4 - செவ்வாய் மாலைப் புகழ்

  4 - செவ்வாய் மாலை செபம்

பாடல்  

(எழுந்து நிற்கவும்)

காலத்தை அமைத்து ஆள்பவரே
வேலைக்குப் பகலின் ஒளிதந்தீர்
இரவது இளைப்பாறும் பொழுதாய்
இருகூ றாக்கினீர் நாள் ஒன்றை.

தூயதாய் உளத்தை நடத்திடுவீர்
தீயவை இதயத்தைத் தாக்கி
புண்படுத் தாமல் அன்புடனே
கண்மணி போலெமைக் காத்திடுவீர்.

உணர்ச்சிப் பெருக்கால் உளம்பொங்க
தணித்ததை உறுதிப் படுத்திடுவீர்
தந்தையும் மைந்தனும் ஆவியுடன்
எந்தக் காலமும் புகழ்பெறுக. ஆமென்.
_____________________________

(அமரவும்)

மு.மொழி.1:  எருசலேமே! நான் உன்னை மறந்தால் என் வலக்கை சூம்பிப் போவதாக!

நாடு கடத்தப்பட்டோரின் புலம்பல் திபா 137:1-6
பாபிலோன் ஆறுகளருகே அமர்ந்து
நாங்கள் சீயோனை நினைத்து அழுதோம்
அங்கிருந்த அலரிச் செடிகள் மீது
எங்கள் யாழ்களை மாட்டி வைத்தோம்
ஏனெனில் அங்கு எங்களைச் சிறையாக்கினோர்
எங்களைப் பாடும்படி கேட்டனர்
எங்களைக் கடத்திச் சென்றோர்
எங்களை மகிழ்ச்சிப்பா இசைக்குமாறு கேட்டனர்
சீயோனின் பாடல்களை எங்களுக்குப்
பாடிக் காட்டுங்கள் என்றனர்.
ஆண்டவருக்கு உரித்தாக்கும் பாடலை
அன்னிய நாட்டில் எங்ஙனம் பாடுவோம்
எருசலேமே நான் உன்னை மறந்தால்
என் வலக்கை சூம்பிப் போவதாக
உன்னை நான் நினையாவிடில்
எனது மகிழ்ச்சியின் மகுடமாக நான் எருசலேமைக் கருதாவிடில்
என் நா மேல்வாயோடு ஒட்டிக் கொள்வதாக!


மு.மொழி.:  எருசலேமே! நான் உன்னை மறந்தால் என் வலக்கை சூம்பிப் போவதாக!
_____________________________

மு.மொழி. 2: ஆண்டவரே, தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப்  புகழ்வேன். 

நன்றிப் பாடல் திபா 138
ஆண்டவரே என் முழுமனத்துடன்
உமக்கு நன்றி செலுத்துவேன்
தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன்
உம் திருக்கோவிலை நோக்கித் திரும்பி
உம்மைத் தாள் பணிவேன்.
உம் பேரன்பையும் உண்மையையும் முன்னிட்டு
உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்
ஏனெனில் அனைத்திற்கும் மேலாக உம் பெயரையும்
உம் வாக்கையும் மேன்மையுறச் செய்துள்ளீர்
நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்
என் மனத்திற்கு வலிமை அளித்தீர்
ஆண்டவரே நீர் திருவாய் மலர்ந்த சொற்களைப்
பூவுலகின் மன்னர் அனைவரும் கேட்டு உம்மைப் போற்றுவர்.
ஆண்டவரே உம் வழிகளை அவர்கள் புகழ்ந்து பாடுவர்
ஏனெனில் உமது மாட்சி மிகப் பெரிது
ஆண்டவரே நீர் உன்னதத்தில் உறைபவர்
எனினும் நலிந்தோரைக் கண்ணோக்குகின்றீர்
ஆனால் செருக்குற்றோரைத் தொலையிலிருந்தே
அறிந்து கொள்கின்றீர்.
நான் துன்பத்தின் நடுவில் நடந்தாலும்
என் உயிரைக் காக்கின்றீர்
என் எதிரிகளின் சினத்துக்கு எதிராக
உமது கையை நீட்டுகின்றீர்
உமது வலக்கையால் என்னைக் காப்பாற்றுகின்றீர்
நீர் வாக்களித்த அனைத்தையும்
எனக்கெனச் செய்து முடிப்பீர்
ஆண்டவரே என்றும் உள்ளது உமது பேரன்பு
உம் கைவினைப் பொருளைக் கைவிடாதேயும்.

