3- திங்கள் மாலைப் புகழ்
பாடல் (பக்கம் 35)
(எழுந்து நிற்கவும்)
__________________________
(அமரவும்)
மு.மொழி.1: விண்ணுலகில் வீற்றிருப்பவரே உம்மை நோக்கியே
என் கண்களை உயர்த்தியுள்ளேன்.
இரக்கத்திற்காக மன்றாடல்
திபா 123
விண்ணுலகில் வீற்றிருப்பவரே
உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்
பணியாளனின் கண்கள் தன் தலைவனின்
கைதனை நோக்கியிருப்பது போல
பணிப்பெண்ணின் கண்கள் தன்
தலைவியின் கைதனை நோக்கி இருப்பது போல
எம் கடவுளாகிய ஆண்டவரே நீர் எமக்கு இரங்கும் வரை
எம் கண்கள் உம்மையே நோக்கியிருக்கும்.
எங்களுக்கு இரங்கும் ஆண்டவரே எங்களுக்கு இரங்கும்
அளவுக்கு மேலேயே நாங்கள் இகழ்ச்சி அடைந்து விட்டோம்
இன்பத்தில் திளைத்திருப்போரின் வசைமொழி போதும்
இறுமாந்த மனிதரின் பழிச்சொல்லும் போதும்.
மு.மொழி.: விண்ணுலகில் வீற்றிருப்பவரே உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.
__________________________
மு.மொழி. 2: ஆண்டவரின் பெயரே நமக்குத் துணை! விண்ணையும் மண்ணையும் உண்டாக்கியவர் அவரே!
இஸ்ரயேலைப் பாதுகாப்பவர். திபா 124
ஆண்டவர் நம் சார்பாக இருந்திராவிடில்
இஸ்ரயேல் மக்கள் சொல்வார்களாக
ஆண்டவர் நம் சார்பாக இருந்திராவிடில்
நமக்கு எதிராக மனிதர் எழுந்த போது
அவர்களது சினம் நம்மேல் மூண்டபோது
அவர்கள் நம்மை உயிரோடு விழுங்கியிருப்பார்கள்.
அப்பொழுது வெள்ளம் நம்மை மூழ்கடித்திருக்கும்
பெருவெள்ளம் நம்மீது புரண்டோடியிருக்கும்
கொந்தளிக்கும் வெள்ளம் நம்மீது பாய்ந்தோடியிருக்கும்
ஆண்டவர் போற்றி! போற்றி!
எதிரிகளின் பற்களுக்கு
அவர் நம்மை இரையாக்கவில்லை.
வேடர் கண்ணியினின்று தப்பிப் பிழைத்த
பறவை போல் ஆனோம். கண்ணி அறுந்தது
நாம் தப்பிப் பிழைத்தோம்
ஆண்டவரின் பெயரே நமக்குத் துணை
விண்ணையும் மண்ணையும் உண்டாக்கியவர் அவரே.
மு.மொழி.: ஆண்டவரின் பெயரே நமக்குத் துணை! விண்ணையும் மண்ணையும் உண்டாக்கியவர் அவரே!
___________________________
மு.மொழி. 3: கடவுள் நம்மை கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார்.
எபே 1:3 – 10 (பக்கம் 123)
மு.மொழி.: கடவுள் நம்மை கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார்.
___________________________
(எழுந்து நின்று வாசிக்கவும்)
அருள்வாக்கு யாக் 4:11-12
சகோதர சகோதரிகளே, உங்களுள் ஒருவர் மற்றவரைப் பழித்துரைக்க வேண்டாம். தம் சகோதரர் சகோதரிகளைப் பழித்துரைப்போர் அல்லது அவர்களுக்குத் தீர்ப்பு அளிப்போர் திருச்சட்டத்தைப் பழித்துரைக்கின்றனர். அச்சட்டத்துக்கு எதிராகத் தீர்ப்பு அளிக்கின்றனர். சட்டத்துக்கு எதிராக நீங்கள் தீர்ப்பு அளிக்கும் போது நீங்கள் அதைக் கடைப்பிடிப்பவராக அல்ல, மாறாக அதற்கு எதிராக நீங்கள் தீர்ப்பு அளிக்கும் நடுவர்களாக ஆகி வருகிறீர்கள். திருச்சட்டத்தைக் கொடுத்தவரும் தீர்ப்பு அளிப்பவரும் ஒருவரே. அவரே மீட்கவும் அழிக்கவும் வல்லவர். அவ்வாறிருக்க உங்களை அடுத்திருப்பவருக்குத் தீர்ப்பளிக்க நீங்கள் யார் ?
__________________________
சிறு மறுமொழி
℣ - ஆண்டவரே நான் உமக்கு எதிராகப் பாவம் செய்தேன்,
என்னைக் குணமாக்கும்.
