1 - ஞாயிறு மாலைப் புகழ் 1

வாரம் 1: ஞாயிறு

மாலைப் புகழ் 1

(எழுந்து நிற்கவும்)

முதல்: + இறைவா எமக்குத் துணைபுரிய வாரும்

எல்: ஆண்டவரே எனக்குத் துணைபுரிய விரைந்து வாரும்

முதல்: தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக

எல்: தொடக்கத்தில் இருந்ததுபோல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக ஆமென்.


பாடல்

விண்ணையும் மண்ணையும் படைத்தாளும்
ஞானம் நிறைந்த இறையவனே,
அழகிய ஒளியால் பகலினையும்
துயிலுற இரவையும் அமைத்தவனே.

முடங்கின தசைகள் முறுக்கேறி
திடமுடன் உழைக்கத் துயில்தேவை;
சோர்ந்த உளத்தைத் தேற்றிடுமே
தீர்ந்து போகும் துயர்களுமே.

கடந்த நாளுக்காக நன்றிகூறி
தொடங்குவோம் இரவை வேண்டலுடனே;
பாவிகள் எம்மைப் பொறுத்தருள
தேவா, இசையுடன் இறைஞ்சுகின்றோம்

இதயத் தாழத்தில் உமைப்புகழ,
உதடும் இணைந்து உமைப்பாட,
கள்ளமற்ற உள்ளத்தை உமக்களித்து
வள்ளல் உம்மை வணங்கிடுவோம்.

இரவின் காரிருள் பகலை இப்போ
மறைக்கும் வேளை வந்தாலும்
எம் நம்பிக்கை இருளடையாது
உம் ஒளி இரவிலும் ஒளிர்ந்திடுக

அகத்தினை ஆளும் தந்தாய், உம்முடனே
மகனையும் தூயஆவியாரையும்
வேண்டுகிறோம் அருள்பாலிக்க;
யாண்டும் புகழ் உரித்தாகுக. ஆமென்.

(அமரவும்)
------------------------------
மு.மொழி.1: ஆண்டவரே, தூபம் போல் என் மன்றாட்டு உம் திருமுன் ஏற்றுக்கொள்ளபடுவதாக.

இடுக்கண்ணுற்ற வேளையில் மன்றாட்டு - திபா 141: 1-9

அச்சாம்பிராணி புகை இறைமக்களின் வேண்டுதல்களோடு சேர்ந்து வானதூதரின் கையிலிருந்து கடவுள் திருமுன் எழும்பிச் சென்றது. (திவெ 8:4)

ஆண்டவரே! நான் உம்மை நோக்கிக் கதறுகின்றேன்; 
விரைவாய் எனக்குத் துணைசெய்யும். 
உம்மை நோக்கி நான் வேண்டுதல் செய்யும்போது 
என் குரலுக்குச் செவிசாய்த்தருளும்.
தூபம்போல் என் மன்றாட்டை 
உம் திருமுன் ஏற்றுக்கொள்ளப்படுவதாக! மாலைப் பலிபோல் 
என் கைகள் உம்மை நோக்கி உயர்வனவாக!

ஆண்டவரே! என் நாவுக்குக் காவல் வைத்தருளும்; 
என் இதழ்களின் வாயிலில் காவலாளியை வைத்தருளும்.
என் இதயம் தீயது எதையும் நாடவிடாதேயும்; 
தீச்செயல்களை நான் செய்யவிடாதேயும்; 
தீச்செயல்; செய்யும் மனிதரோடு என்னைச் சேரவிடாதேயும்; 
அவர்களோடு இனிய விருந்தினை நான் உண்ணவிடாதேயும்.

நீதிமான் என்னைக் கனிவோடு தண்டிக்கட்டும்;
அது எனக்கு நல்லது.
அவர் என்னைக் கண்டிக்கட்டும் 
அது என் தலைக்கு எண்ணெய்போல் ஆகும்; 
ஆனால், தீயவரின் எண்ணெய் என்றுமே 
என் தலையில் படாமல் இருக்கட்டும்;
ஏனெனில், அவர்கள் செய்யும் தீமைகளுக்கு எதிராய் 
நான் என்றும் வேண்டுதல் செய்வேன்.

