Solemnity of Immaculate Conception - Vespers II

 


டிசம்பர் 8

தூய கன்னி மரியாவின் அமலோற்பவம்

பெருவிழா


மாலைப் புகழ் II

(எழுந்து நிற்கவும்)

முதல்: + இறைவா எமக்குத் துணைபுரிய வாரும்

எல்: ஆண்டவரே எனக்குத் துணைபுரிய விரைந்து வாரும்

முதல்: தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக

எல்: தொடக்கத்தில் இருந்ததுபோல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக ஆமென்.


பாடல்

கன்னியரின் புகழ்பெற்ற காவலியே,
கன்னியாய் இறைவனைநீ பெற்றெடுத்தாய்;
விண்ணகத்தின் வாயில்நீ, எங்களுக்குத்
திண்ணமான நம்பிக்கை, மகிழ்வும்நீ.

லீலியாக முள்ளிடையே மலர்கின்றாய்;
கோலமிக வெண்புறாவாய்த் திகழ்கின்றாய்;
சீலமிகு கோத்திரத்தில் உதித்தவளே,
பாலர்எம் நோய்களுக்கு அருமருந்தே!

தவறுகளின் நிழலனைத்தும் ஒழித்திடுவாய்.
அவதிதரும் பாழ்வெளியை அழித்திடுவாய்.
கவலைதரும் அலைகளினால் திசைமாறிய
அபலைகளை நேர்வழியில் திருப்பிடுவாய்.

உற்பவத்தின் முதல்பாவம் அனைத்தினின்றும்
அற்புதமாய் விடுவிக்கப் பெற்றவளே.
சர்ப்பமதன் பொறாமைசெய் சூழ்ச்சிநின்று
தப்பிக்க ஒளிபொழியும் காப்புநீயே.

தந்தையுடன் தூயஆவி யார்க்கும்
உந்தம் திருமகனுக்கும் போற்றி, போற்றி.
எந்தமாசும் இன்றியுனக் கருளை எல்லாம்
தந்தனரே பரிசாக, என்றும் போற்றி. ஆமென்.

(அமரவும்)

மு.மொ. I :  மரியாவே, நீர் அழகே உருவானவர், நீர் பிறப்பு நிலைப் பாவம் இல்லாதவர்.

திருப்பாடல் 122

'ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்,' என்ற 
அழைப்பை நான் கேட்டு நான் அகமகிழ்ந்தேன்.
எருசலேமே! எங்கள் கால்கள் 
உங்கள் வாயில்களில் நிற்கின்றன.

எருசலேம் செம்மையாக 
ஒன்றிணைத்துக்கட்டப்பட்ட நகர் ஆகும்.
ஆண்டவரின் திருக்குலத்தார் அங்கே செல்கின்றனர்;.

இஸ்ரயேல் மக்களுக்கு இட்ட கட்டளைக்களுக்கிணங்க 
ஆண்டவரது பெயருக்கு அவர்கள் 
நன்றி செலுத்தச் செல்வார்கள்.
அங்கே நீதி வழங்க அரியணைகள் இருக்கின்றன. 
அவை தாவீது வீட்டாரின் அரியணைகள்.

எருசலேமில் சமாதானம் நிலைத்திருக்கும்படி வேண்டிக்கொள்ளுங்கள்
'உன்னை அன்பு கூர்பவர்கள் வளமுடன் வாழ்வார்களாக!
உன் கோட்டைகளுக்குள் அமைதி நிலவுவதாக! 
உம் மாளிகைகளில் நல்வாழ்வு நிலைப்பதாக!

உன்னுள் சமாதானம் நிலவுவதாக!' 
என என் சகோதரர் சார்பிலும் 
என் நண்பர் சார்பிலும் உன்னை வாழ்த்துகின்றேன்.
நம் கடவுளாகிய ஆண்டவரின் இல்லம் 
இங்கே இருப்பதால், உன்னில் நலம் பெருகும்படி 
நான் மன்றாடுவேன்.

தந்தைக்கும்...


மு.மொ. I :  மரியாவே, நீர் அழகே உருவானவர், நீர் பிறப்பு நிலைப் பாவம் இல்லாதவர்.

மு. மொ. 2: நீரே எருசலேமின் மேன்மை. இஸ்ரயேலின் பெரும் மாட்சியும் பெருமையும் நீரே. நீரே நம் இனத்தாரின் உயர் பெருமை.

திருப்பாடல் 127

ஆண்டவரே வீட்டைக் கட்டவில்லையெனில், 
அதைக் கட்டுவோரின் உழைப்பு வீணாகும்; 
ஆண்டவரே நகரைக் காக்கவில்லையெனில், 
காவலர்கள் விழித்திருப்பதும் வீணாகும்.

