2 - திங்கள் காலைப் புகழ்
பாடல்
சிறந்த ஒளியை அளிப்பவரே
இறந்தது இரவின் காலமிதோ
பிறந்தது மீண்டும் புதுப்பகலே
பரந்தஉம் பரிவினைப் போற்றுகின்றோம்.
உலகின் உண்மை ஒளிநீரே
சிலகால் ஒளிர்ந்து மறைகின்ற
பலவகை விண்மீன் போலன்று
நிலையாய் ஒளிரும் பேரொளிநீர்.
பகலவன் தனினும் ஒளிமிகுந்தோய்
பகலும் ஒளியும் நீர்தாமே
அகத்துள் எமக்கு ஒளிபொழிந்து
மகிமையின் ஒளிபெற அழைக்கின்றீர்.
அடங்கா உடலின் ஆசைகளைத்
திடமார் கற்பினால் தோற்கடிப்பீர்
தூயஎம் உடலை ஆவியால் உம்
கோயிலாக அமைத் திடுவீர்,
கிறிஸ்துவே உமக்கும் தந்தைக்கும்
ஆறுதல் அளிக்கும் ஆவிக்கும்
பேரா சோச்சும் மூவர்க்கும்
ஈறிலாப் புகழ்எக் காலமுமே. ஆமென்.
(எழுந்து நிற்கவும்)
______________________________
மு.மொழி. 1: எப்பொழுது நான் கடவுள் முன்னிலையில் வந்து நிற்கப் போகின்றேன்?
நாடு கடத்தப்பட்டோர் மன்றாட்டு
(திபா 42)
கலைமான் நீரோடைகளுக்காக
ஏங்கித் தவிப்பது போல்
கடவுளே என் நெஞ்சம் உமக்காக
ஏங்கித் தவிக்கின்றது
என் நெஞ்சம் கடவுள் மீது
உயிருள்ள இறைவன் மீது தாகம் கொண்டுள்ளது
எப்பொழுது நான் கடவுள் முன்னிலையில்
வந்து நிற்கப் போகின்றேன்
இரவும் பகலும் என் கண்ணீரே எனக்கு உணவாயிற்று
உன் கடவுள் எங்கே என்று
என்னிடம் தீயோர் கேட்கின்றனர்.
மக்கள் கூட்டத்தோடு சேர்ந்து பவனியாகக்
கடவுளின் இல்லத்திற்குச் சென்றேனே
ஆர்ப்பரிப்பும் நன்றிப் பாடல்களும் முழங்க
விழாக் கூட்டத்தில் நடந்தேனே
இவற்றையெல்லாம் நான் நினைக்கும்போது
என் உள்ளம் வெகுவாய் வெதும்புகின்றது.
என் நெஞ்சே நீ நம்பிக்கை இழப்பது ஏன்
நீ கலக்கமுறுவது ஏன்
கடவுளையே நம்பியிரு
என் கடவுளின் மீட்புச் செயல்களை முன்னிட்டு
இன்னும் நான் அவருக்கு நன்றி செலுத்துவேன்.
என் நெஞ்சம் மிகவும் தளர்ந்துள்ளது
ஆகவே யோர்தான் நிலப்பகுதியிலும்
எர்மோன் மீசார் மலைப் பகுதிகளிலும்
உம்மை நான் நினைத்துக் கொண்டேன்.
உம் அருவிகள் இடியென முழங்கிட
ஆழ்கடல் ஆழ்கடலை அழைக்கின்றது.
உம் சிற்றலைகளும் பேரலைகளும்
என் மீது பாண்போடுகின்றன.
நாள்தோறும் ஆண்டவர் தமது பேரன்பைப் பொழிகின்றார்.
இரவுதோறும் நான் அவரைப் பாடுவேன்
எனக்கு வாழ்வளிக்கும் இறைவனை நோக்கி மன்றாடுவேன்
என் கற்பாறையாகிய இறைவனிடம் ஏன் என்னை மறந்தீர்
எதிரியால் ஒடுக்கப்பட்டு நான் ஏன்
தயருடன் நடமாட வேண்டும் என்கின்றேன்.
உன் கடவுள் எங்கே என்று
என் பகைவன் நாள்தோறும் என்னைக் கேட்பது
என் எலும்புகளை ஊடுருவும் வாள்போல்
என்னைத் தாக்குகின்றது.
என் நெஞ்சே நீ நம்பிக்கை இழப்பது ஏன்
நீ கலக்கமுறுவது ஏன் கடவுளையே நம்பியிரு;
என் மீட்பராம் கடவுளை இன்னும் நான் போற்றுவேன்
என் கடவுளின் மீட்புச் செயல்களை முன்னிட்டு
இன்னும் நான் அவருக்கு நன்றி செலுத்துவேன்.
மு.மொழி.: எப்பொழுது நான் கடவுள் முன்னிலையில் வந்து நிற்கப் போகின்றேன்?