நீதிபதிகளிடம் அவர்கள்
தண்டனைக்கென ஒப்புவிக்கப்படும் பொழுது, 
நான் சொன்னது எவ்வளவு உண்மையானது என்று 
அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள்;
'ஒருவரால் பாறை பிளந்து சிதறடிக்கப்படுவதுபோல், 
எங்கள் எலும்புகளும் பாதாளத்தின் வாயிலில் 
சிதறடிக்கப்படும் என்பார்கள்.

ஏனெனில், என் தலைவராகிய ஆண்டவரே! 
என் கண்கள் உம்மை நோக்கியே இருக்கின்றன; 
உம்மிடம் அடைக்கலம் புகுகின்றேன்; 
நான் அழியவிடாதேயும்.
அவர்கள் எனக்கு வைத்த கண்ணிகளிலிருந்தும்; 
தீமை செய்வோரின் சுருக்குகளிலிருந்து 
என்னைப் பாதுகாத்தருளும்.

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும்...

மு.மொழி.: ஆண்டவரே தூபம் போல் என் மன்றாட்டு உம் திருமுன் ஏற்றுக்கொள்ளபடுவதாக.
------------------------------

மு.மொழி. 2: ஆண்டவரே நீரே என் அடைக்கலம். உயிர் வாழவோர் நாட்டில் நீரே என் பங்கு.

நீரே என் புகலிடம் - திபா 142

ஆண்டவருடைய பாடுகளின் போது இவையெல்லாம் நிறைவுற்றன (புனித ஹிலாரி) 

ஆண்டவரை நோக்கி நான் கூக்குரலிடுகின்றேன்; 
உரத்த குரலில் ஆண்டவரின் கெஞ்சிக் கேட்கின்றேன்.
என் மனக்குறைகளை அவர் முன்னிலையில் கொட்டுகின்றேன்; 
அவர் திருமுன்னே என் இன்னலை எடுத்துரைக்கின்றேன்;
என் மனம் சோர்வுற்றிருக்கையில்
நான் செல்லும் வழியை நீர் அறிந்தேயிருக்கின்றீர்; 

நான் செல்லும் வழியில் அவர்கள் 
எனக்குக் கண்ணி வைத்துள்ளார்கள்.
வலப்புறம் பார்க்கின்றேன்; 
என்னைக் கவனிப்பார் எவருமிலர்; 
எனக்குப் புகலிடம் இல்லாமற் போயிற்று; 
என் நலத்தில் அக்கறை கொள்வார் எவருமிலர்.

ஆண்டவரே! உம்மை நோக்கிக் கதறுகின்றேன்; 
'நீரே என் அடைக்கலம்; 
உயிர் வாழ்வோர் நாட்டில் நீரே என் பங்கு'.
என் வேண்டுதலைக் கவனித்துக் கேளும்; 
ஏனெனில், நான் மிகவும் தாழ்த்தப்பட்டுள்ளேன்; 

என்னைத் துன்புறுத்துவோரிடமிருந்து 
எனக்கு விடுதலை அளித்தருளும்; 
ஏனெனில், அவர்கள் என்னை விட வலிமைமிக்கோர்.

சிறையினின்று என்னை விடுவித்தருளும்; 
உமது பெயருக்கு நான் நன்றி செலுத்துவேன்; 
நீதிமான்கள் என்னைச் சூழ்ந்து நிற்பார்கள்; 
ஏனெனில், நீர் எனக்குப் பெரும் நன்மை செய்கின்றீர்.

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும்...

மு.மொழி. 2: ஆண்டவரே நீரே என் அடைக்கலம். உயிர் வாழவோர் நாட்டில் நீரே என் பங்கு.
___________________________

மு.மொழி. 3: ஆண்டவராகிய இயேசு தம்மையே தாழ்த்திக் கொண்டார். எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தினார்.

