3 - வெள்ளி காலைப் புகழ்

        3 - வெள்ளி காலை செபம்

முதல்: இறைவா எமக்குத் துணைபுரிய வாரும்

எல்: ஆண்டவரே எனக்குத் துணைபுரிய விரைைந்து வாரும்

முதல்: தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக

எல்: தொடக்கத்தில் இருந்ததுபோல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக ஆமென்.

__________________________

பாடல்  (பக்கம் 74)


(எழுந்து நிற்கவும்)

_____________________________

(அமரவும்)

மு.மொழி.1: . ஆண்டவரே உமக்கு எதிராக நான் பாவம் செய்தேன்;
என்மேல் இரங்கும்.

இறைவா என் மீது இரங்கும்
திபா 51

கடவுளே! உமது பேரன்புகேற்ப எனக்கு இரங்கும்
உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப 
என் குற்றங்களைத் துடைத்தருளும்.
என் தீவினை முற்றிலும் நீங்கும் படி என்னைக் கழுவியருளும்என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும்;
ஏனெனில், என் குற்றங்களை நான் உணர்கின்றேன்; என் பாவம் எப்போதும் என் மனக் கண்முன் நிற்கின்றது.
உமக்கு எதிராக நான் பாவம் செய்தேன்; உம் பார்வையில் தீயது செய்தேன்; எனவே, உம் தீர்ப்பினால் உம் நீதியை வெளிப்படுத்தியுள்ளீர்; உம் தண்டனைத் தீர்ப்பில் நீர் மாசற்றவராய் விளங்குகின்றீர்.
இதோ! தீவினையோடு என் வாழ்வைத் தொடங்கினேன்; பாவத்தோடே என் அன்னை என்னைக் கருத்தாங்கினாள்.
 இதோ! நீர் விரும்புவது உள்ளத்து உண்மையையே; மெய்ஞானத்தால் என் மனத்தை நிரப்பும்.
ஈசோப்பினால் என்னைக் கழுவியருளும்; நான் தூய்மையாவேன். என்னைக் கழுவியருளும்; உறைபனியிலும் வெண்மையாவேன்.
 மகிழ்வொலியும் களிப்போசையும் நான் கேட்கும்படி செய்யும்; நீர் நொறுக்கிய என் எலும்புகள் களிகூர்வனவாக!
என் பாவங்களைப் பாராதபடி உம்முகத்தை மறைத்துக்கொள்ளும்; என் பாவக்கறைகளை எல்லாம் துடைத்தருளும்.
கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்; உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை என்னுள்ளே உருவாக்கியருளும்.
உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்; உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும்.
உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும்; தன்னார்வ மனம் தந்து என்னைத் தாங்கியருளும்.
அப்பொழுது, குற்றம் செய்தோர்க்கு உம் வழிகளைக் கற்பிப்பேன்; பாவிகள் உம்மை நோக்கித் திரும்புவர்.
 கடவுளே! எனது மீட்பின் கடவுளே! இரத்தப் பழியினின்று என்னை விடுவித்தருளும்; அப்பொழுது, என் நா உமது நீதியை முன்னிட்டுப் பாடும்.
என் தலைவரே! என் இதழ்களைத் திறந்தருளும்; அப்பொழுது, என் வாய் உமக்குப் புகழ் சாற்றிடும்.
ஏனெனில், பலியினால் உம்மை மகிழ்விக்க முடியாது; நான் எரிபலி செலுத்தினாலும் நீர் அதில் நாட்டங்கொள்வதில்லை.
கடவுளுக்கேற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே; கடவுளே! நொறுங்கிய, குற்றமுணர்ந்த உளத்தை நீர் அவமதிப்பதில்லை.
 சீயோனுக்கு இன்முகம் காட்டி நன்மை செய்யும்; எருசலேமின் மதில்களை மீண்டும் கட்டுவீராக!
அப்பொழுது, எரிபலி, முழு எரிபலியெனும் முறையான பலிகளை விரும்புவீர்; மேலும், இளங்காளைகள் உமது பீடத்தில் பலியாகச் செலுத்தப்படும்.

மு.மொழி.: ஆண்டவரே உமக்கு எதிராக நான் பாவம் செய்தேன்;
என்மேல் இரங்கும்.
_____________________________

மு.மொழி. 2: ஆண்டவரே, எங்கள் குற்றங்களை நாங்கள்
உணர்ந்திருக்கிறோம். நாங்கள் உமக்கு எதிராய்ப் பாவம் செய்தோம்.

