3 - வியாழன் காலைப் புகழ்
3 - வியாழன் காலை செபம்
முதல்: இறைவா எமக்குத் துணைபுரிய வாரும்
எல்: ஆண்டவரே எனக்குத் துணைபுரிய விரைைந்து வாரும்
முதல்: தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக
எல்: தொடக்கத்தில் இருந்ததுபோல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக ஆமென்.
__________________________
(எழுந்து நிற்கவும்)
__________________________
(அமரவும்)
மு.மொழி.1: கடவுளின் நகரே! உன்னைப் பற்றி மேன்மையானவை பேசப்படுகின்றன.
பெருமைமிகு எருசலேம்
திபா 87
நகரின் அடித்தளம் திருமலைகளின் மீது அமைந்துள்ளது
யாக்கோபின் உறைவிடங்கள் அனைத்தையும் விட
ஆண்டவர் சீயோன் நகர வாயில்களை விரும்புகின்றார்/
கடவுளின் நகரே
உன்னைப்பற்றி மேன்மையானவை பேசப்படுகின்றன.
எகிப்தையும் பாபிலோனையும்
என்னை அறிந்தவைகளாகக் கொள்வேன்
பெலிஸ்தியர் தீர் மற்றும் எத்தியோப்பியா நாட்டினரைக் குறித்து
இவர்கள் இங்கேயே பிறந்தவர்கள் என்று கூறப்படும்
இங்கே தான் எல்லாரும் பிறந்தனர்
உன்னதர்தாமே அதை நிலைநாட்டியுள்ளார் என்று
சீயோனைப்பற்றி சொல்லப்படும்.
மக்களினங்களின் பெயர்களைப் பதிவு செய்யும் போது
இவர் இங்கேதான் பிறந்தார் என ஆண்டவர் எழுதுவார்
ஆடல் வல்லாருடன் பாடுவோரும் சேர்ந்து
எங்கள் நலன்களின் ஊற்று உன்னிடமே உள்ளது
எல்லாரின் உறைவிடமும் உன்னிடமே உள்ளது என்பர்.
மு.மொழி.: கடவுளின் நகரே! உன்னைப் பற்றி மேன்மையானவை பேசப்படுகின்றன.
__________________________
மு.மொழி. 2: இதோ என் தலைவராகிய ஆண்டவர் ஆற்றலுடன் வருகின்றார். அவர்தம் வெற்றிப் பரிசைத் தம்முடன் எடுத்து வருகின்றார்.
இஸ்ரயேலின் ஒப்பற்ற கடவுள் எசா 40:10-17
இதோ என் தலைவராகிய ஆண்டவர் ஆற்றலுடன் வருகின்றார்
அவர் ஆற்றலோடு ஆட்சி புரிய இருக்கிறார்
அவர்தம் வெற்றிப் பரிசைத் தம்முடன் எடுத்து வருகின்றார்
அவர் வென்றவை அவர் முன் செல்கின்றன.
ஆயனைப் போல் தம் மந்தையை அவர் மேய்ப்பார்
ஆட்டுக் குட்டிகளைத் தம் கையால் ஒன்று சேர்ப்பார்
அவற்றைத் தம் தோளில் தூக்கி சுமப்பார்
சினையாடுகளைக் கவனத்துடன் நடத்திச் செல்வார்.
கடல் நீரைத் தம் உள்ளங்கை அளவால் கணக்கிட்டவர் யார்
வானத்தைச் சாண் அளவால் கணித்திட்டவர் யார்
மண்ணுலகின் புழுதியை மரக்காலால் அளந்தவர் யார்
மலைகளை நிறைகோலாலும்
குன்றுகளைத் தராசாலும் நிறுத்தவர் யார்?
ஆண்டவரின் ஆவிக்கு வழிகாட்டியவர் யார்
அவருக்கு அறிவுரையாளராய் இருந்து கற்றுத்தந்தவர் யார்
யாரிடம் அவர் அறிவுரை கேட்டார்
அவருக்குப் பயிற்சி அளித்து நீதி நெறியை உணர்த்தியவர் யார்
அவருக்கு அறிவு புகட்டி விவேக நெறியைக் காட்டியவர் யார் ?
இதோ வேற்றினத்தார் வாளியிலிருக்கும் நீர்த்துளியாகவும்
தராசில் ஒட்டிய தூசாகவும் அவரால் கருதப்படுகின்றனர்
இதோ தீவுகளை ஓர் அணுவென அவர் தூக்குகின்றார்
எரிப்பதற்கு லெபனோன் போதாது
எரிபலிக்கு அதன் விலங்குகள் பற்றாது
மக்களினங்கள் யாவும் இல்லாமையாக ஒன்றுமில்லாமையாக
வெறுமையாக அவரால் கருதப்படுகின்றன.
மு.மொழி.: இதோ என் தலைவராகிய ஆண்டவர் ஆற்றலுடன் வருகின்றார். அவர்தம் வெற்றிப் பரிசைத் தம்முடன் எடுத்து வருகின்றார்.
