3 - வெள்ளி மாலைப் புகழ்
3 - வெள்ளி மாலை செபம்
முதல்: இறைவா எமக்குத் துணைபுரிய வாரும்
எல்: ஆண்டவரே எனக்குத் துணைபுரிய விரைைந்து வாரும்
முதல்: தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக
எல்: தொடக்கத்தில் இருந்ததுபோல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக ஆமென்.
__________________________
பாடல் (பக்கம் 81)
(எழுந்து நிற்கவும்)
__________________________
(அமரவும்)
மு.மொழி.1: ஆண்டவர் மேன்மை மிக்கவர் என்பதை அறிவேன்;
நம் ஆண்டவர் எல்லாத் தெய்வங்களுக்கும் மேலானவர்.
புகழ்ச்சிப்பாடல் திபா 135
ஆண்டவரின் பெயரைப் புகழுங்கள்
ஆண்டவரின் ஊழியரே அவரைப் புகழுங்கள்
ஆண்டவரின் கோவிலுள் நிற்பவர்களே
நம் கடவுளின் கோவில் முற்றங்களில் உள்ளவர்களே
ஆண்டவரைப் புகழுங்கள்; ஏனெனில் அவர் நல்லவர்
அவரது பெயரைப் போற்றிப் பாடுங்கள்
ஏனெனில் அவர் இனியவர்.
ஆண்டவர் யாக்கோபைத் தமக்கென்று தேர்ந்துகொண்டார்
இஸ்ரயேலைத் தமக்குரிய தனிச்சொத்தாகத் தெரிந்தெடுத்தார்
ஆண்டவர் மேன்மை மிக்கவர் என்பதை அறிவேன்
நம் ஆண்டவர் எல்லாத் தெய்வங்களுக்கும் மேலானவர்
என்பதும் எனக்குத் தெரியும்
விண்ணிலும் மண்ணிலும் கடல்களிலும் எல்லா ஆழ்பகுதிகளிலும்
ஆண்டவர் தமக்கு விருப்பமான யாவற்றையும் செய்கின்றார்
அவர் பூவுலகின் கடையெல்லைகளிலிருந்து
மேகங்களை எழச் செய்கின்றார்.
மழை பெய்யும்படி மின்னலை உண்டாக்குகின்றார்
காற்றைத் தம் கிடங்குகளிலிருந்து வெளிவரச் செய்கின்றார்.
அவர் எகிப்தின் தலைப்பேறுகளைத் தாக்கினார்
மனிதர் கால்நடைகளின் தலைப்பேறுகளை அழித்தார்
எகிப்து நாடே! உன் நடுவில் பார்வோனையும்
அவனுடைய எல்லா ஊழியர்களையும் தண்டிக்குமாறு
அடையாளங்களையும் அருஞ்செயல்களையும் அவர் நிகழச் செய்தார்.
அவர் பல்வேறு இனத்தவரைத் தாக்கினார்
வலிமை வாய்ந்த மன்னர்களைக் கொன்றார்
எமோரியரின் மன்னனாகிய சீகோனையும்
பாசானின் மன்னனாகிய ஓகையும்
கானானின் எல்லா அரசுகளையும் அழித்தார்
அவர்கள் நாட்டைத் தம் மக்களாகிய இஸ்ரயேலருக்கு
உரிமைச் சொத்தாக சொந்த உடைமையாகக் கொடுத்தார்.
மு.மொழி.: ஆண்டவர் மேன்மை மிக்கவர் என்பதை அறிவேன்;
நம் ஆண்டவர் எல்லாத் தெய்வங்களுக்கும் மேலானவர்.
__________________________
மு.மொழி. 2: இஸ்ரயேல் குடும்பத்தாரே! ஆண்டவரைப் போற்றுங்கள் !
அவர் திருப்பெயருக்குப் புகழ்பாடுங்கள்; ஏனெனில் அவர் அன்புள்ளவர்.
II
ஆண்டவரே உமது பெயர் என்றுமுள்ளது
ஆண்டவரே உம்மைப் பற்றிய நினைவு
தலைமுறை தலைமுறையாக நீடித்திருக்கும்
ஆண்டவர் தம் மக்களை நீதியுடன் தீர்ப்பிடுவார்
தம் அடியாருக்கு இரக்கம் காட்டுவார்.