மக்களின் புலம்பல் 
 எரே 14:17-21

என் கண்கள் இரவு பகலாகக் கண்ணீர் சொரியட்டும்
இடைவிடாது சொரியட்டும்
ஏனெனில் என் மக்களாம் கன்னிமகள் நொறுங்குண்டாள்
அவளது காயம் மிகப் பெரிது
வயல் வெளிகளுக்குச் சென்றால் இதோ வாளால் மடிந்தவர்கள்
நகரில் நுழைந்தால், இதோ பசியால் நலிந்தவர்கள்
இறைவாக்கினரும் குருக்களும்
தங்களுக்கு முன்பின் தெரியாத நாட்டில் அலைகின்றனர்.

நீர் யூதாவை முற்றிலும் புறக்கணித்து விட்டீரா
சீயோனை உம் உள்ளம் வெறுத்து விட்டதா
நாங்கள் குணமாகமுடியாதபடி ஏன் எங்களை நொறுக்கினீர்
நாங்கள் அமைதிக்காகக் காத்திருந்தோம்; பயனேதும் இல்லை.
நலம் பெறும் காலத்தை எதிர்பார்த்திருந்தோம்; பேரச்சமே மிஞ்சியது

ஆண்டவரே! எங்கள் குற்றத்தையும்
எங்கள் மூதாதையரின் தீமையையும்
நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.
நாங்கள் உமக்கு எதிராய்ப் பாவம் செய்தோம்
உம்பெயரை முன்னிட்டு எங்களை உதறித் தள்னதி
உம்பமாட்சி அரியணையை அவமதிக்காதிர்
நீ எங்கனோடு செய்த உடன்படிக்கையை நினைவு கூரும்
அதனை முறித்து விடாதீர்

மு.மொழி.: ஆண்டவரே, எங்கள் குற்றங்களை நாங்கள்
உணர்ந்திருக்கிறோம். நாங்கள் உமக்கு எதிராய்ப் பாவம் செய்தோம்.
______________________________

மு.மொழி. 3: ஆண்டவரே கடவுள், நாம் அவர் மக்கள், அவர்
மேய்க்கும் ஆடுகள்

திபா 100

அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்!
ஆண்டவரை மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்! மகிழ்ச்சிநிறை பாடலுடன் அவர் திருமுன் வாருங்கள்!
ஆண்டவரே கடவுள் என்று உணருங்கள்! அவரே நம்மைப் படைத்தவர்! நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்!
நன்றியோடு அவர்தம் திருவாயில்களில் நுழையுங்கள்! புகழ்ப்பாடலோடு அவர்தம் முற்றத்திற்கு வாருங்கள்! அவருக்கு நன்றி செலுத்தி, அவர் பெயரைப் போற்றுங்கள்!
ஏனெனில், ஆண்டவர் நல்லவர்; என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு; தலைமுறைதோறும் அவர் நம்பத்தக்கவர்.

மு.மொழி.: ஆண்டவரே கடவுள், நாம் அவர் மக்கள், அவர்
மேய்க்கும் ஆடுகள்
______________________________
(எழுந்து நின்று வாசிக்கவும்)

அருள்வாக்கு         2 கொரி 12. 9-10

நான் என் வலுவின்மையைப் பற்றித்தான் மனமுவந்து பெருமை பாளட்டுவேன். அப்போது கிறிஸ்துவின் வல்லமை என்னுள் தங்கும். ஆகவே என் வலுவின்மையிலும் இகழ்ச்சியிலும் இடரிலும் இன்னலிலும் நெருக்கடியிலும் கிறிஸ்துவை முன்னிட்டு நான் அகமகிழ்கிறேன். ஏனெனில் நான் வலுவற்றிருக்கும் போது வல்லமை பெற்றவனாக இருக்கிறேன்.
_____________________________

சிறு மறுமொழி

℣ - ஆண்டவரே, காலையில் உமது அன்பை நான் அறியச்
 செய்தருளும் 
℟ - ஆண்டவரே, காலையில் உமது அன்பை நான் அறியச்
செய்தருளும்

℣ - நான் செல்லவேண்டிய பாதையை எனக்குக் காட்டியருளும். 
℟ - ஆண்டவரே, காலையில் உமது அன்பை நான் அறியச்
செய்தருளும்

℣ - தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக
℟ - ஆண்டவரே, காலையில் உமது அன்பை நான் அறியச்
செய்தருளும்
_____________________________

(அனைவரும் எழுந்து நிற்கவும்)

செக்கரியாவின் பாடல்

மு.மொழி.: ஆண்டவர் தம் மக்களைத் தேடி வந்து விடுவித்தருளினார்.

இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றுவோம். 
ஏனெனில் அவர் தம் மக்களைத் தேடிவந்து விடுவித்தருளினார்.

தம் தூய இறைவாக்கினர் வாயினால் 
தொடக்க முதல் அவர் மொழிந்தபடியே
அவர் தம் ஊழியராகிய தாவீதின் குடும்பத்தில் 
வல்லமை உடைய மீட்பர் ஒருவர் நமக்காகத் தோன்றச் செய்தார்;

நம் பகைவரிடமிருந்தும் 
நம்மை வெறுப்போர் அனைவரின் பிடியிலிருந்தும் 
நம்மை மீட்பார்.

