3 - புதன் மாலைப் புகழ்

  3 - புதன் மாலை செபம்

முதல்: இறைவா எமக்குத் துணைபுரிய வாரும்

எல்: ஆண்டவரே எனக்குத் துணைபுரிய விரைைந்து வாரும்

முதல்: தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக

எல்: தொடக்கத்தில் இருந்ததுபோல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக ஆமென்.

__________________________

பாடல்  (பக்கம் 56)

(எழுந்து நிற்கவும்)


__________________________

(அமரவும்)

மு.மொழி.1: கண்ணீரோடு விதைப்பவர்கள் அக்களிப்போடு அறுவடை செய்வார்கள்.

விடுதலைக்காக மன்றாடல்.
திபா 126

சியோனின் அடிமை நிலையை ஆண்டவர் மாற்றினபோது
நாம் ஏதோ கனவு கண்டவர் போல இருந்தோம்
அப்பொழுது நமது முகத்தில் மகிழ்ச்சி காணப்பட்டது
நாவில் களிப்பாரவாரம் எழுந்தது
ஆண்டவர் அவர்களுக்கு மாபெரும் செயல் புரிந்தார் என்று
பிற இனத்தார் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.

ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்
அதனால் நாம் பெருமகிழ்ச்சியுறுகின்றோம்
ஆண்டவரே தென்னாட்டின் வறண்ட ஓடையை
நீரோடையாக வான்மழை மாற்றுவது போல
எங்கள் அடிமை நிலையை மாற்றியருளும்.

கண்ணிரோடு விதைப்பவர்கள்
அக்களிப்போடு அறுவடை செய்வார்கள்
விதை எடுத்துச் செல்லும் போது – செல்லும்போது
அழுகையோடு செல்கின்றார்கள்
அரிகளைச் சுமந்து வரும்போது – வரும்போது
அக்களிப்போடு வருவார்கள்.

மு.மொழி.: கண்ணீரோடு விதைப்பவர்கள் அக்களிப்போடு அறுவடை செய்வார்கள்.
__________________________

மு.மொழி. 2: ஆண்டவரே நமக்கு ஒரு வீட்டைக் கட்டுவார்.
ஆண்டவரே நம் நகரைக் காத்தருள்வார்.

கடவுளின் அருளும் நலன்களும். திபா 127

ஆண்டவரே வீட்டைக் கட்டவில்லையெனில்
அதைக் கட்டுவோரின் உழைப்பு வீணாகும்
ஆண்டவரே நகரைக் காக்கவில்லையெனில்
காவலர்கள் விழித்திருப்பதும் வீணாகும்.

வைகறையில் விழித்தெழுந்து நள்ளிரவில்
ஓய்வெடுக்கும்வரை மானிடர் தம் உணவுக்காக
வருந்தி உழைப்பது வீணே
உறங்கும்போதும் கடவுளின் அன்பர் தேவையானதை
அவரிடமிருந்து பெற்றுக்கொள்வர்.

பிள்ளைகள் ஆண்டவர் அருளும் செல்வம்
மக்கட்பேறு அவர் அளிக்கும் பரிசில்
இளமையில் ஒருவருக்குப் பிறக்கும் மைந்தர்
வீரரின் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்
அவற்றால் தம் அம்பறாத் தூணியை நிரப்பிய வீரர்
நற்பேறு பெற்றோர்
நீதிமன்றத்தில் எதிரிகளோடு வழக்காடும்போது
அவர் இகழ்ச்சியடையமாட்டார்.

மு.மொழி.: ஆண்டவரே நமக்கு ஒரு வீட்டைக் கட்டுவார். 
ஆண்டவரே நம் நகரைக் காத்தருள்வார்.
___________________________

மு.மொழி. 3: படைப்பனைத்திலும் தலைப்பேறு அவரே. அவர்
அனைத்துப் படைப்புகளுக்கும் மேலானவர்.

கொலோ 1:12 – 20
  
தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள். அவர் இறைமக்களுக்கான ஒளிமயமான உரிமைப்பேற்றில் பங்குபெற உங்களைத் தகுதியுள்ளவர்களாக்கியுள்ளார். அவரே இருளின் அதிகாரத்திலிருந்து நம்மை விடுவித்துத் தம் அன்பார்ந்த மகனின் ஆட்சிக்குட்படுத்தினார். அம்மகனால்தான்அம்மகனால்தான் நாம் பாவமன்னிப்பாகிய மீட்பைப் பெறுகிறோம். அவர் கட்புலனாகாத கடவுளது சாயல்; படைப்பனைத்திலும் தலைப்பேறு. ஏனெனில் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை, கட்புலனாகுபவை, கட்புலனாகாதவை, அரியணையில் அமர்வோர், தலைமை தாங்குவோர், ஆட்சியாளர், அதிகாரம் கொண்டோர் ஆகிய அனைவரும் அவரால் படைக்கப்பட்டனர். அனைத்தும் அவர் வழியாய் அவருக்காகப் படைக்கப்பட்டன. அனைத்துக்கும் முந்தியர் அவரே; அனைத்தும் அவரோடிணைந்து நிலைபெறுகின்றன. திருச்சபையாகிய உடலுக்குத் தலையும் தொடக்கமும் அவரே. எல்லாவற்றுள்ளும் முதன்மை பெறுமாறு இறந்து உயிர்த்தெழுவோருள் அவர் தலைப்பேறு ஆனார். தம்தம் முழுநிறைவும் அவருள் குடிகொள்ளக் கடவுள் திருவுளம் கொண்டார். சிலுவையில் இயேசு சிந்திய இரத்தத்தால் அமைதியை நிலைநாட்டவும் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை அனைத்தையும் அவர் வழி தம்மோடு ஒப்புரவாக்கவும் கடவுள் திருவுளம் கொண்டார். 