______________________________
மு.மொழி.2: ஆண்டவரே உமது இரக்கத்தின் ஒளியை எம்மீது வீசச் செய்யும்.
இஸ்ரயேலுக்காக மன்றாட்டு
சீரா 36: 1-5 ,9-13
எல்லாவற்றிற்கும் கடவுளாகிய ஆண்டவரே
எங்கள் மீது இரக்கமாயிரும்
எங்களைக் கண்ணோக்கும்
உம்மைப் பற்றிய அச்சம்
எல்லா நாடுகள் மீதும் நிலவச் செய்யும்.
அயல் நாடுகளுக்கு எதிராக உம் கையை உயர்த்தும்
அவர்கள் உம் வலிமையைக் காணட்டும்
அவர்கள் முன்னிலையில் எங்கள் வழியாக
உமது தூய்மையைக் காட்டியதுபோல்
எங்கள் முன்னிலையில் அவர்கள் வழியாக
உமது மாட்சியைக் காட்டும்
ஆண்டவரே உம்மைத் தவிர வேறு கடவுள்
இல்லை என நாங்கள் அறிந்துள்ளது போல்
அவர்களும் உம்மை அறிந்து கொள்ளட்டும்.
புதிய அடையாளங்களை வழங்கும்
வியத்தகு செயல்களை நிகழ்த்தும்
உம் கையினை வலக்கையினை மாட்சிமைப்படுத்தும்
எங்களைத் தவிர வேறு யாரும் இல்லை எனக்கூறும்
பகை வேந்தர்களின் தலைகளை நசுக்கும்
யாக்கோபின் குலங்களை ஒன்று கூட்டும்
தொடக்கத்தில் போன்று அவர்களை
உமது உரிமைச் சொத்தாக்கும்.
ஆண்டவரே உம் பெயரால் அழைக்கப்பெற்ற
மக்களுக்கு இரக்கம் காட்டும்
உம் தலைப்பேறாகப் பெயரிட்டழைத்த
இஸ்ரயேலுக்குப் பரிவு காட்டும்.
உமது திருவிடம் இருக்கும் நகரின்மீது
நீர் ஓய்வு கொள்ளும் இடமாகிய
எருசலேம் மீது கனிவு காட்டும்
உமது புகழ்ச்சியால் சீயோனை நிரப்பும்
உமது மாட்சியால் உம் மக்களை நிரப்பும்,
மு.மொழி.: ஆண்டவரே உமது இரக்கத்தின் ஒளியை எம்மீது வீசச் செய்யும்.
______________________________
மு.மொழி.3: வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன.
படைப்பில் கடவுளின் மாட்சி
திபா 19:1-6
வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன
வான்வெளி அவர்தம் கைகளின் வேலைப்பாட்டை விவரிக்கின்றது
ஒவ்வொரு பகலும் அடுத்த பகலுக்கு
அச்செய்தியை அறிவிக்கின்றது
ஒவ்வோர் இரவும் அடுத்த இரவுக்கு
அதைப் பற்றிய அறிவை வழங்குகின்றது.
அவற்றுக்குச் சொல்லுமில்லை பேச்சுமில்லை
அவற்றின் குரல் செவியில் படுவதுமில்லை
ஆயினும் அவற்றின் அறிக்கை
உலகெங்கும் சென்றடைகின்றது
அவை கூறும் செய்தி
உலகின் கடையெல்லைவரை எட்டுகின்றது
இறைவன் அங்கே கதிரவனுக்கு
ஒரு கூடாரம் அமைத்துள்ளார்.
மணவறையிலிருந்து புறப்படும் மணமகனைப் போல்
அது வருகின்றது
பந்தயத்தில் ஓடும் வீரரைப் போல்
அது தன் பாதையில் ஓடுகின்றது
அது வானத்தின் ஒரு முனையிலிருந்து புறப்படுகின்றது
அதன் பாதை மறுமுனை வரையிலும் செல்கின்றது
அதன் வெப்பத்திற்கு மறைவானது ஒன்றுமில்லை.
மு.மொழி.: வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன.
______________________________
(எழுந்து நின்று வாசிக்கவும்)
அருள்வாக்கு எரே 15:16
நான் உம் சொற்களைக் கண்டடைந்தேன். அவற்றை உட்கொண்டேன். உம் சொற்கள் எனக்கு மகிழ்ச்சி தந்தன; என் உள்ளத்திற்கு உவகை அளித்தன. ஏனெனில் படைகளின் ஆண்டவரே, உம் பெயரே எனக்கு வழங்கலாயிற்று.
______________________________
சிறு மறுமொழி
℣ - நீதிமான்களே ஆண்டவரில் அகமகிழுங்கள், நேர்மனத்தோர் அவரைப் புகழ்வது தகுமே.
℟ - நீதிமான்களே ஆண்டவரில் அகமகிழுங்கள், நேர்மனத்தோர் அவரைப் புகழ்வது தகுமே.
