Solemnity of Immaculate Conception - Lauds


டிசம்பர் 8

தூய கன்னி மரியாவின் அமலோற்பவம்

பெருவிழா


காலைப் புகழ்
(எழுந்து நிற்கவும்)


முதல்: ஆண்டவரே எங்கள் இதழ்களைத் திறந்தருளும்
எல்: நாங்களும் உம் பெயரைப் புகழ்ந்திடுவோம்

முதல்: தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக
எல்: தொடக்கத்தில் இருந்தது போல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாகஆமென்

அழைப்புப் பல்லவி: கன்னி மரியாவின் அமல உற்பவத்தைக் கொண்டாடுவோம். அவருடைய மகன் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நாம் போற்றுவோம்.

அழைப்புத் திருப்பாடல்

திருப்பாடல் 95

கடவுளைப் புகழ அழைப்பு

ஒவ்வொரு நாளும் 'இன்றேஎன எண்ணிநாள்தோறும் 
ஒருவருக்கொருவர் அறிவுரை கூறுங்கள். (எபி 3:13)

வாருங்கள்;
ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்;
நமது மீட்பின் பாறையைப் 
போற்றி ஆர்ப்பரியுங்கள்.
அவர் திருமுன் நன்றியுடன் செல்வோம்;
புகழ்ப்பாக்களால் அவரைப் 
போற்றி அகமகிழ்வோம்.

பல்லவி:  கன்னி மரியாவின் அமல உற்பவத்தைக் கொண்டாடுவோம். அவருடைய மகன் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நாம் போற்றுவோம்.

ஏனெனில்ஆண்டவர் மாண்புமிகு இறைவன்;
அனைத்துத் தெய்வங்களுக்கும்
அனைத்திற்கும் மேலான பேரரசர்.
பூவுலகின் ஆழ் பகுதிகள் 
அவர்தம் கையில் உள்ளன;
மலைகளின் கொடுமுடிகளும் 
அவருக்கே உரியன.
கடலும் அவருடையதே
அவரே அதைப் படைத்தார்;
உலர்ந்த தரையையும் அவருடைய 
கைகளே உருவாக்கின.

பல்லவி:  கன்னி மரியாவின் அமல உற்பவத்தைக் கொண்டாடுவோம். அவருடைய மகன் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நாம் போற்றுவோம்.

வாருங்கள்;
தாள்பணிந்து அவரைத் தொழுவோம்;
நம்மை உருவாக்கிய ஆண்டவர்முன் 
முழந்தாளிடுவோம்.
அவரே நம் கடவுள்;
நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்;
நாம் அவர் பேணிக்காக்கும் ஆடுகள்.

பல்லவி:  கன்னி மரியாவின் அமல உற்பவத்தைக் கொண்டாடுவோம். அவருடைய மகன் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நாம் போற்றுவோம்.

இன்று நீங்கள் அவரது குரலுக்குச்
செவிகொடுத்தால் எத்துணை நலம்!
அன்று மெரிபாவிலும்,
பாலை நிலத்தில் மாசாவிலும் செய்ததுபோல்,
உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் 
கொள்ளாதீர்கள்.
அங்கே உங்கள் மூதாதையர் 
என்னைச் சோதித்தனர்;
என் செயல்களைக் கண்டிருந்தும்
என்னைச் சோதித்துப் பார்த்தனர்.

பல்லவி:  கன்னி மரியாவின் அமல உற்பவத்தைக் கொண்டாடுவோம். அவருடைய மகன் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நாம் போற்றுவோம்.

நாற்பது ஆண்டளவாய் அந்தத் தலைமுறை
எனக்கு வெறுப்பூட்டியதால்நான் உரைத்தது;
'அவர்கள் உறுதியற்ற 
உள்ளம் கொண்ட மக்கள்;
என் வழிகளை அறியாதவர்கள்'.
எனவேநான் சினமுற்று,
'நான் அளிக்கும் இளைப்பாற்றியின் 
நாட்டிற்குள் நுழையவே மாட்டார்கள்
என்று ஆணையிட்டுக் கூறினேன் 

பல்லவி: கன்னி மரியாவின் அமல உற்பவத்தைக் கொண்டாடுவோம். அவருடைய மகன் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நாம் போற்றுவோம்.

