3 - செவ்வாய் காலைப் புகழ்

பாடல்

(எழுந்து நிற்கவும்)

எழுந்தது ஆதவன் விடிந்தது காலை
மிளிர்ந்தன பொருட்கள் பலநிறம் பெற்று
ஒளிர்ந்தீர் கிறிஸ்துவே உலகில் எங்கணும்
விளம்பிட விழைந்தோம் உம் திருப்புகழை.

வல்லப தந்தையின் வாக்கு அறிவே
எல்லாம் உம்மால் வியத்தகு வகையில்
ஒளியும் எழிலும் ஒழுங்கும் பெற்று
உளத்தை உம்பால் உயர்த்திடத் தூண்டும்.

ஒளியின் மக்களாம் எமக்கருள் புரிகஉம்
வழிநடப் போம்மிகு சுறுசுறுப் புடனே
வழக்கமும் செயல்களும் தந்தையின் அருளை
விளக்கிடும் வகையில் வாழ்ந்திடுவோமே.

நாவினால் என்றும் நலமே மொழிவோம்
ஆவியில் உண்மையின் இனிமையை உணர்வோம்
மூவொரு இறைவா உம்புகழ் ஓங்குக
மூவா தென்றும் மூவுல கெங்கும். ஆமென்.
___________________________

(அமரவும்)

மு.மொழி.1: ஆண்டவரே உமது நாட்டின் மீது அருள்கூர்ந்தீர்; உமது
மக்களின் குற்றத்தை மன்னித்தீர்.

நாட்டின் நலனுக்காக மன்றாடல் திபா 85

ஆண்டவரே உமது நாட்டின் மீது அருள் கூர்ந்தீர்
யாக்கோபினரை முன்னைய நன்னிலைக்குக் கொணர்ந்தீர்
உமது மக்களின் குற்றத்தை மன்னித்தீர்
அவர்களின் பாவங்கள் அனைத்தையும் மறைத்து விட்டீர்
உம் சினம் முழுவதையும் அடக்கிக் கொண்டீர்
கடும்சீற்றம் கொள்வதை விலக்கிக் கொண்டீர்.

எம் மீட்பராம் கடவுளே!
எங்களை முன்னைய நன்னிலைக்குக் கொணர்ந்தருளும்
எங்கள் மீது உமக்குள்ள சினத்தை அகற்றிக் கொள்ளும்
என்றென்றுமா எங்கள்மேல் நீர் சினம் கொள்வீர்
தலைமுறை தோறுமா உமது கோபம் நீடிக்கும்
உம்மக்கள் உம்மில் மகிழ்வுறுமாறு
எங்களுக்கு புத்துயிர் அளிக்க மாட்டீரோ?

ஆண்டவரே உமது பேரன்பை எங்களுக்குக் காட்டியருளும்
உமது மிட்பையும் எங்களுக்குத் தந்தருளும்
ஆண்டவராம் இறைவன் உரைப்பதைக் கேட்பேன்
தம் மக்களுக்கு தம் பற்றுமிகு அடியார்க்கு
நிறைவாழ்வை அவர் வாக்களிக்கின்றார்
அவர்களோ மடமைக்குத் திரும்பிச் செல்லலாகாது
அவருக்கு அஞ்சி நடப்போர்க்கு அவரது மீட்பு
அண்மையில் உள்ளது என்பது உறுதி
நம்நாட்டில் அவரது மாட்சி குடிகொள்ளும்.

பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும்
நீதியும் நிறைவாழ்வும் ஒன்றையொன்று முத்தமிடும்
மண்ணினின்று உண்மை முளைத்தெழும்
விண்ணினின்று நீதி கீழ்நோக்கும்
நல்லதையே ஆண்டவர் அருள்வார்
நல்விளைவை நம்நாடு நல்கும்
நீதி அவர்முன் செல்லும்
அவர்தம் அடிச்சுவடுகளுக்கு வழிவகுக்கும்.

மு.மொழி.: ஆண்டவரே உமது நாட்டின் மீது அருள்கூர்ந்தீர்; உமது
மக்களின் குற்றத்தை மன்னித்தீர்.
__________________________

மு.மொழி. 2: என் நெஞ்சம் பகலில் உம்மை நாடுகின்றது; இரவிலும்
உமக்காக விழித்திருக்கிறது.

