Solemnity of Immaculate Conception - Vespers I



டிசம்பர் 8

தூய கன்னி மரியாவின் அமலோற்பவம்

பெருவிழா


மாலைப் புகழ் I

(எழுந்து நிற்கவும்)

முதல்: + இறைவா எமக்குத் துணைபுரிய வாரும்

எல்: ஆண்டவரே எனக்குத் துணைபுரிய விரைந்து வாரும்

முதல்: தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக

எல்: தொடக்கத்தில் இருந்ததுபோல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக ஆமென்.



பாடல்

கன்னியரின் புகழ்பெற்ற காவலியே,
கன்னியாய் இறைவனைநீ பெற்றெடுத்தாய்;
விண்ணகத்தின் வாயில்நீ, எங்களுக்குத்
திண்ணமான நம்பிக்கை, மகிழ்வும்நீ.

லீலியாக முள்ளிடையே மலர்கின்றாய்;
கோலமிக வெண்புறாவாய்த் திகழ்கின்றாய்;
சீலமிகு கோத்திரத்தில் உதித்தவளே,
பாலர்எம் நோய்களுக்கு அருமருந்தே!

தவறுகளின் நிழலனைத்தும் ஒழித்திடுவாய்.
அவதிதரும் பாழ்வெளியை அழித்திடுவாய்.
கவலைதரும் அலைகளினால் திசைமாறிய
அபலைகளை நேர்வழியில் திருப்பிடுவாய்.

உற்பவத்தின் முதல்பாவம் அனைத்தினின்றும்
அற்புதமாய் விடுவிக்கப் பெற்றவளே.
சர்ப்பமதன் பொறாமைசெய் சூழ்ச்சிநின்று
தப்பிக்க ஒளிபொழியும் காப்புநீயே.

தந்தையுடன் தூயஆவி யார்க்கும்
உந்தம் திருமகனுக்கும் போற்றி, போற்றி.
எந்தமாசும் இன்றியுனக் கருளை எல்லாம்
தந்தனரே பரிசாக, என்றும் போற்றி. ஆமென்.

(அமரவும்)

மு.மொ. I :  உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள வித்துக்கும் பகையை உண்டாக்குவேன்.

திருப்பாடல் 113

ஆண்டவரின் ஊழியர்களே, அவரைப் புகழுங்கள். 
அவரது பெயரைப் போற்றுங்கள்.
ஆண்டவரது பெயர் வாழ்த்தப் பெறுவதாக! 
இப்பொழுதும் எப்பொழுதும் வாழ்த்தப் பெறுவதாக!
கீழ்த்திசை முதல் மேற்றிசைவரை 
ஆண்டவரது பெயர் போற்றப்படுவதாக!

மக்களினங்கள் அனைத்திற்கும் ஆண்டவர் மேலானவர்; 
வானங்களையும்விட உயர்ந்து அவரது மாட்சி.
நம் கடவுளாகிய ஆண்டவருக்கு நிகர் யார்? 
அவர்போல வானளாவிய உயரத்தில் வீற்றிருப்பவர் யார்?
அவர் வானத்தையும் வையகத்தையும் 
குனிந்து பார்க்கின்றார்;

ஏழைகளைத் தூசியிலிருந்து அவர் தூக்கி நிறுத்துகின்றார்; 
வறியரைக் குப்பை மேட்டிலிருந்து கைதூக்கி விடுகின்றார்;
உயர்குடி மக்களிடையே-தம் மக்களுள் உயர்குடி மக்களிடையே 
அவர்களை அமரச் செய்கின்றார்.
பிள்ளைப் பேறற்ற பெண்டிருக்குத் தாய்மைப்பேறு அருள்கின்றார்
அவர்கள் மகிழுமாறு தங்கள் இல்லத்தில் 
அவர்களை வாழ வைக்கின்றார்;.

மு.மொ. I :  உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள வித்துக்கும் பகையை உண்டாக்குவேன்.

மு. மொ. 2:  ஆண்டவர் விடுதலை எனும் உடைகளை எனக்கு உடுத்தினார். நேர்மை என்னும் ஆடையை எனக்கு அணிவித்தார்.

திருப்பாடல் 147: 12-20

எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக! 
சீயோனே! உன் கடவுளைப் புகழ்வாயாக!

அவர் உன் வாயில்களின் தாழ்களை வலுப்படுத்துகின்றார்; 
உன்னிடமுள்ள உன் பிள்ளைக்கு ஆசி வழங்குகின்றார்.
அவர் உன் எல்லைப்புறங்களில் அமைதி நிலவச் செய்கின்றார்; 
உயர்தரக் கோதுமை வழங்கி 
உன்னை நிறைவடையச் செய்கின்றார்.