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக
தொடக்கத்தில் இருந்தது போல 
இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக.  ஆமென்

பல்லவி: கன்னி மரியாவின் அமல உற்பவத்தைக் கொண்டாடுவோம். அவருடைய மகன் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நாம் போற்றுவோம்.


பாடல்
விருப்பமுடனே கைதட்டி இசை இசைக்கும் 
பெருமகிழ்வு புதிதாகப் பிறப்பதாக 
திருஇறையின் அன்னையாம் கன்னிமரி 
கருவினிலே உருவான நாளிதுவே.

இத்தரையின் மாட்சிநீ, மரியாவே. 
நித்தியமும் நிலைஒளியின் மகளே நீ, 
உத்தமராம் உன்மகனும் பாவமாசு 
அத்தனையும் தடுத்துன்னைக் காத்தாரே.

ஏதமிலாத் தாவீதின் எறிகவணாய்த் 
தீதுநிறை கோலியாத்தைத் தொலைத்ததுபோல், 
சூதுநிறை அரவத்தின் தலையைஉன் 
பாதத்தால் மிதித்ததனை நசுக்கினாயே.

தாழ்ச்சியுடன் சாந்தமிகு வெண்புறாவே. 
வீழ்ச்சிதரும் வினைப்பாவம் எதுவுமின்றி. 
ஆட்சிபுரி ஆண்டவனின் அருள்குறியாம் 
மீட்பரவர் துளிர்த்தெழும் கிளை நீயே.

தந்தையுடன் தூயஆவி யார்க்கும் 
வந்ததிரு மகனுக்கும் போற்றி, போற்றி 
எந்தமாசும் இன்றிஉனக் கருளையெல்லாம் 
தந்தனரே பரிசாக, என்றும் போற்றி ஆமென்.

(அல்லது)

ஆழியின் மேல் ஒளிர் விண்மீனே
அவனியில் இறைவனின் அன்னையும் நீ
என்றும் கன்னிகை ஆனவளும்
எழிலார் விண்ணக வாயிலும் நீ

1. தூதுவன் வாழ்த்துரை ஏற்றாய் நீ
தூயநல் அமைதியை அளிப்பாய் நீ
ஆதியில் ஏவாள் செய்வினையை
அகற்றி அவள் பெயர் மாற்றிடுவாய்

2. பாவத் தளைகளை அறுத்திடுவாய்
பரிவுடன் குருடர்க் கொளி தருவாய்
தீமைகள் அனைத்தும் போக்கிடுவாய்
திருவருட் கொடைகள் பெற்றளிப்பாய்

3. தாயென உன்னைக் காட்டிடுவார்
தனயர் எமக்காய்ப் பிறந்தவரும்
இயேசுவாய் உன்னிடம் உதித்தவரும்
எம் குறை உன் வழி ஏற்றிடுவார்

4. நிகரில்லாத கன்னிகையே
நிர்மல சாந்த குணவதியே
பாவப் பொறுத்தல் பெற்றெமக்கு
பண்போடு புனிதம் அருள்வாயே

5. புனித வாழ்க்கை வாழ்ந்திடவே
பயணம் நன்கு முடிந்திடவே
அதனால் இயேசுவை யாம் கண்டு
அகமகிழ்ந்திடவே அருள்வாயே

6. வானகத் தந்தையை வாழ்த்திடுவோம்
வானுயர் கிறிஸ்துவை வணங்கிடுவோம்
பரிசுத்த ஆவியைப் பணிந்திடுவோம்
பாகுபா டற்றபுகழ் சாற்றிடுவோம் - ஆமென்

(அமரவும்)

மு.மொ. I: கடவுளின் அன்னையாகத் தேர்ந்தெடுக்கப் பெற்ற மரியா, எத்துணை தூய்மையானவர்! அவர் எவ்வித மாசுமறுவும் அறிந்ததேயில்லை.