மு.மொழி.: படைப்பனைத்திலும் தலைப்பேறு அவரே. அவர்
அனைத்துப் படைப்புகளுக்கும் மேலானவர்.
___________________________

(எழுந்து நின்று வாசிக்கவும்)

அருள்வாக்கு           எபே 3 : 20-21

நம்முள் வல்லமையோடு செயல்படுபவரும்
நாம் வேண்டுவதற்கும் நினைப்பதற்கும் மிகவும் மேலாக அனைத்தையும் செய்ய வல்லவருமான கடவுளுக்கே திருச்சபையில் கிறிஸ்து இயேசு வழியாக தலைமுறை
தலைமுறையாக என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.
__________________________

சிறு மறுமொழி

℣ - ஆண்டவரே, என்னை மீட்டு உமது இரக்கத்தைக்
காட்டியருளும்.
℟ - ஆண்டவரே, என்னை மீட்டு உமது இரக்கத்தைக்
காட்டியருளும்.

℣ - பாவிகளோடு என்னையும் தள்ளிவிடாதேயும். 
℟ - ஆண்டவரே, என்னை மீட்டு உமது இரக்கத்தைக்
காட்டியருளும்.

℣ - தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக
℟ - ஆண்டவரே, என்னை மீட்டு உமது இரக்கத்தைக்
காட்டியருளும்.
__________________________

(அனைவரும் எழுந்து நிற்கவும்)

மரியாவின் பாடல்

மு.மொழி.: வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்களைச் செய்துள்ளார். 

ஆண்டவரை எனது உள்ளம் 
போற்றிப் பெருமைப் படுத்துகின்றது. 
என் மீட்பராம் கடவுளை நினைத்து 
எனது மனம் பேருவகை கொள்கின்றது.
ஏனெனில் அவர் தம் அடிமையின் 
தாழ்நிலையைக் கண்ணோக்கினார்.

இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் 
என்னைப் பேறுபெற்றவர் என்பர்.
ஏனெனில் வல்லவராம் கடவுள் 
எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். 
தூயவர் என்பதே அவரது பெயர்.

அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் 
தலைமுறை தலைமுறையாய் 
அவர் இரக்கம் காட்டி வருகிறார்.
அவர் தம் தோள் வலிமையைக் காட்டியுள்ளார்; 
உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் 
சிதறடித்து வருகிறார்.
வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்; 
தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்.
பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்; 
செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார்.

மூதாதையருக்கு உரைத்தபடியே அவர் 
ஆபிரகாமையும் அவர்தம் வழி மரபினரையும் 
என்றென்றும் இரக்கத்தோடு 
நினைவில் கொண்டுள்ளார்;
தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத் 
துணையாக இருந்து வருகிறார் ".

மு.மொழி.: வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்களைச் செய்துள்ளார். 
__________________________

மன்றாட்டுக்கள்

மலைகளை இடம் பெயரச் செய்யும் அளவுக்கு நிறைந்த  நம்பிக்கை கொண்டிருப்பினும் என்னிடம் அன்பு இல்லையேல் நான்  ஒன்றுமில்லை; இதை மனதில் கொண்டு செபிப்போம். 

℟ - ஆண்டவரே உம் அன்பை எமக்கு அளித்தருளும்.

ஆண்டவரே, நாங்கள் உருவாகி உம்மை நோக்கி வளரும்போது
எமக்கு ஆதரவாயிரும் – எங்கள் உழைப்பால் எங்கள் நம்பிக்கையை
வளரச்செய்யும்

℟ - ஆண்டவரே உம் அன்பை எமக்கு அளித்தருளும்.

பயணம் செய்யும் திருச்சபையை திருத்தூதர்களுடைய
நம்பிக்கையில் உறுதிப்படுத்தும் – நாங்கள் எங்கள் கொடைகளைப்
பிறரோடு பகிர்ந்து கொண்டு ஒருவருக்கொருவர் ஊக்கமூட்ட
உதவியருளும்.

℟ - ஆண்டவரே உம் அன்பை எமக்கு அளித்தருளும்.

(தனிப்பட்ட தேவைகளுக்காக மன்றாடல்)
__________________________

ஆண்டவரின் செபம்
__________________________

இறுதி செபம்

ஆண்டவரே உமது மக்கள் உம் திருமுன் எழுப்பும் வேண்டுதலைக் கேட்டு  அவர்களுடைய பாவங்களை மன்னித்தருளும். உமது பணிக்காகத் தங்களையே 
கையளிக்கும் அவர்களுக்கு உமது அருளைத் தந்து அச்சம் கவலையினின்று  அவர்களை உமது அருட்கரத்தால் பாதுகாத்தருளும். உம்மோடு 
 தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சிபுரியும் எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.
__________________________

ஆசி வழங்குதல்

குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக 
எல்: உம் ஆன்மாவோடும் இருப்பாராக 

குரு: எல்லாம் வல்ல இறைவன் தந்தை மகன் தூய ஆவியார் உங்களை ஆசீர்வதிப்பாராக. 
எல்: ஆமென் 

குரு: கிறிஸ்துவின் அமைதியில் சென்று வாருங்கள் 
எல்: இறைவா உமக்கு நன்றி 

(அல்லது)

முதல்: ஆண்டவர் நம்மை ஆசீர்வதித்து தீமைகள் அனைத்தினின்றும் பாதுகாத்து முடிவில்லா வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக 
எல்: ஆமென் 

முதல்: ஆண்டவரை வாழ்த்துவோமாக 
எல்: இறைவா உமக்கு நன்றி.