3 - வியாழன் மாலைப் புகழ்

  3 - வியாழன் மாலை செபம்

முதல்: இறைவா எமக்குத் துணைபுரிய வாரும்

எல்: ஆண்டவரே எனக்குத் துணைபுரிய விரைைந்து வாரும்

முதல்: தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக

எல்: தொடக்கத்தில் இருந்ததுபோல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக ஆமென்.

__________________________

பாடல்  (பக்கம் 68)

(எழுந்து நிற்கவும்)


__________________________

(அமரவும்)

மு.மொழி.1: ஆண்டவரே, உம் அன்பர்கள் உம் திரு உறைவிடத்தில் நுழையும்போது பெருமகிழ்ச்சியுடன் அக்களிப்பார்களாக.

திருக்கோவில் வாழ்த்து 
திபா 132

ஆண்டவரே! தாவீதையும்
அவர் பட்ட இன்னல்கள் அனைத்தையும் நினைவு கூர்ந்தருளும்,
அவர் ஆண்டவராகிய உமக்கு ஆணையிட்டுக் கூறியதை
யாக்கோபின் வல்லவராகிய உமக்குச் செய்த
பொருத்தனையை நினைவு கூர்ந்தருளும்.

ஆண்டவருக்கு ஓர் இடத்தை
யாக்கோபின் வல்லவருக்கு ஓர் உறைவிடத்தை
நான் அமைக்கும் வரையில்
என் இல்லமாகிய கூடாரத்தினுள் செல்லமாட்டேன்
படுப்பதற்காக என் மஞ்சத்தில் ஏறமாட்டேன்
என் கண்களைத் தூங்க விடமாட்டேன்
என் இமைகளை மூடவிடமாட்டேன் என்று அவர் சொன்னாரே.

திருப்பேழை எப்பாத்தாவில் இருப்பதாய்க் கேள்விப்பட்டோம்
வனவெளியில் அதைக் கண்டுபிடித்தோம்
அவரது உறைவிடத்திற்குச் செல்வோம் வாருங்கள்
அவரது திருவடி தாங்கி முன் வீழ்ந்து பணிவோம் என்றோம்
ஆண்டவரே நீர் உமது வல்லமை விளங்கும் பேழையுடன்
உமது உறைவிடத்திற்கு எழுந்தருள்வீராக!

உம் குருக்கள் நீதியை ஆடையென அணிவார்களாக
உம் அன்பர்கள் அக்களிப்பார்களாக
நீர் திருப்பொழிவு செய்த அரசரை
உம் ஊழியராகிய தாவீதின் பொருட்டுப் புறக்கணியாதேயும்.

மு.மொழி.: ஆண்டவரே, உம் அன்பர்கள் உம் திரு உறைவிடத்தில்  நுழையும்போது பெருமகிழ்ச்சியுடன் அக்களிப்பார்களாக. 
__________________________

மு.மொழி. 2: ஆண்டவர் சீயோனைத் தம் உறைவிடமாகத் தேர்ந்து கொண்டார்.

                             II

ஆண்டவர் தாவீதுக்கு
உண்மையாய் ஆணையிட்டுக் கூறினார்
அவர்தம் வாக்குறுதியினின்று பின்வாங்கமாட்டார்
உனக்குப் பிறந்த ஒருவனை அரசனாக ஏற்படுத்தி
உன் அரியணையில் வீற்றிருக்கச் செய்வேன்.
உன் மைந்தர் என் உடன்படிக்கையையும்
நான் அவர்களுக்குக் கற்பிக்கும்
என் நியமங்களையும் கடைப்பிடித்தால்
அவர்களுடைய மைந்தரும் என்றென்றும்
உன் அரியணையில் வீற்றிருப்பர்.

ஆண்டவர் சீயோனைத் தேர்ந்தெடுத்தார்
அதையே தம் உறைவிடமாக்க விரும்பினார்
இது என்றென்றும் நான் இளைப்பாறும் இடம்
இதை நான் விரும்பினதால்
இதையே என் உறைவிடமாக்குவேன்
இங்கே என் ஆசியால் உணவுப் பொருள்
தாராளமாகக் கிடைக்கச் செய்வேன்
அதனை ஏழைகள் உண்டு நிறைவு பெறுமாறு செய்வேன்.

