3 - செவ்வாய் மாலைப் புகழ்
3 - செவ்வாய் மாலை செபம்
முதல்: இறைவா எமக்குத் துணைபுரிய வாரும்
எல்: ஆண்டவரே எனக்குத் துணைபுரிய விரைைந்து வாரும்
முதல்: தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக
எல்: தொடக்கத்தில் இருந்ததுபோல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக ஆமென்.
__________________________
பாடல் (பக்கம் 46)
(எழுந்து நிற்கவும்)
__________________________
(அமரவும்)
மு.மொழி.1: ஆண்டவர் இப்போதும் எப்போதும் தம் மக்களைச் சுற்றிலும் இருப்பார்
இறைமக்களைப் பாதுகாப்பவர். திபா 125
ஆண்டவர் மீது நம்பிக்கை வைத்துள்ளோர்
சீயோன் மலைபோல் என்றும் அசையாது இருப்பர்
எருசலேமைச் சுற்றிலும் மலைகள் இருப்பது போல
ஆண்டவர் இப்போதும் எப்போதும்
தம் மக்களைச் சுற்றிலும் இருப்பார்
நல்லார்க்கென ஒதுக்கப்பட்ட நாட்டில்
பொல்லாரின் ஆட்சி நிலைக்காது
இல்லையெனில் நல்லாரும்
பொல்லாதது செய்ய நேரிடும்.
ஆண்டவரே நல்லவர்களுக்கும் நேரிய இதயம்
உள்ளவர்களுக்கும் நீர் நன்மை செய்தருளும்
கோணல் வழி நோக்கித் திரும்புவோரை
ஆண்டவர் தீயவரோடு சேர்த்து இழுத்துச் செல்வார்
இஸ்ரயேலுக்கு நலம் உண்டாவதாக!
மு.மொழி.: ஆண்டவர் இப்போதும் எப்போதும் தம் மக்களைச்
சுற்றிலும் இருப்பார்
__________________________
மு.மொழி. 2: நீங்கள் மனம் திரும்பி சிறு பிள்ளைகளைப்போல்
ஆகாவிட்டால் விண்ணரசில் புகமாட்டீர்கள்.
பணிவுமிகு மன்றாட்டு
திபா131
ஆண்டவரே என் உள்ளத்தில் இறுமாப்பு இல்லை
என் பார்வையில் செருக்கு இல்லை
எனக்கு மிஞ்சின அரிய பெரிய செயல்களில்
நான் ஈடுபடுவதில்லை. மாறாக
என் நெஞ்சம் நிறைவும் அமைதியும் கொண்டுள்ளது.
தாய்மடி தவழும் குழந்தையென
என்நெஞ்சம் என்னகத்தே அமைதியாயுள்ளது
இஸ்ரயேலே இப்போதும் எப்போதும்
ஆண்டவரையே நம்பியிரு !
மு.மொழி.: நீங்கள் மனம் திரும்பி சிறு பிள்ளைகளைப்போல்
ஆகாவிட்டால் விண்ணரசில் புகமாட்டீர்கள்.
___________________________
மு.மொழி. 3: ஆண்டவரே, நாங்கள் எம் கடவுளுக்கு ஊழியம் புரிய அரச குருத்துவத் திருக்கூட்டமாக்கினீர்.
திவெ 4 : 11, 5: 9, 10, 12
“எங்கள் ஆண்டவரே, எங்கள் கடவுளே, மாட்சியும் மாண்பும் வல்லமையும் பெற நீர் தகுதி பெற்றவர்; ஏனெனில் அனைத்தையும் படைத்தவர் நீரே. உமது திருவுளப்படியே அவை உண்டாயின, படைக்கப்பட்டன” என்று பாடினார்கள்.அவர்கள் புதியதொரு பாடலைப் பாடிக்கொண்டிருந்தார்கள்; “ஏட்டை எடுக்கவும் அதன் முத்திரைகளை உடைத்துப் பிரிக்கவும் தகுதி பெற்றவர் நீரே. நீர் கொல்லப்பட்டீர்; உமது இரத்தத்தால் குலம், மொழி, நாடு, மக்களினம் ஆகிய அனைத்தினின்றும் மக்களைக் கடவுளுக்கென்று விலை கொடுத்து மீட்டுக்கொண்டீர் ஆட்சியுரிமை பெற்றவர்களாகவும் குருக்களாகவும் அவர்களை எங்கள் கடவுளுக்காக ஏற்படுத்தினீர். அவர்கள் மண்ணுலகின்மீது ஆட்சி செலுத்துவார்கள் கொல்லப்பட்ட ஆட்டுக்குட்டி வல்லமையும் செல்வமும் ஞானமும் ஆற்றலும் மாண்பும் பெருமையும் புகழ்ச்சியும் பெறத் தகுதி பெற்றது” என்று அவர்கள் உரத்த குரலில் பாடிக் கொண்டிருந்தார்கள்.
மு.மொழி.: ஆண்டவரே, நாங்கள் எம் கடவுளுக்கு ஊழியம்
புரிய அரச குருத்துவத் திருக்கூட்டமாக்கினீர்.