இறைவேட்கை - திபா 63:1-9

இருளின் செயல்களை விட்டுவிட்டவன் இறைவனுக்காகக் காத்திருப்பானாக

கடவுளே! நீரே என் இறைவன்
உம்மையே நான் நாடுகின்றேன்; 
நீரின்றி வறண்ட தரிசு நிலம் போல 
என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது; 
என் உடல் உமக்காக ஏங்குகின்றது.

உம் ஆற்றலையும் மாட்சியையும் காண விழைந்து 
உம் தூயகம் வந்து உம்மை நோக்குகின்றேன்.
ஏனெனில், உமது பேரன்பு உயிரினும் மேலானது; 
என் இதழ்கள் உம்மைப் புகழ்கின்றன.

என் வாழ்க்கை முழுவதும் 
இவ்வாறே உம்மைப் போற்றுவேன்; 
கைகூப்பி உமது பெயரை ஏத்துவேன்.
அறுசுவை விருந்தில் நிறைவடைவது போல 
என் உயிர் நிறைவடையும்; 
மகிழ்ச்சிமிகு இதழ்களால் என் வாய் உம்மைப் போற்றும்.

நான் படுத்திருக்கையில் உம்மை நினைப்பேன்; 
இரா விழிப்புகளில் உம்மைப் பற்றியே 
ஆழ்ந்து சிந்திப்பேன்.
ஏனெனில், எனக்கு நீர் துணையாய் இருக்கின்றீர்
உம் இறக்கைகளின் நிழலில் 
நான் மகிழ்ந்து பாடுகின்றேன்.
உம்மை நான் உறுதியாகப் பற்றிக் கொண்டேன்; 
உமது வலக்கை என்னை இறுகப் பிடித்துள்ளது.

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும்...

மு.மொ. I: கடவுளின் அன்னையாகத் தேர்ந்தெடுக்கப் பெற்ற மரியா, எத்துணை தூய்மையானவர்! அவர் எவ்வித மாசுமறுவும் அறிந்ததேயில்லை.


மு.மொ. 2: கன்னிமரியே! மண்ணுலகப் பெண்களுக்குள் நீர் ஆசிபெற்றவர்; ஆண்டவராகிய கடவுளே உம்மைத் தேர்ந்துகொண்டார்.

படைப்பனைத்தின் பாடல் - தானி(இ) 1:34-65

ஆண்டவரின் அனைத்துச் செயல்களே, 
நீங்களெல்லாம் ஆண்டவரை வாழ்த்துங்கள்; 
என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி, ஏத்திப் போற்றுங்கள்.

வானங்களே, ஆண்டவரை வாழ்த்துங்கள்; 
என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி, ஏத்திப் போற்றுங்கள்.

ஆண்டவரின் தூதர்களே, ஆண்டவரை வாழ்த்துங்கள்; 
என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி, ஏத்திப் போற்றுங்கள்.

வானத்திற்குமேல் உள்ள நீர்த்திரளே, ஆண்டவரை வாழ்த்து; 
என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி, ஏத்திப் போற்றுங்கள்.

ஆண்டவரின் ஆற்றல்களே, 
நீங்களெல்லாம் ஆண்டவரை வாழ்த்துங்கள்; 
கதிரவனே, நிலவே, ஆண்டவரை வாழ்த்துங்கள்; 
விண்மீன்களே, ஆண்டவரை வாழ்த்துங்கள்; 
என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி, ஏத்திப் போற்றுங்கள்.

மழையே, பனியே, நீங்களெல்லாம் ஆண்டவரை வாழ்த்துங்கள்; 
காற்றுவகைகளே, நீங்களெல்லாம் ஆண்டவரை வாழ்த்துங்கள்; 
நெருப்பே, வெப்பமே, ஆண்டவரை வாழ்த்துங்கள்; 
நடுங்கும் குளிரே, கடும் வெயிலே, ஆண்டவரை வாழ்த்துங்கள்; 
என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி, ஏத்திப் போற்றுங்கள்.