வைகறையில் விழித்தெழுந்து நள்ளிரவில் ஓய்வெடுக்கும்வரை 
மானிடர் தம் உணவுக்காக வருந்தி உழைப்பது வீணே! 
உறங்கும்போதும் கடவுளின் அன்பர் தேவையானதை 
அவரிடமிருந்து பெற்றுக்கொள்வர்.

பிள்ளைகள், ஆண்டவர் அருளும் செல்வம்; 
மக்கட்பேறு, அவர் அளிக்கும் பரிசில்.
இளமையில் ஒருவருக்குப் பிறக்கும் மைந்தர் 
வீரரின் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்.

அவற்றால் தம் அம்பறாத் தூணியை 
நிரப்பிய வீரர் நற்பேறு பெற்றோர்; 
நீதிமன்றத்தில் எதிரிகளோடு வழக்காடும்போது, 
அவர் இகழ்ச்சியடையமாட்டார்.

தந்தைக்கும்...

மு. மொ. 2: நீரே எருசலேமின் மேன்மை. இஸ்ரயேலின் பெரும் மாட்சியும் பெருமையும் நீரே. நீரே நம் இனத்தாரின் உயர் பெருமை.

மு. மொ. 3: உமது ஆடை பனிபோன்று வெண்மையாய் இருக்கின்றது; உமது முகம் கதிரவனைப் போல் ஒளிர்கிறது.

எபேசியர் 1: 3-10

நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தந்தையும் 
கடவுளுமானவர் போற்றி! 
அவர் விண்ணகம் சார்ந்த, ஆவிக்குரிய ஆசி அனைத்தையும் 
கிறிஸ்து வழியாக நம்மீது பொழிந்துள்ளார்.

நாம் தூயோராகவும், மாசற்றோராகவும் 
தம் திருமுன் விளங்கும்படி, 
உலகம் தோன்றுவதற்கு முன்பே 
கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார்.

அவர் நம்மை இயேசு கிறிஸ்துவின் மூலம் தமக்குச் சொந்தமான பிள்ளைகளாக்கிக் கொள்ள 
அன்பினால் முன்குறித்துவைத்தார். 
இதுவே அவரது விருப்பம்; இதுவே அவரது திருவுளம். 
இவ்வாறு தம் அன்பார்ந்த மகன் வழியாக 
நம்மீது ஒப்புயர்வற்ற அருளைப் பொழிந்தருளியதால் 
அவரது புகழைப் பாடுகிறோம்.

கிறிஸ்து இரத்தம் சிந்தி தம் அருள்வளத்திற்கு ஏற்ப 
நமக்கு மீட்பு அளித்துள்ளார்; 
இம்மீட்பால் குற்றங்களிலிருந்து 
நாம் மன்னிப்புப் பெறுகிறோம்.

அந்த அருளை அவர் நம்மில் பெருகச்செய்து, 
அனைத்து ஞானத்தையும் அறிவுத்திறனையும் தந்துள்ளார்.
அவர் தமது திருவுளத்தின் மறைபொருளை 
நமக்குத் தெரியப்படுத்தியுள்ளார். 

இது கிறிஸ்து வழியாகக் கடவுள் விரும்பிச் செய்த தீர்மானம்.
கால நிறைவில் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை 
அனைத்தையுமே கிறிஸ்துவின்; தலைமையில் 
ஒன்று சேர்க்க வேண்டும் என்ற திட்டமே அம்மறைபொருள்.

தந்தைக்கும்...

மு. மொ. 3: உமது ஆடை பனிபோன்று வெண்மையாய் இருக்கின்றது; உமது முகம் கதிரவனைப் போல் ஒளிர்கிறது.

அருள்வாக்கு - உரோமையர் 5:20.21

குற்றம் செய்ய வாய்ப்புப் பெருகும்படி சட்டம் இடையில் நுழைந்தது; ஆனால் பாவம் பெருகிய இடத்தில் அருள் பொங்கி வழிந்தது. இவ்வாறு. சாவின் வழியாய்ப் பாவம் ஆட்சி செலுத்தியதுபோல். நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாய் அருள் ஆட்சி செய்கிறது; அந்த அருள்தான் மனிதர்களைக் கடவுளுக்கு ஏற்புடையவர்களாக்கி நிலைவாழ்வு பெற வழிவகுக்கிறது. 

சிறு மறுமொழி

முதல் : நீரே என்னைத் தேர்ந்து கொண்டீர் இதிலிருந்து நான் அறிகிறேன். என
எல் : நீரே என்னைத் தேர்ந்து கொண்டீர் என இதிலிருந்து நான் அறிகிறேன்.

முதல்: என் பகைவன் என்மேல் வெற்றி கொள்ள விடவில்லை
எல் : நீரே என்னைத் தேர்ந்து கொண்டீர் 

முதல் : தந்தைக்கும்...
எல் : நீரே என்னைத் தேர்ந்து கொண்டீர் என இதிலிருந்து நான் அறிகிறேன்.

