3 - திங்கள் காலைப் புகழ்
பாடல் (பக்கம் 29)
(எழுந்து நிற்கவும்)
______________________________
மு.மொழி. 1: ஆண்டவரே உம் இல்லத்தில் தங்கியிருப்போர் நற்பேறு பெற்றோர்.
திருக்கோவிலுக்காக ஏங்குதல். திபா 84
படைகளின் ஆண்டவரே உமது உறைவிடம்
எத்துணை அருமையானது
என் ஆன்மா ஆண்டவரின் கோவில் முற்றங்களுக்காக
ஏங்கித் தவிக்கின்றது
என் உள்ளமும் உடலும் என்றுமுள இறைவனை
மகிழ்ச்சியுடன் பாடுகின்றது.
படைகளின் ஆண்டவரே! என் அரசரே
என் கடவுளே உமது பீடங்களில்
அடைக்கலான் குருவிக்கு வீடு கிடைத்துள்ளது
தங்கள் குஞ்சுகளை வைத்திருப்பதற்குச்
சிட்டுக் குருவிகளுக்குக் கூடும் கிடைத்துள்ளது.
உமது இல்லத்தில் தங்கியிருப்போர் நற்பேறு பெற்றோர்
அவர்களும் எந்நாளும் உம்மைப் புகழ்ந்து கொண்டேயிருப்பார்கள்
உம்மிடமிருந்து வலிமைபெற்ற மானிடர் பேறுபெற்றோர்
அவர்களது உள்ளம் சீயோனுக்குச் செல்லும்
நெடுஞ்சாலைகளை நோக்கியே உள்ளது.
வறண்ட பாக்கா பள்ளத்தாக்கை அவர்கள் கடந்து செல்கையில்
அது நீரூற்றுகள் உள்ள இடமாக மாறுகின்றது
முதல் பருவமழை அதனை நீர்நிலைகள் நிறைந்த இடமாக்கும்
அவர்கள் நடந்து செல்கையில்
மேலும் மேலும் வலிமை பெறுகின்றார்கள்
பின்பு சீயோனின் தெய்வங்களின் இறைவனைக் காண்பார்கள்.
படைகளின் ஆண்டவரே என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்
யாக்கோபின் கடவுளே எனக்குச் செவிசாய்த்தருளும்
எங்கள் கேடயமாகிய கடவுளே கண்ணோக்கும்
நீர் திருப்பொழிவு செய்தவரின் முகத்தைக் கனிவுடன் பாரும்
வேற்றிடங்களில் வாழும் ஆயிரம் நாள்களினும்
உம் கோவில் முற்றங்களில் தங்கும் ஒருநாளே மேலானது
பொல்லாரின் கூடாரங்களில் குடியிருப்பதினும்
என் கடவுளது இல்லத்தில் வாயிற்காவலனாய்
இருப்பதே இனிமையானது.
ஏனெனில் கடவுளாகிய ஆண்டவர்
நமக்குக் கதிரவனும் கேடயமுமாய் இருக்கின்றார்
ஆண்டவர் அருளையும் மேன்மையையும் அளிப்பார்
மாசற்றவர்களாய் நடப்பவர்களுக்கு
நன்மையானவற்றை வழங்குவார்
படைகளின் ஆண்டவரே
உம்மை நம்பும் மானிடர் நற்பேறு பெற்றோர்.
மு.மொழி.: ஆண்டவரே உம் இல்லத்தில் தங்கியிருப்போர் நற்பேறு பெற்றோர்.
______________________________
மு.மொழி.2: புறப்படுங்கள் ஆண்டவரின் மலைக்குச் செல்வோம்.
முடிவில்லா அமைதி எசா 2:2-5
இறுதி நாள்களில் ஆண்டவரின் கோவில்
அமைந்துள்ள மலை எல்லா மலைகளுக்குள்ளும்
உயர்ந்ததாய் நிலை நிறுத்தப்படும்
எல்லா குன்றுகளுக்குள்ளும் மேலாய் உயர்த்தப்படும்
மக்களினங்கள் அதை நோக்கிச் சாரை சாரையாய் வருவார்கள்.
வேற்றினத்தார் பலர் அங்கு வந்து சேர்ந்து
புறப்படுங்கள் ஆண்டவரின் மலைக்குச் செல்வோம்
வேற்றினத்தார் பலர் அங்கு வந்து சேர்ந்து
புறப்படுங்கள் ஆண்டவரின் மலைக்குச் செல்வோம்
யாக்கோபின் கடவுளின் கோவிலுக்குப் போவோம்
அவர் தம் வழிகளை நமக்குக் கற்பிப்பார்
நாமும் அவர் நெறிகளில் நடப்போம் என்பார்கள்
ஏனெனில் சியோனிலிருந்தே திருச்சட்டம் வெளிவரும்
எருசலேமிலிருந்தே ஆண்டவரின் திருவாக்கு புறப்படும்.