கிறிஸ்து இறை ஊழியன் - பிலி 2:6-11

கடவுள் வடிவில் விளங்கிய அவர், 
கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை 
வலிந்து பற்றிக்கொண்டிருக்க
வேண்டியதொன்றாகக் கருதவில்லை.

ஆனால் தம்மையே வெறுமையாக்கி 
அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார். 

மனித உருவில் தோன்றி,
சாவை ஏற்கும் அளவுக்கு, 
அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் 
கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார்.

எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, 
எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார்.

ஆகவே இயேசுவின் பெயருக்கு விண்ணவர், 
மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்;

தந்தையாம் கடவுளின் மாட்சிக்காக 
"இயேசு கிறிஸ்து ஆண்டவர்" என 
எல்லா நாவுமே அறிக்கையிடும்.

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும்...

மு.மொழி. 3: ஆண்டவராகிய இயேசு தம்மையே தாழ்த்திக் கொண்டார்எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தினார்.
___________________________

(எழுந்து நின்று வாசிக்கவும்)

அருள்வாக்கு             உரோ: 11: 33-36

கடவுளின் அருள் செல்வம் எத்துணை மிகுதியானது! அவருடைய ஞானமும் அறிவும் எத்துணை ஆழமானவை! அவருடைய தீர்ப்புகள் அறிவுக்கு எட்டாதவை! அவருடைய செயல்முறைகள் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவை! "ஏனெனில் ஆண்டவரின் மனத்தை அறிபவர் யார்? அவருக்கு அறிவுரையாளராய் இருப்பவர் யார்? தமக்குக் கைம்மாறாக ஏதாவது கிடைக்கும் என முன்னதாகவே அவரிடம் கொடுத்து வைத்தவர் யார்?" அனைத்தும் அவரிடமிருந்தே வந்தன; அவராலேயே உண்டாயின; அவருக்காவே இருக்கின்றன, அவருக்கே என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.

சிறு மறுமொழி


- ஆண்டவரே, உமது செயல்கள் எத்தனை மேன்மையானவை
- ஆண்டவரே உமது செயல்கள் எத்தனை மேன்மையானவை.

- உமது ஞானத்தால் அவை அனைத்தையும் நீர் உருவாக்கினீர்
- உமது செயல்கள் எத்தனை மேன்மையானவை.

- தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக
- ஆண்டவரே உமது செயல்கள் எத்தனை மேன்மையானவை.

(அனைவரும் எழுந்து நிற்கவும்)


மரியாவின் பாடல் (எழுந்து நிற்கவும்)
மு.மொழி.: (அந்தந்த காலத்திற்கு ஏற்றாற்போல்)

ஞாயிறு 01 (ஆண்டவரின் திருமுழுக்கு)
ஞாயிறு 05

நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள். உங்கள் ஒளி மனிதர் முன் ஒளிர்க! அப்பொழுது உங்கள் நற்செயல்களைக் கண்டு, விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்.

ஞாயிறு 09

என்னை நோக்கி 'ஆண்டவரே, ஆண்டவரே' எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர்.

ஞாயிறு 13

'நான் அனுப்புகிறவரை ஏற்றுக் கொள்பவர் என்னையே ஏற்றுக் கொள்கிறார். என்னை ஏற்றுக் கொள்பவர் என்னை அனுப்பியவரையே ஏற்றுக்கொள்கிறார்' என்கிறார் ஆண்டவர்.

ஞாயிறு 17

வணிகள் ஒருவர் நல்முத்துக்களைத் தேடிச் செல்கிறார். விலை உயர்ந்த ஒரு முத்தைக் கண்டவுடன், அவர் போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று, அதை வாங்கிக் கொள்கிறார். விண்ணரசு இந்நிகழ்ச்சிக்கு ஒப்பாகும்.

ஞாயிறு 21

'நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்.'  யோனாவின் மகனான சீமோனே, நீ பேறுபெற்றவர்.

ஞாயிறு 25

நீங்களும், என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள்; நேர்மையான கூலியை உங்களுக்குக் கொடுப்பேன்.