கன்னி மரியாவின் பாடல்

முன்மொழி
அருள்மிகப் பெற்ற மரியாவே, வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார். பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்: உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே. அல்லேலூயா.

+ ஆண்டவரை எனது உள்ளம் 
போற்றிப் பெருமைப்படுத்துகின்றது. 
என் மீட்பராம் கடவுளை நினைத்து 
எனது மனம் பேருவகை கொள்கின்றது.

ஏனெனில் அவர் தம் அடிமையின் 
தாழ்நிலையைக் கண்ணோக்கினார்.
இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் 
என்னைப் பேறுபெற்றவர் என்பர்.

ஏனெனில் வல்லவராம் கடவுள் 
எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். 
தூயவர் என்பதே அவரது பெயர்.

அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் 
தலைமுறை தலைமுறையாய் 
அவர் இரக்கம் காட்டி வருகிறார்.

அவர் தம் தோள் வலிமையைக் காட்டியுள்ளார்; 
உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் 
சிதறடித்து வருகிறார்.

வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்; 
தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்.

பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்; 
செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார்.

மூதாதையருக்கு உரைத்தபடியே அவர் 
ஆபிரகாமையும் அவர்தம் வழி மரபினரையும் 
என்றென்றும் இரக்கத்தோடு 
நினைவில் கொண்டுள்ளார்;
தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத் 
துணையாக இருந்து வருகிறார் ".

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும்...

முன்மொழி
அருள்மிகப் பெற்ற மரியாவே, வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார். பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்: உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே. அல்லேலூயா.

மன்றாட்டுகள்

தம் மகனுக்குத் தாயாக மரியாவைத் தேர்ந்தெடுத்து எல்லாத் தலைமுறைகளும் அவரைப் பேறுபெற்றவர் எனப் போற்றவேண்டுமென விரும்பினார் தந்தையாம் கடவுள்: அவரைப் புகழ்ந்து நம்பிக்கையுடன் மன்றாடுவோமாக. ℟ 

எல்:  கன்னி மரியா எங்களுக்காகப் பரிந்து பேசுவாராக. 

தந்தையே, மரியாவுக்காக அரும்பெரும் செயல்களைப் புரிந்து விண்ணக மாட்சிக்கு அவரை ஆன்மாவோடும் உடலோடும் அழைத்துச் சென்றீர் கிறிஸ்துவின் மாட்சியில் பங்குபெறும் நம்பிக்கையை உம் பிள்ளைகளின் இதயங்களில் நிரப்பியருளும். ℟ 

எங்கள் தாயாம் மரியாவின் மன்றாட்டுகளால் பிணியாளரைக் குணமாக்கியருளும், வருந்துவோர்க்கு ஆறுதல் அளித்தருளும், பாவிகளை மன்னித்தருளும் எல்லார்க்கும் அமைதியையும் மீட்பையும் தந்தருளும். ℟ 

தந்தையே, நீர் கன்னி மரியாவைக் கண்ணோக்கி அவரை இரக்கத்தின் அன்னையாக்கினீர் ஆபத்தில் அவரை நாடித் தேடும் அனைவரும் அவரது அன்பைப் பெறுவார்களாக. ℟ 

இயேசு. யோசேப்பு இவர்களது இல்லத்தின் அன்னையாக இருக்கும்படி நீர் மரியாவை அழைத்தீர் அன்னை மரியாவின் இறைவேண்டலின் வழியாக அன்னையர் அனைவரும் தங்கள் இல்லங்களை அன்பும் தூய்மையும் நிறைந்த இடமாக மாற்ற அவர்களுக்கு உதவியருளும். ℟ 

தந்தையே, நீர் கன்னி மரியாவை விண்ணக அரசியாக முடிசூட்டி உயர்த்தியுள்ளீர் இறந்தோர் அனைவரும் உமது அரசில் நுழைந்து உமது புனிதர்களோடு என்றும் மகிழ்ந்திருப்பார்களாக. ℟ 

ஆண்டவரின் இறைவேண்டல்

இறுதி மன்றாட்டு

எல்லாம் வல்ல இரக்கமுள்ள தந்தையே! எங்கள் அன்னையின் அமல உற்பவம், கிறிஸ்துவின் மீட்பளிக்கும் இறப்பின் வல்லமையால் பாவக் கறையினின்று அவரைக் காத்து நின்றது. கடவுளின் தாயாகவும் அவரை ஏற்படுத்தியது. இத்தகைய பேற்றில் நாங்கள் அகமகிழ்கின்றோம். அவருடைய இறைவேண்டுதலினால் நாங்களும் பாவத்திலிருந்து தூய்மையடைந்து உம்மிடம் வந்து சேர அருள்புரியும். உம்மோடு...