4 - செவ்வாய் காலைப் புகழ்
4 - செவ்வாய் காலை செபம்
பாடல்
(எழுந்து நிற்கவும்)
ஒளியைப் படைத்த இறைவா
ஒளியின் முழுமையும் பகலும் நீரே
இரவின் இருளை என்றுமே அறியாப்
பொருளே ஒளியின் உட்பொருள் நீரே
வானம் வெளுத்தது நாளும் விடிந்தது
கானம் பாடி மகிழ்ந்து எழுந்தோம்
பகலவன் ஒளியால் பகல்வந் ததுபோல்
தூயவர் நீரெம் வேண்டுதல் கேட்பீர்
அகஇருள் அகல்க ஒளிபிறந் திடுக.
தியவை தீய உலகப் பற்று
மாய்கை மயக்கம் அனைத்தும் அகற்றி
தூயவ ராகஉம் திருமுன் நிற்போம்.
எரியும் கோபமும் புகையும் பகையும்
எரிந்து உணவுப் பிரியம் தணிந்து
சிற்றின் பத்தின் பற்றுதல் அணைந்து
முற்றிலும் உமக்குப் பணிபுரி வோமே.
திடமுள மனமும் கற்புள உடலும்
வடுவிலா வாழ்வும் வாழ்த்துப் பாடலும்
நிறைந்த நாளாய் இந்நாள் மலர்ந்திடக்
கிறிஸ்துவே உம்மருள் நிறைவாய்த் தருக.
இச்செபம் இரங்கி ஏற்பீர் தந்தாய்
உச்ச நிலையமர் உம்திரு மகனும்
அச்சம் அகற்றும் தூய ஆவியும்
இச்செகம் உம்முடன் ஆளுக என்றும் ஆமென்.
___________________________
(அமரவும்)
மு.மொழி.1: ஆண்டவரே, உமக்கே புகழ் சாற்றிடுவேன்; மாசற்ற வழியில் நடப்பதில் நான் கருத்தாயிருக்கிறேன்.
அரசரின் வாக்குறுதி - திபா 101
இரக்கத்தையும் நீதியையும் குறித்துப் பாடுவேன்
ஆண்டவரே உமக்கே புகழ் சாற்றிடுவேன்
மாசற்ற வழியே நடப்பதில் நான் கருத்தாயிருக்கிறேன்
எப்பொழுது நீர் என்னிடம் வருவீர்
தூய உள்ளத்தோடு என் இல்லத்தில் வாழ்வேன்
இழிவான எதையும் என் கண்முன் வைக்கமாட்டேன்
நெறி தவறியவரின் செயலை நான் வெறுக்கின்றேன்
அது என்னைப் பற்றிக் கொள்ளாது.
வஞ்சக நெஞ்சம் எனக்கு வெகு தொலையில் இருக்கும்
தீதான எதையும் நான் அறியேன்
தமக்கு அடுத்திருப்போரை
மறைவாகப் பழிப்போரை நான் ஒழிப்பேன்
கண்களில் இறுமாப்பும் உள்ளத்தில் செருக்கும் உள்ளோரின்
செயலை நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன்.
நாட்டில் நம்பிக்கைக்குரியோரைக் கண்டுபிடித்து
என்னோடு வாழச் செய்வேன்
நேரிய வழியில் நடப்போரை
எனக்குப் பணிவிடை புரியச் செய்வேன்
வஞ்சனை செய்வோருக்கு என் மாளிகையில் இடமில்லை
பொய் உரைப்போர் என் கண்முன் நிலைப்பதில்லை
நாட்டிலுள்ள பொல்லார் அனைவரையும் நாள்தோறும் அழிப்பேன்
ஆண்டவரின் நகரினின்று தீங்கிழைப்போரை ஒழிப்பேன்.
மு.மொழி.: ஆண்டவரே, உமக்கே புகழ் சாற்றிடுவேன்; மாசற்ற
வழியில் நடப்பதில் நான் கருத்தாயிருக்கிறேன்.
__________________________
மு.மொழி. 2: ஆண்டவரே, உம் இரக்கம் எங்களை விட்டு நீங்கச் செய்யாதீர்.
