4 - புதன் மாலைப் புகழ்
பாடல் (பக்கம் 148)
(எழுந்து நிற்கவும்)
காலை மாலை மெல்ல மறைகிறது
விடிவது திண்ணமதாம்
நாளும் வேளையும் சுழன்றுவரல்
ஆளுமை உடையஉம் செயலன்றோ
இருளுறு விண்வெளி என்றாலும்
இறைமகள் வாக்கில் நம்பிக்கை
இருளா தேளம் விசுவாசம்
குறையற அன்பும் ஒளிர்ந்திடுமே.
எழுதலும் மறைதலும் அறியாத
எழிலுறு ஆதவன் அவர்தாமே
அவரே உலகை அன்பு செய்தார்
அவரே மகிழ்வாம் மறுவாழ்வில்,
இவ்வொளி யால்யாம் என்றென்றும்
செவ்விய வாழ்வைப் பெற்றிடுவோம்
திருமகன் தூய ஆவியுடன்
திருப்பா உமக்கு இசைத்திடுவோம். ஆமென்.
_____________________________
(அமரவும்)
மு.மொழி.1: ஆண்டவரே, என்னைப் பற்றிய உம் அறிவு எனக்கு மிகவும் வியப்பாயுள்ளது.
முழுமையாய் அறிந்து காக்கும் கடவுள்
திபா 139: 1-18, 23-24
ஆண்டவரே நீர் என்னை ஆய்ந்து அறிந்திருக்கின்றீர்
நான் அமர்வதையும் எழுவதையும் நீர் அறிந்திருக்கின்றீர்
என் நினைவுகளை எல்லாம் தொலையிலிருந்தே உய்த்துணர்கின்றீர்
நான் நடப்பதையும் படுப்பதையும் நீர் அறிந்துள்ளீர்
என் வழிகள் எல்லாம் உமக்குத் தெரிந்தவையே.
ஆண்டவரே என் வாயில் சொல் உருவாகுமுன்பே
அதை முற்றிலும் அறிந்திருக்கின்றீர்
எனக்கு முன்னும் பின்னும் என்னைச் சூழ்ந்து இருக்கின்றீர்
உமது கையால் என்னை பற்றிப் பிடிக்கின்றீர்
என்னைப் பற்றிய உம் அறிவு எனக்கு மிகவும் வியப்பாயுள்ளது
அது உன்னதமானது; என் அறிவுக்கு எட்டாதது.
உமது ஆற்றலைவிட்டு நான் எங்கே செல்லக் கூடும்
உமது திருமுன்னை விட்டு நான் எங்கே தப்பியோட முடியும்
நான் வானத்திற்கு ஏறிச் சென்றாலும்
நீர் அங்கே இருக்கின்றீர்
பாதாளத்தில் படுக்கையை அமைத்துக் கொண்டாலும்
நீர் அங்கேயும் இருக்கின்றீர்.
நான் கதிரவனின் இடத்திற்குப் பறந்து சென்றாலும்
மேற்கே கடலுக்கு அப்பால் வாழ்ந்தாலும்
அங்கேயும் உமது கை என்னை நடத்திச் செல்லும்
உமது வலக்கை என்னைப் பற்றிக் கொள்ளும்
உண்மையில் இருள் என்னை மூடிக் கொள்ளாதோ
ஒளி சூழ்வதென இரவும் என்னைச் சூழ்ந்து கொள்ளாதோ
என்று நான் சொன்னாலும்
இருள்கூட உமக்கு இருட்டாய் இல்லை
இரவும் பகலைப்போல் ஒளியாய் இருக்கின்றது
இருளும் உமக்கு ஒளிபோல் இருக்கும்.
மு.மொழி.: ஆண்டவரே, என்னைப் பற்றிய உம் அறிவு எனக்கு மிகவும் வியப்பாயுள்ளது.
_____________________________
மு.மொழி. 2: நாமே ஆண்டவர், உள்ளத்தையும் இதயத்தையும் ஆய்ந்து அறிகிறவர்.
II
என் உள் உறுப்புகளை உண்டாக்கியவர் நீரே
என் தாயின் கருவில் எனக்கு உருத் தந்தவர் நீரே
அஞ்சத்தகு வியத்தகு முறையில் நீர் என்னைப் படைத்ததால்
நான் உமக்கு நன்றி நவில்கின்றேன்
உம் செயல்கள் வியக்கத்தக்கவை என்பதை
என் மனம் முற்றிலும் அறியும்.
என் எலும்பு உமக்கு மறைவானதன்று
மறைவான முறையில் நான் உருவானதையும்
பூவுலகின் ஆழ் பகுதிகளில் நான் உருப்பெற்றதையும்
நீர் அறிந்திருந்தீர்
உம் கண்கள் கருமுளையில் என் உறுப்புகளைக் கண்டன
நீர் எனக்குக் குறித்து வைத்துள்ள நாள்கள் எல்லாம்
எனக்கு வாழ்நாள் எதுவுமே இல்லாத காலத்திலேயே
உமது நூலில் எழுதப்பட்டுள்ளன.
