4 - திங்கள் மாலைப் புகழ்


பாடல் (பக்கம் 122)

(எழுந்து நிற்கவும்)

__________________________

(அமரவும்)

மு.மொழி.1: ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; ஏனெனில்
என்றும் உள்ளது அவரது பேரன்பு.

என்றுமுள்ள பேரன்பு
திபா 136

                               
ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்
ஏனெனில் அவர் நல்லவர்
என்றும் உள்ளது அவரது பேரன்பு
தெய்வங்களின் இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்
என்றும் உள்ளது அவரது பேரன்பு
தலைவர்களின் தலைவருக்கு நன்றி செலுத்துங்கள்
என்றும் உள்ளது அவரது பேரன்பு
தாம் ஒருவராய் மாபெரும் அருஞ்செயல்களைப்
புரிபவர்க்கு நன்றி செலுத்துங்கள்
என்றும் உள்ளது அவரது பேரன்பு.
வான்வெளியை மதிநுட்பத்தால் உருவாக்கியவர்க்கு
நன்றி செலுத்துங்கள்
என்றும் உள்ளது அவரது பேரன்பு
கடல்மீது மண்ணகத்தை விரித்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்
என்றும் உள்ளது அவரது பேரன்பு.

பெருஞ்சுடர்களை உருவாக்கியவர்க்கு நன்றி செலுத்துங்கள்
என்றும் உள்ளது அவரது பேரன்பு
பகலை ஆள்வதற்கெனக் கதிரவனை
உருவாக்கியவர்க்கு நன்றி செலுத்துங்கள்
என்றும் உள்ளது அவரது பேரன்பு
இரவை ஆள்வதற்கென நிலாவையும் விண்மீன்களையும்
உருவாக்கியவர்க்கு நன்றி செலுத்துங்கள்
என்றும் உள்ளது அவரது பேரன்பு.

மு.மொழி.: ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; ஏனெனில்
என்றும் உள்ளது அவரது பேரன்பு.
__________________________

மு.மொழி. 2: கடவுளாகிய ஆண்டவரே, எல்லாம் வல்லவரே, உம் செயல்கள் பெரியன; வியப்புக்குரியன

                                 II

எகிப்தின் தலைப்பேறுகளைக் கொன்றழித்தவர்க்கு
நன்றி செலுத்துங்கள்
என்றும் உள்ளது அவரது பேரன்பு
அவர்கள் நடுவிலிருந்து இஸ்ரயேலை
வெளிக் கொணர்ந்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்
என்றும் உள்ளது அவரது பேரன்பு
தோளின் வலிமையாலும் ஓங்கிய புயத்தாலும்
அதைச் செய்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்
என்றும் உள்ளது அவரது பேரன்பு.

செங்கடலை இரண்டாகப் பிரித்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்
என்றும் உள்ளது அவரது பேரன்பு
அதன் நடுவே இஸ்ரயேலை நடத்திச் சென்றவர்க்கு
நன்றி செலுத்துங்கள்
என்றும் உள்ளது அவரது பேரன்பு
பார்வோனையும் அவன் படைகளையும்
செங்கடலில் மூழ்கடித்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்
என்றும் உள்ளது அவரது பேரன்பு.

பாலைநிலத்தில் தம் மக்களை வழிநடத்தியவர்க்கு
நன்றி செலுத்துங்கள்
என்றும் உள்ளது அவரது பேரன்பு
மாபெரும் மன்னர்களை வெட்டி வீழ்த்தியவர்க்கு
நன்றி செலுத்துங்கள்
என்றும் உள்ளது அவரது பேரன்பு
வலிமைமிகு மன்னர்களைக் கொன்று குவித்தவர்க்கு
நன்றி செலுத்துங்கள்
என்றும் உள்ளது அவரது பேரன்பு.

எமோரியரின் மன்னன் சிகோனை கொன்றழித்தவர்க்கு
நன்றி செலுத்துங்கள்
என்றும் உள்ளது அவரது பேரன்பு
பாசானின் மன்னன் ஓகை கொன்று அழித்தவர்க்கு
நன்றி செலுத்துங்கள்
என்றும் உள்ளது அவரது பேரன்பு.

அவர்களது நாட்டைத் தம் மக்களுக்கு
உரிமைச் சொத்தாக எந்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்
என்றும் உள்ளது அவரது பேரன்பு
அதைத் தம் அடியார்களாகிய இஸ்ரயேலர்க்கு
உரிமைச் சொத்தாக ஈந்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்
என்றும் உள்ளது அவரது பேரன்பு
தாழ்வுற்றிருந்து நம்மை நினைவுகூர்ந்தவர்க்கு
நன்றி செலுத்துங்கள்
என்றும் உள்ளது அவரது பேரன்பு.

நம் எதிரிகளினின்று நம்மை விடுவித்தவர்க்கு
நன்றி செலுத்துங்கள்
என்றும் உள்ளது அவரது பேரன்பு
உடல்கொண்ட அனைத்திற்கும் உணவூட்டுபவர்க்கு
நன்றி செலுத்துங்கள்
என்றும் உள்ளது அவரது பேரன்பு
விண்ணுலகின் இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்
என்றும் உள்ளது அவரது பேரன்பு.

