4 - வியாழன் காலைப் புகழ்

பாடல்  (பக்கம் 154)

(எழுந்து நிற்கவும்)

எழுந்தது ஆதவன் விடிந்தது காலை
விழுந்தடி பணிவோம் இறைவ னையாம்
பழுதுப் பாவப் படுகுழி இன்று
விழுந்திடா தெம்மைக் காத்திடவும்,

பிணக்கும் பகையும் விளையா வண்ணம்
துணிவுடன் நாவை அடக்கிடவும்
மனக்கண் முன்னே தீய காட்சியை
எழுப்பும் கண்களை அடக்கிடவும்.

உடலை ஒறுத்து உணவைக் குறைத்து
திடமாய்ச் செருக்கை அகற்றிடவும்
மடமை யின்றி மனத்தைக் காத்து
படுபவம் அகற்றி வாழ்ந்திடவும்.

பகலும் மறைந்து இரவும் வருங்கால்
அகமும் உடலும் அவருக்கே
உகந்த நிலையில் இருக்கவும் இறைஞ்சிப்
புகழ்ந்து அவரைப் போற்றிடுவோம்.

விண்ணகத் தந்தையும் அவர்திரு மகனும்
எண்ணறு அருள்தரும் ஆவியுடன்
பண்ணிலும் பாவிலும் எக்கா லத்திலும் 
மண்டலம் எங்கணும் மாண்புறுக. ஆமென்.
_____________________________

(அமரவும்)

மு.மொழி.1: ஆண்டவரே, காலையில் உமது அன்பினை நான் அறியச் செய்யும்.

உதவிக்காக மன்றாடல் - திபா 143:1-11

ஆண்டவரே என் மன்றாட்டைக் கேட்டருளும்
நீர் நம்பிக்கைக்கு உரியவராய் இருப்பதால்
உமது இரக்கத்திற்காக நான் எழுப்பும்
மன்றாட்டுக்குச் செவி சாய்த்தருளும்
உமது நீதியின்படி எனக்குப் பதில் தாரும்
தண்டனைத் தீர்ப்புக்கு உம் அடியானை இழுக்காதேயும்
ஏனெனில் உயிர்வாழ்வோர் எவரும்
உமது திருமுன் நீதிமான் இல்லை.

எதிரி என்னைத் துரத்தினான்
என்னைத் தரையிலிட்டு நசுக்கினான்
என்றோ இறந்தொழிந்தவர்களைப் போல்
என்னை இருட்டில் கிடக்கச் செய்தான்
எனவே என்னுள்ளே என் மனம் ஒடுங்கிப் போயிற்று
என் உள்ளம் எனக்குள் சோர்ந்து போயிற்று.

பண்டைய நாள்களை நான் நினைத்துக் கொள்கின்றேன்
உம் செயல்கள் அனைத்தையும் குறித்து சிந்தனை செய்கின்றேன்
உம் கைவினைகளைப் பற்றி ஆழ்ந்து சிந்திக்கின்றேன்
உம்மை நோக்கி என் கைகளை உயர்த்துகின்றேன்
வறண்ட நிலம் நீருக்காகத் தவிப்பது போல்
என் உயிர் உமக்காகத் தவிக்கின்றது.

ஆண்டவரே விரைவாக எனக்குச் செவிசாய்த்தருளும்
ஏனெனில் என் உள்ளம் உடைந்து விட்டது
என்னிடமிருந்து உம் முகத்தை மறைத்துக் கொள்ளாதேயும்
இல்லையெனில் படுகுழி செல்வோருள் ஒருவராகி விடுவேன்
உமது பேரன்பை நான் வைகறையில் கண்டடையச் செய்யும்
ஏனெனில் உம்மீது நம்பிக்கை வைத்துள்ளேன்
நான் நடக்க வேண்டிய அந்த வழியை எனக்குக் காட்டியருளும்
ஏனெனில் உம்மை நோக்கி என் உள்ளத்தை உயர்த்துகின்றேன்.

