3 - ஞாயிறு மாலைப் புகழ் 2
3 - ஞாயிறு மாலை செபம்
முதல்: இறைவா எமக்குத் துணைபுரிய வாரும்
எல்: ஆண்டவரே எனக்குத் துணைபுரிய விரைைந்து வாரும்
முதல்: தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக
எல்: தொடக்கத்தில் இருந்ததுபோல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக ஆமென்.
__________________________
பாடல்
(எழுந்து நிற்கவும்)
ஒளியைச் சிறப்பாய் படைத்தவரே
ஒளியைப் பகலுக்கு அளித்தீரே
படைப்பு தோன்றிய முதல் நாளில்
கொடுத்தீர் அதற்குப் புத்தொளியாய்
மாலையும் காலையும் இணை பொழுதை
நாளென அழைக்கக் கற்பித்தீர்
குழப்பிடும் இரவு வரும் முன்னே
அழுதோம் எம் செபம் ஏற்பீரே
பாவச் சுமை எம்மை அழுத்தாமல்
அகநிலை வாழ்வை சிதைக்காமல்
நினைத்திடுவோம் நிலையான வற்றை
வினைத்தளை அகற்றிட முனைந்திடுவோம்
வானின் உணர்வுகள் எமைத் தொடவும்
வாழ்வின் பரிசையும் யாம் பெறவும்
தீங்கிழைப்பவையெல்லாம் விலக்கிடவும்
தீமைகள் அனைத்தையும் கழுவிடவும்
அருள்வீர் அன்பார் தந்தையே நீர்
திருமகனோடும் துணை நிற்கும்
ஆவி யாரோடும் ஆள்கின்றீர்
பூவுலகில் நிறைபுகழ் பெருவீர். ஆமென்.
__________________________
(அமரவும்)
மு.மொழி.1: ஆண்டவர் என் தலைவரிடம் நீர் என் வலப்பக்கம் வீற்றிரும் உரைத்தார் அல்லேலூயா
மெரியாவே அரசரும் குருவும்
திபா 110:1-5, 7
ஆண்டவர் என் தலைவரிடம்,
நான் உம் பகைவரை உமக்குக் கால்மணையாக்கும் வரை
நீர் என் வலப்பக்கம் வீற்றிரும் என்று உரைத்தார்.
வலிமைமிகு உமது செங்கோலை
ஆண்டவர் சீயோனிலிருந்து ஓங்கச் செய்வார்
உம் எதிரிகளிடையே ஆட்சி செலுத்தும்!
நீர் உமது படைக்குத் தலைமை தாங்கும் நாளில்
தூய கோலத்துடன் உம் மக்கள் தம்மை உமக்கு
உவந்தளிப்பர்
வைகறை கருவுயிர்த்த பனிபோல்
உம் இளம் வீரர் உம்மை வந்தடைவர்.
மெல்கிசெதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே
என்று ஆண்டவர் ஆணையிட்டுச் சொன்னார்;
அவர் தம் மனத்தை மாற்றிக்கொள்ளார்.
என் தலைவர் உம் வலப்பக்கத்தில் உள்ளார்:
தம் சினத்தின் நாளில் அவர்
மன்னர்களை நொறுக்குவார்.
வழியில் உள்ள நீரோடையிலிருந்து அவர் பருகுவார்;
ஆகவே அவர் தலைநிமிர்ந்து நிற்பார்
மு.மொழி.: ஆண்டவர் என் தலைவரிடம் நீர் என் வலப்பக்கம் வீற்றிரும் உரைத்தார் அல்லேலூயா
__________________________
மு.மொழி. 2: ஆண்டவர் அருளும் இரக்கமும் உடையவர் அவர்தம் வியத்தகு செயல்களை என்றும் நினைவில் நிலைக்கச் செய்துள்ளார் அல்லேலூயா
ஆண்டவருடைய செயல்கள் மகத்தானவை
திபா 111
நெஞ்சார ஆண்டவருக்கு நன்றி செலுத்துவேன்
நீதிமான்களின் மன்றத்திலும் சபையிலும்
அவருக்கு நன்றி செலுத்துவேன்
ஆண்டவரின் செயல்கள் உயர்ந்தவை
அவற்றில் இன்பம் காண்போர் அனைவரும்
அவற்றை உய்த்துணர்வோர்.
அவரது செயல் மேன்மையும் மாண்பும் மிக்கது.
அவரது நீதி என்றென்றும் நிலைத்துள்ளது.