அவர் தமது கட்டளையை உலகினுள் அனுப்புகின்றார்; 
அவரது வாக்கு மிகவும் விரைவாய்ச் செல்கின்றது.
அவர் வெண்கம்பளிபோல் பனியைப் பொழியச் செய்கின்றார்; 
சாம்பலைப்போல் உறைபனியைத் தூவுகின்றார்;

பனிக்கட்டியைத் துகள் துகள்களாக விழச் செய்கின்றார்; 
அவர் வரவிடும் குளிரைத் தாங்கக் கூடியவர் யார்?
அவர் தம் கட்டளையால் அவற்றை உருகச் செய்கின்றார்; 
தம் காற்றை வீசச் செய்ய, 
உருகிய நீர் ஓடத் தொடங்குகின்றது.

யாக்கோபுக்குத் தமது வாக்கை வெளிப்படுத்தினார்
இஸ்ரயேலுக்குத் தம் நியமங்களையும் 
நீதிநெறிகளையும் அறிவித்தார்.
அவர் வேறெந்த இனத்துக்கும் இப்படிச் செய்யவில்லை
அவருடைய நீதிநெறிகள் அவர்களுக்குத் தெரியாது.

மு. மொ. 2:  ஆண்டவர் விடுதலை எனும் உடைகளை எனக்கு உடுத்தினார். நேர்மை என்னும் ஆடையை எனக்கு அணிவித்தார்.

மு.மொ. 3: அருள்மிகப் பெற்ற மரியாவே வாழ்க! ஆண்டவர் உம்மோடு.

எபேசியர் 1: 3-10

நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தந்தையும் 
கடவுளுமானவர் போற்றி! 
அவர் விண்ணகம் சார்ந்த, ஆவிக்குரிய ஆசி அனைத்தையும் 
கிறிஸ்து வழியாக நம்மீது பொழிந்துள்ளார்.

நாம் தூயோராகவும், மாசற்றோராகவும் 
தம் திருமுன் விளங்கும்படி, 
உலகம் தோன்றுவதற்கு முன்பே 
கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார்.

அவர் நம்மை இயேசு கிறிஸ்துவின் மூலம் தமக்குச் சொந்தமான பிள்ளைகளாக்கிக் கொள்ள 
அன்பினால் முன்குறித்துவைத்தார். 
இதுவே அவரது விருப்பம்; இதுவே அவரது திருவுளம். 
இவ்வாறு தம் அன்பார்ந்த மகன் வழியாக 
நம்மீது ஒப்புயர்வற்ற அருளைப் பொழிந்தருளியதால் 
அவரது புகழைப் பாடுகிறோம்.

கிறிஸ்து இரத்தம் சிந்தி தம் அருள்வளத்திற்கு ஏற்ப 
நமக்கு மீட்பு அளித்துள்ளார்; 
இம்மீட்பால் குற்றங்களிலிருந்து 
நாம் மன்னிப்புப் பெறுகிறோம்.

அந்த அருளை அவர் நம்மில் பெருகச்செய்து, 
அனைத்து ஞானத்தையும் அறிவுத்திறனையும் தந்துள்ளார்.
அவர் தமது திருவுளத்தின் மறைபொருளை 
நமக்குத் தெரியப்படுத்தியுள்ளார். 

இது கிறிஸ்து வழியாகக் கடவுள் விரும்பிச் செய்த தீர்மானம்.
கால நிறைவில் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை 
அனைத்தையுமே கிறிஸ்துவின்; தலைமையில் 
ஒன்று சேர்க்க வேண்டும் என்ற திட்டமே அம்மறைபொருள்.

மு.மொ. 3: அருள்மிகப் பெற்ற மரியாவே வாழ்க! ஆண்டவர் உம்மோடு.

அருள்வாக்கு - உரோ 8: 29.30
தம்மால் முன்பே தேர்ந்து கொள்ளப்பட்டவர்கள் தம் மகனின் சாயலுக்கேற்றவாறு இருக்கவேண்டுமெனக் கடவுள் முன்குறித்து வைத்தார். அச்சகோதரா சகோதரிகள் பலருள் தம் மகன் தலைப்பேறானவராய் இருக்க வேண்டுமென்றே இப்படிச் செய்தார். தாம முன்குறித்து வைத்தோரை அவர் அழைத்திருக்கிறார். தாம் அழைத்தோரைத் தமக்கு ஏற்புடையோராக்கி இருக்கிறார். தமக்கு ஏற்புடையோரானோரைத் தம் மாட்சியில் பங்கு பெறச் செய்தார்.

சிறு மறுமொழி

முதல்: ஆண்டவரே, உம்மைப் புகழ்கிறேன்; ஏனெனில், நீர் எனக்கு விடுதலை அளித்தீர்.
எல் : ஆண்டவரே, உம்மைப் புகழ்கிறேன்; ஏனெனில். நீர் எனக்கு விடுதலை அளித்தீர்.

முதல்: என் எதிரிகள் என்னைக் கண்டு மகிழ்வுற நீர் விடவில்லை.
எல் : ஏனெனில், நீர் எனக்கு விடுதலை அளித்தீர்.