வேற்றினத்தார் வழிபடும் சிலைகள்
வெறும் வெள்ளியும் பொன்னுமே
அவை மனிதரின் கையால் செய்யப்பட்டவையே
அவற்றுக்கு வாய்கள் உண்டு; ஆனால் அவை பேசுவதில்லை
கண்கள் உண்டு; ஆனால் அவை காண்பதில்லை
காதுகள் உண்டு; ஆனால் அவை கேட்பதில்லை
வாய்கள் உண்டு; ஆனால் அவை மூச்சு விடுவதில்லை
அவற்றைச் செய்து வைப்பவரும்
அவற்றில் நம்பிக்கை வைக்கும் யாவரும்
அவற்றைப் போலவே இருப்பார்கள்.
இஸ்ரயேல் குடும்பத்தாரே ஆண்டவரைப் போற்றுங்கள்
ஆரோன் குடும்பத்தாரே ஆண்டவரைப் போற்றுங்கள்
லேவி குடும்பத்தாரே ஆண்டவரைப் போற்றுங்கள்
அவருக்கு அஞ்சி நடப்போரே அவரைப் போற்றுங்கள்
எருசலேமைத் தம் உறைவிடமாகக் கொண்டிருக்கும்
ஆண்டவர் போற்றப்படுவாராக
சியோனிலிருக்கும் ஆண்டவர் போற்றப்படுவாராக!
மு.மொழி.: இஸ்ரயேல் குடும்பத்தாரே! ஆண்டவரைப் போற்றுங்கள் ! அவர் திருப்பெயருக்குப் புகழ்பாடுங்கள்; ஏனெனில் அவர் அன்புள்ளவர்.
___________________________
மு.மொழி. 3: ஆண்டவரே, எல்லா மக்களினங்களும் உம் திருமுன் வந்து வணங்கும்.
திவெ 15: 3, 4
அவர்கள் கடவுளின் பணியாளரான மோசேயின் பாடலையும் ஆட்டுக்குட்டியின் பாடலையும் பாடிக் கொண்டிருந்தார்கள்; “கடவுளாகிய ஆண்டவரே, எல்லாம் வல்லவரே, உம் செயல்கள் பெரியன, வியப்புக்குரியன. மக்களினங்களின் மன்னரே, உம் வழிகள் நேரியவை, உண்மையுள்ளவை.
ஆண்டவரே, உமக்கு அஞ்சாதவர் யார்? உமது பெயரைப் போற்றிப் புகழாதார் யார்? நீர் ஒருவரே தூயவர், எல்லா மக்களினங்களும் உம் திருமுன் வந்து வணங்கும். ஏனெனில் உம் நீதிச் செயல்கள் வெளிப்படையாயின.”
மு.மொழி.: ஆண்டவரே, எல்லா மக்களினங்களும் உம் திருமுன் வந்து வணங்கும்.
___________________________
(எழுந்து நின்று வாசிக்கவும்)
அருள்வாக்கு யாக் 1:2-4
என் சகோதர சகோதரிகளே, பலவகையான சோதனைகளுக்கு உள்ளாகும்போது நீங்கள் மகிழ்ச்சியாய் இருக்கவேண்டும் என்பதைக் கொண்டிருங்கள். உங்கள் நம்பிக்கை சோதிக்கப்படும்போது மனவுறுதி உண்டாகும் என்பது உங்களுக்குத் தெரியும். உங்கள் மனவுறுதி நிறைவான செயல்களால் விளங்கட்டும். அப்பொழுது எக்குறையுமின்றி முற்றும் நிறைவுள்ளவர்களாக இருப்பீர்கள்.
__________________________
சிறு மறுமொழி
℣ - கிறிஸ்து நம்மை அன்பு செய்து தம் இரத்தத்தால் நம்
பாவங்களைக் கழுவினார்.
℟ - கிறிஸ்து நம்மை அன்பு செய்து தம் இரத்தத்தால் நம்
பாவங்களைக் கழுவினார்.
℣ - கடவுளுக்கு நாம் ஊழியம் செய்யும்படியாக அவர் நம்மை
அரச குருத்துவத் திருக்கூட்டமாக்கினார்.
℟ - கிறிஸ்து நம்மை அன்பு செய்து தம் இரத்தத்தால் நம்
பாவங்களைக் கழுவினார்.
℣ - தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக
℟ - கிறிஸ்து நம்மை அன்பு செய்து தம் இரத்தத்தால் நம்
பாவங்களைக் கழுவினார்.