அவர் தம் வியத்தகு செயல்களை
என்றும் நினைவில் நிலைக்கச் செய்துள்ளார்.
அருளும் இரக்கமும் உடையவர் ஆண்டவர்
தமக்கு அஞ்சி நடப்போர்க்கு
அவர் உணவு அளிக்கின்றார்.
தமது உடன்படிக்கையை
என்றும் நினைவில் கொள்கின்றார்.
வேற்றினத்தாரின் உரிமைச் சொத்தைத்
தம் மக்களுக்கு அளித்து,
ஆற்றல்மிக்க தம் செயல்களை
அவர்களுக்கு வெளிப்படுத்தினார்.
அவர்தம் வலிமைமிகு செயல்கள் நம்பிக்கைக்குரியவை
நீதியானவை, அவர்தம் கட்டளைகள் அனைத்தும்
நிலையானவை.
என்றென்றும் எக்காலமும் அவை நிலைமாறாதவை
உண்மையிலும் நேர்மையிலும் அவை உருவானவை.
தம் மக்களுக்கு அவர் மீட்பை அளித்தார்
தம் உடன்படிக்கை என்றென்றும்
நிலைக்குமாறு செய்தார்
அவரது திருப்பெயர் தூயது. அஞ்சுதற்கு உரியது.
ஆண்டவர் பற்றிய அச்சமே ஞானத்தின் தொடக்கம்
அவர்தம் கட்டளைகளைக் கடைப்பிடிப்போர்
நல்லறிவுடையோர்
அவரது புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்.
மு.மொழி.: ஆண்டவர் அருளும் இரக்கமும் உடையவர் அவர்தம் வியத்தகு செயல்களை என்றும் நினைவில் நிலைக்கச் செய்துள்ளார் அல்லேலூயா
__________________________
மு.மொழி. 3: எல்லாம் வல்ல நம் கடவுளாகிய ஆண்டவர் ஆட்சி செலுத்துகின்றார்அல்லேலுயா
தி வெ19:1ஆ- 2 ,5 - 7
மு.மொழி.: எல்லாம் வல்ல நம் கடவுளாகிய ஆண்டவர் ஆட்சி செலுத்துகின்றார்அல்லேலுயா
__________________________
(எழுந்து நின்று வாசிக்கவும்)
அருள்வாக்கு 1 பேது 1:3-5
நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் சுடவுளும் தந்தையுமானவர் போற்றி அவர் தம் பேரிரக்கத்தின் படி இறந்த இயேசு கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்து, நமக்குப் புதுப்பிறப்பு அளித்துள்ளார் இவ்வாறு குன்றா எதிர்நோக்குடன் நாம் வாழ்கிறோம். அழியாத, மாசற்ற ஒழியாத உரிமைப் பேறும், உங்களுக்கென விண்ணுலைய
வைக்கப்பட்டுள்ளது. நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கையின்
வழியாய், மீட்புக்காகக் கடவுளுடைய வல்லமையாக பாதுகாக்கப்பட்டு வருகிறீர்கள். இம்மீட்பு இறுதில்
காலத்தில் வெளிப்பட ஆயத்தமாய் உள்ளது.
__________________________
சிறு மறுமொழி
℣ - ஆண்டவரே, விண்ணக வளாகத்தில் நீர் போற்றப்பெறுவீராக.
℟ - ஆண்டவரே, விண்ணக வளாகத்தில் நீர் போற்றப்பெறுவீராக.
℣ - நீர் எல்லாவற்றிற்கும் மேலாக என்றென்றும் உயர்த்தப்பட்டுப் புகழப்படுகிறீர்
℟ - ஆண்டவரே, விண்ணக வளாகத்தில் நீர் போற்றப்பெறுவீராக.
℣ - தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக
℟ - ஆண்டவரே, விண்ணக வளாகத்தில் நீர் போற்றப்பெறுவீராக.
__________________________
(அனைவரும் எழுந்து நிற்கவும்)
மரியாவின் பாடல்
மு.மொழி.: வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார்
ஆண்டவரை எனது உள்ளம்
போற்றிப் பெருமைப் படுத்துகின்றது.
என் மீட்பராம் கடவுளை நினைத்து
எனது மனம் பேருவகை கொள்கின்றது.
ஏனெனில் அவர் தம் அடிமையின்
தாழ்நிலையைக் கண்ணோக்கினார்.
இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும்
என்னைப் பேறுபெற்றவர் என்பர்.
ஏனெனில் வல்லவராம் கடவுள்
எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார்.
தூயவர் என்பதே அவரது பெயர்.