ஆண்டவரே என் எதிரிகளிடமிருந்து என்னை விடுவித்தருளும்
நான் உம்மிடம் தஞ்சம் புகுந்துள்ளேன்
உம் திருவுளத்தை நிறைவேற்ற எனக்குக் கற்பித்தருளும்
ஏனெனில் நீரே என் கடவுள்
உமது நலமிகு ஆவி
என்னைச் செம்மையான வழியில் நடத்துவதாக!

ஆண்டவரே உமது பெயரின் பொருட்டு
என் உயிரைக் காத்தருளும்
உமது நீதியின் பொருட்டு
என்னை நெருக்கடியினின்று விடுவித்தருளும்.

மு.மொழி.: ஆண்டவரே, காலையில் உமது அன்பினை நான் அறியச் செய்யும்.
_____________________________

மு.மொழி. 2: ஒ எருசலேமே! ஆறுபோல் நிறைவாழ்வை ஆண்டவர் உன்மேல் பாய்ந்தோடச் செய்வார்.

தூய நகரில் மகிழ்ச்சியும் ஆறுதலும் - எசா 66:10-14

எருசலேமில் அன்பு கொண்ட அனைவரும்
அவளுடன் அகமகிழ்ந்து அவள் பொருட்டு அக்களியுங்கள்
அவளுக்காகப் புலம்பி அழும் எல்லாரும்
அவளுடன் சேர்ந்து மகிழ்ந்து கொண்டாடி ஆர்ப்பரியுங்கள்
அப்போது அவளின் ஆறுதல் அளிக்கும் முலைகளில் குடித்து
நீங்கள் நிறைவடைவீர்கள்
அவள் செல்வப் பெருக்கில் நிறைவாக அருந்தி இன்பம் காண்பீர்கள்.

ஆண்டவர் கூறுவது இதுவே
ஆறுபோல் நிறைவாழ்வு பாய்ந்தோடச் செய்வேன்
பெருக்கெடுத்த நீரோடைபோல்
வேற்றினத்தாரின் செல்வம் விரைந்து வரச் செய்வேன்
நீங்கள் பால் பருகுவீர்கள் மார்பில் அணைத்து சுமக்கப்படுவீர்கள்
மடியில் வைத்துத் தாலாட்டப்படுவீர்கள்.

தாய் தன் பிள்ளையைத் தேற்றுவதுபோல்
நான் உங்களைத் தேற்றுவேன்
எருசலேமில் நீங்கள் தேற்றப்படுவீர்கள்
இதை நீங்கள் காண்பீர்கள்
உங்கள் இதயம் மகிழ்ச்சி கொள்ளும்
உங்கள் எலும்புகள் பசும்புல்போல் வளரும்.


மு.மொழி.: ஒ எருசலேமே! ஆறுபோல் நிறைவாழ்வை ஆண்டவர் உன்மேல் பாய்ந்தோடச் செய்வார்.
______________________________

மு.மொழி. 3: நம் கடவுளுக்கு மகிழ்ச்சியுடன் புகழ்பாடுவது ஏற்புடையதே.

எல்லாம் வல்ல இறைவன் போற்றி - திபா 147:1-11

நம்முடைய கடவுளைப் புகழ்ந்து பாடுவது நல்லது
அவரைப் புகழ்வது இனிமையானது; அதுவே ஏற்புடையது
ஆண்டவர் எருசலேமை மீண்டும் கட்டி எழுப்புகின்றார்
நாடு கடத்தப்பட்ட இஸ்ரயேலைக் கூட்டிச் சேர்க்கின்றார்
உடைந்த உள்ளத்தோரைக் குணப்படுத்துகின்றார்
அவர்களின் காயங்களைக் கட்டுகின்றார்.

விண்மீன்களின் இலக்கத்தை எண்ணி
அவை ஒவ்வொன்றையும் பெயர் சொல்லி அழைக்கின்றார்
நம் தலைவர் மாண்பு மிக்கவர்; மிகுந்த வல்லமையுள்ளவர்
அவர் தம் நுண்ணறிவு அளவிடற்கு அரியது
ஆண்டவர் எளியோர்க்கு ஆதரவளிக்கின்றார்
பொல்லாரையோ தரைமட்டும் தாழ்த்துகின்றார்.