℟ - ஆண்டவரே நான் உமக்கு எதிராகப் பாவம் செய்தேன்,
என்னைக் குணமாக்கும்.
℣ - ஆண்டவரே என்மீது இரக்கமாயிரும் என்றேன்.
℟ - ஆண்டவரே நான் உமக்கு எதிராகப் பாவம் செய்தேன்,
என்னைக் குணமாக்கும்.
℣ - தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் ஆட்சி உண்டாவதாக
℟ - ஆண்டவரே நான் உமக்கு எதிராகப் பாவம் செய்தேன்,
என்னைக் குணமாக்கும்.
__________________________
(அனைவரும் எழுந்து நிற்கவும்)
மரியாவின் பாடல்
மு.மொழி.: ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப் படுத்துகின்றது. ஏனெனில் அவர்தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார்
ஆண்டவரை எனது உள்ளம்
போற்றிப் பெருமைப் படுத்துகின்றது.
என் மீட்பராம் கடவுளை நினைத்து
எனது மனம் பேருவகை கொள்கின்றது.
ஏனெனில் அவர் தம் அடிமையின்
தாழ்நிலையைக் கண்ணோக்கினார்.
இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும்
என்னைப் பேறுபெற்றவர் என்பர்.
ஏனெனில் வல்லவராம் கடவுள்
எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார்.
தூயவர் என்பதே அவரது பெயர்.
அவருக்கு அஞ்சி நடப்போருக்குத்
தலைமுறை தலைமுறையாய்
அவர் இரக்கம் காட்டி வருகிறார்.
அவர் தம் தோள் வலிமையைக் காட்டியுள்ளார்;
உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச்
சிதறடித்து வருகிறார்.
வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்;
தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்.
பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்;
செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார்.
மூதாதையருக்கு உரைத்தபடியே அவர்
ஆபிரகாமையும் அவர்தம் வழி மரபினரையும்
என்றென்றும் இரக்கத்தோடு
நினைவில் கொண்டுள்ளார்;
தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத்
துணையாக இருந்து வருகிறார் ".
மு.மொழி.: ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப் படுத்துகின்றது. ஏனெனில் அவர்தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார்
__________________________
மன்றாட்டுக்கள்
எல்லாரும் மீட்படைய வேண்டுமென்பதே கிறிஸ்துவின்
திருவுளம்; அவருடைய திருவுளம் நிறைவேறும்படியாக நாம்
வேண்டுவோம்
℟ - ஆண்டவரே அனைவரையும் உம்பால் ஈர்த்துக்கொள்ளும்.
உண்மையைத் தேடுவோருக்குத் துணைபுரியும்
அவர்கள்
உண்மையில் அர்ச்சிக்கப்பெறுவார்களாக.
℟ - ஆண்டவரே அனைவரையும் உம்பால் ஈர்த்துக்கொள்ளும்.
குறிப்பாக நாங்கள் குடும்ப அமைதிக்காகவும், அனாதைகளுக்காகவும், விதவைகளுக்காகவும் வேண்டுகிறோம் உமதன்பில் அவர்களை வைத்து ஆதரித்தருளும்.
℟ - ஆண்டவரே அனைவரையும் உம்பால் ஈர்த்துக்கொள்ளும்.
(தனிப்பட்ட தேவைகளுக்காக மன்றாடல்)
__________________________
ஆண்டவரின் செபம்
__________________________
இறுதி செபம்
இறைவா, எவ்வித மாறுபாடோ மாற்றமோ இல்லாத உம்மைப்
பேரொளி எனப் பறைசாற்றுவது எங்கள் கடமையாகும். இந்நாளின்
மாலைவேளையை அடைந்திருக்கிறோம். எமது அக இருளை அகற்றி
எம் பாவங்களை இரக்கமுடன் மன்னித்தருளும். உம்மோடு......
__________________________
ஆசி வழங்குதல்
குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக
எல்: உம் ஆன்மாவோடும் இருப்பாராக
குரு: எல்லாம் வல்ல இறைவன் தந்தை மகன் தூய ஆவியார் உங்களை ஆசீர்வதிப்பாராக.
எல்: ஆமென்
குரு: கிறிஸ்துவின் அமைதியில் சென்று வாருங்கள்
எல்: இறைவா உமக்கு நன்றி
(அல்லது)
முதல்: ஆண்டவர் நம்மை ஆசீர்வதித்து தீமைகள் அனைத்தினின்றும் பாதுகாத்து முடிவில்லா வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக
எல்: ஆமென்
முதல்: ஆண்டவரை வாழ்த்துவோமாக
எல்: இறைவா உமக்கு நன்றி.