன்
இதமாய் இன்னிசை பாடிடுவோம்.
வழுக்கும் வழியைத் தவிர்த்து நடப்போம்
இழுக்குள நினைவைப் புறக்கணிப்போம்
பழிச்சொல் நாவைப் பாழ்படுத்தாமல்
இழிவுச் செயல்களை விலக்கிடுவோம்.
பகலவன் வரவால் பகல்ஒளி பெறுமே
அகவொனி தருவது விசுவாசம்
மிகத்திட முடனே நம்பிக்கை வளர்க
நிகரிலா அன்பும் எரிந்தொளிர்கள்
இச்செபம் இரங்கி ஏற்பீர் தந்தாய்
உச்ச நிலையமர் உம்மகனும்
அச்சம் அகற்றும் தூய ஆவியும்
இச்செகம் உம்முடன் ஆளுகவே. ஆமென்
(எழுந்து நிற்கவும்)
______________________________
(அமரவும்)
மு.மொழி.1: கடவுளே உமது வழி தூய்மையானது. மாபெரும் நம் கடவுளுக்கு நிகரான இறைவன் யார்?
துன்பநாளில் ஆறுதல்
திபா 77
கடவுளை நோக்கி உரத்த குரலில் மன்றாடுகின்றேன்
கடவுள் எனக்குச் செவி சாய்த்தருள வேண்டுமென்று
அவரை நோக்கி மன்றாடுகின்றேன்
என் துன்பநாளில் என் தலைவரை நாடினேன்
இரவில் அயராது கை கூப்பினேன்
ஆனாலும் என் ஆன்மா ஆறுதல் அடையவில்லை
கடவுளை நினைத்தேன் பெருமூச்சு விட்டேன்
அவரைப் பற்றி சிந்தித்தேன்
என் மனம் சோர்வுற்றது
என் கண் இமைகள் மூடாதபடி செய்து விட்டீர்
நான் கலக்கமுற்றிருக்கிறேன்
என்னால் பேச இயலவில்லை.
கடந்த நாள்களை நினைத்துப் பார்க்கின்றேன்
முற்கால ஆண்டுகளைப் பற்றிச் சிந்திக்கின்றேன்
இரவில் என் பாடலைப் பற்றி நினைத்துப் பார்த்தேன்
என் இதயத்தில் சிந்தித்தேன் என் மனம் ஆய்வு செய்தது.
என் தலைவர் என்றென்றும் கைவிட்டு விடுவாரோ
இனி ஒருபோதும் ஆதரவளிக்க மாட்டாரோ
அவரது வாக்குறுதி தலைமுறை தோறும் அற்றுப்போய் விடுமோ
கடவுள் இரக்கங்காட்ட மறந்து விட்டாரோ
அல்லது சினங்கொண்டு தமது இரக்கத்தை நிறுத்தி விட்டாரோ
அப்பொழுது நான் உன்னதரின் வலக்கை
மாறுபட்டு செயலாற்றுவது என்னை வருத்துகின்றது என்றேன்.
ஆண்டவரே உம் செயல்களை
என் நினைவுக்குக் கொண்டு வருவேன்
முற்காலத்தில் நீர் செய்த வியத்தகு செயல்களை
நினைத்துப் பார்ப்பேன்
உம் செயல்கள் அனைத்தையும் பற்றி தியானிப்பேன்
உம் வலிமைமிகு செயல்களைப்பற்றி சிந்திப்பேன்,
கடவுளே உமது வழி தூய்மையானது
மாபெரும் நம் கடவுளுக்கு நிகரான இறைவன் யார்
அரியன செய்யும் இறைவன் நீர் ஒருவரே
மக்களினங்களிடையே உமது ஆற்றலை
விளங்கச் செய்தவரும் நீரே
யாக்கோபு யோசேப்பு என்போரின் புதல்வரான
உம் மக்களை நீர் உமது புயத்தால் மீட்டுக் கொண்டீர்.
கடவுளே வெள்ளம் உம்மைப் பார்த்தது
வெள்ளம் உம்மைப் பார்த்து நடுக்கமுற்றது
ஆழ்கடல்களும் கலக்கமுற்றன
கார்முகில்கள் மழை பொழிந்தன
மேகங்கள் இடி முழக்கின
உம் அம்புகள் எத்திக்கும் பறந்தன.
