4 - திங்கள் காலைப் புகழ்
பாடல்
(எழுந்து நிற்கவும்)
சிறந்த ஒளியை அளிப்பவரே
இறந்தது இரவின் காலமிதோ
பிறந்தது மீண்டும் புதுப்பகலே
பரந்தஉம் பரிவினைப் போற்றுகின்றோம்.
உலகின் உண்மை ஒளிநீரே
சிலகால் ஒளிர்ந்து மறைகின்ற
பலவகை விண்மீன் போலன்று
நிலையாய் ஒளிரும் பேரொளிநீர்.
பகலவன் தனினும் ஒளிமிகுந்தோய்
பகலும் ஒளியும் நீர்தாமே
அகத்துள் எமக்கு ஒளிபொழிந்து
மகிமையின் ஒளிபெற அழைக்கின்றீர்.
அடங்கா உடலின் ஆசைகளைத்
திடமார் கற்பினால் தோற்கடிப்பீர்
தூயஎம் உடலை ஆவியால் உம்
கோயிலாக அமைத் திடுவீர்.
கிறிஸ்துவே உமக்கும் தந்தைக்கும்
ஆறுதல் அளிக்கும் ஆவிக்கும்
பேரர சோச்சும் மூவர்க்கும்
ஈறிலாப் புகழ்எக் காலமுமே. ஆமென்
______________________________
மு.மொழி. 1: காலைதோறும் உமது பேரன்பால் எங்களுக்கு
நிறைவளியும்.
மனிதரின் நிலையாமை - திபா 90
என் தலைவரே தலைமுறை தோறும்
நீரே எங்கள் புகலிடமாய் உள்ளீர்
மலைகள் தோன்றுமுன்பே
நிலத்தையும் உலகையும் நீர் உருவாக்குமுன்பே
ஊழி ஊழிக்காலமாய் உள்ள இறைவன் நீரே!
மனிதரைப் புழுதிக்குத் திரும்பிடச் செய்கின்றீர்
மானிடரே மீண்டும் புழுதியாகுங்கள் என்கின்றீர்
ஏனெனில் ஆயிரம் ஆண்டுகள் உம் பார்வையில்
கடந்துபோன நேற்றைய நாள் போலவும்
இரவின் ஒரு சாமம் போலவும் உள்ளன.
வெள்ளமென மானிடரை வாரிக்கொண்டு செல்கின்றீர்
அவர்கள் வைகறையில் முளைத்தெழும் புல்லுக்கு ஒப்பாவர்
அது காலையில் தளிர்த்துப் பூத்துக் குலுங்கும்
மாலையில் வாடிக் காய்ந்து போகும்
உமது சினத்தால் நாங்கள் அழிந்து போகின்றோம்
உமது சீற்றத்தால் நாங்கள் திகைப்படைகின்றோம்
எம் குற்றங்களை உம் கண்முன் நிறுத்தினீர்
மறைவான எம் பாவங்களை உம் திருமுக ஒளிமுன் வைத்தீர்.
எங்கள் அனைத்து வாழ்நாள்களும்
உமது சினத்தால் முடிவுக்கு வந்துவிட்டன
எங்கள் ஆண்டுகள் பெருமூச்செனக் கழிந்துவிட்டன
எங்கள் வாழ்நாள் எழுபது ஆண்டுகளே
வலிமை மிகுந்தோர்க்கு எண்பது
அவற்றில் பெருமைக்கு உரியன துன்பமும் துயரமுமே
அவை விரைவில் கடந்து விடுகின்றன
நாங்களும் பறந்து விடுகின்றோம்.
உமது சினத்தின் வலிமையை உணர்பவர் எவர்
உமது கடுஞ்சீற்றத்துக்கு அஞ்சுபவர் எவர்
எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும்
அப்பொழுது ஞானமிகு உள்ளத்தைப் பெற்றிடுவோம்
ஆண்டவரே திரும்பி வாரும்; எத்துணைக் காலம் இந்நிலை
உம் ஊழியருக்கு இரக்கம் காட்டும்.
காலைதோறும் உமது பேரன்பால் எங்களுக்கு நிறைவளியும்
அப்பொழுது வாழ்நாளெல்லாம் நாங்கள் களிகூர்ந்து மகிழ்வோம்
எங்களை நீர் ஒடுக்கிய நாள்களுக்கும்
நாங்கள் தீங்குற்ற ஆண்டுகளுக்கும் ஈடாக எம்மை மகிழச் செய்யும்.
