4 - வியாழன் மாலைப் புகழ்
பாடல்
(எழுந்து நிற்கவும்)
ஒருநாள் முடியும் தருணமிதில்
இருளும் படர்ந்து வருகையிலே
ஒருமனத் தோராய் உம்திருமுன்
வருமெமை ஆட்கொள் ஆண்டவரே.
பகலின் உழைப்பால் சோர்ந்தாலும்
அகத்தில் இருளை ஏற்காமல்
இகத்தின் வழிகளை விட்டகன்று
மகிமையின் ஒளியைப் பின்செல்வோம்.
இச்செபம் ஏற்பீர் எம்தந்தாய்
உச்ச நிலையமர் உம்மகனும்
அச்சம் அகற்றும் ஆவியுடன்
இச்செகம் என்றும் ஆளுகவே. ஆமென்.
_____________________________
(அமரவும்)
மு.மொழி.1: ஆண்டவரே என் அன்பும் கற்கோட்டையும்; வர்மீது என் நம்பிக்கையை வைக்கிறேன்.
வெற்றிக்கு நன்றி - திபா 144: 1-8
என் பாறையாகிய ஆண்டவர் போற்றி! போற்றி!
போரிட என் கைகளுக்குப் பயிற்சி அளிப்பவர் அவரே
போர்புரிய என் விரல்களைப் பழக்குபவரும் அவரே
என் கற்பாறையும் கோட்டையும் அவரே
எனக்குப் பாதுகாப்பாளரும் மீட்பரும் அவரே
என் கேடயமும் புகலிடமும் அவரே
மக்களினத்தாரை எனக்குக் கீழ்ப்படுத்துபவர் அவரே!
ஆண்டவரே! மனிதரை நீர் கவனிக்க அவர்கள் யார்
மானிடரை நீர் கருத்தில் கொள்ள அவர்கள் யார்
மனிதர் சிறு மூச்சுக்கு ஒப்பானவர்
அவர்களின் வாழ்நாள்கள் மறையும் நிழலுக்கு நிகரானவை
ஆண்டவரே உம் வான்வெளியை வளைத்து இறங்கி வாரும்
மலைகளைத் தொடும்; அவை புகை கக்கும்
மின்னலை மின்னச் செய்து அவர்களைச் சிதறடியும்
உம் அம்புகளை எய்து அவர்களைக் கலங்கடியும்.
வானினின்று உமது கையை நீட்டி எனக்கு விடுதலை வழங்கும்
பெருவெள்ளம் போல் எழும் வேற்றினத்தார் கையினின்று
என்னை விடுவித்தருளும்
அவர்களது வாய் பேசுவது பொய்
அவர்களது வலக்கை வஞ்சமிகு வலக்கை!
மு.மொழி.: ஆண்டவரே என் அன்பும் கற்கோட்டையும்; வர்மீது என் நம்பிக்கையை வைக்கிறேன்.
_____________________________
மு.மொழி. 2: ஆண்டவரைத் தம் கடவுளாகக் கொண்ட மக்கள் பேறுபெற்றோர்.
வெற்றிக்கு நன்றி - திபா 144: 9-15
இறைவா நான் உமக்குப் புதியதொரு பாடல் பாடுவேன்
பதின் நரம்பு வீணையால் உமக்குப் புகழ் பாடுவேன்
அரசர்களுக்கு வெற்றி அளிப்பவர் நீரே
உம் ஊழியர் தாவீதைக்
கொடிய வாளினின்று தப்புவித்தவரும் நீரே!
எனக்கு விடுதலை வழங்கும்
வேற்றினத்தார் கையினின்று என்னை விடுவித்தருளும்
அவர்களது வாய் பேசுவது பொய்
அவர்களது வலக்கை வஞ்சமிகு வலக்கை
எம் புதல்வர்கள் இளமையில் செழித்து வளரும்
செடிகள்போல் இருப்பார்களாக
எம் புதல்வியர் அரண்மனைக்கு அழகூட்டும்
செதுக்கிய சிலைகள் போல் இருப்பார்களாக!
எம் களஞ்சியங்கள் நிறைந்திருப்பனவாக
வகைவகையான தானியங்களால் நிறைந்திருப்பனவாக
எங்கள் வயல்களில் ஆடுகள்
ஆயிரம் பல்லாயிரம் மடங்கு பலுகட்டும்
எங்கள் மாடுகள் சுமை சுமப்பனவாக
எவ்விதச் சிதைவோ இழப்போ இல்லாதிருக்கட்டும்.