உமது இடிமுழக்கம் கடும்புயலில் ஒலித்தது
மின்னல்கள் பூவுலகில் ஒலி பாய்ச்சின
மண்ணுலகம் நடுங்கி அதிர்ந்தது.
கடலுக்குள் உமக்கு வழி அமைத்தீர்
வெள்ளத் திரளிடையே உமக்குப் பாதை ஏற்படுத்தினீர்
ஆயினும் உம் அடிச்சுவடுகள் எவருக்கும் புலப்படவில்லை
மோசே ஆரோன் ஆகியோரைக் கொண்டு
உம் மக்களை மந்தையென அழைத்துச் சென்றீர்.
மு.மொழி.: கடவுளே உமது வழி தூய்மையானது. மாபெரும் நம் கடவுளுக்கு நிகரான இறைவன் யார்?
_____________________________
மு.மொழி. 2: ஆண்டவரை முன்னிட்டு என் இதயம் மகிழ்கின்றது. ஆண்டவரில் என் ஆற்றல் உயர்கின்றது.
ஆண்டவரில் ஏழைகள் மகிழ்கின்றனர் 1 சாமு 2:1-10
ஆண்டவரை முன்னிட்டு என் இதயம் மகிழ்கின்றது
ஆண்டவரில் என் ஆற்றல் உயர்கின்றது
என்வாய் என் எதிரிகளைப் பழிக்கின்றது
ஏனெனில் நான் நீர் அளிக்கும் மீட்பில் களிப்படைகிறேன்.
ஆண்டவரைப்போன்ற தூயவர் வேறு எவரும் இலர்
உம்மையன்றி வேறு எவரும் இலர்
நம் கடவுளைப்போன்ற வேறு பாறை இல்லை
இறுமாப்புடன் இனிப் பேச வேண்டாம்
உங்கள் வாயில் வீம்பு வெளிப்பட வேண்டாம்
ஏனெனில் ஆண்டவர் அறிவின் இறைவன்
செயல்களின் அளவை எடைபோடுபவர் அவரே.
வலியோரின் வில்கள் உடைபடுகின்றன
தடுமாறினோர் வலிமை பெறுகின்றனர்
நிறைவுடன் வாழ்ந்தோர் கூலிக்கு உணவு பெறுகின்றனர்
பசியுடன் இருந்தோர் பசி தீர்ந்தார் ஆகியுள்ளனர்
மலடி எழுவரைப் பெற்றெடுத்துள்ளாள்
பல புதல்வரைப் பெற்றவளோ தனியாள் ஆகின்றாள்.
ஆண்டவர் கொல்கிறார் உயிரும் தருகின்றார்
பாதாளத்தில் தள்ளுகிறார் உயர்த்துகின்றார்
ஆண்டவர் ஏழையாக்குகின்றார் செல்வராக்குகின்றார்
தாழ்த்துகின்றார் மேன்மைப்படுத்துகின்றார்
புழுதியினின்று அவர் ஏழைகளை உயர்த்துகின்றார்
குப்பையினின்று வறியவரைத் தூக்கி விடுகின்றார்.
உயர்குடியினரோடு அவர்களை அமர்த்துகின்றார்
மாண்புறு அரியணையை அவர்களுக்கு உரிமையாக்குகின்றார்
உலகின் அடித்தளங்கள் ஆண்டவருக்கு உரியவை
அவற்றின்மேல் அவர் உலகை நிறுவினார்
தம்மில் பற்றுக் கொண்டோர் காலடிகளை அவர் காப்பார்
தீயோர் இருளுக்கு இரையாவர்.
ஏனெனில் ஆற்றலால் எவரும் வலியவர் ஆவதில்லை
ஆண்டவரை எதிர்ப்போர் நொறுக்கப்படுவர்
அவர் அவர்களுக்கு எதிராக
வானில் இடி முழங்கச் செய்வார்
ஆண்டவர் உலகின் எல்லைவரை தீர்ப்பிடுவார்
தம் அரசருக்கு வலிமை தருவார்
தாம் திருப்பொழிவு செய்தவரின் ஆற்றலை உயர்த்துவார்.
மு.மொழி.: ஆண்டவரை முன்னிட்டு என் இதயம் மகிழ்கின்றது. ஆண்டவரில் என் ஆற்றல் உயர்கின்றது.