___________________________
(எழுந்து நின்று வாசிக்கவும்)
அருள்வாக்கு உரோ 12:9-12
உங்கள் அன்பு கள்ளமற்றதாய் இருப்பதாக! தீமையை வெறுத்து நன்மையையே பற்றிக்கொள்ளுங்கள். உடன்பிறப்புகள் போன்று ஒருவருக்கொருவர் உளங்கனிந்த அன்பு காட்டுங்கள். பிறர் உங்களைவிட மதிப்புக்கு உரியவர் விடாமுயற்சியோடும், ஆர்வம் மிக்க ஆண்டவருக்குப் பணிபுரியுங்கள். எதிர்நோக்கி இருப்பதில் மகிழ்ச்சி கொள்ளுங்கள். துன்பத்தில் தளரா மனத்துடன் இருங்கள். இறைவேண்டலில் நிலைத்திருங்கள்.
__________________________
சிறு மறுமொழி
℣ - ஆண்டவரே உமது வார்த்தை என்றென்றும் நிலைத்திருக்கும்
℟ - .ஆண்டவரே உமது வார்த்தை என்றென்றும் நிலைத்திருக்கும்
℣ - உமது உண்மை என்றென்றும் நீடித்திருக்கும்.
℟ - ஆண்டவரே உமது வார்த்தை என்றென்றும் நிலைத்திருக்கும்
℣ - தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக
℟ -ஆண்டவரே உமது வார்த்தை என்றென்றும் நிலைத்திருக்கும்
__________________________
(அனைவரும் எழுந்து நிற்கவும்)
மரியாவின் பாடல்
மு.மொழி.: என் மீட்பராம் கடவுளை நினைத்து என் மனம் பேருவகை
கொள்கிறது.
ஆண்டவரை எனது உள்ளம்
போற்றிப் பெருமைப் படுத்துகின்றது.
என் மீட்பராம் கடவுளை நினைத்து
எனது மனம் பேருவகை கொள்கின்றது.
ஏனெனில் அவர் தம் அடிமையின்
தாழ்நிலையைக் கண்ணோக்கினார்.
இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும்
என்னைப் பேறுபெற்றவர் என்பர்.
ஏனெனில் வல்லவராம் கடவுள்
எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார்.
தூயவர் என்பதே அவரது பெயர்.
அவருக்கு அஞ்சி நடப்போருக்குத்
தலைமுறை தலைமுறையாய்
அவர் இரக்கம் காட்டி வருகிறார்.
அவர் தம் தோள் வலிமையைக் காட்டியுள்ளார்;
உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச்
சிதறடித்து வருகிறார்.
வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்;
தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்.
பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்;
செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார்.
மூதாதையருக்கு உரைத்தபடியே அவர்
ஆபிரகாமையும் அவர்தம் வழி மரபினரையும்
என்றென்றும் இரக்கத்தோடு
நினைவில் கொண்டுள்ளார்;
தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத்
துணையாக இருந்து வருகிறார் ".
மு.மொழி.: என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது.
_________________________
மன்றாட்டுக்கள்
கடவுள் தம் மக்களை நம்பிக்கையில் உறுதிப்படுத்தினார்.
அவரை அன்பு செய்பவர்களின் நம்பிக்கையை எதுவும் தளர்த்திட
முடியாது; எனவே நாம் அறிக்கையிடுவோம்.
℟ - தந்தையே, எங்கள் நம்பிக்கை உம்மிடம் உள்ளது.
ஆண்டவராகிய கடவுளே, ஆட்சியாளர் அனைவரின்
உள்ளங்களையும் அறிந்தவர் நீரே
அவர்கள் தாங்கள் ஆளும்
மக்களுடைய நலன்களுக்காகவே உழைப்பார்களாக.
℟ - தந்தையே, எங்கள் நம்பிக்கை உம்மிடம் உள்ளது.
எங்களுடைய வரம்புகளுக்கு மேலாக நாங்கள் சோதிக்கப்பட
விடாதேயும் - வலுவற்றோரை உறுதிப்படுத்தி, வீழ்ச்சியுற்றோரை
எழச்செய்யும்,
℟ - தந்தையே, எங்கள் நம்பிக்கை உம்மிடம் உள்ளது.
(தனிப்பட்ட தேவைகளுக்காக மன்றாடல்)
_________________________
ஆண்டவரின் செபம்
_________________________
இறுதி செபம்
இரக்கமுள்ள இறைவா, எங்களது மாலைப்புகழ் உம்மை
நோக்கி எழுவதாக. இதனால் உமது அருளாசியை எம்மீது
பொழிந்தருளும். இன்றும் என்றும் அது எமக்குத் துணையாயிருந்து
மீட்பளிப்பதாக. உம்மோடு
தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சிபுரியும் எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.
_________________________
ஆசி வழங்குதல்
குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக
எல்: உம் ஆன்மாவோடும் இருப்பாராக
குரு: எல்லாம் வல்ல இறைவன் தந்தை மகன் தூய ஆவியார் உங்களை ஆசீர்வதிப்பாராக.
எல்: ஆமென்
குரு: கிறிஸ்துவின் அமைதியில் சென்று வாருங்கள்
எல்: இறைவா உமக்கு நன்றி
(அல்லது)
முதல்: ஆண்டவர் நம்மை ஆசீர்வதித்து தீமைகள் அனைத்தினின்றும் பாதுகாத்து முடிவில்லா வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக
எல்: ஆமென்
முதல்: ஆண்டவரை வாழ்த்துவோமாக
எல்: இறைவா உமக்கு நன்றி.