எங்கள் தெருக்களில் அழுகுரல் இல்லாதிருக்கட்டும்
இவற்றை உண்மையாக அடையும் மக்கள் பேறுபெற்றோர்
ஆண்டவரைத் தம் கடவுளாகக் கொண்ட
மக்கள் பேறுபெற்றோர்.
மு.மொழி.: ஆண்டவரைத் தம் கடவுளாகக் கொண்ட மக்கள் பேறுபெற்றோர்.
______________________________
மு.மொழி. 3: நம் கடவுள் வெற்றியையும் பேரரசையும் வென்றவர்.
இறைவனின் தீர்ப்பு - திவெ 11: 17, 18; 12: 10b-12
கடவுளாகிய ஆண்டவரே எல்லாம் வல்லவரே
இருக்கின்றவரும் இருந்தவருமான
உமக்கு நன்றி செலுத்துகின்றோம்.
ஏனெனில் நீர் உமது பெரும் வல்லமையை வெளிப்படுத்தி
ஆட்சி செலுத்தலானீர்.
வேற்றினத்தார் சினந்தெழுந்தனர்
உமது சினமும் வெளிப்பட்டது
இறந்தோருக்குத் தீர்ப்பளிக்கவும்
உம் பணியாளர்களாகிய இறைவாக்கினர்கள்
இறைமக்கள் உமக்கு அஞ்சும் சிறியோர் பெரியோர்
ஆகிய அனைவருக்கும் கைம்மாறு அளிக்கவும்
உலகை அழிப்பவர்களை அழிக்கவும் காலம் வந்துவிட்டது.
இதோ மீட்பு வல்லமை நம் கடவுளின் ஆட்சி
அவருடைய மெசியாவின் அதிகாரம்
ஆகிய அனைத்தும் வந்துவிட்டன
நம் சகோதரர் சகோதரிகள்
மீது குற்றம் சுமத்தியவன்
நம் கடவுள் திருமுன் அல்லும் பகலும் அவர்கள்
மீது
குற்றம் சாட்டியவன் வெளியே தள்ளப்பட்டான்.
ஆட்டுக்குட்டி சிந்திய இரத்தத்தாலும்
தாங்கள் பகர்ந்த சான்றாலும்
அவர்கள் அவனை வென்றார்கள்
அவர்கள் தங்கள் உயிர்மீது ஆசை வைக்கவில்லை
இறக்கவும் தயங்கவில்லை.
இதன்பொருட்டு விண்ணுலகே
அதில் குடியிருப்போரே மகிழ்ந்து கொண்டாடுங்கள்.
மு.மொழி.: நம் கடவுள் வெற்றியையும் பேரரசையும் வென்றவர்.
______________________________
(எழுந்து நின்று வாசிக்கவும்)
அருள்வாக்கு கொலோ 1: 23
நீங்கள் நற்செய்தியைக் கேட்டு பெற்றுக்கொண்ட எதிர்நோக்கை இழந்து விடாமல் நம்பிக்கையை அடித்தளமாகக் கொண்டு அதில் உறுதியாக நிலைத்திருங்கள். உலகெங்கும் படைப்பளைத்துக்கும் நற்செய்தி பறைசாற்றப்பட்டுள்ளது. பவுலாகிய நான் இங்கற்செய்தியை அறிவிக்கும் திருத்தொண்டன் ஆனேன்.
_____________________________
சிறு மறுமொழி
℣ - ஆண்டவரே என் ஆயர் எனக்கேதும் குறையில்லை.
℟ - ஆண்டவரே என் ஆயர் எனக்கேதும் குறையில்லை.
℣ - பாம்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்.
℟ - ஆண்டவரே என் ஆயர் எனக்கேதும் குறையில்லை.
℣ - தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக
℟ - ஆண்டவரே என் ஆயர் எனக்கேதும் குறையில்லை.
_____________________________
(அனைவரும் எழுந்து நிற்கவும்)
மரியாவின் பாடல்
மு.மொழி.: நீதி நிலைநாட்டும் வேட்கை கொண்டோரை ஆண்டவர்
நிறைவடையச் செய்வார்.