இறைவா உம்முடைய நினைவுகளை
நான் அறிந்து கொள்வது எத்துணைக் கடினம்
அவற்றின் எண்ணிக்கை எத்துணைப் பெரிது
அவற்றைக் கணக்கிட நான் முற்பட்டால்
அவை கடல் மணலிலும் மிகுதியாய் உள்ளன
அவற்றை எண்ணி முடிக்க வேண்டுமானால்
நீர் உள்ளளவும் நான் வாழ வேண்டும்.
இறைவா நீர் என் உள்ளத்தை ஆய்ந்து அறியும்
என் எண்ணங்களை அறியுமாறு என்னைச் சோதித்துப் பாரும்
உம்மை வருத்தும் வழியில் நான் செல்கின்றேனோ என்று பாரும்
என்றுமுள வழியில் என்னை நடத்தியருளும்.
மு.மொழி.: நாமே ஆண்டவர், உள்ளத்தையும் இதயத்தையும் ஆய்ந்து அறிகிறவர்.
______________________________
மு.மொழி. 3: அவருக்காகவே அனைத்தும் ஆயின; அனைத்தும் அவரோடிணைந்து நிலைபெறுகின்றன.
கொலோ 1:12 – 20 (பக்கம் 60)
தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள்
அவர் இறைமக்களுக்கான ஒளிமயமான உரிமைப்பேற்றில் பங்குபெற
உங்களைத் தகுதியுள்ளவர்களாக்கியுள்ளார்
அவரே இருளின் அதிகாரத்திலிருந்து நம்மை விடுவித்து
தம் அன்பார்ந்த மகனின் ஆட்சிக்குட்படுத்தினார்
அம்மகனால்தான் நாம் பாவ மன்னிப்பாகிய மீட்பைப் பெறுகிறோம்.
அவர் கட்புலனாகாத கடவுளது சாயல்
படைப்பனைத்திலும் தலைப்பேறு
ஏனெனில் விண்ணிலுள்ளவை மண்ணிலுள்ளவை
கட்புலனாகுபவை கட்புலனாகாதவை
அரியணையில் அமர்வோர் தலைமை தாங்குவோர்
ஆட்சியாளர் அதிகாரம் கொண்டோர் ஆகிய அனைவரும்
அவரால் படைக்கப்பட்டனர்.
அனைத்தும் அவர் வழியாய் அவருக்காகப் படைக்கப்பட்டன
அனைத்துக்கும் முந்தியவர் அவரே
அனைத்தும் அவரோடிணைந்து நிலைபெறுகின்றன
திருச்சபையாகிய உடலுக்குத் தலையும் தொடக்கமும் அவரே
எல்லாவற்றுள்ளும் முதன்மை பெறுமாறு
இறந்து உயிர்த்தெழுவோருள் அவர் தலைப்பேறு ஆனார்
தம் முழு நிறைவும் அவருள் குடிகொள்ளக்
கடவுள் திருவுளங் கொண்டார்.
சிலுவையில் இயேசு சிந்திய இரத்தத்தால்
அமைதியை நிலைநாட்டவும்
விண்ணிலுள்ளவை மண்ணிலுள்ளவை அனைத்தையும்
அவர் வழி தம்மோடு ஒப்புரவாக்கவும்
கடவுள் திருவுளங் கொண்டார்.
மு.மொழி.: அவருக்காகவே அனைத்தும் ஆயின; அனைத்தும் அவரோடிணைந்து நிலைபெறுகின்றன.
______________________________
(எழுந்து நின்று வாசிக்கவும்)
அருள்வாக்கு 1 யோவா 2:3-5
அவருடைய கட்டளைகளை நாம் கடைப்பிடித்தால் நாம் அவரை அறிந்து கொண்டோம் என்பது உறுதியாகத் தெரியும். அவரை எனக்குத் தெரியும் எனச் சொல்லிக்கொண்டு அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்காதோர் பொய்யர். உண்மை அவர்களிடம் இராது. ஆனால் அவரது வார்த்தையைக் கடைப்பிடிப்போரிடம் கடவுளின் அன்பு உண்மையாகவே நிறைவடைகிறது. நாம் அவரோடு இணைந்து இருக்கிறோம் என அதனால் அறிந்து கொள்ளலாம்.
_____________________________
சிறு மறுமொழி
℣ - ஆண்டவரே, உமது கண்ணின் மணி போல் எம்மைக் காத்தருளும்.
℟ - ஆண்டவரே, உமது கண்ணின் மணி போல் எம்மைக்
காத்தருளும்.
℣ - உம் சிறகுகளின் நிழலில் எங்களை மறைத்துக் கொள்ளும்.
℟ - உமது கண்ணின் மணி போல் எம்மைக் காத்தருளும்.