℣ - அவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்.
℟ - நீதிமான்களே ஆண்டவரில் அகமகிழுங்கள், நேர்மனத்தோர் அவரைப் புகழ்வது தகுமே.
℣ - தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் ஆட்சி உண்டாவதாக.
℟ - நீதிமான்களே ஆண்டவரில் அகமகிழுங்கள், நேர்மனத்தோர் அவரைப் புகழ்வது தகுமே.
______________________________
(அனைவரும் எழுந்து நிற்கவும்)
செக்கரியாவின் பாடல்
மு.மொழி.: இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றுவோம் அவர் தம் மக்களைத் தேடி வந்து விடுவித்தருளினார்.
தம் தூய இறைவாக்கினர் வாயினால்
தொடக்க முதல் அவர் மொழிந்தபடியே
அவர் தம் ஊழியராகிய தாவீதின் குடும்பத்தில்
வல்லமை உடைய மீட்பர் ஒருவர் நமக்காகத் தோன்றச் செய்தார்;
நம் பகைவரிடமிருந்தும்
நம்மை வெறுப்போர் அனைவரின் பிடியிலிருந்தும்
நம்மை மீட்பார்.
அவர் நம் மூதாதையருக்கு இரக்கம் காட்டி,
தமது தூய உடன்படிக்கையையும்,
நம் தந்தையாகிய ஆபிரகாமுக்கு அவர் இட்ட ஆணையையும்
நிறைவேற்ற நினைவு கூர்ந்தார்.
இவ்வாறு நாம் பகைவரின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டுத்
தூய்மையோடும் நேர்மையோடும்
வாழ்நாளெல்லாம் அச்சமின்றி
அவர் திருமுன் பணிசெய்யுமாறு வழிவகுத்தார்.
குழந்தாய்,
நீ உன்னத கடவுளின் இறைவாக்கினர் எனப்படுவாய்;
ஏனெனில் பாவ மன்னிப்பால் வரும் மீட்பை
அவர்தம் மக்களுக்கு அறிவித்து
ஆண்டவருக்கான வழியைச் செம்மைப்படுத்த
அவர் முன்னே செல்வாய்.
இருளிலும் இறப்பின் பிடியிலும் இருப்போர்க்கு ஒளிதரவும்,
நம்முடைய கால்களை அமைதி வழியில் நடக்கச் செய்யவும்
நம் கடவுளின் பரிவுள்ளத்தாலும் இரக்கத்தாலும்
விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடிவருகிறது.
மு.மொழி.: இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றுவோம் அவர் தம் மக்களைத் தேடி வந்து விடுவித்தருளினார்.
______________________________
மன்றாட்டுக்கள்:
கிறிஸ்து தமது குருத்துவத்தில் நம் அனைவருக்கும் பங்களித்தார். அவரில் நாம் ஒன்றித்து நம்மையும் நம் மன்றாட்டுக்களையும் அர்ப்பணிப்போம்.
℟ - ஆண்டவரே எமது அன்பையும் பணியையும் ஏற்றுக்கொள்ளும்.
ஆண்டவரே பிறர் தேவைகளை நாங்கள் உய்த்துணரச் செய்யும் அவர்களை எம் சகோதரர்களாக அன்பு செய்ய மனத் திடனைத் தாரும்.
℟ - ஆண்டவரே எமது அன்பையும் பணியையும் ஏற்றுக்கொள்ளும்.
(தனிப்பட்ட தேவைகளுக்காக மன்றாடல்)
______________________________
ஆண்டவரின் செபம்
______________________________
இறுதி செபம்
எல்லாம் வல்ல கடவுளாகிய ஆண்டவரே, நாளின் தொடக்கத்திற்கு எம்மை நீர் கொண்டு வந்ததுபோல் இந்நாள் முழுவதும் நாங்கள் பாவத்திற்கு இடம் கொடாதபடி உமது ஆற்றலினால் எம்மைப் பாதுகாத்தருளும். இதனால் எங்கள் சிந்தனை சொல் செயல் அனைத்திலும் உமக்கு உவப்பான வற்றையே செய்வோமாக. உம்மோடு.....
__________________________
ஆசி வழங்குதல்
குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக
எல்: உம் ஆன்மாவோடும் இருப்பாராக
குரு: எல்லாம் வல்ல இறைவன் தந்தை மகன் தூய ஆவியார் உங்களை ஆசீர்வதிப்பாராக.
எல்: ஆமென்
குரு: கிறிஸ்துவின் அமைதியில் சென்று வாருங்கள்
எல்: இறைவா உமக்கு நன்றி
(அல்லது)
முதல்: ஆண்டவர் நம்மை ஆசீர்வதித்து தீமைகள் அனைத்தினின்றும் பாதுகாத்து முடிவில்லா வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக
எல்: ஆமென்
முதல்: ஆண்டவரை வாழ்த்துவோமாக
எல்: இறைவா உமக்கு நன்றி