ஆண்டவரை எனது உள்ளம்
போற்றிப் பெருமைப் படுத்துகின்றது.
என் மீட்பராம் கடவுளை நினைத்து
எனது மனம் பேருவகை கொள்கின்றது.
ஏனெனில் அவர் தம் அடிமையின்
தாழ்நிலையைக் கண்ணோக்கினார்.
இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும்
என்னைப் பேறுபெற்றவர் என்பர்.
ஏனெனில் வல்லவராம் கடவுள்
எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார்.
தூயவர் என்பதே அவரது பெயர்.
அவருக்கு அஞ்சி நடப்போருக்குத்
தலைமுறை தலைமுறையாய்
அவர் இரக்கம் காட்டி வருகிறார்.
அவர் தம் தோள் வலிமையைக் காட்டியுள்ளார்;
உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச்
சிதறடித்து வருகிறார்.
வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்;
தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்.
பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்;
செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார்.
மூதாதையருக்கு உரைத்தபடியே அவர்
ஆபிரகாமையும் அவர்தம் வழி மரபினரையும்
என்றென்றும் இரக்கத்தோடு
நினைவில் கொண்டுள்ளார்;
தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத்
துணையாக இருந்து வருகிறார் ".
மு.மொழி.: நீதி நிலைநாட்டும் வேட்கை கொண்டோரை ஆண்டவர் நிறைவடையச் செய்வார்.
_____________________________
மன்றாட்டுக்கள்
ஒளி இருளில் ஒளிர்கிறது. இருளோ அதை மேற்கொள்வதில்லை, நம்முடைய வாழ்விற்கு ஒளி கொணர்ந்த ஆண்டவருக்கு நன்றி செலுத்துவோம்.
℟ - ஆண்டவராகிய இயேசுவே, நீரே எம் ஒளி
ஆண்டவரே, நீர் முடக்கு வாதக்காரளைக் குணப்படுத்தி அவனுடைய பாவங்களை மன்னித்தீர் எங்கள் எல்லாத் தவறுகளையும் மன்னித்து எங்கள் பாவக் காயங்களைக் குணப்படுத்தும்
℟ - ஆண்டவராகிய இயேசுவே, நீரே எம் ஒளி
அறிவின் ஒளியைப் பின்பற்றி மனிதர் புதியன கண்டுபிடிக்கின்றனர் மனித இனத்திற்கு நலம்புரிய உமது கொடையைப் பயன்படுத்தி உமக்கே மகிமை அளிப்பார்களாக
℟ - ஆண்டவராகிய இயேசுவே, நீரே எம் ஒளி
பிறரின் பணிக்கென தங்களை அர்ப்பணித்துள்ள அனைவர் மீதும் கனிவு காட்டியருளும் – உமது அருள் அவர்களுக்கு இறுதிவரை ஆதரவாக இருப்பதாக
℟ - ஆண்டவராகிய இயேசுவே, நீரே எம் ஒளி
(தனிப்பட்ட தேவைகளுக்காக மன்றாடல்)
_____________________________
ஆண்டவரின் செபம்
_____________________________
இறுதி செபம்
ஆண்டவரே, எங்கள் மாலைப்புகழை மனமுவந்து ஏற்றருளும்; உமது திருமகளின் முன்மாதிரியைப் பின்பற்றவும், எங்கள் பணிகளில் சோர்ந்து போகாமல் இருந்து நற்பயனைக் கொண்டுவரவும் எங்களுக்கு அருள் கூர்ந்தருளும். உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சிபுரியும் எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
_____________________________
ஆசி வழங்குதல்
குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக
எல்: உம் ஆன்மாவோடும் இருப்பாராக
குரு: எல்லாம் வல்ல இறைவன் தந்தை மகன் தூய ஆவியார் உங்களை ஆசீர்வதிப்பாராக.
எல்: ஆமென்
குரு: கிறிஸ்துவின் அமைதியில் சென்று வாருங்கள்
எல்: இறைவா உமக்கு நன்றி
(அல்லது)
முதல்: ஆண்டவர் நம்மை ஆசீர்வதித்து தீமைகள் அனைத்தினின்றும் பாதுகாத்து முடிவில்லா வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக
எல்: ஆமென்
முதல்: ஆண்டவரை வாழ்த்துவோமாக
எல்: இறைவா உமக்கு நன்றி.