℣ - தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக
℟ - ஆண்டவரே, உமது கண்ணின் மணி போல் எம்மைக்
காத்தருளும்.
_____________________________
(அனைவரும் எழுந்து நிற்கவும்)
மரியாவின் பாடல்
மு.மொழி.: ஆண்டவரே, உமது தோள் வலிமையைக் காட்டியருளும்.
வலியோரைத் தாழ்த்தும்; தாழ்ந்தோரை உயர்த்தும்.
ஆண்டவரை எனது உள்ளம்
போற்றிப் பெருமைப் படுத்துகின்றது.
என் மீட்பராம் கடவுளை நினைத்து
எனது மனம் பேருவகை கொள்கின்றது.
ஏனெனில் அவர் தம் அடிமையின்
தாழ்நிலையைக் கண்ணோக்கினார்.
இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும்
என்னைப் பேறுபெற்றவர் என்பர்.
ஏனெனில் வல்லவராம் கடவுள்
எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார்.
தூயவர் என்பதே அவரது பெயர்.
அவருக்கு அஞ்சி நடப்போருக்குத்
தலைமுறை தலைமுறையாய்
அவர் இரக்கம் காட்டி வருகிறார்.
அவர் தம் தோள் வலிமையைக் காட்டியுள்ளார்;
உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச்
சிதறடித்து வருகிறார்.
வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்;
தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்.
பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்;
செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார்.
மூதாதையருக்கு உரைத்தபடியே அவர்
ஆபிரகாமையும் அவர்தம் வழி மரபினரையும்
என்றென்றும் இரக்கத்தோடு
நினைவில் கொண்டுள்ளார்;
தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத்
துணையாக இருந்து வருகிறார் ".
மு.மொழி.: ஆண்டவரே, உமது தோள் வலிமையைக் காட்டியருளும். வலியோரைத் தாழ்த்தும்; தாழ்ந்தோரை உயர்த்தும்.
_____________________________
மன்றாட்டுக்கள்
விண்ணிலும் மண்ணிலுமுள்ள ஒவ்வொரு குலத்தவரும் எத்தந்தையிடமிருந்து இறைவனின் பிள்ளைகள் என்ற பெயரைப் பெறுகிறார்களோ அத்தந்தையிடம் தம் திருமகனின் ஆவியை நம்முள்ளங்களில் அனுப்பும்படி மன்றாடுவோம்.
℟ - ஆண்டவரே பேரன்புடன் எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
ஆண்டவரே, மக்களின் அனைத்துத் தேவைகளுக்காகவும் மன்றாடுகிறோம் – உம் பாதைகளை அவர்களுக்குக் காட்டியருளும் எல்லா நாடுகளுக்கும் உமது மீட்பை வெளிப்படுத்தியருளும்.
℟ - ஆண்டவரே பேரன்புடன் எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
தூய ஆவி உமது திருச்சபையை ஆண்டு வழி நடத்துவாராக கிறிஸ்தவர்கள் உண்மையின் பாதையில் செல்லவும், ஆவியின் ஒருமைப்பாட்டில் நிலைத்திருக்கவும் செய்வீராக.
℟ - ஆண்டவரே பேரன்புடன் எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
துன்புறுத்தப்படுவோரையும், துயருறுவோரையும் தந்தைக்குரிய அவர்களுடைய உம் நலன்களுக்கு ஒப்படைக்கிறோம் தேவைக்கேற்ப அவர்களுக்கு ஆறுதல் அளித்து அவர்களது துயரத்தைத் துடைத்தருளும்.
℟ - ஆண்டவரே பேரன்புடன் எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
(தனிப்பட்ட தேவைகளுக்காக மன்றாடல்)
_____________________________
ஆண்டவரின் செபம்
_____________________________
இறுதி செபம்
ஆண்டவரே, பசித்தோரை வானக உணவினால் நிரப்புகின்றீர்; பேரன்புடன் உம் மக்களை இப்பொழுது நினைவுகூர்ந்து, உமது செல்வப்பெருக்கால் எங்களது ஏழ்மையைப் போக்கியருளும். உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சிபுரியும் எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
_____________________________
ஆசி வழங்குதல்
குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக
எல்: உம் ஆன்மாவோடும் இருப்பாராக
குரு: எல்லாம் வல்ல இறைவன் தந்தை மகன் தூய ஆவியார் உங்களை ஆசீர்வதிப்பாராக.
எல்: ஆமென்
குரு: கிறிஸ்துவின் அமைதியில் சென்று வாருங்கள்
எல்: இறைவா உமக்கு நன்றி
(அல்லது)
முதல்: ஆண்டவர் நம்மை ஆசீர்வதித்து தீமைகள் அனைத்தினின்றும் பாதுகாத்து முடிவில்லா வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக
எல்: ஆமென்
முதல்: ஆண்டவரை வாழ்த்துவோமாக
எல்: இறைவா உமக்கு நன்றி.