4 - வெள்ளி மாலைப் புகழ்

பாடல்  (பக்கம் 170)

(எழுந்து நிற்கவும்)

_____________________________

(அமரவும்)

மு.மொழி.1: ஆண்டவரே நாள்தோறும் நான் உம்மைப் போற்றுவேன்

அரசராம் கடவுள் போற்றி! 
 திபா 145

என் கடவுளே என் அரசே உம்மைப் புகழ்ந்து ஏத்துவேன்
உமது பெயரை என்றும் எப்பொழுதும் போற்றுவேன்
நாள்தோறும் உம்மைப் போற்றுவேன்
உமது பெயரை என்றும் எப்பொழுதும் புகழ்வேன்

ஆண்டவர் மாண்புமிக்கவர் பெரிதும் போற்றுதலுக்கு உரியவர்
அவரது மாண்பு நம் அறிவுக்கு எட்டாதது
ஒரு தலைமுறை அடுத்த தலைமுறைக்கு
உம் செயல்களைப் புகழ்ந்துரைக்கும்
வல்லமைமிகு உம் செயல்களை எடுத்துரைக்கும்.

உமது மாண்பின் மேன்மையையும் மாட்சியையும்
வியத்தகு உம் செயல்களையும் நான் சிந்திப்பேன்
அச்சம் தரும் உம் செயல்களின் வல்லமையைப் பற்றி
மக்கள் பேசுவார்கள்

உமது மாண்பினை நான் விரித்துரைப்பேன்
அவர்கள் உமது உயர்ந்த நற்பண்பை
நினைத்துக் கொண்டாடுவார்கள்
உமது நீதியை எண்ணி ஆர்ப்பரித்துப் பாடுவார்கள்.
எளிதில் சினம் கொள்ளாதவர்; பேரன்பு கொண்டவர்

ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்
எளிதில் சினம் கொள்ளாதவர் பேரன்பு கொண்டவர்
ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்
தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டுபவர்
ஆண்டவரே நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்
உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள்.

அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்
உமது வல்லமையைப் பற்றி பேசுவார்கள்
மானிடர்க்கு உம் வல்லமைச் செயல்களையும்
உமது அரசுக்குரிய மாட்சியின் பேரொளியையும் புலப்படுத்துவார்கள்
உமது அரசு எல்லாக் காலங்களிலுமுள்ள அரசு
உமது ஆளுகை தலைமுறை தலைமுறையாக உள்ளது.

மு.மொழி.: ஆண்டவரே நாள்தோறும் நான் உம்மைப் போற்றுவேன்
_____________________________

மு.மொழி. 2: ஆண்டவரே, எல்லாருடைய கண்களும் உம்மையே நோக்குகின்றன. உம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும் நீர் அண்மையிலுள்ளீர்.

                              II

தடுக்கி விழும் யாவரையும் ஆண்டவர் தாங்குகின்றார்
தாழ்த்தப்பட்ட யாவரையும் தூக்கி விடுகின்றார்
எல்லா உயிரினங்களின் கண்களும் உம்மையே நோக்குகின்றன
தக்க வேளையில் நீரே அவற்றிற்கு உணவளிக்கின்றீர்
நீர் உமது கையைத் திறந்து
எல்லா உயிரினங்களின் விருப்பத்தையும் நிறைவேற்றுகின்றீர்.

ஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும் நீதியுடையவர்
அவர் தம் செயல்கள் யாவும் இரக்கச் செயல்களே
தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும்
உண்மையாய்த் தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும்

ஆண்டவர் அண்மையில் இருக்கிறார்
அவர் தமக்கு அஞ்சி நடப்போரின் விருப்பத்தை நிறைவேற்றுவார்
அவர்களது மன்றாட்டுக்குச் செவிசாய்த்து
அவர்களைக் காப்பாற்றுவார்.
ஆண்டவர் தம்மிடம் பற்றுக்கொள்ளும்
அனைவரையும் பாதுகாக்கின்றார்
பொல்லார் அனைவரையும் அழிப்பார்
என் வாய் ஆண்டவரின் புகழை அறிவிப்பதாக
உடல்கொண்ட அனைத்தும் அவரது திருப்பெயரை
என்றும் எப்பொழுதும் போற்றுவதாக!

மு.மொழி.: ஆண்டவரே, எல்லாருடைய கண்களும் உம்மையே நோக்குகின்றன. உம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும் நீர் அண்மையிலுள்ளீர்.
______________________________

மு.மொழி. 3: மக்களினங்களின் மன்னரே, உம் வழிகள் நேரியவை; உண்மையுள்ளவை.

தொழுகைப்பாடல்          திவெ 15:3-4

கடவுளாகிய ஆண்டவரே எல்லாம் வல்லவரே
உம் செயல்கள் பெரியன வியப்புக்குரியன
மக்களினங்களின் மன்னரே
உம் வழிகள் நேரியவை உண்மையுள்ளவை

ஆண்டவரே உமக்கு அஞ்சாதவர் யார்
உமது பெயரைப் போற்றிப் புகழாதார் யார்
நீர் ஒருவரே தூயவர்
எல்லா மக்களினங்களும் உம் திருமுன் வந்து வணங்கும்
ஏனெனில் உம் நீதிச் செயல்கள் வெளிப்படையாயின.

மு.மொழி.: மக்களினங்களின் மன்னரே, உம் வழிகள் நேரியவை; உண்மையுள்ளவை.
______________________________

(எழுந்து நின்று வாசிக்கவும்)

அருள்வாக்கு            உரோ 8:1-2
கிறிஸ்து இயேசுவோடு இணைந்திருப்போருக்கு இனித் தண்டனைத் தீர்ப்பே கிடையாது. ஏனெனில், கிறிஸ்து இயேசுவோடு இணைந்திருப்போருக்கு வாழ்வு தரும் தூய ஆவியின் சட்டம் பாவம், சாவு என்பவற்றுக்கு உள்ளாக்கும் சட்டத்தினின்று என்னை விடுவித்து விட்டது.