மு.மொழி.:  ஆண்டவரே, தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன்.
______________________________

மு.மொழி. 3: கடவுளின் ஆட்டுக்குட்டிக்கு மாட்சியும் மாண்பும் வல்லமையும் உரித்தாகுக.

மீட்படைந்தோரின் பாடல் - திவெ 4:11; 5:9, 10, 12

எங்கள் ஆண்டவரே, எங்கள் கடவுளே,
மாட்சியும் மாண்பும் வல்லமையும் பெற நீர் தகுதி பெற்றவர்; 
ஏனெனில் அனைத்தையும் படைத்தவர் நீரே. 
உமது திருவுளப்படியே அவை உண்டாயின, படைக்கப்பட்டன.

ஏட்டை எடுக்கவும் அதன் முத்திரைகளை உடைத்துப் பிரிக்கவும் 
தகுதி பெற்றவர் நீரே. நீர் கொல்லப்பட்டீர்; 
உமது இரத்தத்தால் குலம், மொழி, நாடு, 
மக்களினம் ஆகிய அனைத்தினின்றும் 
மக்களைக் கடவுளுக்கென்று விலை கொடுத்து மீட்டுக்கொண்டீர்.

ஆட்சியுரிமை பெற்றவர்களாகவும் குருக்களாகவும் 
அவர்களை எங்கள் கடவுளுக்காக ஏற்படுத்தினீர். 
அவர்கள் மண்ணுலகின்மீது ஆட்சி செலுத்துவார்கள்."
கொல்லப்பட்ட ஆட்டுக்குட்டி 
வல்லமையும் செல்வமும் ஞானமும் ஆற்றலும் 
மாண்பும் பெருமையும் புகழ்ச்சியும் பெறத் தகுதி பெற்றது.

மு.மொழி.: கடவுளின் ஆட்டுக்குட்டிக்கு மாட்சியும்  மாண்பும் வல்லமையும் உரித்தாகுக.
______________________________

(எழுந்து நின்று வாசிக்கவும்)

அருள்வாக்கு              கொலோ 3:16

 கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி உங்களுக்குள் நிறைவாகக் குடிகொள்வதாக! முழு ஞானத்தோடு ஒருவருக்கு ஒருவர் கற்பித்து அறிவுரை கூறுங்கள். திருப்பாடல்களையும் புகழ்ப்பாக்களையும் ஆவிக்குரிய பாடல்களையும் நன்றியோடு உளமாரப் பாடிக் கடவுளைப் போற்றுங்கள்.
_____________________________

சிறு மறுமொழி

℣ -  ஆண்டவரே, உமது திருமுன் எனக்கு மகிழ்ச்சியின்
நிறைவைக் கொடுத்தருளும்
℟ - ஆண்டவரே, உமது திருமுன் எனக்கு மகிழ்ச்சியின்
நிறைவைக் கொடுத்தருளும்

℣ - முடிவில்லா காலத்திற்கும் நான் உமது வலப்பக்கம் அமரும்
பேறுபெறுவேன்.
℟ - ஆண்டவரே, உமது திருமுன் எனக்கு மகிழ்ச்சியின்
நிறைவைக் கொடுத்தருளும்

℣ - தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக
℟ - ஆண்டவரே, உமது திருமுன் எனக்கு மகிழ்ச்சியின்
நிறைவைக் கொடுத்தருளும்
_____________________________

(அனைவரும் எழுந்து நிற்கவும்)

மரியாவின் பாடல்

மு.மொழி.: ஆண்டவரே, நீர் எனக்கு அரும்பெரும் செயல்புரியும். ஏனெனில் நீர் வல்லமை உள்ளவர். உமது பெயர் தூய்மை பெற்றதே.

