4 - புதன் காலைப் புகழ்
பாடல் (பக்கம் 141)
(எழுந்து நிற்கவும்)
இலங்கிடும் விண்வெளி எல்லாம் அமைத்து
நிலவினை இரவுக்கு ஒளிதரவும்
புலர்ந்திடும் பகலை ஆதவனாளவும்
நிலையாய் நிறுவிய வல்லவனே.
காரிருள் இரவு கலைந்து போனது
பாரதில் எழிலும் மலர்ந்ததுவே
வீரிய முடனே விழித்தெழும் உள்ளம்
கோரிய வற்றைச் செயல்படுத்த,
இதயம் நிறைந்து உம்புகழ் இசைக்க
புதிய நாளெமை அழைக்கிறது
உதய ஒளியினும் ஒளிருமுளத்துடன்
இதமாய் இன்னிசை பாடிடுவோம்.
வழுக்கும் வழியைத் தவிர்த்து நடப்போம்
இழுக்குள நினைவைப் புறக்கணிப்போம்
பழிச்சொல் நாவைப் பாழ்படுத்தாமல்
இழிவுச் செயல்களை விலக்கிடுவோம்.
பகலவன் வரவால் பகல்ஒளி பெறுமே
அகவொனி தருவது விசுவாசம்
மிகத்திட முடனே நம்பிக்கை வளர்க
நிகரிலா அன்பும் எரிந்தொளிர்கள்
இச்செபம் இரங்கி ஏற்பீர் தந்தாய்
உச்ச நிலையமர் உம்மகனும்
அச்சம் அகற்றும் தூய ஆவியும்
இச்செகம் உம்முடன் ஆளுகவே. ஆமென்
______________________________
(அமரவும்)
மு.மொழி.1: உறுதியாய் இருக்கின்றது கடவுளே! என் உள்ளம் உறுதியாய் இருக்கின்றது.
தாவீதின் புகழ்ப் பாடல் - திபா 108
என் உள்ளம் உறுதியாய் இருக்கின்றது
கடவுளே என் உள்ளம் உறுதியாய் இருக்கின்றது
நான் பாடுவேன் உம்மைப் புகழ்ந்து பாடுவேன்
என் நெஞ்சே விழித்தெழு
வீணையே யாழே விழித்தெழுங்கள்
வைகறையை விழித்தெழச் செய்வேன்.
ஆண்டவரே மக்களினங்களிடையே உமக்கு நன்றி செலுத்துவேன்
எல்லா இனத்தாரிடையேயும் உம்மைப் புகழ்ந்து பாடுவேன்
ஏனெனில் வானளவு உயர்ந்துள்ளது உமது பேரன்பு
முகில்களைத் தொடுகின்றது உமது உண்மை
கடவுளே வானங்களுக்கு மேலாக நீர் உயர்வு பெறுவீராக
பாரெங்கும் உமது மாட்சி விளங்குவதாக
உம் அன்பர்கள் விடுதலை பெறுமாறு
உமது வலக்கையால் அவர்களுக்குத் துணை செய்யும்
என் விண்ணப்பத்திற்குப் பதிலளியும்.
கடவுள் தமது தூயகத்தினின்று இவ்வாறு உரைத்தார்
வெற்றிக் களிப்பிடையே செக்கேமைப் பங்கிடுவேன்
சுக்கோத்துப் பள்ளத்தாக்கை அளந்து கொடுப்பேன்
கிலயாது என்னுடையது; மனாசேயும் என்னுடையதே
எப்ராயிம் என் தலைச்சீரா; யூதா என் செங்கோல்
மோவாபு எனது பாதங்கழுவும் பாத்திரம்
ஏதோமின்மீது எனது மிதியடியை எறிவேன்
பெலிஸ்தியாவை வென்று ஆர்ப்பரிப்பேன்.