__________________________
(அனைவரும் எழுந்து நிற்கவும்)
மரியாவின் பாடல்
மு.மொழி.: ஆண்டவர் இரக்கத்தோடு தம் ஊழியராகிய நமக்குத் துணைபுரிய வந்தார்.
ஆண்டவரை எனது உள்ளம்
போற்றிப் பெருமைப் படுத்துகின்றது.
என் மீட்பராம் கடவுளை நினைத்து
எனது மனம் பேருவகை கொள்கின்றது.
ஏனெனில் அவர் தம் அடிமையின்
தாழ்நிலையைக் கண்ணோக்கினார்.
இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும்
என்னைப் பேறுபெற்றவர் என்பர்.
ஏனெனில் வல்லவராம் கடவுள்
எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார்.
தூயவர் என்பதே அவரது பெயர்.
அவருக்கு அஞ்சி நடப்போருக்குத்
தலைமுறை தலைமுறையாய்
அவர் இரக்கம் காட்டி வருகிறார்.
அவர் தம் தோள் வலிமையைக் காட்டியுள்ளார்;
உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச்
சிதறடித்து வருகிறார்.
வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்;
தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்.
பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்;
செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார்.
மூதாதையருக்கு உரைத்தபடியே அவர்
ஆபிரகாமையும் அவர்தம் வழி மரபினரையும்
என்றென்றும் இரக்கத்தோடு
நினைவில் கொண்டுள்ளார்;
தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத்
துணையாக இருந்து வருகிறார் ".
மு.மொழி.: ஆண்டவர் இரக்கத்தோடு தம் ஊழியராகிய நமக்குத் துணைபுரிய வந்தார்.
__________________________
மன்றாட்டுக்கள்
தந்தையே, நாங்கள் கிறிஸ்துவின் பாடுகளின் பயனாக மன்னிப்புப் பெற வேண்டுமென்று அவர் செபித்தார். நீர் அவரை ஏற்றுக்கொண்டது போல அவர் பாவிகளுக்காகச் செய்த வேண்டுதல்களையும் ஏற்றுக்கொள்ளும்.
℟ - தந்தையே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்.
இயேசுவே, உம் அன்பு சீடர் வழியாக மரியாவை எமக்கு அன்னையாகக் கொடுத்தீர் – அவரோடு சேர்ந்து எல்லா மக்களுக்காகவும் நாங்கள் உம்மிடம் வேண்டுகிறோம்.
℟ - தந்தையே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்.
தாகமாயிருக்கிறேன் என்ற கூக்குரலை நாங்கள் கேட்க அருள்புரியும் – மிகச்சிறிய எங்கள் சகோதரர்களிலும் நாங்கள் உம் திருமகனைக் கண்டு கொள்ளத் துணைசெய்யும்.
℟ - தந்தையே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்.
(தனிப்பட்ட தேவைகளுக்காக மன்றாடல்)
__________________________
ஆண்டவரின் செபம்
__________________________
இறுதி செபம்
தூய தந்தையாகிய கடவுளே, உம் திருமகன் இயேசு
கிறிஸ்துவை எங்கள் மீட்புக்கு விலையாக்கத் திருவுளமானீர். நாங்கள் அவருடைய பாடுகளில் பங்கேற்று, அவரது உயிர்ப்பின் ஆற்றலினால் உறுதி பெற்று வாழ அருள்புரிவீராக. உம்மோடு
தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சிபுரியும் எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.
_____________________________
ஆசி வழங்குதல்
குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக
எல்: உம் ஆன்மாவோடும் இருப்பாராக
குரு: எல்லாம் வல்ல இறைவன் தந்தை மகன் தூய ஆவியார் உங்களை ஆசீர்வதிப்பாராக.
எல்: ஆமென்
குரு: கிறிஸ்துவின் அமைதியில் சென்று வாருங்கள்
எல்: இறைவா உமக்கு நன்றி
(அல்லது)
முதல்: ஆண்டவர் நம்மை ஆசீர்வதித்து தீமைகள் அனைத்தினின்றும் பாதுகாத்து முடிவில்லா வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக
எல்: ஆமென்
முதல்: ஆண்டவரை வாழ்த்துவோமாக
எல்: இறைவா உமக்கு நன்றி.