அசாரியாவின் மன்றாட்டு - தானி(இ) 1:3-4, 6, 12-18
எங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவரே
நீர் வாழ்த்தப் பெறுவீராக, புகழப்படுவீராக
உம் பெயர் என்றென்றும் மாண்புமிக்கது
எங்களுக்குச் செய்துள்ள அனைத்திலும் நீர் நீதியுள்ளவர்
உம் செயல்கள் யாவும் நேர்மையானவை
உம் வழிகள் செவ்வையானவை
உம் தீர்ப்புகள் அனைத்தும் உண்மையானவை.
உம்மை விட்டு விலகிச் சென்றதால்
நாங்கள் பாவம் செய்தோம்
நெறி தவறினோம்
எல்லாவற்றிலும் பாவம் செய்தோம்
உம் கட்டளைகளுக்குப் பணிந்தோமில்லை
உமது பெயரை முன்னிட்டு
எங்களை என்றும் கைவிட்டு விடாதீர்
உமது உடன்படிக்கையை முறித்து விடாதீர்.
உம் அன்பர் ஆபிரகாமை முன்னிட்டும்
உம் ஊழியர் ஈசாக்கை முன்னிட்டும்
உம் தூயவர் இஸ்ரயேலை முன்னிட்டும்
உம் இரக்கம் எங்களை விட்டு நீங்கச் செய்யாதீர்
விண்மீன்களைப் போலவும் கடற்கரை மணலைப் போலவும்
அவர்களின் வழி மரபினரைப் பெருகச் செய்வதாக
நீர் அவர்களுக்கு உறுதி அளித்தீர்.
ஆண்டவரே எங்கள் பாவங்களால்
மற்ற மக்களினங்களை விட
நாங்கள் எண்ணிக்கையில் குறைந்து விட்டோம்
உலகெங்கும் இன்று தாழ்வடைந்தோம்
இப்பொழுது எங்களுக்கு மன்னர் இல்லை
இறைவாக்கினர் இல்லை, தலைவர் இல்லை
எரிபலி இல்லை, எந்தப் பலியும் இல்லை
காணிக்கைப் பொருளோ தூபமோ இல்லை
உம் திருமுன் பலியிட்டு
உம் இரக்கத்தைப் பெற இடமே இல்லை.
ஆயினும் செம்மறிக் கடாக்கள்
காளைகளால் அமைந்த எரிபலி போலும்
பல்லாயிரம் கொழுத்த ஆட்டுக்குட்டிகளாலான பலிபோலும்
நொறுங்கிய உள்ளமும் தாழ்வுற்ற மனமும் கொண்ட நாங்கள்
ஏற்றுக் கொள்ளப்படுவோமாக
அவ்வாறே எமது பலி இன்று உம் திருமுன் அமைவதாக
நாங்கள் முழுமையாக உம்மைப் பின்பற்றுவோமாக
ஏனெனில் உம்மில் நம்பிக்கை வைப்போர்
வெட்கத்திற்கு ஆட்படமாட்டார்.
இப்பொழுது நாங்கள் முழு உள்ளத்துடன்
உம்மைப் பின்பற்றுகின்றோம்
உமக்கு அஞ்சி உம் முகத்தை நாடுகிறோம்
எம்மை வெட்கத்துக்கு உள்ளாக்காதீர்.
மு.மொழி.: ஆண்டவரே, உம் இரக்கம் எங்களை விட்டு நீங்கச் செய்யாதீர்.
___________________________
மு.மொழி. 3: ஆண்டவரே, நான் உமக்குப் புதியதொரு பாடல்
பாடுவேன்.
வெற்றிக்கு நன்றி - திபா 144: 1-10
என் பாறையாகிய ஆண்டவர் போற்றி! போற்றி!
போரிட என் கைகளுக்குப் பயிற்சி அளிப்பவர் அவரே
போர்புரிய என் விரல்களைப் பழக்குபவரும் அவரே
என் கற்பாறையும் கோட்டையும் அவரே
எனக்குப் பாதுகாப்பாளரும் மீட்பரும் அவரே
என் கேடயமும் புகலிடமும் அவரே
மக்களினத்தாரை எனக்குக் கீழ்ப்படுத்துபவர் அவரே!