ஆண்டவரை எனது உள்ளம் 
போற்றிப் பெருமைப் படுத்துகின்றது. 
என் மீட்பராம் கடவுளை நினைத்து 
எனது மனம் பேருவகை கொள்கின்றது.
ஏனெனில் அவர் தம் அடிமையின் 
தாழ்நிலையைக் கண்ணோக்கினார்.

இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் 
என்னைப் பேறுபெற்றவர் என்பர்.
ஏனெனில் வல்லவராம் கடவுள் 
எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். 
தூயவர் என்பதே அவரது பெயர்.

அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் 
தலைமுறை தலைமுறையாய் 
அவர் இரக்கம் காட்டி வருகிறார்.
அவர் தம் தோள் வலிமையைக் காட்டியுள்ளார்; 
உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் 
சிதறடித்து வருகிறார்.
வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்; 
தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்.
பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்; 
செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார்.

மூதாதையருக்கு உரைத்தபடியே அவர் 
ஆபிரகாமையும் அவர்தம் வழி மரபினரையும் 
என்றென்றும் இரக்கத்தோடு 
நினைவில் கொண்டுள்ளார்;
தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத் 
துணையாக இருந்து வருகிறார் ".

மு.மொழி.: ஆண்டவரே, நீர் எனக்கு அரும்பெரும் செயல்புரியும். ஏனெனில் நீர் வல்லமை உள்ளவர். உமது பெயர் தூய்மை பெற்றதே.
_____________________________

மன்றாட்டுக்கள்

இறையாட்சியை நோக்கி நம் உள்ளத்தைத் திருப்பவும் நீதியை நோக்கி வழி நடக்கவும் இயேசு நமக்கு கற்றுக் கொடுத்தார். அவரை நோக்கி மன்றாடுவோம்.
℟ - ஆண்டவரே உமது ஆட்சி வருக.

கடவுள் தேவை என்பதை உணர்ந்தோர் பேறு பெற்றோர் உள்ளத் தூய்மையால் நாங்கள் உம்மை நாடச் செய்தருளும்.

℟ - ஆண்டவரே உமது ஆட்சி வருக.

கனிவுடையோரும், இரக்கமுடையோரும், மன்னிப்பவரும் பேறு பெற்றவர்கள் – வாழ்வின் இறுதியில் அவர்கள் உமது மன்னிப்பை ஏராளமாகப் பெறுவார்கள். 

℟ - ஆண்டவரே உமது ஆட்சி வருக.

(தனிப்பட்ட தேவைகளுக்காக மன்றாடல்)
_____________________________

ஆண்டவரின் செபம்
_____________________________

இறுதி செபம்

ஆண்டவரே, உமது திருமுன் நாங்கள் செபிக்கும்போது, நாங்கள் நாவினால் அறிக்கையிடுவதை எமது உள்ளத்திலிருத்தி எப்பொழுதும் சிந்தித்துக் கொண்டிருக்க அருள்தாரும். உம்மோடு.....
_____________________________

ஆசி வழங்குதல்

குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக 
எல்: உம் ஆன்மாவோடும் இருப்பாராக 

குரு: எல்லாம் வல்ல இறைவன் தந்தை மகன் தூய ஆவியார் உங்களை ஆசீர்வதிப்பாராக. 
எல்: ஆமென் 

குரு: கிறிஸ்துவின் அமைதியில் சென்று வாருங்கள் 
எல்: இறைவா உமக்கு நன்றி 

(அல்லது)

முதல்: ஆண்டவர் நம்மை ஆசீர்வதித்து தீமைகள் அனைத்தினின்றும் பாதுகாத்து முடிவில்லா வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக 
எல்: ஆமென் 

முதல்: ஆண்டவரை வாழ்த்துவோமாக 
எல்: இறைவா உமக்கு நன்றி.