_____________________________

சிறு மறுமொழி

℣ - நம்மைக் கடவுளுக்கு ஒப்புக் கொடுக்கும்படியாகக் கிறிஸ்து
நம் பாவங்களுக்காக இறந்தார்.
℟ - நம்மைக் கடவுளுக்கு ஒப்புக் கொடுக்கும்படியாகக் கிறிஸ்து
நம் பாவங்களுக்காக இறந்தார்.


℣ - உடலில் அவர் கொல்லப்பட்டார். உயிரில் அவர் வாழ்வுக்கு உயர்த்தப்பட்டார். 
℟ - நம்மைக் கடவுளுக்கு ஒப்புக் கொடுக்கும்படியாகக் கிறிஸ்து
நம் பாவங்களுக்காக இறந்தார்.

℣ - தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக
℟ - நம்மைக் கடவுளுக்கு ஒப்புக் கொடுக்கும்படியாகக் கிறிஸ்து
நம் பாவங்களுக்காக இறந்தார்.

_____________________________

(அனைவரும் எழுந்து நிற்கவும்)

மரியாவின் பாடல்

மு.மொழி.: ஆண்டவரே, எம் மூதாதையருக்கு உரைத்தபடியே உமது இரக்கத்தை நினைவில் கொள்ளும்.

ஆண்டவரை எனது உள்ளம் 
போற்றிப் பெருமைப் படுத்துகின்றது. 
என் மீட்பராம் கடவுளை நினைத்து 
எனது மனம் பேருவகை கொள்கின்றது.
ஏனெனில் அவர் தம் அடிமையின் 
தாழ்நிலையைக் கண்ணோக்கினார்.

இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் 
என்னைப் பேறுபெற்றவர் என்பர்.
ஏனெனில் வல்லவராம் கடவுள் 
எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். 
தூயவர் என்பதே அவரது பெயர்.

அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் 
தலைமுறை தலைமுறையாய் 
அவர் இரக்கம் காட்டி வருகிறார்.
அவர் தம் தோள் வலிமையைக் காட்டியுள்ளார்; 
உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் 
சிதறடித்து வருகிறார்.

வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்; 
தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்.
பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்; 
செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார்.

மூதாதையருக்கு உரைத்தபடியே அவர் 
ஆபிரகாமையும் அவர்தம் வழி மரபினரையும் 
என்றென்றும் இரக்கத்தோடு 
நினைவில் கொண்டுள்ளார்;
தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத் 
துணையாக இருந்து வருகிறார் ".

மு.மொழி.: ஆண்டவரே, எம் மூதாதையருக்கு உரைத்தபடியே உமது இரக்கத்தை நினைவில் கொள்ளும்.
_____________________________

மன்றாட்டுக்கள்

 கடவுள் நம்மை முதலில் அன்பு செய்ததால் நாம் அவரை அன்பு செய்ய முடிகிறது. எனவே அவரிடம் வேண்டுவோம்.

℟ - ஆண்டவரே, உம்மை அன்பு செய்யவும், ஒருவரை ஒருவர் அன்பு செய்யவும் துணை புரியும்.

மனம் மாறிய பெண் அதிகமாக அன்பு செய்ததால் இயேசு அவளுடைய பாவங்களையெல்லாம் மன்னித்தார் அவர் எங்களையும் தொட்டுக் குணப்படுத்தி உம்மை முழுமனத்தோடு அன்பு செய்யச் செய்வாராக.

℟ - ஆண்டவரே, உம்மை அன்பு செய்யவும், ஒருவரை ஒருவர் அன்பு செய்யவும் துணை புரியும்.

நாங்கள் பிறருக்குத் துன்பங்கள் இழைத்தோம் என எற்றுக்கொள்கிறோம் எங்களுடைய கவனக் குறைவுக்கும், அலட்சிய மனநிலைக்கும் நாங்கள் மன்னிப்புக் கேட்கிறோம்.

℟ - ஆண்டவரே, உம்மை அன்பு செய்யவும், ஒருவரை ஒருவர் அன்பு செய்யவும் துணை புரியும்.

(தனிப்பட்ட தேவைகளுக்காக மன்றாடல்)
_____________________________

ஆண்டவரின் செபம்
_____________________________

இறுதி செபம்

பேரன்பு மிக்க கடவுளே! உம் திருமகன் இயேசு கிறிஸ்து உலகை மீட்பதற்காகப் பாடுபட வேண்டுமெனத் திருவுளமானீர், உமது மக்கள் தங்களையே உமக்கு உயிருள்ள பலியாக ஒப்புக்கொடுத்து உமது அன்பின் நிறைவை அடைவார்களாக. உம்மோடு.....
_____________________________

ஆசி வழங்குதல்

குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக 
எல்: உம் ஆன்மாவோடும் இருப்பாராக 

குரு: எல்லாம் வல்ல இறைவன் தந்தை மகன் தூய ஆவியார் உங்களை ஆசீர்வதிப்பாராக. 
எல்: ஆமென் 

குரு: கிறிஸ்துவின் அமைதியில் சென்று வாருங்கள் 
எல்: இறைவா உமக்கு நன்றி 

(அல்லது)

முதல்: ஆண்டவர் நம்மை ஆசீர்வதித்து தீமைகள் அனைத்தினின்றும் பாதுகாத்து முடிவில்லா வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக 
எல்: ஆமென் 

முதல்: ஆண்டவரை வாழ்த்துவோமாக 
எல்: இறைவா உமக்கு நன்றி.