அவர் நம் மூதாதையருக்கு இரக்கம் காட்டி, 
தமது தூய உடன்படிக்கையையும்,
நம் தந்தையாகிய ஆபிரகாமுக்கு அவர் இட்ட ஆணையையும் 
நிறைவேற்ற நினைவு கூர்ந்தார்.

இவ்வாறு நாம் பகைவரின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டுத் 
தூய்மையோடும் நேர்மையோடும்
வாழ்நாளெல்லாம் அச்சமின்றி 
அவர் திருமுன் பணிசெய்யுமாறு வழிவகுத்தார்.

குழந்தாய், 
நீ உன்னத கடவுளின் இறைவாக்கினர் எனப்படுவாய்;
ஏனெனில் பாவ மன்னிப்பால் வரும் மீட்பை 
அவர்தம் மக்களுக்கு அறிவித்து 
ஆண்டவருக்கான வழியைச் செம்மைப்படுத்த 
அவர் முன்னே செல்வாய்.

இருளிலும் இறப்பின் பிடியிலும் இருப்போர்க்கு ஒளிதரவும்,
நம்முடைய கால்களை அமைதி வழியில் நடக்கச் செய்யவும் 
நம் கடவுளின் பரிவுள்ளத்தாலும் இரக்கத்தாலும் 
விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடிவருகிறது.

மு.மொழி.: ஆண்டவர் தம் மக்களைத் தேடி வந்து விடுவித்தருளினார்.
_____________________________

மன்றாட்டுக்கள்

நமக்கு ஒரு பெரிய குரு இருக்கிறார்; நம்முடைய வலுவின்மையில் நமக்கு இரக்கம் காட்டுகிறார். அவர் நம்மைப் போலிருந்ததால் எல்லாவித சோதனைகளுக்கும் உள்ளானார். ஆயினும் பாவம் அவரைத் தீண்டவில்லை. நாம் அவரிடம் வேண்டுவோம்.

℟ - ஆண்டவரே உமது இரக்கத்தையும் பரிவன்பையும் காட்டியருளும். 

ஆண்டவரே வரவிருக்கும் மாட்சியை முன்னிட்டு நீர் விருப்பத்துடன் திருச்சிலுவையை நோக்கிச் சென்றீர் – நாங்கள் உமது இறப்பில் பங்குகொண்டு அதனால் உமது உயிர்ப்பிலும் பங்குகொள்ளச் செய்தருளும்.

℟ - ஆண்டவரே உமது இரக்கத்தையும் பரிவன்பையும் காட்டியருளும். 

எல்லா நாடுகளுக்கும் சென்று நற்செய்தியைப் போதிக்கும்படி நீர் உம் சீடர்களை அனுப்பினீர் – இன்று நற்செய்தியை அறிவிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள எல்லாரையும் ஆசீர்வதியும்.

℟ - ஆண்டவரே உமது இரக்கத்தையும் பரிவன்பையும் காட்டியருளும். 

வேதனையிலிருப்போர்க்கு கடவுளின் அன்பை உணர்த்தும் அவர் தங்கள் வேதனைகளில் இறைக்கரத்தைக் கண்டு உணர்வார்களாக.

℟ - ஆண்டவரே உமது இரக்கத்தையும் பரிவன்பையும் காட்டியருளும். 

(தனிப்பட்ட தேவைகளுக்காக மன்றாடல்)
_____________________________

ஆண்டவரின் செபம்
_____________________________

இறுதி செபம்

எல்லாம் வல்ல தந்தையே, உமது ஒளியால் எங்கள் உள்ளங்களை ஊடுருவச் செய்தருளும். அதனால் உம்முடைய கற்பனைகளின் வழியில் நாங்கள் நடந்து, எங்கள் தலைவரும் வழிகாட்டியுமாகிய உம்மை என்றும் பின்பற்றுவோமாக உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சிபுரியும் எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.
_____________________________

ஆசி வழங்குதல்

குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக 
எல்: உம் ஆன்மாவோடும் இருப்பாராக 

குரு: எல்லாம் வல்ல இறைவன் தந்தை மகன் தூய ஆவியார் உங்களை ஆசீர்வதிப்பாராக. 
எல்: ஆமென் 

குரு: கிறிஸ்துவின் அமைதியில் சென்று வாருங்கள் 
எல்: இறைவா உமக்கு நன்றி 

(அல்லது)

முதல்: ஆண்டவர் நம்மை ஆசீர்வதித்து தீமைகள் அனைத்தினின்றும் பாதுகாத்து முடிவில்லா வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக 
எல்: ஆமென் 

முதல்: ஆண்டவரை வாழ்த்துவோமாக 
எல்: இறைவா உமக்கு நன்றி.