வெற்றிப்பாடல்  
 எசா 26:1-4, 7-9, 12 

நமக்கொரு வலிமைமிகு நகர் உண்டு
நம்மைக் காக்க அவர் கொத்தளங்களை அமைத்துள்ளார்
வாயில்களைத் திறந்து விடுங்கள்
அவர்மீது நம்பிக்கை கொண்ட
நேர்மையான மக்களினம் உள்ளே வரட்டும்.

அவர்கள் மன உறுதி கொண்டவர்கள்
உம்மீது நம்பிக்கை உடையவர்கள்
அவர்களை அமைதியால் நீர் உறுதிப்படுத்துகின்றீர்
ஆண்டவர்மீது என்றென்றும் நம்பிக்கை கொள்ளுங்கள்
ஏனெனில் ஆண்டவர் என் ஆண்டவர்
என்றுமுள்ள கற்பாறை!

நீதிமான்களின் நெறிகள் நேரியவை
நீர் நேர்மையாளரின் வழியைச் செம்மையாக்குகின்றீர்
ஆண்டவரே உமது நீதியின் நெறியில் நடந்து
உமக்காக காத்திருக்கிறோம்
உமது திருப்பெயரும் உமது நினைவும்
எங்களுக்கு இன்பமாய் உள்ளன.
என் நெஞ்சம் இரவில் உம்மை நாடுகின்றது
எனக்குள்ளிருக்கும் ஆவி ஏக்கத்தோடு உம்மைத் தேடுகின்றது
உம் நீதித் தீர்ப்புகள் நிலவுலகில் நிலைத்திருக்கையில்
வாழ்வோர் நேர்மையைக் கற்றுக்கொள்வர்.

ஆண்டவரே நிறைவாழ்வை நீர் எங்களுக்கு உரியதாக்குவீர்
ஏனெனில் எங்கள் செயல்கள் அனைத்தையும்
எங்களுக்காகச் செய்கின்றவர் நீரே.

மு.மொழி.: என் நெஞ்சம் பகலில் உம்மை நாடுகின்றது; இரவிலும்
உமக்காக விழித்திருக்கிறது.
___________________________

மு.மொழி. 3: கடவுளே உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக!

திபா 67 (பக்கம் 151)

மு.மொழி.: கடவுளே உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக!
___________________________

(எழுந்து நின்று வாசிக்கவும்)

அருள்வாக்கு         1யோவா 4:14-15

தந்தை தம் மகனை உலகிற்கு மீட்பராக அனுப்பினார் என்பதை
நாங்களே கண்டறிந்தோம்; சான்றும் பகர்கிறோம். இயேசுவே
இறைமகன் என ஏற்று அறிக்கையிடுபவரோடு கடவுள்
இணைந்திருக்கிறார். அவரும் கடவுளோடு இணைந்திருக்கிறார்.
__________________________

சிறு மறுமொழி

℣ - என் கடவுளே என் துணை; என் நம்பிக்கையை நான்  அவர்மேல் வைப்பேன் 
℟ - என் கடவுளே என் துணை; என் நம்பிக்கையை நான்
அவர்மேல் வைப்பேன்

℣ -  அவரே என் புகலிடம்; அவர் என்னை விடுவிக்கின்றார்.
℟ - என் கடவுளே என் துணை; என் நம்பிக்கையை நான் அவர்மேல் வைப்பேன்

℣  - தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக
℟ - என் கடவுளே என் துணை; என் நம்பிக்கையை நான் அவர்மேல் வைப்பேன்
__________________________

(அனைவரும் எழுந்து நிற்கவும்)

செக்கரியாவின் பாடல்

மு.மொழி.: தம் தூய இறைவாக்கினர் வாயினால் தஅவர் மொழிந்தபடியே அவர்தம் ஊழியனாகிய தாவீதின் குடும்பத்தில்உடைய மீட்பர் ஒருவர் நமக்காகத் தோன்றச் செய்தார் 

இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றுவோம். 
ஏனெனில் அவர் தம் மக்களைத் தேடிவந்து விடுவித்தருளினார்.

தம் தூய இறைவாக்கினர் வாயினால் 
தொடக்க முதல் அவர் மொழிந்தபடியே
அவர் தம் ஊழியராகிய தாவீதின் குடும்பத்தில் 
வல்லமை உடைய மீட்பர் ஒருவர் நமக்காகத் தோன்றச் செய்தார்;

நம் பகைவரிடமிருந்தும் 
நம்மை வெறுப்போர் அனைவரின் பிடியிலிருந்தும் 
நம்மை மீட்பார்.