ஆண்டவரே! மனிதரை நீர் கவனிக்க அவர்கள் யார்
மானிடரை நீர் கருத்தில் கொள்ள அவர்கள் யார்
மனிதர் சிறு மூச்சுக்கு ஒப்பானவர்
அவர்களின் வாழ்நாள்கள் மறையும் நிழலுக்கு நிகரானவை
ஆண்டவரே உம் வான்வெளியை வளைத்து இறங்கி வாரும்
மலைகளைத் தொடும்; அவை புகை கக்கும்
மின்னலை மின்னச் செய்து அவர்களைச் சிதறடியும்
உம் அம்புகளை எய்து அவர்களைக் கலங்கடியும்.
வானினின்று உமது கையை நீட்டி எனக்கு விடுதலை வழங்கும்
பெருவெள்ளம் போல் எழும் வேற்றினத்தார் கையினின்று
என்னை விடுவித்தருளும்
அவர்களது வாய் பேசுவது பொய்
அவர்களது வலக்கை வஞ்சமிகு வலக்கை!
இறைவா நான் உமக்குப் புதியதொரு பாடல் பாடுவேன்
பதின் நரம்பு வீணையால் உமக்குப் புகழ்பாடுவேன்
அரசர்களுக்கு வெற்றி அளிப்பவர் நீரே
உம் ஊழியர் தாவீதைக் கொடிய வாளினின்று
தப்புவித்தவரும் நீரே!
மு.மொழி.: ஆண்டவரே, நான் உமக்குப் புதியதொரு பாடல்
பாடுவேன்.
___________________________
(எழுந்து நின்று வாசிக்கவும்)
அருள்வாக்கு எசா 55:1
தாகமாய் இருப்பவர்களே, நீங்கள் அனைவரும் நீர் நிலைகளுக்கு வாருங்கள்; கையில் பணம் இல்லாதவர்களே நீங்களும் வாருங்கள்; தானியத்தை வாங்கி உண்ணுங்கள். வாருங்கள், காசு பணமின்றித் திராட்சை இரசமும் பாலும் வாங்குங்கள்.
__________________________
சிறு மறுமொழி
℣ - ஆண்டவரே, என் கூக்குரலைக் கேட்டருளும்; ஏனெனில் உமது வார்த்தையில் நம்பிக்கை வைக்கிறேன்.
℟ - ஆண்டவரே, என் கூக்குரலைக் கேட்டருளும்; ஏனெனில் உமது வார்த்தையில் நம்பிக்கை வைக்கிறேன்.
℣ - நான் அதிகாலையில் எழுந்து உமது உதவியை நாடுகிறேன்.
℟ - ஆண்டவரே, என் கூக்குரலைக் கேட்டருளும்; ஏனெனில் உமது வார்த்தையில் நம்பிக்கை வைக்கிறேன்.
℣ - தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக
℟ - ஆண்டவரே, என் கூக்குரலைக் கேட்டருளும்; ஏனெனில் உமது வார்த்தையில் நம்பிக்கை வைக்கிறேன்.
__________________________
(அனைவரும் எழுந்து நிற்கவும்)
செக்கரியாவின் பாடல்
மு.மொழி.: ஆண்டவரே, எம் பகைவரின் பிடியிலிருந்து எம்மை
மீட்டருளும்.
இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றுவோம்.
ஏனெனில் அவர் தம் மக்களைத் தேடிவந்து விடுவித்தருளினார்.
தம் தூய இறைவாக்கினர் வாயினால்
தொடக்க முதல் அவர் மொழிந்தபடியே
அவர் தம் ஊழியராகிய தாவீதின் குடும்பத்தில்
வல்லமை உடைய மீட்பர் ஒருவர் நமக்காகத் தோன்றச் செய்தார்;
நம் பகைவரிடமிருந்தும்
நம்மை வெறுப்போர் அனைவரின் பிடியிலிருந்தும்
நம்மை மீட்பார்.