______________________________
மு.மொழி. 3: ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; பூவுலகம் மகிழ்வதாக,
அனைத்து உலகின் தலைவர்
திபா 97
ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்
பூவுலகம் மகிழ்வதாக
திரளான தீவு நாடுகள் களிகூர்வனவாக
மேகமும் காரிருளும் அவரைச் சூழ்ந்துள்ளன
நீதியும் நேர்மையும் அவரது அரியணையின் அடித்தளம்
நெருப்பு அவர் முன் செல்கின்றது
சுற்றிலுமுள்ள அவர்தம் எதிரிகளைச் சுட்டெரிக்கின்றது.
அவர்தம் மின்னல்கள் பூவுலகை ஒளிர்விக்கின்றன
மண்ணுலகம் அதைக் கண்டு நடுங்குகின்றது
ஆண்டவர் முன்னிலையில்
அனைத்துலகின் தலைவர் முன்னிலையில்
மலைகள் மெழுகென உருகுகின்றன
வானங்கள் அவரது நீதியை அறிவிக்கின்றன
அனைத்து மக்களினங்களும்
அவரது மாட்சியைக் காண்கின்றன.
உருவங்களை வழிபடுவோரும்
சிலைகள் பற்றி பெருமையடித்துக் கொள்வோரும்
வெட்கத்துக்கு உள்ளாவர்.
அனைத்துத் தெய்வங்களே அவரைத் தாழ்ந்து பணியுங்கள்
அண்டவரே உம் நீதித்தீர்ப்புகளை
சீயோன் கேட்டு மகிழ்கின்றது
ஆதாவின் நகர்கள் களிகர்கின்றன.
ஏனெனில் ஆண்டவரே
உலகனைத்தையும் ஆளும் உன்னதர் நீர்
தெய்வங்கள் அனைத்திற்கும் மேலானவர் நீரே
தீமையை வெறுப்போர்மீது ஆண்டவர் அன்பு கூர்கின்றார்
அவர்தம் பற்றுமிகு அடியார்களின் உயிரைப் பாதுகாக்கின்றார்
பொல்லாரின் கையினின்று அவர்களை விடுவிக்கின்றார்.
நேர்மையாளருக்கென ஒளியும்
நேரிய உள்ளத்தோர்க்கென மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டுள்ளன.
நேர்மையாளர்களே ஆண்டவரில் களிகூருங்கள்
அவரது தூய்மையை நினைந்து அவரைப் புகழுங்கள்.
மு.மொழி.: ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; பூவுலகம் மகிழ்வதாக,
______________________________
(எழுந்து நின்று வாசிக்கவும்)
அருள்வாக்கு உரோ 8:35,37
கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கக் கூடியது எது? வேதனையா? நெருக்கடியா? இன்னலா? பட்டினியா ? ஆடையின்மையா? இடரா? சாவா? எதுதான் நம்மைப் பிரிக்க முடியும்? நம்மேல் அன்பு கூர்ந்தவரின் செயலால் மேற்கூறியவை அனைத்திலும் நாம் வெற்றிமேல் வெற்றி அடைகிறோம்.
_____________________________
சிறு மறுமொழி
℣ - எல்லாக் காலத்திலும் நான் ஆண்டவரைப் போற்றுவேன்.
℟ - எல்லாக் காலத்திலும் நான் ஆண்டவரைப் போற்றுவேன்.
℣ - அவரது புகழ் எந்நாளும் என் நாவில் எழும்.
℟ - எல்லாக் காலத்திலும் நான் ஆண்டவரைப் போற்றுவேன்.
℣ - தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக
℟ - எல்லாக் காலத்திலும் நான் ஆண்டவரைப் போற்றுவேன்.
_____________________________
(அனைவரும் எழுந்து நிற்கவும்)
செக்கரியாவின் பாடல்
மு.மொழி.:நம் வாழ்நாள் எல்லாம் தூய்மையோடும் நேர்மையோடும் ஆண்டவருக்குப் பணிபுரிவோம்.
இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றுவோம்.
ஏனெனில் அவர் தம் மக்களைத் தேடிவந்து விடுவித்தருளினார்.