பனித்திவலைகளே, பனிமழையே, ஆண்டவரை வாழ்த்துங்கள்; 
பனிக்கட்டியே, குளிர்மையே, ஆண்டவரை வாழ்த்துங்கள்; 
உறைபனியே, மூடுபனியே, ஆண்டவரை வாழ்த்துங்கள்; 
என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி, ஏத்திப் போற்றுங்கள்.

இரவே, பகலே, ஆண்டவரை வாழ்த்துங்கள்; 
ஒளியே, இருளே, ஆண்டவரை வாழ்த்துங்கள்; 
மின்னல்களே, முகில்களே, ஆண்டவரை வாழ்த்துங்கள்; 
என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி, ஏத்திப் போற்றுங்கள்.

மண்ணுலகு ஆண்டவரை வாழ்த்துவதாக; 
மலைகளே, குன்றுகளே, ஆண்டவரை வாழ்த்துங்கள்; 
நிலத்தில் தளிர்ப்பவையே, 
நீங்களெல்லாம் ஆண்டவரை வாழ்த்துங்கள்; 
என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி, ஏத்திப் போற்றுங்கள்.

கடல்களே, ஆறுகளே, ஆண்டவரை வாழ்த்துங்கள்; 
நீரூற்றுகளே, ஆண்டவரை வாழ்த்துங்கள்; 
திமிங்கிலங்களே, நீர்வாழ் உயிரினங்களே, 
நீங்களெல்லாம் ஆண்டவரை வாழ்த்துங்கள்; 
வானத்துப் பறவைகளே, நீங்களெல்லாம் ஆண்டவரை வாழ்த்துங்கள்; 
என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி, ஏத்திப் போற்றுங்கள்.

காட்டு விலங்குகளே, கால் நடைகளே, 
நீங்களெல்லாம் ஆண்டவரை வாழ்த்துங்கள் 
மண்ணுலக மாந்தர்களே, ஆண்டவரை வாழ்த்துங்கள்; 
என்றென்றும் அவரைப் பகழ்ந்து பாடி, ஏத்திப் போற்றுங்கள்.

இஸ்ரயேல் மக்களே, ஆண்டவரை வாழ்த்துங்கள்; 
ஆண்டவரின் குருக்களே, ஆண்டவரை வாழ்த்துங்கள்; 
ஆண்டவரின் ஊழியரே, ஆண்டவரை வாழ்த்துங்கள்; 
என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி, ஏத்திப் போற்றுங்கள்.

நீதிமான்களே, நீங்கள் அனைவரும் ஆண்டவரை வாழ்த்துங்கள்; 
தூய்மையும் மனத்தாழ்ச்சியும் உள்ளோரே, 
ஆண்டவரை வாழ்த்துங்கள்; 
அனனியா, அசரியா, மிசாவேல், ஆண்டவரை வாழ்த்துங்கள்; 
என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி, ஏற்றிப் போற்றுங்கள்.

தந்தை மகன் தூய ஆவியாரைப் புகழுங்கள்
என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி, ஏற்றிப் போற்றுங்கள்.
உயர் விண்ணகத்தில் நீர் வாழ்த்தப் பெறுவீராக
என்றென்றும் நீர் பாடல் பெறவும்,
மாட்சி அடையவும் தகுதியுள்ளவர்.

மு.மொ. 2: கன்னிமரியே! மண்ணுலகப் பெண்களுக்குள் நீர் ஆசிபெற்றவர்; ஆண்டவராகிய கடவுளே உம்மைத் தேர்ந்துகொண்டார்.


மு. மொ. 3: மாசற்ற கன்னிகையே, எம்மைக் கவர்ந்திடும் உம் பரிமளத் தைலத்தின் நறுமணத்தை நுகர்ந்து  பாதச்சுவடுகளைப் பின்தொடர்வோம்.