அவர் நம் மூதாதையருக்கு இரக்கம் காட்டி,
தமது தூய உடன்படிக்கையையும்,
நம் தந்தையாகிய ஆபிரகாமுக்கு அவர் இட்ட ஆணையையும்
நிறைவேற்ற நினைவு கூர்ந்தார்.
இவ்வாறு நாம் பகைவரின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டுத்
தூய்மையோடும் நேர்மையோடும்
வாழ்நாளெல்லாம் அச்சமின்றி
அவர் திருமுன் பணிசெய்யுமாறு வழிவகுத்தார்.
குழந்தாய்,
நீ உன்னத கடவுளின் இறைவாக்கினர் எனப்படுவாய்;
ஏனெனில் பாவ மன்னிப்பால் வரும் மீட்பை
அவர்தம் மக்களுக்கு அறிவித்து
ஆண்டவருக்கான வழியைச் செம்மைப்படுத்த
அவர் முன்னே செல்வாய்.
இருளிலும் இறப்பின் பிடியிலும் இருப்போர்க்கு ஒளிதரவும்,
நம்முடைய கால்களை அமைதி வழியில் நடக்கச் செய்யவும்
நம் கடவுளின் பரிவுள்ளத்தாலும் இரக்கத்தாலும்
விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடிவருகிறது.
மு.மொழி.: ஆண்டவரே, எம் பகைவரின் பிடியிலிருந்து எம்மை
மீட்டருளும்.
__________________________
மன்றாட்டுக்கள்
எங்களுடைய வேதனைகள் ஏற்புடைமையையும், ஏற்புடைமை நம்பிக்கையையும் கொண்டு வருகிறது. அந்த நம்பிக்கையோ எங்களை ஏமாற்றாது. ஏனெனில் தூய ஆவி எங்கள் உள்ளங்களில் பொழியப்பட்டுள்ளார். அந்த ஆவியின் வழியாகவே நாங்கள் மன்றாடுகிறோம்.
℟ - ஆண்டவரே, எங்கள் பயணத்தில் எங்களோடு இருந்தருளும்.
தனிமையில் வாடுவோர், அன்பை இழந்தோர், நண்பர்களை இழந்தோர் ஆகியோருக்குத் துணையாக வாரும் – உமது அன்பை அவர்களுக்குக் காட்டி அவர்கள் மற்ற சகோதரர் சகோதரிகளின்மேல் அக்கறை கொள்ளச் செய்தருளும்
℟ - ஆண்டவரே, எங்கள் பயணத்தில் எங்களோடு இருந்தருளும்.
எங்களுடைய ஆணவத்தை அகற்றி கோபத்தைத் நாங்கள் உமது சாந்த குணத்தைப் பின்பற்றி உம்மைப்போல் தாழ்ச்சி உடையவர்களாக வாழச் செய்தருளும்.
℟ - ஆண்டவரே, எங்கள் பயணத்தில் எங்களோடு இருந்தருளும்.
(தனிப்பட்ட தேவைகளுக்காக மன்றாடல்)
__________________________
ஆண்டவரின் செபம்
__________________________
இறுதி செபம்
ஆண்டவரே, நம்பிக்கை என்னும் கொடையை எம்மில் பெருகச் செய்யும். இதனால் நாங்கள் உமக்கு அளிக்கும் புகழ்ச்சி, விண்ணுலக நலன்களை எங்களுக்குப் பெற்றுத் தருவதாக, உம்மோடு....
ஆமென்.
__________________________
ஆசி வழங்குதல்
குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக
எல்: உம் ஆன்மாவோடும் இருப்பாராக
குரு: எல்லாம் வல்ல இறைவன் தந்தை மகன் தூய ஆவியார் உங்களை ஆசீர்வதிப்பாராக.
எல்: ஆமென்
குரு: கிறிஸ்துவின் அமைதியில் சென்று வாருங்கள்
எல்: இறைவா உமக்கு நன்றி
(அல்லது)
முதல்: ஆண்டவர் நம்மை ஆசீர்வதித்து தீமைகள் அனைத்தினின்றும் பாதுகாத்து முடிவில்லா வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக
எல்: ஆமென்
முதல்: ஆண்டவரை வாழ்த்துவோமாக
எல்: இறைவா உமக்கு நன்றி.