அரண்சூழ் நகரினுள் என்னை இட்டுச் செல்பவர் யார்
ஏதோம் வரைக்கும் என்னைக் கூட்டிச் செல்பவர் யார்
கடவுளே நீர் எங்களை கைவிட்டு விட்டீர் அன்றோ
கடவுளே நீர் எங்கள் படைகளோடு
புறப்படவில்லை அஎதிரியை மேற்கொள்ள எங்களுக்கு உதவும்
மனிதர் தரும் உதவியோ வீண்
கடவுளின் துணையால் வீரத்துடன் போரிடுவோம்
அவரே நம் எதிரிகளை மிதித்து விடுவார்.
மு.மொழி.: உறுதியாய் இருக்கின்றது கடவுளே! என் உள்ளம் உறுதியாய் இருக்கின்றது.
_____________________________
மு.மொழி. 2: ஆண்டவர் நேர்மை என்னும் ஆடையை எனக்கு
அணிவித்தார்.
விடுதலை பற்றிய நற்செய்தி - எசா 61 : 10, 62: 1-5
ஆண்டவரில் நான் பெருமகிழ்ச்சி அடைவேன்
என் கடவுளில் என் உள்ளம் பூரிப்படையும்
மலர்மாலை அணிந்த மணமகன் போலும்
நகைகளால் அழகுபடுத்தப்பட்ட மணமகள் போலும்
விடுதலை என்னும் உடைகளை அவர் எனக்கு உடுத்தினார்
நேர்மை என்னும் ஆடையை எனக்கு அணிவித்தார்.
நிலம் முளைகளைத் துளிர்க்கச் செய்வது போன்றும்
தோட்டம் விதைகளை முளைக்கச் செய்வது போன்றும்
ஆண்டவராகிய என் தலைவர் பிற இனத்தார் பார்வையில்
நேர்மையும் புகழ்ச்சியும் துளிர்த்தெழச் செய்வார்
சீயோனின் வெற்றி வைகறை ஒளியெனவும்
அதன் மீட்பு சுடர் விளக்கெனவும் வெளிப்படும் வரை
அதனை முன்னிட்டு மவுனமாயிரேன்
எருசலேம் பொருட்டுச் செயலற்று அமைதியாயிரேன்.
பிற இனத்தார் உன் வெற்றியைக் காண்பர்
மன்னர் யாவரும் உன் மேன்மையைப் பார்ப்பர்
ஆண்டவர் தம் நாவினால் சூட்டும்
புதியதொரு பெயரால் நீ அழைக்கப்படுவாய்
ஆண்டவரின் கையில் நீ அழகிய மணிமுடியாகத் திகழ்வாய்
உன் கடவுளின் கரத்தில் அரச மகுடமாய் விளங்குவாய்.
கைவிடப்பட்டவள் என்று இனி நீ பெயர் பெறமாட்டாய்
பாழ்பட்டது என இனி உன் நாடு அழைக்கப்படாது
நீ எப்சிபா என்று அழைக்கப்படுவாய்
உன் நாடு பெயூலா என்று பெயர் பெறும்
ஏனெனில் ஆண்டவர் உன்னை விரும்புகின்றார்
உன் நாடு மணவாழ்வு பெறும்.
இளைஞன் கன்னிப்பெண்ணை மணப்பதுபோல்
உன்னை எழுப்பியவர் உன்னை மணந்து கொள்வார்.
மணமகன் மணப்பெண்ணில் மகிழ்வது போல்
உன் கடவுள் உன்னில் மகிழ்வார்.
மு.மொழி.: ஆண்டவர் நேர்மை என்னும் ஆடையை எனக்கு
அணிவித்தார்.
______________________________
மு.மொழி. 3: என் வாழ்நாளெல்லாம் என் கடவுளைப் புகழ்ந்துபாடுவேன்.