அவருக்கு அஞ்சி நடப்போருக்குத்
தலைமுறை தலைமுறையாய்
அவர் இரக்கம் காட்டி வருகிறார்.
அவர் தம் தோள் வலிமையைக் காட்டியுள்ளார்;
உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச்
சிதறடித்து வருகிறார்.
வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்;
தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்.
பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்;
செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார்.
மூதாதையருக்கு உரைத்தபடியே அவர்
ஆபிரகாமையும் அவர்தம் வழி மரபினரையும்
என்றென்றும் இரக்கத்தோடு
நினைவில் கொண்டுள்ளார்;
தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத்
துணையாக இருந்து வருகிறார் ".
மு.மொழி.: வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார்.
_______________________
மன்றாட்டுக்கள்
கடவுள் என்றும் படைப்பவராக உள்ளார் அவருடைய அன்பு அனைத்தையும் புதுப்பிக்கிறது. அதுவே நமது நம்பிக்கையின் ஊற்று. எனவே, நாம் அவரிடம் நம்பிக்கையுடன் வேண்டுவோம்.
℟ - ஆண்டவரே எங்களுடைய நன்றியறிதலையும் மன்றாட்டுகளையும் ஏற்றருளும்
படைப்புக்களின் ஒழுங்கு முறைகளுக்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம் நிலத்தின் வளங்களாலும் மனித வாழ்வு என்னும் கொடைகளாலும் நீர் எங்களை ஆசீர்வதித்துள்ளீர்
℟ - ஆண்டவரே எங்களுடைய நன்றியறிதலையும் மன்றாட்டுகளையும் ஏற்றருளும்
நீர் தொடர்ந்து ஆற்றும் படைப்புப் பணியில் மனிதன் பங்குகொள்ளச் செய்ததற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம் கண்டுபிடிக்கும் திறனையும் படைப்பாற்றலையும் நீர் அவர்களுக்கு உம் கொடைகளாக அளித்ததற்காக நாங்கள் உம்மைப் புகழ்கிறோம்.
℟ - ஆண்டவரே எங்களுடைய நன்றியறிதலையும் மன்றாட்டுகளையும் ஏற்றருளும்
உலகின் எல்லா நாடுகளுக்காகவும் நாங்கள் உம்மை வேண்டுகிறோம் பதவியில் உள்ளவர்கள் மக்களிடையே அமைதிக்காகவும் நல்ல உறவுக்காகவும் உழைப்பார்களாக.
℟ - ஆண்டவரே எங்களுடைய நன்றியறிதலையும் மன்றாட்டுகளையும் ஏற்றருளும்
இல்லிடமின்றி தவிப்போருக்காக வேண்டுகிறோம் உறைவிடம் தேடி அலையும் குடும்பங்களுக்காகவும் தாய் நாட்டிலிருந்து விரட்டப்பட்ட அகதிகளுக்காகவும் உம்மை வேண்டுகிறோம்.
℟ - ஆண்டவரே எங்களுடைய நன்றியறிதலையும் மன்றாட்டுகளையும் ஏற்றருளும்
நீர் எங்களுக்கு அளித்த முதல் கொடை உயிரே இறந்தோர் உம்மில் அதன் நிறைவைக் காண்பார்களாக,
℟ - ஆண்டவரே எங்களுடைய நன்றியறிதலையும் மன்றாட்டுகளையும் ஏற்றருளும்
(தனிப்பட்ட தேவைகளுக்காக மன்றாடல்)
__________________________
ஆண்டவரின் செபம்
__________________________
இறுதி செபம்
அந்தந்தக் காலங்களில் உள்ளவாறு
தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சிபுரியும் எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.
__________________________
ஆசி வழங்குதல்
குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக
எல்: உம் ஆன்மாவோடும் இருப்பாராக
குரு: எல்லாம் வல்ல இறைவன் தந்தை மகன் தூய ஆவியார் உங்களை ஆசீர்வதிப்பாராக.
எல்: ஆமென்
குரு: கிறிஸ்துவின் அமைதியில் சென்று வாருங்கள்
எல்: இறைவா உமக்கு நன்றி
(அல்லது)
முதல்: ஆண்டவர் நம்மை ஆசீர்வதித்து தீமைகள் அனைத்தினின்றும் பாதுகாத்து முடிவில்லா வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக
எல்: ஆமென்
முதல்: ஆண்டவரை வாழ்த்துவோமாக
எல்: இறைவா உமக்கு நன்றி.