அவர் வேற்றினத்தாரிடையே உள்ள வழக்குகளைத் தீர்த்து வைப்பார்
பல இன மக்களுக்கும் தீர்ப்பளிப்பார்
அவர்கள் தங்கள் வாள்களைக் கலப்பைக் கொழுக்களாகவும்
தங்கள் ஈட்டிகளைக் கருக்கரி வாள்களாகவும்
அடித்துக் கொள்வார்கள்
ஓர் இனத்திற்கு எதிராக மற்றோர் இனம் வாள் எடுக்காது
அவர்கள் இனி ஒருபோதும் போர்ப்பயிற்சி பெறமாட்டார்கள்.
மு.மொழி.: புறப்படுங்கள் ஆண்டவரின் மலைக்குச் செல்வோம்.
______________________________
மு.மொழி.3: ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; அவர் பெயரை
வாழ்த்துங்கள்.
அனைத்து உலகின் அரசர்
திபா 96
ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்
உலகெங்கும் வாழ்வோரே ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்
ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள் அவர் பெயரை வாழ்த்துங்கள்
அவர் தரும் மீட்பை நாள்தோறும் அறிவியுங்கள்
பிற இனத்தார்க்கு அவரது மாட்சியை எடுத்துரையுங்கள்
அனைத்து மக்களினங்களுக்கும்
அவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள்.
ஏனெனில் ஆண்டவர் மாட்சி மிக்கவர்
பெரிதும் போற்றத்தக்கவர்
தெய்வங்கள் அனைத்திற்கும் மேலாக
அஞ்சுதற்கு உரியவர் அவரே
மக்களினங்களின் தெய்வங்கள் அனைத்தும் வெறும் சிலைகளே
ஆண்டவரோ விண்ணுலகைப் படைத்தவர்
மாட்சியும் புகழ்ச்சியும் அவர் திருமுன் உள்ளன
ஆற்றலும் எழிலும் அவரது திருத்தலத்தில் உள்ளன.
மக்களினங்களின் குடும்பங்களே ஆண்டவருக்கு சாற்றுங்கள்
மாட்சியையும் ஆற்றலையும் ஆண்டவருக்கு சாற்றுங்கள்
ஆண்டவரின் பெயருக்குரிய மாட்சியை அவருக்குச் சாற்றுங்கள்
உணவுப் படையல் ஏந்தி அவர்தம்
கோவில் முற்றங்களுக்குள் செல்லுங்கள்
தூய கோலத்துடன் ஆண்டவரை வழிபடுங்கள்.
உலகெங்கும் வாழ்வோரே அவர் திருமுன் நடுங்குங்கள்
வேற்றினத்தாரிடையே கூறுங்கள்
ஆண்டவரே ஆட்சி செய்கின்றார்
பூவுலகு உறுதியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது
அது அசைவுறாது
அவர் மக்களினங்களை நீதி வழுவாது தீர்ப்பிடுவார்.
விண்ணுலகம் மகிழ்வதாக மண்ணுலகம் களிகூர்வதாக
கடலும் அதில் நிறைந்துள்ளனவும் முழங்கட்டும்
வயல்வெளியும் அதில் உள்ள அனைத்தும் களிகூரட்டும்
அப்பொழுது காட்டில் உள்ள அனைத்து மரங்களும்
அவர் திருமுன் களிப்புடன் பாடும்
ஏனெனில் அவர் வருகின்றார்
மண்ணுலகிற்கு நீதித்தீர்ப்பு வழங்க வருகின்றார்
நிலவுலகை நீதியுடனும் மக்களினங்களை
உண்மையுடனும் அவர் தீர்ப்பிடுவார்.
மு.மொழி.: ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; அவர் பெயரை வாழ்த்துங்கள்.
______________________________
(எழுந்து நின்று வாசிக்கவும்)
அருள்வாக்கு
யாக் 2:12-13
விடுதலையளிக்கும் சட்டத்தின் தீர்ப்புக்கு உட்பட
வேண்டியவர்களுக்கு ஏற்றதாய் உங்கள் பேச்சும் நடத்தையும்
அமைதல் வேண்டும். ஏனெனில் இரக்கம் காட்டாதோருக்கு
இரக்கமற்ற தீர்ப்புதான் கிடைக்கும். இரக்கமே தீர்ப்பை
வெல்லும்,
______________________________
சிறு மறுமொழி
℣ - எல்லாக் காலங்களிலும் ஆண்டவர் புகழப்படுவாராக.
℟ - எல்லாக் காலங்களிலும் ஆண்டவர் புகழப்படுவாராக.
℣ - அவர் ஒருவரே வியப்புக்குரிய செயல்களைச் செய்துள்ளார்.
℟ - எல்லாக் காலங்களிலும் ஆண்டவர் புகழப்படுவாராக.
℣ - தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் ஆட்சி உண்டாவதாக.
℟ - எல்லாக் காலங்களிலும் ஆண்டவர் புகழப்படுவாராக.