உம் அடியார்மீது உம் செயலும்
அவர்தம் மைந்தர்மீது உமது மாட்சியும் விளங்கச் செய்யும்
எம் கடவுளாம் தலைவரின் இன்னருள் எம்மீது தங்குவதாக
நாங்கள் செய்பவற்றில் எங்களுக்கு வெற்றி தாரும்
ஆம், நாங்கள் செய்பவற்றில் வெற்றியருளும்!
மு.மொழி.: காலைதோறும் உமது பேரன்பால் எங்களுக்கு
நிறைவளியும்.
______________________________
மு.மொழி.2: உலகின் எல்லையெங்கும் ஆண்டவர் புகழ் பாடுங்கள்.
புகழ்ச்சிப்பா - எசா 42: 10-16
ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்
உலகின் எல்லையெங்கும் அவர் புகழ் பாடுங்கள்
கடலில் பயணம் செய்வோரே
கடல்வாழ் உயிரினங்களே தீவு நாடுகளே
அவற்றில் குடியிருப்போரே அவரைப் போற்றுங்கள்
பாலைநிலமும் அதன் நகர்களும்
சேதாரியர் வாழ் ஊர்களும் பேரொலி எழுப்பட்டும்
சேலா வாழ் மக்களும் மகிழ்ந்து பாடட்டும்
மலைகளின் உச்சியிலிருந்து அவர்கள் ஆர்ப்பரிக்கட்டும்.
அவர்கள் ஆண்டவருக்கு மாட்சி அளிப்பார்கள்
அவர் புகழைத் தீவு நாட்டினரிடையே அறிவிப்பார்கள்
ஆண்டவர் வலியோன் எனப் புறப்பட்டுச் செல்வார்
போர் வீரரைப் போல் தீராச் சினம் கொண்டு எழுவார்
உரத்தக்குரல் எழுப்பி முழக்கமிடுவார்
தம் பகைவருக்கு எதிராக வீரத்துடன் செயல்படுவார்.
வெகுகாலமாய் நான் மௌனம் காத்து வந்தேன்
அமைதியாய் இருந்து என்னைக் கட்டுப்படுத்திக் கொண்டேன்
இப்பொழுதோ பேறுகாலப் பெண்போல்
வேதனைக்குரல் எழுப்புகின்றேன்
பெருமூச்சு விட்டுத் திணறுகின்றேன்
மலைகளையும் குன்றுகளையும் பாழாக்குவேன்
அவற்றில் புல்பூண்டுகளை உலர்ந்து போகச் செய்வேன்
ஆறுகளைத் திட்டுகளாக மாற்றுவேன்
ஏரிகளை வற்றிப்போகச் செய்வேன்.
பார்வையற்றோரை அவர்கள் அறியாத பாதையில்
நடத்திச் செல்வேன்
அவர்கள் பழகாத சாலைகளில் வழி நடத்துவேன்
அவர்கள் முன் இருளை ஒளியாக்குவேன்
கரடு முரடான இடங்களைச் சமதளமாக்குவேன்
இவை நான் அவர்களுக்காகச் செய்யவிருப்பன
நான் அவர்களைக் கைநெகிழமாட்டேன்.
மு.மொழி.: உலகின் எல்லையெங்கும் ஆண்டவர் புகழ் பாடுங்கள்.
______________________________
மு.மொழி.3: ஆண்டவரின் கோவிலுள் நிற்பவர்களே ஆண்டவரின் பெயரைப் புகழுங்கள்.
புகழ்ச்சிப் பாடல் - திபா 135
ஆண்டவரின் பெயரைப் புகழுங்கள்
ஆண்டவரின் ஊழியரே அவரைப் புகழுங்கள்
ஆண்டவரின் கோவிலுள் நிற்பவர்களே
நம் கடவுளின் கோவில் முற்றங்களில் உள்ளவர்களே
ஆண்டவரைப் புகழுங்கள்; ஏனெனில் அவர் நல்லவர்
அவரது பெயரைப் போற்றிப் பாடுங்கள்
ஏனெனில் அவர் இனியவர்.