இங்குள்ள குருக்களுக்கு மீட்பெனும் உடையை உடுத்துவேன்
இங்குள்ள என் அன்பர்கள் மகிழ்ந்து ஆரவாரிப்பார்கள்
இங்கே தாவீதின் மரபிலிருந்து ஒரு வல்லவனை எழச் செய்வேன்
நான் திருப்பொழிவு செய்தவனுக்காக
ஓர் ஒளிவிளக்கை ஏற்பாடு செய்துள்ளேன்
அவனுடைய எதிரிகளுக்கு
இகழ்ச்சியெனும் உடையை உடுத்துவேன்
அவன் மீதோ அவனது மணிமுடி ஒளிவீசும்.

மு.மொழி.: ஆண்டவர் சீயோனைத் தம் உறைவிடமாகத் தேர்ந்து  கொண்டார். 
___________________________

மு.மொழி. 3: கடவுள் அவருக்கு ஆற்றலும் பெருமையும் ஆட்சியும்
அளித்தார். அனைத்து மக்களும் அவருக்கே ஊழியம் புரிவார்கள்.

இறைவனின் தீர்ப்பு
திவெ 11:17, 18; 12:10 – 12 

கடவுளாகிய ஆண்டவரே, எல்லாம் வல்லவரே,
இருக்கின்றவரும் இருந்தவருமான உமக்கு
நன்றி செலுத்துகின்றோம்
ஏனெனில் நீர் உமது பெரும் வல்லமையை வெளிப்படுத்தி
ஆட்சி செலுத்தலானீர்.

வேற்றினத்தார் சினந்தெழுந்தனர்
உமது சினமும் வெளிப்பட்டது.
இறந்தோருக்குத் தீர்ப்பளிக்கவும்
உம் பணியாளர்களாகிய இறைவாக்கினர்கள்,
இறைமக்கள், உமக்கு அஞ்சும் சிறியோர், பெரியோர்
ஆகிய அனைவருக்கும் கைம்மாறு அளிக்கவும்
உலகை அழிப்பவர்களை அழிக்கவும்
காலம் வந்துவிட்டது.

இதோ மீட்பு வல்லமை, நம் கடவுளின் ஆம்
அவருடைய மெசியாவின் அதிகாரம்
ஆகிய அனைத்தும் வந்துவிட்டன.
நம் சகோதரர் சகோதரிகள் மீது குற்றம் சுமத்தியவன்
நம் கடவுள் திருமுன் அல்லும் பகலும்
அவர்கள்மீது குற்றம் சாட்டியவன்
வெளியே தள்ளப்பட்டான்,

ஆட்டுக்குட்டி சிந்திய இரத்தத்தாலும்
தாங்கள் பகர்ந்த சான்றாலும்
அவர்கள் அவனை வென்றார்கள்
அவர்கள் தங்கள் உயிர்மீது ஆசை வைக்கவில்லை
இறக்கவும் தயங்கவில்லை.
இதன் பொருட்டு விண்ணுலகே, அதில் குடியிருப்போரே
மகிழ்ந்து கொண்டாடுங்கள்.

மு.மொழி.: கடவுள் அவருக்கு ஆற்றலும் பெருமையும் ஆட்சியும்
அளித்தார். அனைத்து மக்களும் அவருக்கே ஊழியம் புரிவார்கள்.
___________________________

(எழுந்து நின்று வாசிக்கவும்)

அருள்வாக்கு                  1 பேது 3:8-9

நீங்கள் எல்லாரும் ஒருமனப்பட்டிருங்கள். பிறரிடம் இரக்கமும் சகோதர அன்பும் பரிவுள்ளமும் மனத் தாழ்மையும் கொண்டிருங்கள். தீமைக்குப் பதில் தீமை செய்யாதீர்கள்; பழிச் சொல்லுக்குப் பழிச்சொல் கூறாதீர்கள்; மாறாக ஆசி கூறுங்கள். ஏனென்றால் கடவுள் வாக்களித்த ஆசியை உரிமையாக்கிக் கொள்வதற்கே அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்.
__________________________

சிறு மறுமொழி

℣ - ஆண்டவர் நயமான கோதுமையால் நம்மை 
உண்பித்தார் 
℟ - ஆண்டவர் நயமான கோதுமையால் நம்மை
உண்பித்தார்

℣ - மலைத் தேனால் நமக்கு நிறைவளித்தார்
℟ - ஆண்டவர் நயமான கோதுமையால் நம்மை
உண்பித்தார்

℣ - தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக
℟ - ஆண்டவர் நயமான கோதுமையால் நம்மை
உண்பித்தார்

__________________________

(அனைவரும் எழுந்து நிற்கவும்)

மரியாவின் பாடல்

மு.மொழி.: ஆண்டவர் வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார், தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்.