மு.மொழி.: கடவுளாகிய ஆண்டவரே, எல்லாம் வல்லவரே, உம்  செயல்கள் பெரியன; வியப்புக்குரியன 
___________________________

மு.மொழி. 3: காலம் நிறைவேறும் போது அனைத்தையுமே கிறிஸ்துவின் தலைமையில் ஒன்று சேர்க்கவேண்டும் என்பதே கடவுளின் திட்டம்

எபே 1: 3-10 (பக்கம் 37)

மு.மொழி.:காலம் நிறைவேறும் போது அனைத்தையுமே கிறிஸ்துவின் தலைமையில் ஒன்று சேர்க்கவேண்டும் என்பதே கடவுளின் திட்டம்
___________________________
(எழுந்து நின்று வாசிக்கவும்)

அருள்வாக்கு              1 தெச 3:12-13

உங்கள் மீது நாங்கள் கொண்ட அன்பு வளர்ந்து பெருகுவது போல, நீங்கள் ஒருவர் ஒருவருக்காகவும், எல்லாருக்காகவும் கொண்டுள்ள அன்பையும் ஆண்டவர் வளர்த்துப் பெருகச் செய்வாராக! இவ்வாறு நம் ஆண்டவர் இயேசு தம்முடைய தூயோர் அனைவரோடும் வரும்பொழுது நம் தந்தையாம் கடவுள்முன் நீங்கள் குற்றமின்றித் தூய்மையாக இருக்குமாறு அவர் உங்கள் உள்ளங்களை உறுதிப்படுத்துவாராக!
__________________________

சிறு மறுமொழி

℣ - ஆண்டவரே என் மன்றாட்டு உம்மிடம் வருவதாக
℟ - ஆண்டவரே என் மன்றாட்டு உம்மிடம் வருவதாக

℣ - அது தூபம்போல் உம் திருமுன் எழும்புவதாக.
℟ - ஆண்டவரே என் மன்றாட்டு உம்மிடம் வருவதாக

℣ - தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக
℟ - ஆண்டவரே என் மன்றாட்டு உம்மிடம் வருவதாக
__________________________

(அனைவரும் எழுந்து நிற்கவும்)

மரியாவின் பாடல்

மு.மொழி.:  என் கடவுளே, என் உள்ளம் உமது மாண்பினை என்றென்றும் புகழ்ந்தேத்துவதாக, 

ஆண்டவரை எனது உள்ளம் 
போற்றிப் பெருமைப் படுத்துகின்றது. 
என் மீட்பராம் கடவுளை நினைத்து 
எனது மனம் பேருவகை கொள்கின்றது.
ஏனெனில் அவர் தம் அடிமையின் 
தாழ்நிலையைக் கண்ணோக்கினார்.

இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் 
என்னைப் பேறுபெற்றவர் என்பர்.
ஏனெனில் வல்லவராம் கடவுள் 
எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். 
தூயவர் என்பதே அவரது பெயர்.

அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் 
தலைமுறை தலைமுறையாய் 
அவர் இரக்கம் காட்டி வருகிறார்.
அவர் தம் தோள் வலிமையைக் காட்டியுள்ளார்; 
உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் 
சிதறடித்து வருகிறார்.
வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்; 
தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்.
பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்; 
செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார்.

மூதாதையருக்கு உரைத்தபடியே அவர் 
ஆபிரகாமையும் அவர்தம் வழி மரபினரையும் 
என்றென்றும் இரக்கத்தோடு 
நினைவில் கொண்டுள்ளார்;
தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத் 
துணையாக இருந்து வருகிறார் ".

மு.மொழி.: என் கடவுளே, என் உள்ளம் உமது மாண்பினை
என்றென்றும் புகழ்ந்தேத்துவதாக,

__________________________

மன்றாட்டுக்கள்

தம்மீது நம்பிக்கை வைப்பவர்களை ஒருபோதும் கைவிடாத கடவுளிடம் இறைஞ்சி மன்றாடுவோம்

℟ - ஆண்டவரே, இரக்கத்துடன் எங்கள் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்

  ஒருவரை ஒருவர் நாங்கள் இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ளக் கற்றுத்தாரும் எங்களிடமிருக்கும் பிறரைப் பற்றிய தப்பெண்ணத்தை உமது பிரசன்னத்தால் அகற்றியருளும்.

℟ - ஆண்டவரே, இரக்கத்துடன் எங்கள் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்

உம் திருச்சபையின் குருக்களோடும் பணியாளர்களோடும் இருந்தருளும் – பிறருக்குத் தாங்கள் போதிப்பதைத் தங்கள் வாழ்க்கையில் கடைப்பிடிக்கச் செய்தருளும்.

℟ - ஆண்டவரே, இரக்கத்துடன் எங்கள் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்
(தனிப்பட்ட தேவைகளுக்காக மன்றாடல்)
__________________________

ஆண்டவரின் செபம்
__________________________

இறுதி செபம்

ஆண்டவராகிய இயேசுவே, மாலை நேரமாகிறது; எம்மோடு தங்கும். எங்களுக்கு வழித் துணையாயிரும். உமது பரிவன்பினால் எம்முள்ளங்களில் அன்பை மூட்டி நம்பிக்கையை உயர்வடையச் செய்தருளும். இதனால் நாங்கள் எங்கள் சகோதர சகோதரிகளோடு இறைவாக்குகளிலும், அப்பத்தைப் பிடுவதிலும் உம்மைக் கண்டு கொள்வோமாக. உம்மோடு....
__________________________

ஆசி வழங்குதல்

குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக 
எல்: உம் ஆன்மாவோடும் இருப்பாராக 

குரு: எல்லாம் வல்ல இறைவன் தந்தை மகன் தூய ஆவியார் உங்களை ஆசீர்வதிப்பாராக. 
எல்: ஆமென் 

குரு: கிறிஸ்துவின் அமைதியில் சென்று வாருங்கள் 
எல்: இறைவா உமக்கு நன்றி 

(அல்லது)

முதல்: ஆண்டவர் நம்மை ஆசீர்வதித்து தீமைகள் அனைத்தினின்றும் பாதுகாத்து முடிவில்லா வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக 
எல்: ஆமென் 

முதல்: ஆண்டவரை வாழ்த்துவோமாக 
எல்: இறைவா உமக்கு நன்றி.