புனிதரின் புகழ்ச்சிப்பா - திபா 149

இறைவனின் புதிய மக்களாம் திருஅவையின் உறுப்பினர் தம் அரசராம் கிறிஸ்துவில் அகமகிழ்வர். (ஹெசிகியூஸ்)

புதியதொரு பாடலை ஆண்டவருக்குப் பாடுங்கள்; 
அவருடைய அன்பர் சபையில் 
அவரது புகழைப் பாடுங்கள்.
தம்மைப் படைத்தவரைக் குறித்து
இஸ்ரயேலர் மகிழ்வாராக!
சீயோனின் மக்கள் களிகூர்வார்களாக!

நடனம் செய்து அவரது பெயரைப் போற்றுவார்களாக; 
மத்தளம் கொட்டி, யாழிசைத்து 
அவரைப் புகழ்ந்து பாடுவார்களாக!

ஆண்டவர் தம் மக்கள் மீது விருப்பம் கொள்கின்றார்; 
தாழ்நிலையிலுள்ள அவர்களுக்கு 
மீட்பளித்து மேன்மைப் படுத்துவார்.

அவருடைய அன்பர் மேன்மையடைந்து களிகூர்வராக! 
மெத்தைகளில் சாய்ந்து மகிழ்ந்து கொண்டாடுவராக!
அவர்களின் வாயில் இறைப்புகழ் இருக்கட்டும்; 
அவர்களின் கையில் இருபுறமும் கூர்மையான வாள் இருக்கட்டும்.
அவர்கள் வேற்றினத்தாரிடம் பழிதீர்த்துக் கொள்வார்கள்; 
மக்களினங்களுக்கு தண்டனைத் தீர்ப்பிடுவார்கள்;

வேற்றின மன்னர்களை விலங்கிட்டுச் சிறைசெய்வார்கள்; 
உயர்குடி மக்களை இரும்பு விலங்குகளால் கட்டுவார்கள். 
முன்குறித்து வைத்த தீர்ப்பை 
அவர்களிடம் நிறைவேற்றுவார்கள்; 

இத்தகைய மேன்மை ஆண்டவர் தம் அன்பர் 
அனைவருக்கும் உரித்தானது. அல்லேலூயா!

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும்...

மு. மொ. 3: மாசற்ற கன்னிகையே, எம்மைக் கவர்ந்திடும் உம் பரிமளத் தைலத்தின் நறுமணத்தை நுகர்ந்து  பாதச்சுவடுகளைப் பின்தொடர்வோம்.

அருள்வாக்கு - எசா 43:1

யாக்கோபே, உன்னைப் படைத்தவரும். இஸ்ரயேலே. உன்னை உருவாக்கியவருமான ஆண்டவர் இப்போது இவ்வாறு கூறுகிறார்: அஞ்சாதே, நான் உன்னை மீட்டுக்கொண்டேன்; உன் பெயரைச் சொல்லி உன்னை அழைத்தேன்; நீ எனக்கு உரியவன்.

சிறு மறுமொழி

முதல்: எல்லாம் வல்ல ஆண்டவராகிய கடவுள் என்னை வல்லமையால் உடுத்துகிறார்.
எல்: எல்லாம் வல்ல ஆண்டவராகிய கடவுள் என்னை வல்லமையால் உடுத்துகிறார்.

முதல்: பாவக்கறையினின்று என்னை அவர் காப்பாற்றுகிறார். 
எல் : என்னை வல்லமையால் உடுத்துகிறார்.

முதல்: தந்தைக்கும்...
எல் : எல்லாம் வல்ல ஆண்டவராகிய கடவுள் என்னை வல்லமையால் உடுத்துகிறார்.

செக்கரியாவின் பாடல்

முன்மொழி
ஆண்டவராகிய கடவுள் பாம்பைப் பார்த்து. 'உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைச் காயப்படுத்தும் என்றார், அல்லேலூயா, அல்லேலூயா

+ இஸ்ரயேலின் கடவுளாகிய 
ஆண்டவரைப் போற்றுவோம். 
ஏனெனில் அவர் தம் மக்களைத் 
தேடிவந்து விடுவித்தருளினார்.