ஆண்டவருக்கு நன்றி செலுத்திப் பாடுங்கள்
நம் கடவுளை யாழ்கொண்டு புகழ்ந்து பாடுங்கள்
அவர் வானத்தை மேகங்களால் மறைக்கின்றார்
பூவுலகின்மீது மழையைப் பொழிகின்றார்
மலைகளில் புல்லை முளைக்கச் செய்கின்றார்.

கால்நடைகளுக்கும் கரையும் காக்கைக் குஞ்சுகளுக்கும்
அவர் இரை கொடுக்கின்றார்
குதிரையின் வலிமையில் அவர் மகிழ்ச்சி காண்பதில்லை.
வீரனின் கால் வலிமையையும் அவர் விரும்புவதில்லை
தமக்கு அஞ்சி நடந்து தம் பேரன்புக்காக நம்பிக்கையுடன்
காத்திருப்போரிடம் அவர் மகிழ்ச்சி கொள்கின்றார்.

மு.மொழி.: நம் கடவுளுக்கு மகிழ்ச்சியுடன் புகழ்பாடுவது ஏற்புடையதே.
______________________________

(எழுந்து நின்று வாசிக்கவும்)

அருள்வாக்கு             உரோ 8:18-21
 இக்காலத்தில் நாம் படும் துன்பங்கள் எதிர்காலத்தில் நமக்காக வெளிப்படப் போகிற மாட்சியோடு ஒப்பிடத் தகுதியற்றவை என நான் எண்ணுகிறேன். இம்மாட்சியுடன் கடவுளின் மக்கள் வெளிப்படுவதைக் காண்பதற்காகப் படைப்பே பேராவலோடு காத்திருக்கிறது. ஏனெனில் படைப்பு பயனற்ற நிலைக்கு உட்பட்டுள்ளது. தானே விரும்பியதால் அப்படி ஆகவில்லை; அதை உட்படுத்தினவரின் விருப்பத்தால் அவ்வாறு ஆயிற்று; எனினும், அது எதிர்நோக்கை இழந்த நிலையில் இல்லை. அது அழிவுக்கு அடிமைப்பட்டிருக்கும் நிலையிலிருந்து விடுவிக்கப்பட்டு, கடவுளின் பிள்ளைகளுக்குரிய பெருமையும் விடுதலையும் தானும் பெற்றுக்கொள்ளும் என்கிற எதிர்நோக்கோடு இருக்கிறது.

_____________________________

சிறு மறுமொழி

℣ - ஆண்டவரே, வைகறையில் நான் உம்மை நினைத்துக்
கொண்டிருப்பேன்.
℟ - ஆண்டவரே, வைகறையில் நான் உம்மை நினைத்துக்
கொண்டிருப்பேன்.

℣ - நீரே எனக்குத் துணை.
℟ - நான் உம்மை நினைத்துக்
கொண்டிருப்பேன்.

℣ - தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக
℟ - ஆண்டவரே, வைகறையில் நான் உம்மை நினைத்துக்
கொண்டிருப்பேன்.
_____________________________

(அனைவரும் எழுந்து நிற்கவும்)

செக்கரியாவின் பாடல்

மு.மொழி.: ஆண்டவரே பாவ மன்னிப்பால் வரும் மீட்பை உம் மக்களுக்கு அறிவியும்.

இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றுவோம். 
ஏனெனில் அவர் தம் மக்களைத் தேடிவந்து விடுவித்தருளினார்.

தம் தூய இறைவாக்கினர் வாயினால் 
தொடக்க முதல் அவர் மொழிந்தபடியே
அவர் தம் ஊழியராகிய தாவீதின் குடும்பத்தில் 
வல்லமை உடைய மீட்பர் ஒருவர் நமக்காகத் தோன்றச் செய்தார்;

நம் பகைவரிடமிருந்தும் 
நம்மை வெறுப்போர் அனைவரின் பிடியிலிருந்தும் 
நம்மை மீட்பார்.