ஞாயிறு 29

சீசருக்கு உரியவற்றைச் சீசருக்கும், கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள். அல்லேலூயா.

ஞாயிறு 33

நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில், நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும்.

ஞாயிறு 34 (கிறிஸ்து அரசர் பெருவிழா)


ஆண்டவரை எனது உள்ளம் 
போற்றிப் பெருமைப்படுத்துகின்றது. 
என் மீட்பராம் கடவுளை நினைத்து 
எனது மனம் பேருவகை கொள்கின்றது.

ஏனெனில் அவர் தம் அடிமையின் 
தாழ்நிலையைக் கண்ணோக்கினார்.
இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் 
என்னைப் பேறுபெற்றவர் என்பர்.

ஏனெனில் வல்லவராம் கடவுள் 
எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். 
தூயவர் என்பதே அவரது பெயர்.

அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் 
தலைமுறை தலைமுறையாய் 
அவர் இரக்கம் காட்டி வருகிறார்.

அவர் தம் தோள் வலிமையைக் காட்டியுள்ளார்; 
உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் 
சிதறடித்து வருகிறார்.

வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்; 
தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்.

பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்; 
செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார்.

மூதாதையருக்கு உரைத்தபடியே அவர் 
ஆபிரகாமையும் அவர்தம் வழி மரபினரையும் 
என்றென்றும் இரக்கத்தோடு 
நினைவில் கொண்டுள்ளார்;
தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத் 
துணையாக இருந்து வருகிறார் ".

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும்...

மு.மொழி.: (அந்தந்த காலத்திற்கு ஏற்றாற்போல்)

ஞாயிறு 01 (ஆண்டவரின் திருமுழுக்கு)
ஞாயிறு 05

நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள். உங்கள் ஒளி மனிதர் முன் ஒளிர்க! அப்பொழுது உங்கள் நற்செயல்களைக் கண்டு, விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்.

ஞாயிறு 09

என்னை நோக்கி 'ஆண்டவரே, ஆண்டவரே' எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர்.

ஞாயிறு 13

'நான் அனுப்புகிறவரை ஏற்றுக் கொள்பவர் என்னையே ஏற்றுக் கொள்கிறார். என்னை ஏற்றுக் கொள்பவர் என்னை அனுப்பியவரையே ஏற்றுக்கொள்கிறார்' என்கிறார் ஆண்டவர்.

ஞாயிறு 17

வணிகள் ஒருவர் நல்முத்துக்களைத் தேடிச் செல்கிறார். விலை உயர்ந்த ஒரு முத்தைக் கண்டவுடன், அவர் போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று, அதை வாங்கிக் கொள்கிறார். விண்ணரசு இந்நிகழ்ச்சிக்கு ஒப்பாகும்.

ஞாயிறு 21

'நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்.'  யோனாவின் மகனான சீமோனே, நீ பேறுபெற்றவர்.

ஞாயிறு 25

நீங்களும், என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள்; நேர்மையான கூலியை உங்களுக்குக் கொடுப்பேன்.

ஞாயிறு 29

சீசருக்கு உரியவற்றைச் சீசருக்கும், கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள். அல்லேலூயா.

ஞாயிறு 33

நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில், நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும்.

ஞாயிறு 34 (கிறிஸ்து அரசர் பெருவிழா)

__________________________

மன்றாட்டுக்கள்

தந்தை, மகன், தூய ஆவியாராகிய ஒரே கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக. அவரிடம் நாம் தாழ்மையுடன் மன்றாடுவோம்.

℟ - ஆண்டவரே உம் மக்களோடு இருந்தருளும்.

எல்லாம் வல்ல தந்தையே, எம் உலகிற்கு நீதியை கொண்டு வந்தருளும் - இதனால், மக்கள் உம் அமைதியின் மகிழ்ச்சியில் வாழ்வார்களாக.

℟ - ஆண்டவரே உம் மக்களோடு இருந்தருளும்.