முதல் : தந்தைக்கும்...
எல் : ஆண்டவரே, உம்மைப் புகழ்கிறேன்; ஏனெனில், நீர் எனக்கு விடுதலை அளித்தீர்.

கன்னி மரியாவின் பாடல்
(எழுந்து நிற்கவும்)

முன்மொழி
இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர். ஏனெனில், வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். அல்லேலூயா.

+ ஆண்டவரை எனது உள்ளம் 
போற்றிப் பெருமைப்படுத்துகின்றது. 
என் மீட்பராம் கடவுளை நினைத்து 
எனது மனம் பேருவகை கொள்கின்றது.

ஏனெனில் அவர் தம் அடிமையின் 
தாழ்நிலையைக் கண்ணோக்கினார்.
இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் 
என்னைப் பேறுபெற்றவர் என்பர்.

ஏனெனில் வல்லவராம் கடவுள் 
எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். 
தூயவர் என்பதே அவரது பெயர்.

அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் 
தலைமுறை தலைமுறையாய் 
அவர் இரக்கம் காட்டி வருகிறார்.

அவர் தம் தோள் வலிமையைக் காட்டியுள்ளார்; 
உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் 
சிதறடித்து வருகிறார்.

வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்; 
தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்.

பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்; 
செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார்.

மூதாதையருக்கு உரைத்தபடியே அவர் 
ஆபிரகாமையும் அவர்தம் வழி மரபினரையும் 
என்றென்றும் இரக்கத்தோடு 
நினைவில் கொண்டுள்ளார்;
தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத் 
துணையாக இருந்து வருகிறார் ".

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும்...

முன்மொழி
இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர். ஏனெனில், வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். அல்லேலூயா.

மன்றாட்டுகள்

தம் மகனுக்குத் தாயாக மரியாவைத் தேர்ந்தெடுத்து எல்லாத் தலைமுறைகளும் அவரைப் பேறுபெற்றவர் எனப் போற்றவேண்டுமென விரும்பினார் தந்தையாம் கடவுள்: அவரைப் புகழ்ந்து நம்பிக்கையுடன் மன்றாடுவோமாக. ℟ 

எல்: கன்னி மரியா எங்களுக்காகப் பரிந்து பேசுவாராக.

தந்தையே, மரியாவுக்காக அரும்பெரும் செயல்களைப் புரிந்து விண்ணக மாட்சிக்கு அவரை ஆன்மாவோடும் உடலோடும் அழைத்துச் சென்றீர் கிறிஸ்துவின் மாட்சியில் பங்குபெறும் நம்பிக்கையை உம் பிள்ளைகளின் இதயங்களில் நிரப்பியருளும். ℟ 

எங்கள் தாயாம் மரியாவின் மன்றாட்டுகளால் பிணியாளரைக் குணமாக்கியருளும், வருந்துவோர்க்கு ஆறுதல் அளித்தருளும், பாவிகளை மன்னித்தருளும் எல்லார்க்கும் அமைதியையும் மீட்பையும் தந்தருளும். ℟ 

தந்தையே, நீர் கன்னி மரியாவைக் கண்ணோக்கி அவரை இரக்கத்தின் அன்னையாக்கினீர் ஆபத்தில் அவரை நாடித் தேடும் அனைவரும் அவரது அன்பைப் பெறுவார்களாக. ℟ 

இயேசு. யோசேப்பு இவர்களது இல்லத்தின் அன்னையாக இருக்கும்படி நீர் மரியாவை அழைத்தீர் அன்னை மரியாவின் இறைவேண்டலின் வழியாக அன்னையர் அனைவரும் தங்கள் இல்லங்களை அன்பும் தூய்மையும் நிறைந்த இடமாக மாற்ற அவர்களுக்கு உதவியருளும். ℟ 

தந்தையே, நீர் கன்னி மரியாவை விண்ணக அரசியாக முடிசூட்டி உயர்த்தியுள்ளீர் இறந்தோர் அனைவரும் உமது அரசில் நுழைந்து உமது புனிதர்களோடு என்றும் மகிழ்ந்திருப்பார்களாக. ℟ 

ஆண்டவரின் இறைவேண்டல்

இறுதி மன்றாட்டு

எல்லாம் வல்ல இரக்கமுள்ள தந்தையே! எங்கள் அன்னையின் அமல உற்பவம், கிறிஸ்துவின் மீட்பளிக்கும் இறப்பின் வல்லமையால் பாவக் கறையினின்று அவரைக் காத்து நின்றது. கடவுளின் தாயாகவும் அவரை ஏற்படுத்தியது. இத்தகைய பேற்றில் நாங்கள் அகமகிழ்கின்றோம். அவருடைய இறைவேண்டுதலினால் நாங்களும் பாவத்திலிருந்து தூய்மையடைந்து உம்மிடம் வந்து சேர அருள்புரியும். உம்மோடு...