தம் தூய இறைவாக்கினர் வாயினால்
தொடக்க முதல் அவர் மொழிந்தபடியே
அவர் தம் ஊழியராகிய தாவீதின் குடும்பத்தில்
வல்லமை உடைய மீட்பர் ஒருவர் நமக்காகத் தோன்றச் செய்தார்;
நம் பகைவரிடமிருந்தும்
நம்மை வெறுப்போர் அனைவரின் பிடியிலிருந்தும்
நம்மை மீட்பார்.
அவர் நம் மூதாதையருக்கு இரக்கம் காட்டி,
தமது தூய உடன்படிக்கையையும்,
நம் தந்தையாகிய ஆபிரகாமுக்கு அவர் இட்ட ஆணையையும்
நிறைவேற்ற நினைவு கூர்ந்தார்.
இவ்வாறு நாம் பகைவரின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டுத்
தூய்மையோடும் நேர்மையோடும்
வாழ்நாளெல்லாம் அச்சமின்றி
அவர் திருமுன் பணிசெய்யுமாறு வழிவகுத்தார்.
குழந்தாய்,
நீ உன்னத கடவுளின் இறைவாக்கினர் எனப்படுவாய்;
ஏனெனில் பாவ மன்னிப்பால் வரும் மீட்பை
அவர்தம் மக்களுக்கு அறிவித்து
ஆண்டவருக்கான வழியைச் செம்மைப்படுத்த
அவர் முன்னே செல்வாய்.
இருளிலும் இறப்பின் பிடியிலும் இருப்போர்க்கு ஒளிதரவும்,
நம்முடைய கால்களை அமைதி வழியில் நடக்கச் செய்யவும்
நம் கடவுளின் பரிவுள்ளத்தாலும் இரக்கத்தாலும்
விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடிவருகிறது.
மு.மொழி.: நம் வாழ்நாள் எல்லாம் தூய்மையோடும் நேர்மையோடும் ஆண்டவருக்குப் பணிபுரிவோம்.
_____________________________
மன்றாட்டுக்கள்
கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மை எதுவும் பிரிக்க முடியாது; ஏனெனில் உலகம் முடியும் மட்டும் அவர் திருச்சபையோடு இருப்பதாக வாக்களித்துள்ளார். அவரது வாக்குறுதியில் நம்பிக்கை கொண்டு நாம் செபிப்போம்,
℟ -ஆண்டவராகிய இயேசுவே எம்மோடு தங்கும்.
உமது அன்பினால் நாங்கள் எல்லாவற்றிலும் வெற்றி பெறுகி றோம் – உமது பாதுகாப்பில் எங்களை இன்று எற்றுக்கொள்ளும்.
℟ - ஆண்டவராகிய இயேசுவே எம்மோடு தங்கும்.
உமது தூய ஆவியின் அன்பு எங்கள் உள்ளங்களில் நிறைந்திருப்பதாக நாங்கள் இந்நாளை உமக்கெனத் தூய்மைப்படுத்துவோமாக.
℟ - ஆண்டவராகிய இயேசுவே எம்மோடு தங்கும்.
(தனிப்பட்ட தேவைகளுக்காக மன்றாடல்)
_____________________________
ஆண்டவரின் செபம்
_____________________________
இறுதி செபம்
ஆண்டவரே உமது தூய ஒளியை எமது இதயங்களில் வீசியருளும். நாங்கள் உமது ஆணைகளின் பாதையில் இடைவிடாது நடப்பதால் எந்நாளும் நாங்கள் ஏமாற்றப்பட்டுத் தவறில் விழ விடாதேயும். உம்மோடு......
_____________________________
ஆசி வழங்குதல்
குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக
எல்: உம் ஆன்மாவோடும் இருப்பாராக
குரு: எல்லாம் வல்ல இறைவன் தந்தை மகன் தூய ஆவியார் உங்களை ஆசீர்வதிப்பாராக.
எல்: ஆமென்
குரு: கிறிஸ்துவின் அமைதியில் சென்று வாருங்கள்
எல்: இறைவா உமக்கு நன்றி
(அல்லது)
முதல்: ஆண்டவர் நம்மை ஆசீர்வதித்து தீமைகள் அனைத்தினின்றும் பாதுகாத்து முடிவில்லா வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக
எல்: ஆமென்
முதல்: ஆண்டவரை வாழ்த்துவோமாக
எல்: இறைவா உமக்கு நன்றி.