ஆண்டவரை எனது உள்ளம் 
போற்றிப் பெருமைப் படுத்துகின்றது. 
என் மீட்பராம் கடவுளை நினைத்து 
எனது மனம் பேருவகை கொள்கின்றது.
ஏனெனில் அவர் தம் அடிமையின் 
தாழ்நிலையைக் கண்ணோக்கினார்.

இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் 
என்னைப் பேறுபெற்றவர் என்பர்.
ஏனெனில் வல்லவராம் கடவுள் 
எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். 
தூயவர் என்பதே அவரது பெயர்.

அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் 
தலைமுறை தலைமுறையாய் 
அவர் இரக்கம் காட்டி வருகிறார்.
அவர் தம் தோள் வலிமையைக் காட்டியுள்ளார்; 
உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் 
சிதறடித்து வருகிறார்.

வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்; 
தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்.
பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்; 
செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார்.

மூதாதையருக்கு உரைத்தபடியே அவர் 
ஆபிரகாமையும் அவர்தம் வழி மரபினரையும் 
என்றென்றும் இரக்கத்தோடு 
நினைவில் கொண்டுள்ளார்;
தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத் 
துணையாக இருந்து வருகிறார் ".

மு.மொழி.: ஆண்டவர் வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார், தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்.
__________________________

மன்றாட்டுக்கள்

கிறிஸ்துவே தம் மக்களின் பெரிய குரு. அவர் பெயரால் நாம் ஒன்று கூடி வந்து தந்தையிடம் செபிப்போம்.

℟ - தந்தையே எங்கள் இதயத்தைப் புதுப்பித்தருளும்.

பாவிகளை உமது பக்கம் திருப்பியருளும் – எங்களுக்குத் தாழ்வுற்று நொறுங்கிய உள்ளத்தைத் தாரும்.

℟ - தந்தையே எங்கள் இதயத்தைப் புதுப்பித்தருளும்.

இறந்தோர்க்கு நித்திய சாந்தியை அளித்தருளும் – திருச்சபை அனைத்தையும் விண்ணகத்தில் ஒன்று சேர்த்தருளும்

℟ - தந்தையே எங்கள் இதயத்தைப் புதுப்பித்தருளும்.

(தனிப்பட்ட தேவைகளுக்காக மன்றாடல்)
__________________________

ஆண்டவரின் செபம்
__________________________

இறுதி செபம்

ஆண்டவரே, இந்நாள் முடிவில் நாங்கள் எங்களது நன்றிக் காணிக்கையைக் கொண்டு வருகிறோம். எங்கள் மனித வலுக்குறைவினால் நாங்கள் புரிந்த பாவங்களையெல்லாம் உமது இரக்கத்தால் மன்னித்தருளும்படி உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறோம். உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சிபுரியும் எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.
__________________________

ஆசி வழங்குதல்

குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக 
எல்: உம் ஆன்மாவோடும் இருப்பாராக 

குரு: எல்லாம் வல்ல இறைவன் தந்தை மகன் தூய ஆவியார் உங்களை ஆசீர்வதிப்பாராக. 
எல்: ஆமென் 

குரு: கிறிஸ்துவின் அமைதியில் சென்று வாருங்கள் 
எல்: இறைவா உமக்கு நன்றி 

(அல்லது)

முதல்: ஆண்டவர் நம்மை ஆசீர்வதித்து தீமைகள் அனைத்தினின்றும் பாதுகாத்து முடிவில்லா வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக 
எல்: ஆமென் 

முதல்: ஆண்டவரை வாழ்த்துவோமாக 
எல்: இறைவா உமக்கு நன்றி.