ஆண்டவர் யாக்கோபைத் தமக்கென்று தேர்ந்துகொண்டார்
இஸ்ரயேலைத் தமக்குரிய தனிச்சொத்தாகத் தெரிந்தெடுத்தார்
ஆண்டவர் மேன்மை மிக்கவர் என்பதை அறிவேன்
நம் ஆண்டவர் எல்லாத் தெய்வங்களுக்கும் மேலானவர்
என்பதும் எனக்குத் தெரியும்
விண்ணிலும் மண்ணிலும் கடல்களிலும் எல்லா ஆழ்பகுதிகளிலும்
ஆண்டவர் தமக்கு விருப்பமான யாவற்றையும் செய்கின்றார்
அவர் பூவுலகின் கடையெல்லைகளிலிருந்து
மேகங்களை எழச் செய்கின்றார்.
மழை பெய்யும்படி மின்னலை உண்டாக்குகின்றார்
காற்றைத் தம் கிடங்குகளிலிருந்து வெளிவரச் செய்கின்றார்.
அவர் எகிப்தின் தலைப்பேறுகளைத் தாக்கினார்
மனிதர் கால்நடைகளின் தலைப்பேறுகளை அழித்தார்
எகிப்து நாடே! உன் நடுவில் பார்வோனையும்
அவனுடைய எல்லா ஊழியர்களையும் தண்டிக்குமாறு
அடையாளங்களையும் அருஞ்செயல்களையும் அவர் நிகழச் செய்தார்.
அவர் பல்வேறு இனத்தவரைத் தாக்கினார்
வலிமை வாய்ந்த மன்னர்களைக் கொன்றார்
எமோரியரின் மன்னனாகிய சீகோனையும்
பாசானின் மன்னனாகிய ஓகையும்
கானானின் எல்லா அரசுகளையும் அழித்தார்
அவர்கள் நாட்டைத் தம் மக்களாகிய இஸ்ரயேலருக்கு
உரிமைச் சொத்தாக சொந்த உடைமையாகக் கொடுத்தார்.
மு.மொழி.: ஆண்டவரின் கோவிலுள் நிற்பவர்களே ஆண்டவரின்
பெயரைப் புகழுங்கள்.
______________________________
(எழுந்து நின்று வாசிக்கவும்)
அருள்வாக்கு யூதி 8:25b-26
நம் மூதாதையரை அவர் சோதித்ததுபோல நம்மையும் சோதிக்கிறார். அவர் ஆபிரகாமுக்கு . என்ன செய்தார் என்பதையும் ஈசாக்கை எவ்வாறு சோதித்தார் என்பதையும், யாக்கோபு தம் தாய்மாமன் லாபானின் ஆடுகளை வட மெசபொத்தாமியாவில் மேய்த்துக் கொண்டிருந்தபோது அவருக்கு என்ன நிகழ்ந்தது என்பதையும், எண்ணிப்பாருங்கள்
______________________________
சிறு மறுமொழி
℣ - நீதிமான்களே ஆண்டவரில் அகமகிழுங்கள்; ஏனெனில் நேர்மனத்தோர் அவரைப் புகழ்வது தகுமே
℟ - நீதிமான்களே ஆண்டவரில் அகமகிழுங்கள்; ஏனெனில் நேர்மனத்தோர் அவரைப் புகழ்வது தகுமே
℣ - அவருக்குப் புதியதொரு பாடலைப் பாடுங்கள்
℟ - நீதிமான்களே ஆண்டவரில் அகமகிழுங்கள்; ஏனெனில் நேர்மனத்தோர் அவரைப் புகழ்வது தகுமே
℣ - தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் ஆட்சி உண்டாவதாக.
℟ - நீதிமான்களே ஆண்டவரில் அகமகிழுங்கள்; ஏனெனில் நேர்மனத்தோர் அவரைப் புகழ்வது தகுமே
______________________________
(அனைவரும் எழுந்து நிற்கவும்)
செக்கரியாவின் பாடல்
மு.மொழி.: நம்மைத் தேடி வந்து விடுவித்த ஆண்டவர் போற்றி.
தம் தூய இறைவாக்கினர் வாயினால்
தொடக்க முதல் அவர் மொழிந்தபடியே
அவர் தம் ஊழியராகிய தாவீதின் குடும்பத்தில்
வல்லமை உடைய மீட்பர் ஒருவர் நமக்காகத் தோன்றச் செய்தார்;
நம் பகைவரிடமிருந்தும்
நம்மை வெறுப்போர் அனைவரின் பிடியிலிருந்தும்
நம்மை மீட்பார்.