மக்களினத்தார் அனைவரையும், உமது ஆட்சிக்குள் கொண்டு வாரும் - இவ்வாறு மானிட இனம் அனைத்தும் மீட்படைவதாக.

℟ - ஆண்டவரே உம் மக்களோடு இருந்தருளும்.

தம்பதியர்க்கு உமது அமைதியின் ஆற்றலை அளித்து உமது திருவுளத்தின்படி அவர்களை வழி நடத்தும் - நிலையான அன்பில் அவர்கள் ஒன்றித்து வாழவும் அருள்புரியும்.

℟ - ஆண்டவரே உம் மக்களோடு இருந்தருளும்.

எங்களுக்கு உதவிய அனைவருக்கும் நீரே பரிசாய் இருப்பீராக அவர்களுக்கு நிலைவாழ்வையும் வழங்குவீராக.

℟ - ஆண்டவரே உம் மக்களோடு இருந்தருளும்.

(தனிப்பட்ட தேவைகளுக்காக மன்றாடல்)

போரிலும் வன்முறையிலும் தங்கள் வாழ்வை இழந்தவர்கள் மீது இரக்கமாயிரும் - அவர்களை உமது இளைப்பாற்றியிலும் ஏற்றருளும்.

℟ - ஆண்டவரே உம் மக்களோடு இருந்தருளும்.


ஆண்டவரின் இறைவேண்டல் - அழைப்பு
1. நம் மீட்பர் நமக்குக் கற்பித்தவாறு, நாம் விண்ணகத் தந்தையை நோக்கி மன்றாடுவோம்.

2 இவ்வுலகில் இறையாட்சி வரவேண்டுமென்று மன்றாடுவோம்.

3. நமது புகழ்ச்சிகளையும் மன்றாட்டுகளையும் கிறிஸ்துவின் வார்த்தைகளில் சுருக்கமாய்ச் சொல்வோம்.

4. நமது புகழ்ச்சியையும் மன்றாட்டுகளையும் ஆண்டவருடைய இறைவேண்டலால் உறுதிப்படுத்துவோம்.

5. இப்போது கிறிஸ்துவே கற்றுக் கொடுத்த வார்த்தைகளால் தந்தையைப் புகழ்ந்து மன்றாடுவோம். 

6. (கிறிஸ்துவை நோக்கி) ஆண்டவரே, நாங்கள் உம் போதனையின்படி இறைவேண்டல் செய்யும் இவ்வேளையில், எங்களை உம் ஆட்சியில் நினைவு கூர்ந்தருளும். 

7. நம் ஆண்டவருடைய போதனையின்படி, நாம் நம்பிக்கையோடு சொல்வோம்.

8. நம் ஆண்டவரின் படிப்பினையைப் பின்பற்றி, நாம் மன்றாடுவோம்.

9. இறைவேண்டல்களுக்கெல்லாம் எடுத்துக்காட்டாக ஆண்டவர் நமக்குக் கொடுத்த வேண்டலை நாம் ஒருமித்து இப்போது சொல்வோம்.
__________________________
இறுதி செபம்

ஞாயிறு 01 (ஆண்டவரின் திருமுழுக்கு)
ஞாயிறு 05

ஆண்டவரே, உமது குடும்பத்தை இடையறாத பரிவிரக்கத்தால் காத்தருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் விண்ணக அருளை மட்டுமே எதிர்நோக்கியுள்ள இக்குடும்பம் உமது நிலையான பாதுகாவலால் என்றும் உறுதி அடைவதாக. உம்மோடும் தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் மகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

ஞாயிறு 09

ஆண்டவராகிய இறைவா, தவறா மனத்தினாலும் அன்பினாலும் எங்கள் வாழ்வை நீர் ஆண்டு நடத்துகின்றீர். அதனால் தீயவை அனைத்தையும் எங்களிடமிருந்து அகற்றி எமக்குப் பயன் அளிக்கும் அனைத்தையும் கனிவுடன் தந்தருள்வீராக. உம்மோடும் தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் மகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