___________________________
மு.மொழி. 3: நம் கடவுளாகிய ஆண்டவரைப் பெருமைப்படுத்துங்கள்.
அவரது திருமலையில் அவரைத் தொழுங்கள்
அனைத்து உலகின் அரசர்
திபா 99
ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; மக்களினத்தார் கலங்குவாராக
அவர் கெருபுகள் மீது வீற்றிருக்கின்றார்
மண்ணுலகம் நடுநடுங்குவதாக !
சீயோனில் ஆண்டவர் மேன்மையுடன் விளங்குகின்றார்
எல்லா இனத்தார் முன்பும் மாட்சியுடன் திகழ்கின்றார்.
மேன்மையானதும் அஞ்சுதற்கு உரியதுமான
அவரது பெயரை அவர்கள் போற்றுவார்களாக
அவரே தூயவர்.
வல்லமை மிக்க அரசரே! நீதியை நீர் விரும்புகின்றீர்
நேர்மையை நிலைக்கச் செய்கின்றீர்
யாக்கோபினரிடையே நீதியையும் நேர்மையையும்
நீர்தாமே நிலைநாட்டுகின்றீர்.
நம் கடவுளாகிய ஆண்டவரைப் பெருமைப்படுத்துங்கள்
அவரது அரியணைமுன் தாள் பணிந்து வணங்குங்கள்
அவரே தூயவர்
மோசேயும் ஆரோனும் அவர்தம் குருக்கள்
அவரது பெயரால் மன்றாடுவோருள் சாமுவேலும் ஒருவர்
அவர்கள் ஆண்டவரை நோக்கி மன்றாடினர்
அவரும் அவர்களுக்குச் செவிசாய்த்தார்
மேகத்தூணிலிருந்து அவர்களோடு பேசினார்
அவர்கள் அவருடைய ஒழுங்கு முறைகளையும்
அவர் அவர்களுக்குத் தந்த நியமங்களையும் கடைப்பிடித்தார்கள்.
எங்கள் கடவுளாகிய ஆண்டவரே நீர் அவர்களுக்குச் செவிசாய்த்தீர்
மன்னிக்கும் கடவுளாக உம்மை வெளிப்படுத்தினீர்
ஆயினும் அவர்களுடைய தீச்செயல்களுக்காய்
நீர் அவர்களைத் தண்டித்தீர்
நம் கடவுளாகிய ஆண்டவரைப் பெருமைப்படுத்துங்கள்
அவரது திருமலையில் அவரைத் தொழுங்கள்
ஏனெனில் நம் கடவுளாகிய ஆண்டவரே தூயவர்.
மு.மொழி.: நம் கடவுளாகிய ஆண்டவரைப் பெருமைப்படுத்துங்கள்.
அவரது திருமலையில் அவரைத் தொழுங்கள்
___________________________
(எழுந்து நின்று வாசிக்கவும்)
அருள்வாக்கு 1 பேது 4: 10-11
நீங்கள் கடவுளுடைய பல்வகை அருள் கொடைகளின் சீரிய பொறுப்பாளர்கள். எனவே உங்களுள் ஒவ்வொருவரும் தாம் பெற்றுக் கொண்ட அருள் கொடையைப் பயன்படுத்தி ஒருவருக்கொருவர் பணிபுரியுங்கள். ஒருவர் பேசும் கொடையைப் பெற்றிருந்தால் அவரது பேச்சு கடவுளுடைய வார்த்தைகளைப் போல் இருக்கட்டும். ஒருவர் பணிசெய்யும் கொடையைப் பெற்றிருந்தால் கடவுள் அருளும் ஆற்றலைப் பெற்றவர் போல் பணி செய்யட்டும். இவ்வாறு இயேசு கிறிஸ்துவின் வழியாகக் கடவுள் அனைத்திலும் பெருமை பெறுவார். அவருக்கே மாட்சியும் வல்லமையும் என்றென்றும் உரித்தாகுக! ஆமென்..
__________________________
சிறு மறுமொழி
℣ - ஆண்டவரே, எனக்குச் செவிசாயுமென்று என் முழு
உள்ளத்தோடு கூவியழைத்தேன்
℟ - ஆண்டவரே, எனக்குச் செவிசாயுமென்று என் முழு
உள்ளத்தோடு கூவியழைத்தேன்
℣ - நான் உமது கட்டளைகளைக் கடைப்பிடிப்பேன்.
℟ - ஆண்டவரே, எனக்குச் செவிசாயுமென்று என் முழு
உள்ளத்தோடு கூவியழைத்தேன்
℣ - தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக
℟ - ஆண்டவரே, எனக்குச் செவிசாயுமென்று என் முழு
உள்ளத்தோடு கூவியழைத்தேன்
__________________________
(அனைவரும் எழுந்து நிற்கவும்)
செக்கரியாவின் பாடல்
மு.மொழி.: தூய்மையோடு ஆண்டவருக்குப் பணி செய்வோம். அவர்
நம்மை பகைவரின் பிடியிலிருந்து விடுவிப்பார்.
இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றுவோம்.
ஏனெனில் அவர் தம் மக்களைத் தேடிவந்து விடுவித்தருளினார்.
தம் தூய இறைவாக்கினர் வாயினால்
தொடக்க முதல் அவர் மொழிந்தபடியே
அவர் தம் ஊழியராகிய தாவீதின் குடும்பத்தில்
வல்லமை உடைய மீட்பர் ஒருவர் நமக்காகத் தோன்றச் செய்தார்;
நம் பகைவரிடமிருந்தும்
நம்மை வெறுப்போர் அனைவரின் பிடியிலிருந்தும்
நம்மை மீட்பார்.
அவர் நம் மூதாதையருக்கு இரக்கம் காட்டி,
தமது தூய உடன்படிக்கையையும்,
நம் தந்தையாகிய ஆபிரகாமுக்கு அவர் இட்ட ஆணையையும்
நிறைவேற்ற நினைவு கூர்ந்தார்.
இவ்வாறு நாம் பகைவரின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டுத்
தூய்மையோடும் நேர்மையோடும்
வாழ்நாளெல்லாம் அச்சமின்றி
அவர் திருமுன் பணிசெய்யுமாறு வழிவகுத்தார்.
குழந்தாய்,
நீ உன்னத கடவுளின் இறைவாக்கினர் எனப்படுவாய்;
ஏனெனில் பாவ மன்னிப்பால் வரும் மீட்பை
அவர்தம் மக்களுக்கு அறிவித்து
ஆண்டவருக்கான வழியைச் செம்மைப்படுத்த
அவர் முன்னே செல்வாய்.
இருளிலும் இறப்பின் பிடியிலும் இருப்போர்க்கு ஒளிதரவும்,
நம்முடைய கால்களை அமைதி வழியில் நடக்கச் செய்யவும்
நம் கடவுளின் பரிவுள்ளத்தாலும் இரக்கத்தாலும்
விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடிவருகிறது.
மு.மொழி.: தூய்மையோடு ஆண்டவருக்குப் பணி செய்வோம். அவர் நம்மை பகைவரின் பிடியிலிருந்து விடுவிப்பார்.
_________________________
மன்றாட்டுக்கள்
நாம் விண்ணிலிருந்து ஆளுகின்ற நம் கடவுளைப் புகழ்ந்து தொழுவோம். அவரே எல்லாவற்றிற்கும் ஆண்டவர். அவர் முன் படைப்புகள் அனைத்தும் ஒன்றுமில்லாமையே.
℟ - எம் ஆண்டவராகிய கடவுளே, நாங்கள் உம்மைத் தொழுகிறோம்.
ஆண்டவரே புதியதொரு நாளைத் தொடங்கும் எம்மோடு இருந்தருளும் – நாங்கள் முழு உள்ளத்தோடு உம்மைத் தேடவும் விருப்பத்தோடு உமக்குப் பணிபுரியவும் செய்தருளும்.
℟ - எம் ஆண்டவராகிய கடவுளே, நாங்கள் உம்மைத் தொழுகிறோம்.
நீர் படைத்தவர்களை அன்பு செய்வது உம்மை அறிவதாகும் - எங்களுடைய வாழ்வும் பணியும் எங்கள் சகோதரர்களுக்கு ஆற்றும் பணிவிடையாய் இருக்கட்டும்.
℟ - எம் ஆண்டவராகிய கடவுளே, நாங்கள் உம்மைத் தொழுகிறோம்.
(தனிப்பட்ட தேவைகளுக்காக மன்றாடல்)
__________________________
ஆண்டவரின் செபம்
__________________________
இறுதி செபம்
என்றும் வாழும் எல்லாம் வல்ல கடவுளே, வானிலிருந்து வரும் நீதியின் கதிரவனாம் எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வருகையினால் உலகம் புத்துயிர் பெற்றது. அது போன்று சாவின் நிழலில் வாழும் அனைவர் மீதும் இன்றும் உமது மாட்சியின் சுடரொளியை வீசியருளும். உம்மோடுதூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சிபுரியும் எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.
_____________________________
ஆசி வழங்குதல்
குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக
எல்: உம் ஆன்மாவோடும் இருப்பாராக
குரு: எல்லாம் வல்ல இறைவன் தந்தை மகன் தூய ஆவியார் உங்களை ஆசீர்வதிப்பாராக.
எல்: ஆமென்
குரு: கிறிஸ்துவின் அமைதியில் சென்று வாருங்கள்
எல்: இறைவா உமக்கு நன்றி
(அல்லது)
முதல்: ஆண்டவர் நம்மை ஆசீர்வதித்து தீமைகள் அனைத்தினின்றும் பாதுகாத்து முடிவில்லா வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக
எல்: ஆமென்
முதல்: ஆண்டவரை வாழ்த்துவோமாக
எல்: இறைவா உமக்கு நன்றி.