அவர் நம் மூதாதையருக்கு இரக்கம் காட்டி, 
தமது தூய உடன்படிக்கையையும்,
நம் தந்தையாகிய ஆபிரகாமுக்கு அவர் இட்ட ஆணையையும் 
நிறைவேற்ற நினைவு கூர்ந்தார்.

இவ்வாறு நாம் பகைவரின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டுத் 
தூய்மையோடும் நேர்மையோடும்
வாழ்நாளெல்லாம் அச்சமின்றி 
அவர் திருமுன் பணிசெய்யுமாறு வழிவகுத்தார்.

குழந்தாய், 
நீ உன்னத கடவுளின் இறைவாக்கினர் எனப்படுவாய்;
ஏனெனில் பாவ மன்னிப்பால் வரும் மீட்பை 
அவர்தம் மக்களுக்கு அறிவித்து 
ஆண்டவருக்கான வழியைச் செம்மைப்படுத்த 
அவர் முன்னே செல்வாய்.

இருளிலும் இறப்பின் பிடியிலும் இருப்போர்க்கு ஒளிதரவும்,
நம்முடைய கால்களை அமைதி வழியில் நடக்கச் செய்யவும் 
நம் கடவுளின் பரிவுள்ளத்தாலும் இரக்கத்தாலும் 
விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடிவருகிறது.

மு.மொழி.: தம் தூய இறைவாக்கினர் வாயினால் தஅவர் மொழிந்தபடியே அவர்தம் ஊழியனாகிய தாவீதின் குடும்பத்தில்உடைய மீட்பர் ஒருவர் நமக்காகத் தோன்றச் செய்தார் 
__________________________

மன்றாட்டுக்கள்

தம் இரத்தத்தை நமக்காகச் சிந்தி கிறிஸ்து உலகின் எல்லாத்
திசைகளிலிருந்தும் தமக்கென ஒரு புதிய மக்கள் குலத்தை
ஒன்றுசேர்த்தார்; நாம் அவரிடம் வேண்டுவோம்.

℟ -  கிறிஸ்துவே, உம் மக்களை நினைவு கூர்ந்தருளும்

 கிறிஸ்துவே, நீரே எம் மன்னரும் மீட்பருமாவீர் – நாங்கள் உமது ஆற்றலையும் அன்பையும் அறிந்துகொள்ளத் துணைபுரியும்.

℟ -  கிறிஸ்துவே, உம் மக்களை நினைவு கூர்ந்தருளும்

 கிறிஸ்துவே, நீரே எம் நம்பிக்கையும் துணிவும் - இந்நாள்
நெடுகிலும் எங்களுக்கு ஆதரவாயிரும்.

℟ -  கிறிஸ்துவே, உம் மக்களை நினைவு கூர்ந்தருளும்

கிறிஸ்துவே, நீரே எம் புகலிடமும் வலிமையும் – எமது
வலுவின்மையை எதிர்த்துப் போராடத் துணைபுரியும்.

℟ - கிறிஸ்துவே, உம் மக்களை நினைவு கூர்ந்தருளும்

(தனிப்பட்ட தேவைகளுக்காக மன்றாடல்)
__________________________

ஆண்டவரின் செபம்
__________________________

இறுதி செபம்

எல்லாம் வல்ல இறைவா, அனைத்தையும் நல்லவையாகவும்
அழகுள்ளவையாகவும் படைத்தீர். இந்நாளை உமது திருப்பெயரில்
மகிழ்வுடன் தொடங்கவும், எங்கள் இறையன்பு பிறரன்புப் பணிகளால்  நிறைவு செய்யவும் அருள்புரியும். உம்மோடு  தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சிபுரியும் எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
__________________________

ஆசி வழங்குதல்

குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக 
எல்: உம் ஆன்மாவோடும் இருப்பாராக 

குரு: எல்லாம் வல்ல இறைவன் தந்தை மகன் தூய ஆவியார் உங்களை ஆசீர்வதிப்பாராக. 
எல்: ஆமென் 

குரு: கிறிஸ்துவின் அமைதியில் சென்று வாருங்கள் 
எல்: இறைவா உமக்கு நன்றி 

(அல்லது)

முதல்: ஆண்டவர் நம்மை ஆசீர்வதித்து தீமைகள் அனைத்தினின்றும் பாதுகாத்து முடிவில்லா வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக 
எல்: ஆமென் 

முதல்: ஆண்டவரை வாழ்த்துவோமாக 
எல்: இறைவா உமக்கு நன்றி.