ஞாயிறு 13

இறைவா, உமது அருளால் உம் பிள்ளைகளாகத் தேர்ந்தெடுக்கப்பெற்ற நாங்கள் ஒளியின் மக்களாக இருக்க விரும்பினீரே; அதனால் நாங்கள் தவறு எனும் இருளில் சிக்கிக்கொள்ளாமல் உண்மையின் பேரொளியில் என்றும் சிறந்து விளங்க அருள்புரிவீராக. உம்மோடும் தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் மகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

ஞாயிறு 17

உம்மை எதிர்நோக்கி இருப்போரைப் பாதுகாப்பவரான  இறைவா, உம்மால் அன்றி ஆற்றல் வாய்ந்ததும் புனிதமானதும் எதுவும் இல்லை; எங்கள் மீது உமது இரக்கத்தை மேன்மேலும் பொழிவதால் உம்மை எங்கள் தலைவராகவும் வழிகாட்டியாகவும் ஏற்றுக்கொண்டு நிலையானவற்றை நாங்கள் இப்போதே பற்றிக்கொள்ள நிலையற்ற இன்றைய நன்மைகளைப் பயன்படுத்தச் செய்வீராக. உம்மோடும் தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் மகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

ஞாயிறு 21

நம்பிக்கையாளரின் உள்ளங்களை ஒன்றிணைப்பவரான இறைவா, நீர் கற்றுத்தருவதை உம் மக்கள் அன்பு செய்யவும் நீர் வாக்களிப்பதை விரும்பவும் செய்தருளும்; அதனால் மாறிவரும் இவ்வுலகச் சூழலில் எங்கள் இதயங்கள் உண்மையான பேரின்ப உலகின் மீது என்றும் நாட்டம் கொள்ளச் செய்வீராக. உம்மோடும் தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் மகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

ஞாயிறு 25

இறைவா, உம்மையும் பிறரையும் அன்பு செய்வதில் திருச்சட்டத்தின் எல்லாக் கட்டளைகளும் அடங்கியிருக்கச் செய்தீரே; உம் கட்டளைகளைக் கடைப்பிடிக்கும் நாங்கள் முடி வில்லா வாழ்வுக்கு வந்து சேரும் தகுதி பெற எங்களுக்கு அருள்வீராக. உம்மோடும் தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் மகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

ஞாயிறு 29

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, நாங்கள் எப்போதும் உமது திருவுளத்துக்கு ஏற்ப வாழச் செய்தருளும்; அதனால் மாண்புக்கு உரிய உமக்கு நேர்மையான இதயத்தோடு நாங்கள் ஊழியம் புரியச் செய்வீராக. உம்மோடும் தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் மகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

ஞாயிறு 33

ஆண்டவரே எங்கள் இறைவா, உம்மீது நாங்கள் கொண்டுள்ள பற்றன்பில் எப்பொழுதும் மகிழ்ந்திருக்கச் செய்ய உம்மை வேண்டுகின்றோம்: ஏனெனில் அனைத்து நன்மைகளுக்கும் ஊற்றாகிய உமக்கு நாங்கள் என்றும் பணி புரிவதால் முடிவில்லா, முழுமையான மகிழ்வைப் பெற்றுக்கொள்வோமாக. உம்மோடும் தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் மகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

ஞாயிறு 34 (கிறிஸ்து அரசர் பெருவிழா)

__________________________

ஆசி வழங்குதல்

அப: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக 
எல்: உம் ஆன்மாவோடும் இருப்பாராக 

அப: எல்லாம் வல்ல இறைவன் தந்தை மகன் தூய ஆவியார் உங்களை ஆசீர்வதிப்பாராக. 
எல்: ஆமென் 

அப: கிறிஸ்துவின் அமைதியில் சென்று வாருங்கள் 
எல்: இறைவா உமக்கு நன்றி 

(அல்லது)

முதல்: ஆண்டவர் நம்மை ஆசீர்வதித்து தீமைகள் அனைத்தினின்றும் பாதுகாத்து முடிவில்லா வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக 
எல்: ஆமென் 

முதல்: ஆண்டவரை வாழ்த்துவோமாக 
எல்: இறைவா உமக்கு நன்றி.