தம் தூய இறைவாக்கினர் வாயினால் 
தொடக்க முதல் அவர் மொழிந்தபடியே
அவர் தம் ஊழியராகிய தாவீதின் குடும்பத்தில் 
வல்லமை உடைய மீட்பர் ஒருவர் 
நமக்காகத் தோன்றச் செய்தார்;
நம் பகைவரிடமிருந்தும் 
நம்மை வெறுப்போர் அனைவரின் பிடியிலிருந்தும் 
நம்மை மீட்பார்.

அவர் நம் மூதாதையருக்கு இரக்கம் காட்டி, 
தமது தூய உடன்படிக்கையையும்,
நம் தந்தையாகிய ஆபிரகாமுக்கு 
அவர் இட்ட ஆணையையும் 
நிறைவேற்ற நினைவு கூர்ந்தார்.

இவ்வாறு நாம் பகைவரின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டுத் 
தூய்மையோடும் நேர்மையோடும்
வாழ்நாளெல்லாம் அச்சமின்றி 
அவர் திருமுன் பணிசெய்யுமாறு வழிவகுத்தார்.

குழந்தாய், 
நீ உன்னத கடவுளின் இறைவாக்கினர் எனப்படுவாய்;
ஏனெனில் பாவ மன்னிப்பால் வரும் மீட்பை 
அவர்தம் மக்களுக்கு அறிவித்து 
ஆண்டவருக்கான வழியைச் செம்மைப்படுத்த 
அவர் முன்னே செல்வாய்.

இருளிலும் இறப்பின் பிடியிலும் இருப்போர்க்கு ஒளிதரவும்,
நம்முடைய கால்களை அமைதி வழியில் நடக்கச் செய்யவும் 
நம் கடவுளின் பரிவுள்ளத்தாலும் இரக்கத்தாலும் 
விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடிவருகிறது.

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும்...

முன்மொழி
ஆண்டவராகிய கடவுள் பாம்பைப் பார்த்து. 'உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைச் காயப்படுத்தும் என்றார், அல்லேலூயா, அல்லேலூயா


மன்றாட்டுகள்

கன்னி மரியாவின் வழியாகப் பிறக்கத் திருவுளமான நம் மீட்பரின் பெருமையை நாம் பறைசாற்றுவோமாக; நம் வேண்டுதல்களை அவர் கேட்டருள்வார் என்னும் நம்பிக்கையோடு மன்றாடுவோம். ℟ 

எல் : ஆண்டவரே,  உம் அன்னை எங்களுக்காகப் பரிந்து பேசுவாராக.

நீதியின் கதிரவனே, மாசில்லாக் கன்னி மரியாவில் மகத்துவத்தை ஒளிரச் செய்தீர் உமது உமது திருமுன்னிலையின் பேரொளியில் நாங்கள் நடக்க உதவியருளும். ℟ 

உலகிற்கு விடுதலை அளிப்பவரே, உமது மீட்பின் ஆற்றலால் உம் தாயைப் பாவக்கறை அனைத்தினின்றும் காப்பாற்றினீர் எங்கள் இதயங்களில் மறைந்து கிடக்கும் தீமைகளிலிருந்து எங்களை விடுவித்தருளும். ℟ 

எங்கள் மீட்பராம் கிறிஸ்துவே, நீர் கன்னி மரியாவை உமக்குகந்த உறைவிடமாகவும் தூய ஆவியாரின் கோவிலாகவும் ஆக்கினீர் - நாங்கள் எங்கள் உடலிலும் உள்ளத்திலும் தூயஆவியாரின் ஆலயமாகத் திகழச் செய்தருளும். ℟ 

மன்னர்க்கெல்லாம் மன்னரே, உம் தாய் விண்ணில் உடலோடும் ஆன்மாவோடும் இருக்கும்படி அவரை அழைத்துக்கொண்டீரே விண்ணகத்தைச் சார்ந்தவற்றையே நாங்கள் நாடவும் எங்கள் வாழ்வு உம்மில் ஊன்றி இருக்கவும் செய்வீராக. ℟ 