______________________________
(அனைவரும் எழுந்து நிற்கவும்)
செக்கரியாவின் பாடல்
மு.மொழி.: நம் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றுவோம். எனெனில்
அவர்தம் மக்களைத் தேடிவந்து விடுவித்தருளினார்.
தம் தூய இறைவாக்கினர் வாயினால்
தொடக்க முதல் அவர் மொழிந்தபடியே
அவர் தம் ஊழியராகிய தாவீதின் குடும்பத்தில்
வல்லமை உடைய மீட்பர் ஒருவர் நமக்காகத் தோன்றச் செய்தார்;
நம் பகைவரிடமிருந்தும்
நம்மை வெறுப்போர் அனைவரின் பிடியிலிருந்தும்
நம்மை மீட்பார்.
அவர் நம் மூதாதையருக்கு இரக்கம் காட்டி,
தமது தூய உடன்படிக்கையையும்,
நம் தந்தையாகிய ஆபிரகாமுக்கு அவர் இட்ட ஆணையையும்
நிறைவேற்ற நினைவு கூர்ந்தார்.
இவ்வாறு நாம் பகைவரின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டுத்
தூய்மையோடும் நேர்மையோடும்
வாழ்நாளெல்லாம் அச்சமின்றி
அவர் திருமுன் பணிசெய்யுமாறு வழிவகுத்தார்.
குழந்தாய்,
நீ உன்னத கடவுளின் இறைவாக்கினர் எனப்படுவாய்;
ஏனெனில் பாவ மன்னிப்பால் வரும் மீட்பை
அவர்தம் மக்களுக்கு அறிவித்து
ஆண்டவருக்கான வழியைச் செம்மைப்படுத்த
அவர் முன்னே செல்வாய்.
இருளிலும் இறப்பின் பிடியிலும் இருப்போர்க்கு ஒளிதரவும்,
நம்முடைய கால்களை அமைதி வழியில் நடக்கச் செய்யவும்
நம் கடவுளின் பரிவுள்ளத்தாலும் இரக்கத்தாலும்
விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடிவருகிறது.
மு.மொழி.: நம் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றுவோம். எனெனில் அவர்தம் மக்களைத் தேடிவந்து விடுவித்தருளினார்.
______________________________
மன்றாட்டுக்கள்:
மனிதனான தம் மகனின் வாழ்வில் இறைவன் மனித
உழைப்பின் மாண்பினை நமக்கு வெளிப்படுத்தினார். இதை மனதில் கொண்டு நாம் மன்றாடுவோம்.
℟ - ஆண்டவரே, எம் உழைப்பை ஆசீர்வதியும்.
ஆண்டவரே எங்கள் அன்றாடப் பணிகளைச் செய்யும்போது
எங்களோடு இரும் – நாங்கள் உம்முடைய உலகத்திலேயே வாழ்ந்து
பணி புரிகிறோம் என்ற நினைவுடனிருக்க அருள்புரியும்.
℟ - ஆண்டவரே, எம் உழைப்பை ஆசீர்வதியும்.
எம்மோடும் இன்று நாங்கள் சந்திப்பவர்களோடும் நீர்
இருந்தருளும் - நாங்கள் இவ்வுலகிற்கு உமது மகிழ்ச்சியையும்
அமைதியையும் வழங்குவோமாக.
℟ - ஆண்டவரே, எம் உழைப்பை ஆசீர்வதியும்.
(தனிப்பட்ட தேவைகளுக்காக மன்றாடல்)
______________________________
ஆண்டவரின் செபம்
______________________________
இறுதி செபம்
இறைவனாகிய ஆண்டவரே, நீரே விண்ணிற்கும், மண்ணிற்கும்
மன்னர், இன்று எங்கள் உள்ளத்தையும் உடலையும் ஆண்டு
நடத்தியருளும். உமது திருச்சட்டத்தின்படி கட்டளைகளுக்கேற்ப எங்களைத் தூய்மையாக்கி, எங்கள் சிந்தனை, சொல், செயல்
ஆகியவற்றை நெறிப்படுத்தியருளும். இவ்வாறு உமது அருளினால் இன்றும் என்றும் விடுதலையடைந்து மீட்கப் பெறுவோமாக. உம்மோடு...
__________________________
ஆசி வழங்குதல்
குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக
எல்: உம் ஆன்மாவோடும் இருப்பாராக
குரு: எல்லாம் வல்ல இறைவன் தந்தை மகன் தூய ஆவியார் உங்களை ஆசீர்வதிப்பாராக.
எல்: ஆமென்
குரு: கிறிஸ்துவின் அமைதியில் சென்று வாருங்கள்
எல்: இறைவா உமக்கு நன்றி
(அல்லது)
முதல்: ஆண்டவர் நம்மை ஆசீர்வதித்து தீமைகள் அனைத்தினின்றும் பாதுகாத்து முடிவில்லா வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக
எல்: ஆமென்
முதல்: ஆண்டவரை வாழ்த்துவோமாக
எல்: இறைவா உமக்கு நன்றி