மீட்பராம் கடவுள் போற்றி! - திபா 146
என் நெஞ்சே நீ ஆண்டவரைப் போற்றிடு
நான் உயிரோடு உள்ளளவும் ஆண்டவரைப் போற்றிடுவேன்
என் வாழ்நாளெல்லாம் என் கடவுளைப் புகழ்ந்து பாடிடுவேன்
ஆட்சித் தலைவர்களை நம்பாதீர்கள்
உன்னை மீட்க இயலாத மானிட மக்களை நம்ப வேண்டாம்
அவர்களின் ஆவி பிரியும்போது
தாங்கள் தோன்றிய மண்ணுக்கே அவர்கள் திரும்புவார்கள்
அந்நாளில் அவர்களின் எண்ணங்கள் அழிந்துபோம்.
யாக்கோபின் இறைவனைத் தம்
துணையாகக் கொண்டிருப்போர் பேறுபெற்றோர்
தம் கடவுளாகிய ஆண்டவரையே நம்பியிருப்போர் பேறு பெற்றோர்
அவரே விண்ணையும் மண் ரயும் கடலையும்
அவற்றிலுள்ள யாவற்றையும் உருவாக்கியவர்
என்றென்றும் நம்பிக்கைக்கு உரியவராய் இருப்பவரும் அவரே.
ஆண்டவர் ஒடுக்கப்பட்டோர்க்கான நீதியை நிலைநாட்டுகின்றார்
பசித்திருப்போர்க்கு உணவளிக்கின்றார்
சிறைப்பட்டோர்க்கு விடுதலை அளிக்கின்றார்
ஆண்டவர் பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின்றார்
தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றார்
நீதிமான்களிடம் அன்பு கொண்டுள்ளார்.
ஆண்டவர் அயல் நாட்டினரைப் பாதுகாக்கின்றார்
அனாதைப் பிள்ளைகளையும் கைம்பெண்களையும் ஆதரிக்கின்றார்
ஆனால் பொல்லாரின் வழிமுறைகளைக் கவிழ்த்து விடுகின்றார்
சீயோனே உன் கடவுள் என்றென்றும்
எல்லாத் தலைமுறைகளுக்கும் ஆட்சி செய்வார்.
மு.மொழி.: என் வாழ்நாளெல்லாம் என் கடவுளைப் புகழ்ந்துபாடுவேன்.
______________________________
(எழுந்து நின்று வாசிக்கவும்)
அருள்வாக்கு இச 4: 39-40
மேலே விண்ணிலும் கீழே மண்ணிலும் ஆண்டவரே கடவுள்; அவரைத் தவிர வேறு எவரும் இலர் என இன்று அறிந்து உங்கள் உள்ளத்தில் இருத்துங்கள். நான் இன்று உங்களுக்குக் கட்டளையிடும் அவரது நியமங்களையும் கட்டளைகளையும் பின்பற்றுங்கள்.
_____________________________
சிறு மறுமொழி
℣ - ஆண்டவரை நான் எந்நேரமும் போற்றுவேன்.
℟ - ஆண்டவரை நான் எந்நேரமும் போற்றுவேன்.
℣ - அவரது புகழ் எந்நேரமும் என் நாவில் எழும்
℟ - ஆண்டவரை நான் எந்நேரமும் போற்றுவேன்.
℣ - தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக
℟ - ஆண்டவரை நான் எந்நேரமும் போற்றுவேன்.
_____________________________
(அனைவரும் எழுந்து நிற்கவும்)
செக்கரியாவின் பாடல்
மு.மொழி.: : வாழ்நாளெல்லாம் ஆண்டவருக்குத் தூய்மையோடு பணி செய்வோம்.
இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றுவோம்.
ஏனெனில் அவர் தம் மக்களைத் தேடிவந்து விடுவித்தருளினார்.
தம் தூய இறைவாக்கினர் வாயினால்
தொடக்க முதல் அவர் மொழிந்தபடியே
அவர் தம் ஊழியராகிய தாவீதின் குடும்பத்தில்
வல்லமை உடைய மீட்பர் ஒருவர் நமக்காகத் தோன்றச் செய்தார்;
நம் பகைவரிடமிருந்தும்
நம்மை வெறுப்போர் அனைவரின் பிடியிலிருந்தும்
நம்மை மீட்பார்.