அவர் நம் மூதாதையருக்கு இரக்கம் காட்டி, 
தமது தூய உடன்படிக்கையையும்,
நம் தந்தையாகிய ஆபிரகாமுக்கு அவர் இட்ட ஆணையையும் 
நிறைவேற்ற நினைவு கூர்ந்தார்.

இவ்வாறு நாம் பகைவரின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டுத் 
தூய்மையோடும் நேர்மையோடும்
வாழ்நாளெல்லாம் அச்சமின்றி 
அவர் திருமுன் பணிசெய்யுமாறு வழிவகுத்தார்.

குழந்தாய், 
நீ உன்னத கடவுளின் இறைவாக்கினர் எனப்படுவாய்;
ஏனெனில் பாவ மன்னிப்பால் வரும் மீட்பை 
அவர்தம் மக்களுக்கு அறிவித்து 
ஆண்டவருக்கான வழியைச் செம்மைப்படுத்த 
அவர் முன்னே செல்வாய்.

இருளிலும் இறப்பின் பிடியிலும் இருப்போர்க்கு ஒளிதரவும்,
நம்முடைய கால்களை அமைதி வழியில் நடக்கச் செய்யவும் 
நம் கடவுளின் பரிவுள்ளத்தாலும் இரக்கத்தாலும் 
விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடிவருகிறது.

மு.மொழி.: ஆண்டவரே பாவ மன்னிப்பால் வரும் மீட்பை உம் மக்களுக்கு அறிவியும்.
_____________________________

மன்றாட்டுக்கள்

தம் அன்பு மகனின் திருமுகத்தில் தம்மை எல்லாரும் காணவேண்டும் என்பதே தந்தையின் திருவுளம். அவரை மதித்து நாம் புகழ் உரைப்போம்.

℟ - உமது திருப்பெயர் போற்றப்படுவதாக.

கிறிஸ்து நற்செய்தியை அறிவித்து நம்மை வாழ்த்தினார் இந்த உலகம் நம் வழியாக அதைக் கேட்டு நம்பிக்கை கொள்வதாக.

℟ - உமது திருப்பெயர் போற்றப்படுவதாக.

கிறிஸ்துவினுடைய வருகை திருச்சபையை உருமாற்றுவதாக மக்களின் பணியில் அதன் இளமையைப் புதுப்பித்து ஆற்றலைப் பெருக்குவதாக.

℟ - உமது திருப்பெயர் போற்றப்படுவதாக.

(தனிப்பட்ட தேவைகளுக்காக மன்றாடல்)
_____________________________

ஆண்டவரின் செபம்
_____________________________

இறுதி செபம்

ஆண்டவரே, உமது மீட்பைப் பற்றிய உண்மை அறிவை எமக்கு அளித்தருளும். அதனால் நாங்கள் எம் பகைவரின் கையினின்று விடுதலை பெற்று, அச்சமின்றி எங்கள் வாழ்நாளெல்லாம் பிரமாணிக்கத்துடன் உமக்கு ஊழியம் செய்வோமாக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சிபுரியும் எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
_____________________________

ஆசி வழங்குதல்

குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக 
எல்: உம் ஆன்மாவோடும் இருப்பாராக 

குரு: எல்லாம் வல்ல இறைவன் தந்தை மகன் தூய ஆவியார் உங்களை ஆசீர்வதிப்பாராக. 
எல்: ஆமென் 

குரு: கிறிஸ்துவின் அமைதியில் சென்று வாருங்கள் 
எல்: இறைவா உமக்கு நன்றி 

(அல்லது)

முதல்: ஆண்டவர் நம்மை ஆசீர்வதித்து தீமைகள் அனைத்தினின்றும் பாதுகாத்து முடிவில்லா வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக 
எல்: ஆமென் 

முதல்: ஆண்டவரை வாழ்த்துவோமாக 
எல்: இறைவா உமக்கு நன்றி.