அவர் நம் மூதாதையருக்கு இரக்கம் காட்டி,
தமது தூய உடன்படிக்கையையும்,
நம் தந்தையாகிய ஆபிரகாமுக்கு அவர் இட்ட ஆணையையும்
நிறைவேற்ற நினைவு கூர்ந்தார்.
இவ்வாறு நாம் பகைவரின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டுத்
தூய்மையோடும் நேர்மையோடும்
வாழ்நாளெல்லாம் அச்சமின்றி
அவர் திருமுன் பணிசெய்யுமாறு வழிவகுத்தார்.
குழந்தாய்,
நீ உன்னத கடவுளின் இறைவாக்கினர் எனப்படுவாய்;
ஏனெனில் பாவ மன்னிப்பால் வரும் மீட்பை
அவர்தம் மக்களுக்கு அறிவித்து
ஆண்டவருக்கான வழியைச் செம்மைப்படுத்த
அவர் முன்னே செல்வாய்.
இருளிலும் இறப்பின் பிடியிலும் இருப்போர்க்கு ஒளிதரவும்,
நம்முடைய கால்களை அமைதி வழியில் நடக்கச் செய்யவும்
நம் கடவுளின் பரிவுள்ளத்தாலும் இரக்கத்தாலும்
விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடிவருகிறது.
மு.மொழி.: நம்மைத் தேடி வந்து விடுவித்த ஆண்டவர் போற்றி.
______________________________
மன்றாட்டுக்கள்:
எல்லாம் வல்ல தந்தையே, விண்ணகம் உமது மகத்துவத்தைக் கொள்ள இயலாது. இருப்பினும் உம் திருமகன் வழியாக நாங்கள் சொல்லக் கற்றுக்கொண்டதாவது.
℟ - தந்தையே உமது ஆட்சி வருக.
உம் பிள்ளைகளாகிய நாங்கள் . உம்மைப் போற்றுகிறோம் எல்லா மக்களின் உள்ளங்களிலும் உம் திருப்பெயர் போற்றப்படுவதாக.
℟ - தந்தையே உமது ஆட்சி வருக.
நீர் எங்கள் குற்றங்களை மன்னிக்கிறீர் – அதுபோல இந்நாளில் நாங்கள் பிறருடைய குற்றங்களை மன்னிக்கும் மனத்திடனைத் தாரும்.
℟ - தந்தையே உமது ஆட்சி வருக.
தந்தையே, எங்கள் சோதனைகளில் எங்களோடு இருந்தருளும் நாங்கள் உம்மைவிட்டுப் பிரிந்து அகல விடாதேயும்.
℟ - தந்தையே உமது ஆட்சி வருக.
(தனிப்பட்ட தேவைகளுக்காக மன்றாடல்)
______________________________
ஆண்டவரின் செபம்
______________________________
இறுதி செபம்
கடவுளாகிய ஆண்டவரே, பூமியைக் கைக்கொண்டு அதனைப் பயிரிடுமாறு மனிதரிடம் அதனை ஒப்படைத்தீர்; அவர்களுடைய நன்மைக்காகக் கதிரவனையும் ஒளிரச் செய்தீர். எங்களுக்கு இன்று உமது அருளொளியைத் தந்து, நாங்கள் உமது மேன்மைக்காகவும், எங்கள் அயலாரின் நலனுக்காகவும் பிரமாணிக்கத்துடன் பணிபுரியச் செய்தருளும். உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்.
__________________________
ஆசி வழங்குதல்
குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக
எல்: உம் ஆன்மாவோடும் இருப்பாராக
குரு: எல்லாம் வல்ல இறைவன் தந்தை மகன் தூய ஆவியார் உங்களை ஆசீர்வதிப்பாராக.
எல்: ஆமென்
குரு: கிறிஸ்துவின் அமைதியில் சென்று வாருங்கள்
எல்: இறைவா உமக்கு நன்றி
(அல்லது)
முதல்: ஆண்டவர் நம்மை ஆசீர்வதித்து தீமைகள் அனைத்தினின்றும் பாதுகாத்து முடிவில்லா வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக
எல்: ஆமென்
முதல்: ஆண்டவரை வாழ்த்துவோமாக
எல்: இறைவா உமக்கு நன்றி