அவர் நம் மூதாதையருக்கு இரக்கம் காட்டி,
தமது தூய உடன்படிக்கையையும்,
நம் தந்தையாகிய ஆபிரகாமுக்கு அவர் இட்ட ஆணையையும்
நிறைவேற்ற நினைவு கூர்ந்தார்.
இவ்வாறு நாம் பகைவரின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டுத்
தூய்மையோடும் நேர்மையோடும்
வாழ்நாளெல்லாம் அச்சமின்றி
அவர் திருமுன் பணிசெய்யுமாறு வழிவகுத்தார்.
குழந்தாய்,
நீ உன்னத கடவுளின் இறைவாக்கினர் எனப்படுவாய்;
ஏனெனில் பாவ மன்னிப்பால் வரும் மீட்பை
அவர்தம் மக்களுக்கு அறிவித்து
ஆண்டவருக்கான வழியைச் செம்மைப்படுத்த
அவர் முன்னே செல்வாய்.
இருளிலும் இறப்பின் பிடியிலும் இருப்போர்க்கு ஒளிதரவும்,
நம்முடைய கால்களை அமைதி வழியில் நடக்கச் செய்யவும்
நம் கடவுளின் பரிவுள்ளத்தாலும் இரக்கத்தாலும்
விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடிவருகிறது.
மு.மொழி.: : வாழ்நாளெல்லாம் ஆண்டவருக்குத் தூய்மையோடு பணி செய்வோம்.
_____________________________
மன்றாட்டுக்கள்
கடவுள் தம் பேரன்பால் தம் திருமகனை இறந்தோரினின்று உயிர்த்தெழச் செய்து உயிர்தரும் நம்பிக்கையுள்ள புதுப்பிறப்பு அளித்துள்ளார். எனவே அவரிடம் வேண்டுவோம்.
℟ -தந்தையே எங்களுக்கு உமது ஆற்றலைத் தந்தருளும்.
உம் திருமகனாகிய இயேசுகிறிஸ்துவிடம் எங்கள் கண்களைத் திருப்பும் அவர் எங்களை நம்பிக்கையில் வழி நடத்தி நிறைவாழ்வுக்குக் கொண்டு வருவாராக.
℟ - தந்தையே எங்களுக்கு உமது ஆற்றலைத் தந்தருளும்.
இன்று பணி செய்வோருக்காக வேண்டுகிறோம்இல்லங்களிலும் நகரிலும் தொழிற்சாலைகளிலும் விளை நிலங்களிலும் நீர் அவர்களோடு இருந்தருள்வீராக.
℟ - தந்தையே எங்களுக்கு உமது ஆற்றலைத் தந்தருளும்.
(தனிப்பட்ட தேவைகளுக்காக மன்றாடல்)
_____________________________
ஆண்டவரின் செபம்
_____________________________
இறுதி செபம்
ஆண்டவரே, ஆட்டுக்குட்டியின் இரத்தத்தால் புதுப்பிக்கப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்ட உமது உடன்படிக்கையை நினைவு கூர்ந்தருளும். இதனால் உம் மக்கள் தங்கள் பாவங்களுக்கு மன்னிப்பு அடைந்து அருள்வாழ்வில் எந்நாளும் வளரச் செய்தருளும். உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சிபுரியும் எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
_____________________________
ஆசி வழங்குதல்
குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக
எல்: உம் ஆன்மாவோடும் இருப்பாராக
குரு: எல்லாம் வல்ல இறைவன் தந்தை மகன் தூய ஆவியார் உங்களை ஆசீர்வதிப்பாராக.
எல்: ஆமென்
குரு: கிறிஸ்துவின் அமைதியில் சென்று வாருங்கள்
எல்: இறைவா உமக்கு நன்றி
(அல்லது)
முதல்: ஆண்டவர் நம்மை ஆசீர்வதித்து தீமைகள் அனைத்தினின்றும் பாதுகாத்து முடிவில்லா வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக
எல்: ஆமென்
முதல்: ஆண்டவரை வாழ்த்துவோமாக
எல்: இறைவா உமக்கு நன்றி.