ஆண்டவரின் இறைவேண்டல்

இறுதி மன்றாட்டு:
எல்லாம் வல்ல இரக்கமுள்ள தந்தையே! எங்கள் அன்னையின் அமல உற்பவம், கிறிஸ்துவின் மீட்பளிக்கும் இறப்பின் வல்லமையால் பாவக் கறையினின்று அவரைக் காத்து நின்றது. கடவுளின் தாயாகவும் அவரை ஏற்படுத்தியது. இத்தகைய பேற்றில் நாங்கள் அகமகிழ்கின்றோம். அவருடைய இறைவேண்டுதலினால் நாங்களும் பாவத்திலிருந்து தூய்மையடைந்து உம்மிடம் வந்து சேர அருள்புரியும். உம்மோடு...


பாரம்பரிய தே தேயும் பாடல்



1) இறைவா உம்மை வாழ்த்துகின்றோம்
ஆண்டவர் நீரெனப் போற்றுகிறோம்
நித்திய தந்தாய் உமை என்றும்
இத்தரை எல்லாம் வணங்கிடுமே.

விண்ணும் விண்ணக தூதர்களும்
விண்ணின் மாண்புறு ஆற்றல்களும்
செரபீம் கெரபீம் யாவருமே
சேர்ந்துமக் கென்றும் பண்ணிசைப்பர்.

2) தூயவர் தூயவர் தூயவராம்
நாயகன் மூவுலகாள் இறைவன்
மாட்சிமை மிக்க உம் மகத்துவத்தால்
வானமும் வையமும் நிறைந்துள்ளன.

அப்போஸ்தலரின் அருள் அணியும்
இறைவாக்கினரின் புகழ் அணியும்
மறைசாட்சியரின் வெண்குழுவும்
நிறைவாய் உம்மைப் போற்றிடுமே.

3) இத்தரை எங்கும் திருச்சபையும்
பக்தியாய் உம்மை ஏற்றிடுமே
பகருதற்குரிய மாண்புடையோய்
தகைசால் தந்தாய் தாள் பணிந்தோம்.

உம் ஒரே திருமகன் இயேசுவையும்
எம் இறையெனப் புகழ்ந்தேற்றுகிறோம்
தேற்றரவெமக்குத் தருபவராம்
தூய உம் ஆவியைத் துதிக்கின்றோம்.

4) வேந்தே மாண்புயர் கிறிஸ்துவேஇ நீர்
தந்தையின் நித்திய மகனாவீர்
மண்ணுயிர் மீட்க மனங்கொண்டு
கன்னியின் வயிற்றில் கருவானீர்.

சாவின் கொடுக்கை முறித்தழித்து
பாவிகள் எமக்கு வான் திறந்தீர்
இறுதி நாளில் நடுத்தீர்க்க 
வருவீர் என யாம் ஏற்கின்றோம்.

5) உம் திருஇரத்தம் மீட்ட எம்மை
அன்பாய் காத்திட வேண்டுகின்றோம்
முடியா மகிமையில் புனிதருடன்
அடியார் எம்மையும் சேர்த்திடுவீர்.

உம்மவர் நாங்கள் எமை மீட்பீர்
உம் உடைமைக்கே வாழ்வளிப்பீர்
எம்மை ஆண்டு இறைமக்களாய்
என்றும் சிறப்புறச் செய்திடுவீர்.

6) எந்நாளும் உம்மை வாழ்த்துகிறோம்
என்றும் உம் பெயர் போற்றுகிறோம்
இறைவா இந்நாள் எம்பாவக்
கறைகள் போக்கிக் காத்திடுவீர்

கனிவாய் இறங்கும் ஆண்டவரே
கனிவாய் இரங்கும் எம்மீதே
உம்மையே நம்பினோம் ஆண்டவரே
எம்மீதிரக்கம் கொள்வீரே.

7) உம்துணை நம்பினோம் ஆண்டவரே
என்றும் கலக்கம் அடையோமே
உம்துணை நம்பினோம் ஆண்டவரே
என்றும் கலக்கம் அடையோமே